வகுப்பறை உளவியல் - 8
************************
சமூகப் பொருளாதார -ஆண் பெண்அரசியல் பேசுவோம்
******"""**""""""************"""""""**********"""******"""""""""
வகுப்பறை எப்போதும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு நாளும் திட்டமிடுகிறோம். சில நாட்களில் எந்தவிதத் திட்டமிடலுமின்றி அது மிக அதிக உயிரோட்டமாக அமைந்து விடுகிறது. அது போன்ற ஒரு நல்ல நினைவை இங்குப் பகிர்கிறேன்.
இப் பள்ளிக்கு வந்த இந்த 4 மாதங்களில் என்னை 3 அமைப்புகளிலிருந்து (அமுதசுரபி , வட சென்னை பகிர்வு ,DYFI ) சிறந்த சமூக செயல்பாட்டாளர் , கல்விக் களப்பணியாளர் , பெண் சாதனையாளர் என கெளரவித்துள்ளனர் . எங்கு எது நடந்தாலும் அது வகுப்பறைக்குத் தேவைப்படும் எனத் தோன்றினால் எனது மாணவருடன் பகிர்வது வழக்கம். இது ஒரு ஆயத்தப் பயிற்சி எனது மாணவருக்கு .
DYFI அமைப்பின் சிறந்த மகளிர் சாதனையாளர் விருதுக் கேடயத்தினை எனது மாணவிகளின் கைகளில் கொடுத்தேன் .....
ஓ.... மிஸ் என்னங்க மிஸ் இது ?
யாரு தந்தா ?
எதுக்கு உங்களுக்குக் கொடுத்தாங்க
யார் இவங்க ? உங்கள எப்படித் தெரியும் இவங்களுக்கு ?
என்ன செஞ்சா இப்படி நாங்களும் வாங்கலாம் ? இப்படி எக்கச்சக்கக் கேள்விகள் ,
ஓரளவிற்கு எல்லோரும் சமாதானம் ஆகி திருப்தி படும் வரை அவர்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்தேன். 4 வகுப்புக் குழந்தைகள் இதனைத் தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டு என்னுடன் அந்த விருதுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதில் ஒரு வகுப்பு மாணவிகள் தமிழ் வழி பயில்பவர்கள் 7 ஆம் வகுப்பு ஆபிரிவு , பொதுவாகவே பள்ளிகளில் ஆங்கில வழி யில் படிக்கும் குழந்தைகளுக்கும் தமிழ் வழியில் படிப்போருக்கும் இடையே பாகுபாடு பார்க்கும் வழக்கம் எல்லா இடங்களிலும் உண்டு , இங்கும் அப்படித்தான், அந்த மாணவிகள் மன வயதில் மற்றவரோடு சமமானவர்களே , ஆனால் பல விஷயங்களில் அதே 7 ஆம் வகுப்பில் ஆங்கில வழி பயிலும் மாணவிகளுடனான ஒப்பிடுதவில் முரண்பட்டு இருக்கின்றனர். ஆகவே இவர்களிடம் நிறைய பேச வேண்டி இருக்கிறது.
அவர்களை மனம் திறக்க இந்த DYFI விருதை ஒரு வலுவான கருவியாகப் பயன்படுத்தினேன். யார் இவர்கள் என்ற அவர்களின் சந்தேகத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை அறிமுகம் செய்ய வேண்டியதாயிற்று. அதோடு தமிழக அரசியல் கட்சிகள் இன்றைய நாட்டு நிலைமை என எங்கள் கலந்துரையாடலும் சிரிப்பும் என ஆழமான ஒரு தாக்கம் அவர்களிடம் ஏற்பட்டது.
மிஸ் .... யார் யாருக்கு மிஸ் இது குடுத்தாங்க ...?
நான் என்னோடு சேர்த்து பெருமைப்படுத்தப்பட்ட மற்ற 4 பெண்களைப் பற்றியும் குறிப்பிட , அதில் கௌசல்யா சங்கர் பற்றி பேச , மிஸ் நான் அந்த நியூஸ டிவில பார்த்தேன் என்று ஒரு 4 மாணவிகள் கைதூக்கி மிகத் தெளிவாக அந்த சாதியப் பிரச்சனையை தாங்கள் செய்திகளில் பார்த்ததை விளக்கினர்.
அதோடு காதல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் குடும்பத்தில் எதிர்வினை , எப்போது அதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் , கொலை செய்யுமளவிற்கான வெறித்தனமான அதீத உணர்ச்சி வெளிப்பாடு எல்லாம் பேசப்பட்டது.
ஆனால் பள்ளி வயதில் ஏற்படும் காதல் உணர்விற்கு முக்கியத்துவம் தரக்கூடாது. அது அறிவியல் ரீதியாக ஹார்மோன்ஸ் பிரச்சனை என்பதையும் கலந்துரையாடல் வழியே அவர்கள் புரிந்து கொண்டனர்.
4 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை குரோம்பேட் ரயில் நிலையத்தில் காலை 10 மணிக்கு மேல் நான் அலுவலகம் (அன்று அனுமதி பெற்று தாமதமாக செல்கிறேன்) செல்ல, ரயில் நிலையத்தில் பள்ளி சீருடை அணிந்த பதின்ம வயது மாணவிகள் 4 பேர் வயதொத்த பாலிடெக்னிக் மாணவர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர் , அதைப் பார்த்து நான் பள்ளிக்கூடம் போகாம இந்த நேரத்தில் இங்க என்ன செய்யறீங்க ? எனக் கேட்டேன்.
சற்றே பயந்தனர். உடனே போகலன்ன பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் சொல்வதாகக் கூற , மாணவிகள் மாயமாய் மறைந்தனர். தொடர்ந்து அந்தப் பையன்களிடம் கேட்டேன். ஏன்ப்பா இப்படி பொண்ணுகள பள்ளிக்கு போகாம நிக்க வச்சு பேசறீங்க ? என்றேன். அதற்கு அந்த விடலைகள் வேறு மாதிரியாகப் பேச ,நேரமில்லை என நான் மின்சார ரயிலுக்கு செல்லும் படிகளில் இறங்கி மீண்டும் மேலே பார்த்தால் அந்த மாணவிகள் மீண்டும் அங்கே ..!!!
எனக்கா செம கோவம் , இது சரிப்படாது என எண்ணி பயணச்சீட்டு அலுவலர்களிடம் சென்று, இதை விளoக்கி ரயில்வே காவலர் எங்கே எனக் கேட்டேன், இவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனக் கூற , அதில் ஒரு பெண் ஊழியர் வருத்தப்பட்டார். மேலும் ரயில்வே காவலர் இங்கு தான் எங்கோ இருப்பர் எனக் கூற, ஆண் ஊழியரோ பணி நேரங்களில் , கேட்க நீங்க யார் எனக் கேட்க, எனக்கும் கோபம் வந்து விட்டது.
நீங்கள் கூட ஒரு பெற்றோர் தானே , உங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு அவர்கள் அங்கு தான் சென்றிருப்பர் என்ற நம்பிக்கையில் தானே இங்கு வந்து நிம்மதியாகப் பணி புரிகிறீர்கள் , அதே போலத்தான் இந்தப் பெண்குழந்தைகளைப் பெற்றவர்களும் நம்பிட்டு இருப்பாங்க எனக் கூறி கொஞ்ச நேரம் காரம் சாரமா விவாதம் நடத்துச்சு.
அப்புறம் அது பயனில்லை என நினைத்து எனது அலைபேசியிலேயே காவல் துறை 100க்கு அழைத்து விபரம் கூறி ரயில்வே காவலர் எண்ணை வாங்கி விஷயத்தைக் கூறி தாம்பரத்திலிருந்து அவர்களை வரவழைத்துப் பள்ளிக்கு அனுப்பிய பிறகே நான் அலுவலகத்திற்கு செல்ல ரயிலில் ஏறினேன்.
அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட , மணி 12.30 ஆச்சு , எனக்கு காலை அரை நாள் விடுப்பாயிற்று. இருந்தாலும் பரவாயில்லை என எண்ணி மகிழ்ந்த போது அடுத்த ரயில் நிலையம் பல்லாவரம் வந்தது. அங்கும் சீருடை மாணவிகள் , மறுபடியும் அதே காவலருக்கு அழைத்து விபரம் கூறிச் செல்ல , என்ன கொடுமை மீனம்பாக்கம் , சைதாப்பேட்டை என அனைத்து நிறுத்தங்களிலும் பள்ளிச் சீருடை அணிந்த மாணவர்கள் . இந்த நிலையை எனது மாணவிகளிடம் இந்த வகுப்பறையில் சொல்ல , இது போன்ற செயல்களால் என்னென்ன இழப்பு , தீமை என அவர்களே மனம் திறந்து பேசினர்.
மேலும் எதற்காக இந்த விருதுகளை உங்களுக்குத் தருகின்றனர் எனக் கேட்ட மாணவிகள் , அவர்களுள் ஒரிருவர் ஏதோ கொஞ்சம் புரிய , இது மாதிரில்லாம் மிஸ் செய்யறதால தான் விருது தராங்கடி எனவும் கூறினர்.
தொடர்ந்து அன்றைய DYFI விழா பெண்களுக்களுக்கானது எனவும் அங்கு வைத்த மையக் கருத்துகள் Neet தேர்வு ரத்து , ஆண் பெண் சம உரிமை இவை பற்றியும் பேச , மேலும் எங்கள் பேச்சு வலுப்பெற்றது. வீட்டில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறோம் , நம் சமுதாயம் பெண்கள் வேலைக்குச் சென்று வந்து வீட்டில் வேலை செய்வது , குடும்பங்களில் ஆண் பெண் குழந்தைகள் வளர்ப்பில் பாகுபாடு , என எல்லாம் பேசினோம்.
Good touch , Bad Touch , பெண்கள் எப்படிப் பாதுகாப்பா தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள விழிப்படையணும் என அவர்களுக்குள்ளேயே பேசப்பட்டது.
உங்களை யாராவது அழகா இருக்காங்கன்னு சொன்னா சந்தோஷப்பட்டு உணர்ச்சிவசப்படக் கூடாது , பெண்கள அப்படி சொல்லி சொல்லி தான் அடிமையாக்கி வச்சுருக்கு வீடும் , நாடும் .
ஆமாமிஸ் , எங்க வீட்ல கூட என்ன அப்படி சொல்லிதான் வீட்டு வேலை வாங்குவாங்க எங்க அம்மா ,
மிஸ் நான் ஸ்கூல் முடிஞ்சு போன உடனே வீட்ல நிறைய வேல செய்யலன்னா எங்க அம்மா திட்டு வாங்க , எங்க தம்பிய மட்டும் ஆம்புள புள்ள ன்னு சும்மா உட்கார வைப்பாங்க ... இது என்னங்க மிஸ் நியாயம் ??
நம்ம சமுதாயம் அப்படிப் பழகி விட்டது கண்ணுங்களா , எல்லார் வீட்டிலும் பிரச்சனை இருக்கு. நம்ம வீடுகளில் பெண்கள் தான் சமையல் , வீட்டு வேல செய்யணும்னு காலம் காலமாப் பழக்கி வச்சுருக்காங்க ,
அம்மாவுக்கு நீங்களும் வேல செய்யலன்னா அவங்க கஷ்டத்த நினைச்சுப் பாருங்க ... ஏறத்தாழ உங்களுக்கு 13 வயது இப்போ ... அப்படின்னா 15 வருஷமா சமச்சு , வீட்டு வேல , பாத்திரம் கழுவி துணி துவச்சு ன்னு தொடர்ந்து உழைக்கிறாங்க ....
எல்லா வேலைக்குச் செல்லும் பெண்களின் வீடுகளிலும் விட்டிலும் வெளியிலும் அவர்களே தான் வேலை செய்யும் சூழல் உள்ளது. ஆனா அதக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தனும் , பெண் உரிமை பற்றி பெரியார் சொன்னதில் முக்கியமா அடுப்பங்கரையை விட்டு பெண்கள் வெளிய வரணும் என்கிறார். அதப் படிச்சுட்டு சமைக்க மாட்டோம்ஸ் ஸ்டிரைக் பண்ண முடியுமா ? முடியாதில்ல .அதுக்காக நாம சண்டை போட முடியாது. .ஒரேடியா சண்டை போட்டா எல்லா குடும்பங்களிலும் டைவர்ஸ் தான் வாங்கணும் .
முதல்ல அவங்கவங்க வீட்ல போய் அம்மாகிட்ட 5 நிமிஷம் பேசுங்க , அவங்க சின்னதில இருந்து எப்படி வளர்ந்தாங்க எவ்வளவு ஆசையா, செல்லமா பெத்தவங்க வளர்ந்தாங்க அல்லது எப்படிக் கஷ்டப்பட்டாங்கன்னு நிறையக் கதைகள் சொல்வாங்க ... இன்னும் நிறைய சொல்வாங்க ... இப்படி எங்கள் உரையாடல் 2 மணி நேரம் நீடிக்க ,
இறுதியில் ....நானும் உங்களைப் போல் அரசுப் பள்ளியில் உங்களைப் போலவே சூழலில் இருந்துதான் வந்து இருக்கேன். இது மாதிரி எல்லா சூழலையும் கடந்து தான் இது போன்ற விருதுகள் வாங்கியிருக்கேன். அதனால் நீங்களும் எல்லாவற்றையும் கடந்து இது போன்ற சாதனைகளை அடைவீர்கள் .... ஓ.... என பெருங்கோஷம் . வாங்குகிறார்களோ இல்லையோ அதற்கான சிந்தனையை விதைத்த நிறைவுடன் ....
தொடரும்
அன்புடன்
உமா