Saturday, 16 August 2014

11.செட்டிமாங்குறிச்சி மாணவர்கள்....


செட்டிமாங்குறிச்சி  மாணவர்கள்……….

                    கடந்த  பதிவுகளில் , எனது  முதல்  பள்ளியின்  மாணவர்கள், எவ்வெவ்வழிகளில் என்னை  ஆசிரியராக  வடிவமைத்துக்கொள்ள  உதவினார்கள் என , கணக்கு  வகுப்புகள்  என்ற  தலைப்பில்  உங்களொடு  பேசினேன் .  அவர்களுக்கு  கணக்கு  வகுப்புகள் மட்டுமல்ல…..தமிழ்,ஆங்கிலம்,அறிவியல் மற்றும் சமூக  அறிவியல் வகுப்புகளும்  கற்பித்து வந்தேன்.      மூன்றரை வருடங்கள்  நான்  அவர்களுக்கு பாடம் சொல்லித் தந்ததைவிட, எனக்கு  அவர்கள்  கற்றுக் கொடுத்தவை  ஏராளம்…. அவர்களின்  ஒத்துழைப்பிற்கு மகுடம்  வைத்ததுபோல  ஒரு  நிகழ்வு  2004 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் 26ஆம் தேதி நடந்தது…
                    அது………………. “இன்று  எனது  பள்ளி  விழாக்கோலம்  பூண்டிருந்தது. ஆம்…..ஒவ்வொரு  பள்ளியும்  தன்  இயல்பிலிருந்து சற்றே  வித்தியாசமாய் , பயத்தோடு…..…. தன்னை  அலங்கரித்துக் கொண்டு, வருபவர்களை திருப்திப்படுத்தும் மணப்பெண்ணைப் போல் , கல்வி  அலுவலர்களை  திருப்திப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கும்  நாள்தான்.
                    எனது செட்டிமாங்குறிச்சி அரசு மேநிலைப் பள்ளிக்கு அன்று  தணிக்கைநாள் (Inspection Day) அன்று . அப்போதைய  சேலம்  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.கார்மேகம் அவர்களும், சங்க்கிரி மாவட்டக் கல்வி அலுவலர்  செல்வி கி.வசந்தா அவர்களும் எனது  ”7-ஆ பிரிவு” மாணவர்களது 1 முழுப்  பிரிவேளையையும்  கவனித்தார்கள். எனக்கு அது  முதன்முறை  அனுபவம் ,பயமாகத்தான்  இருந்தது. ஆனால்  பயம்  மறந்து போனது வகுப்பு  ஆரம்பமானவுடன்…
                    அன்றைய  நாளின்  ஒட்டு மொத்த  மதிப்பீடும்  மாலை  6.30 மணி முதல் 8.45 வரை இருந்தது. பள்ளி  ஆசிரியர்கள்  26  பேர்,தலைமையாசிரியர் என ஒரு  வகுப்பறையில  ஆரம்பமானது. ஒவ்வொரு  ஆசிரியரின்  வகுப்பு பற்றிய  மதிப்பீடும் விளக்கப்பட்டது. 
எனது பெயர்  வாசிக்கப்பட்டதும்  எழுந்து நின்றேன் .கொஞ்சம் பயம் , அதைவிடக் கொஞ்சம்  தைரியம்…….உயரதிகாரிகள்   என்னைத்  திட்டவில்லை , அதேசமயம்  எனது  மாணவர்களைப்  புகழ்ந்தனர் . “என்ன  அழகா ஆங்கிலப்  பாடம் நடந்தது இந்த டீச்சரின் வகுப்பில் தெரியுமா?!!! ஸ்டூடண்ஸே(Students)  டீச்(Teach) பண்ணிட்டாங்க”, என்று  எனக்கு , அப்லாஸ் வாங்கி கொடுத்தனர் , எனது  மாணவர்கள் .
                      ஆம், நானும் எனது குழந்தைகளும் பயன்படுத்திய கற்பித்தல்-கற்றல் உபகரணங்களை மட்டுமே  அன்றைய  வகுப்பறையில்  பயன்படுத்தினோம் .
                      7th  English "B" class - If Clause நடத்தப்பட்டது , எங்கள்  வகுப்பறையில் . வழிகாட்டல்  மட்டுமே  நான்  செய்தேன் . அதற்கு  முன் ஒரு  MOTIVATION  பாடல் பாடல்  தந்தேன் . வகுப்பறை உயிரோட்டமாக  மாற  எனது  குழந்தைகள் உதவினர் .  
                       ஏற்கனவே நடத்தாத, புதிய  பாடம் அது. If Clause - அது பற்றி  ஆரம்பித்து , நான் விளக்கிக் கூறியவுடன் ஒரு மாணவன் தெளிவாக , நூல் பிடித்ததுபோல் திரும்பக்  கூறினான் . ஒரு மாணவன்,  If Clause  பற்றி விளக்கம்  எழுதி  வைக்கப்பட்ட நிலை அட்டையைப்        ( Standing Chart pasted on Wall ) பயன்படுத்தினான் . ஆனந்தஜோதி தானாகவே முன்வந்து, “If you work hard/you will pass” இதுபோல 5 விதமான வாக்கிய அட்டைகளை (Sentence stirips) எடுத்து வகுப்பறையில்  பரவலாகக் கொடுக்கிறாள். அவளுக்கு  மாரியப்பன் என்ற மாணவன்  உதவுகிறான் .இந்த அட்டைகளும் வகுப்பறையில் அவர்களே  தயாரித்ததுதான். அட்டைகளின் கீழ் சிறியதாய் தயாரித்தவர் பெயரை எழுதச் சொல்லியிருந்தேன் . அவர்களுக்கு  பயங்கர  குஷி , அதை அவர்கள்  மிகப்  பெரிய  அங்கீகாரமாக நினைத்தனர் .
                     செங்கோட்டையன்  என்ற  மாணவன் கரும்பலகையில்  எழுதுகிறான் .மதிப்பீடு  செய்யப்  பொருத்து அட்டையைப் (Matching cards & Charts) பயன்படுத்துகின்றனர் .சுறுசுறுப்பாக , சந்தோஷமாக இயங்குகின்றனர் . சரியாகப்  பொருத்திய  மாணவர்களை  ஆனந்தஜோதி பாராட்டுகிறாள்….வகுப்பு  நிறைவடைந்தது . மேலும் வகுப்பறைக்கு வெளியே  வாசலில் நித்தியக் கல்யாணி செடிகள் மிக அடர்த்தியும் அழகுமாய்  அசைந்தாட , அது பற்றி அலுவலரிடம் பகிர்ந்து கொள்கின்றனர் .அது புற்று  நோய்க்கு  மருந்து என்று,என்றோ ஒரு நாள் நான்  அவர்களிடம் பகிர்ந்து கொண்டதை, அலுவலர்  கேட்காமலேயே தைரியமாகப் பதிவு  செய்து பாராட்டும் பெற்றனர் .
                                இப்படி 45 நிமிடங்களில்  30 நிமிடங்களை   மாணவர்களே  எடுத்துக்   கொண்டனர் என,  அந்த  மாலை  மங்கிய வெளிச்சத்தில்,கல்வி அலுவலர்கள்  சொன்னபோது  தான்  எனக்கேத் தெரிந்தது, எனது  மாணவர்கள் எவ்வளவு  பக்கபலமாக எனக்கு  உதவி ,என்னை  செழுமையாக்கி உள்ளனர் என்ற உண்மை.
                                 அடிப்படையில்  ஆங்கிலம் பற்றி பயமுடைய கிராமத்து  மாணவி  நான் . அதே பயத்தோடு  வளர்ந்து கொண்டிருந்த  ஆசிரியரும்கூட . ஆனால்  எனது  ஆங்கில  வகுப்பிற்கு  கல்வி  அலுவலர்கள் மிகச்  சிறந்த  அங்கீகாரம் தந்ததற்கு என்னைத்  தகுதியுள்ளவளாக ஆக்கியவர்கள் எனது  அந்த  குக்கிராமத்து குழந்தைச் செல்வங்களே!!! நானும்  அவர்களும் கைகளைக்  கோர்த்து  நடந்ததால்தான்  கற்பித்தல்  பயணம்  சுவைத்தது..***************மீண்டும் பேசலாம்