9.கணக்கு வகுப்புகள்
செட்டிமாங்குறிச்சிப் பள்ளி மாணவர்கள் ஒருவருடத்திற்குள்ளாகவே எனது கைக்குள் வந்து விட்டனர் .நானும் அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு எங்கள் நட்புறவை வளர்த்துக் கொண்டோம் .ஆகவே,கணக்குப் பாடம் அவர்களுக்குக் கஷ்டமான கோணத்திலிருந்து இஷ்டமானதாக மாற்றம் பெற்றது.
யாரும் ஒரே சமயத்தில் 100 க்கு 100 வாங்கி விடவில்லை, ஆனால் 80 மதிப்பெண்கள் பெற்று வந்தவர்கள் 100 மதிப்பெண்கள் பெறத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தினர்.35 மதிப்பெண்கள்தான் அந்த நாட்களின் போராட்டம்.இன்றுபோல் all pass அன்று இல்லை .ஆகவே 35 மதிப்பெண் பெற்றவர் 50 க்கும் , 35 க்குக் குறைவாகப் பெற்றவர் 35-ஐத் தொடவும் தொடர்ந்து தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தினர்.இதுவே ஒரு வெற்றிதானே ............
மேலும் நான் பள்ளிக்கு வராத நாட்களிலும் ,பள்ளிக்குள்ளேயே பிற பணிகளில் இருந்து ,வகுப்பறையில் இல்லாமல் இருக்கும் நாட்களிலும் கூட அவர்களாகவே, குழுவாக அமர்ந்து கணக்குகளைப் போடுவதற்குப் பழக்கப்பட்டனர்.அப்போதைய 7ஆம் வகுப்பு மாணவன் செங்கோட்டையன்
என்பவனும் ஆனந்தஜோதி என்ற மாணவியும் வகுப்பறையை எப்போதும் செயல்படும் களமாக வைத்திருப்பார்கள் .
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வடிவியல் பகுதிகளைக் கற்பிப்பதில் ஆரம்ப காலங்களில் மிகவும் சிரமமாக இருந்தது.அந்த கிராமத்துக் குழந்தைகள் கைகளில் வடிவியல் நோட்டுகளை சுத்தமான வெண்ணிறத் தாள்களோடு பார்பதற்கே ,இரண்டு மூன்று மாதங்கள் அறிவிப்புகளைத் தொடர்ந்து தர வேண்டும் .அதன் பின்னர் கோட்டுத்துண்டு,கதிர்,கோணங்கள் ...........இப்படி வடிவியல் உருவங்களை வரையச் செய்வது என்பது பெரிய சவாலாகவே இருக்கும்....
ஆனால் இரண்டாவது வருடத்தில் வடிவியல் பாடப் பகுதியை அறிமுகம் செய்யவோ,தொடர்ந்து நடத்தவோ கடினமாக இல்லை . காரணம்,அளவில் பெரிய வடிவியல் கருவிப் பெட்டி .கரும்பலகையில் நாம் என்னதான் நம்மிடமுள்ள அளவுகோலை வைத்து வரைந்து காட்டினாலும் அவர்களது மனதில் பதிவதில்லை.
பள்ளியில் இருக்கும் வடிவியல் கருவிப்பெட்டி வகுப்பறைக்கு எடுத்து வரப்பட்டபோது அவர்களது கண்களில் தெரிந்த பேராவல்,ஆசை ,சந்தோசம் ......அது வேறெப்படியும் விளக்க முடியாது. நேரில் பார்த்தால் மட்டுமே புரியும் .
ஒவ்வொரு மாணவ,மாணவியும் பிரம்மாண்டத்தை அதில் கண்டனர். அதிலிருந்து எந்த வகுப்பறைக்கு வடிவியல் பாடம் நடத்தச் சென்றாலும் , முன்கூட்டியே வகுப்புத் தலைவனிடம் /தலைவியிடம் சொல்லி விடுவேன்.
நான் வகுப்பறைக்குள் செல்வதற்கு முன்னரே வகுப்பு மேசையின் மீது வடிவியல் கருவிப் பெட்டி சிம்மாசனமிட்டிருக்கும்.காண்பதற்கே அழகாக இருக்கும் .அதுவே பாதிக்குமேல் மாணவர் கவனத்தை ஈர்த்து விடுவதால் எனக்குக் கற்பித்தல் மிக எளிதாகிவிடும்.
நம்மைப் பொருத்தவரை Geometry Box என்பது ஒரு பெரிய துணைக் கருவி அல்ல,ஆனால் 6,7,8 வகுப்பு மாணவனுக்கு அதில் கணக்குகளைப் போட்டுக் காட்டினால், அவர்களுக்கு அது , ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம்.....புரிதல் மிக மிக எளிது.அதேபோல் 9,10 வகுப்பிலும் நாம் இனம் காணும் மெதுவாகக் கற்போருக்கு இந்த வடிவியல் கருவிப் பெட்டித் துணைக்கருவி நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.
நமக்குப் பழசாகத் தெரியும் இது போன்றவை அவர்களுக்குப் புதிது , ஏனெனில் ஒவ்வொரு வருடமும் புதுப்புது மாணவர்கள் நம்மிடம் வருவார்கள் ,ஒவ்வொரு வகுப்பிலும் புதிய கணக்குகளையே அவர்களுக்குக் கற்றுத்தருகிறோம் ஆகையால் சின்னச் சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க நானும் கற்று,அவர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.நீங்களும் பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளலாம் .
( மீண்டும் பேசலாம் )