Friday, 27 July 2018

குங்குமச் சிமிழ்

இந்த வார குங்குமச் சிமிழின் பக்கங்களில் நிரப்பப்பட்ட எனது கட்டுரை... பாடசாலை முதலான கல்வி இணையப் பக்கங்களிலும்  வந்தது. பதிவு செய்த அனைவருக்கும்  அன்பும் நன்றியும்.

ஆனால் ... நான் அனுப்பிய கட்டுரையை  இங்கே தருகிறேன்.

புதிய பாடத் திட்டமும் பயிற்சிகளும் .

கடந்த ஒரு வருடமாகவே கல்வித்துறையில்  நிலவி வரும் பரபரப்பு ... பிரம்மாண்டமாக  மக்களிடையே ஒருபெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி அதே எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் பலரின் கூட்டு உழைப்பால் உருவாகியிருக்கும் பாடநூல்கள் எனலாம். அவற்றைப் பற்றி நாம் கட்டாயம் பேச வேண்டும்.

பெற்றோர்களிடையே  தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய கனவுகள் பிரம்மாண்டமாக இருக்க , அதற்கு அரசிடம் அவர்களுக்கான எதிர்பார்ப்புகள் கூடுதலாக ஏற்பட  அதையும் சமரசம் செய்யுமளவிற்கு பேசப்படும் ஒரு பெரும் செய்தியாகி விட்டன பாடநூல்கள்..

சரி அப்படி என்னதான் இருக்கின்றது இந்த புதிய பாட நூலில் .....

வளர்ந்து வரும் தொழில் நுட்பமும்,பல்வேறு போட்டித்தேர்வுகளுமே புதுப்புத்தகத்துக்கான வாசலை திறந்துள்ளன என்றால் மிகையாகாது எனலாம். பாடநூல்களில் சுலபமாக மாற்றத்தை கொண்டுவர முடியாது.பாடப்புத்தகங்களுக்கென்றே ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன.அதை மீறாமல் உயிர்ப்புள்ள ஒரு பாடப்புத்தகத்தை  உருவாக்குவது உண்மையில்  ஒரு பெரிய சாதனை , அதை இப்பாடநூல்கள் மெய்ப்பிக்கின்றன.

உதாரணமாக ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப்புத்தகம் அனைத்துத் திறன்களையும் கற்பிக்கக்கூடிய மிகச்சிறந்த புத்தகம் என்பதில் சிறிதளவும்
ஐயமில்லை,.உரைநடைப்பகுதிகள்,துணைப்பாடப்பகுதிகள்,கவிதைகள் இவைகள் அனைத்துமே உலகப்புகழ் பெற்ற ஆங்கில இலக்கிய ஜாம்பவான்களால் எழுதப்பட்டவை.Goal setting _இல் (உரைநடை)நமது ஊர் cricket வீரரான Srikanth  அவரது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.விடாமுயற்சியும்,பேரார்வமுமே ஒரு செயலுக்கான வெற்றியைக் கொடுக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறார்.R muslim bond இன்
I can't climb the tree(உரைநடை),Robert frost இன்  stopping by woods in a snowy evening(கவிதை) போன்ற பகுதிகள் மிகுந்த உயிர்ப்புள்ளவைகளாக,உள்ளுணர்வுகளைத்தூண்டி சிந்திக்கும் விதமாக அமைந்துள்ளன.இலக்கணப் பகுதிகளைப் பொறுத்தவரை non finite verbs,participles போன்ற பகுதிகள் அருமையாக தெளிவான விளக்கங்களுடன் இருக்கின்றன.

கணக்குப் புத்தகம் 6,9 வகுப்புகளின் மற்றொரு உதாரணம்புதிய புத்தகம் பார்ப்பதற்கு மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பக்கங்களைத் திருப்பத் திருப்ப அவை தகவல்களால் நிரம்பி வழிகின்றன ,புத்தகங்கள்  . வண்ணங்கள் கண்ணிற்கு உறுத்தாமல் நேர்த்தியாக தரப்பட்டு வரிசைக் கிரமமாக சீராக அடுக்கப்பட்டு கணக்குகள் மிகப் பொலிவுடன் புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தயாரிப்புக் குழு மிக கவனமாக சமச்சீர் கல்வி புத்தகங்களை விட பல படிகள் நன்றாக இருக்க வேண்டுமென மெனக்கெட்டு இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

அட்டைப்பட வண்ணமும் வடிவமும் கூட மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத் தலைப்புகள் ஆரம்பத்திலும் QR Code , கணித மேதைகளின் குறிப்புகள் தந்து , கற்றல் விளைவுகளையும் வகுத்துள்ளனர். அதற்குப் பிறகே அறிமுகத்திற்கு செல்கின்றது ..பெட்டிச் செய்திகளும் பட விளக்கங்களும் , முன்னேற்றத்தைச்  சோதித்தலுக்கான பகுதிகளும் தந்திருப்பதோடு குறிப்புகளுக்கான சிறு சிறு  பெட்டிகளும் கூட தொடர்ந்து தந்துள்ளது பாராட்டத் தக்கது. கணக்குக் கலைச் சொற்களுக்கான  பக்கங்கள் புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் தந்திருப்பது கூடுதல் சிறப்பு,காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இணையச் செயல்பாடு  (ICT CORNER) என்ற புதிய முறையும் ஒவ்வொரு பாட இறுதியிலோ இடையிலோ தந்து தி பெஸ்ட் என்று சொல்லுமளவிற்கு  தயாரித்திருப்பது கண்டு பேரானந்தம்.
இறுதியாக ....

பாடநூல் உருவாக்கக் குழுவின் பெயர்ப் பட்டியல் கூட இறுதிப் பக்கத்தில்  தந்திருப்பதும் உள்ள படியே மகிழ்ச்சி , ஆக எந்த விதத்திலும் புத்தகம் மிக மிக அழகும் செறிவும் வாய்ந்ததாக இருப்பதை  மறுக்கவோ மறுதலிக்கவோ இயலாது

அதோடு நில்லாமல் மேல்நிலை வகுப்பிற்கான 11 ஆம் வகுப்பு புத்தகங்கள் அவ்வளவும் செறிவு மிக்கவை. மிகச் சிறந்த வேள்விகளாக எண்ணி இப்பணிகளை செய்துள்ளது அறியலாம். பாடக் கருத்துகளின் ஆழம் மிக மிகத்  தேவையான பகுதிகளே. .

தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ( NCERT ) புத்தகங்களுக்கு இணையான தரமான புத்தகங்களை வழங்கியது மிக மிகப் பாராட்டத் தக்க செயல். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிந்தனைகளை மாணவருக்கு அளிக்கும் பெரும் விழிப்புணர்வை இப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்குவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறலாம்.

ஆயிற்று ஜூன் மாதம் முழுவதும் முடிந்த சூழலில் ஜூலை மாதம் 10 தேதிகளாயிற்று , ஒவ்வொரு ஊரிலும் ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி தொடங்கி விட்டது. புதிய புத்தகங்களை எவ்வாறு மாணவரிடத்தில் கொண்டு செல்வது என்பது பற்றியும் QR CODE பயன்பாடு எவ்விதம் எடுத்துச் செல்வது என்பது பற்றியும் விடாது இரு நாள்கள் கொடுக்கப்படுகின்றன.

முதலில் உதயச் சந்திரன் அவர்களது பொதுவாகப் புதிய பாட நூலை மாணவரிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை , அதன் உருவாக்கம் பற்றிய நீண்ட உரையும் தொடர்ந்து குறிப்பிட்ட பாடங்களுக்குப் பிரத்யேகமாகப் பேசப்பட்டுள்ள உரை , அதோடு பாடநூல் தயாரிப்புக் குழுவில் பங்கேற்று மதிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்களது உரையும் காணொலியில் தந்து ஆசிரியர்களை ஆர்வமூட்டும் நிகழ்வு பயிற்சியில் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர்கள் விவாதித்து புத்தகத்தின் நிறை குறைகள் பேசப்பட்டு தாள்களில் எழுத்துப் பூர்வமாகப் பெறப்படும் முறைகளும் நிகழ்கின்றன. ஆங்காங்கே உயர்  அதிகாரிகள் வந்து பார்வையிடுகின்றனர். எல்லாமும் மிகச் சரியாகப் போகின்றன.

ஒரு ஆசிரியராக இப்புத்தகங்கள் பற்றிய பார்வையை  பல ஆசிரியர் களின் குரலாக உங்களுக்குத் தரவே  கடமைப்பட்டுள்ளேன்.....

மதிப்பீட்டு பகுதி நமது மாணவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்கிறார் ஒரு 9 ஆம் வகுப்பின் ஆங்கில ஆசிரியர்.பாடத்தின் பயிற்சிப் பகுதிகள் மிக அதிகமாக உள்ளது.அனைத்தையும் கொடுக்கப்பட்ட கால அளவில் முடிப்பதென்பது சவாலான விஷயமே என்ற கருத்தும் கூறப்படுகிறது.

முக்கியமாக 6 மற்றும் 9 வகுப்பில் ஒரு பருவத்தில் குழந்தைகளுக்கும் கொடுத்து கற்றல் விளைவுகளை அறுவடை செய்து விட சூழல்கள் உள்ளனவா என்பது மிகப் பெரும் கேள்விக் குறி.

போட்டித் தேர்வை மனதில் கொண்டே முழுப் புத்தகமும்  பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது மற்ற மாணவரை மனதில் வைக்க மறந்து விட்டனரோ என எண்ண வைக்கிறது.

எல்லோருடைய குரல்களிலும் ஒலிக்கும் ஏக்கம் நேரமின்மை . முப்பருவமாகப் பிரித்த பிறகு குழந்தைகள் குறுகிய காலத்தில் ஒரு மிக நீண்ட முழுப் புத்தகத்தைப் புரிந்து கற்றல் நிகழ்ந்து மாற்றம் பெறுவதில் சிக்கல் ,பக்கங்கள் மிக அதிகமாக உள்ளன. , ஏனெனில்  ஆசிரியர்களுக்கு கோப்புகள் தயாரிக்கும் பணி கூடுதல் சுமை எனவும் , எல்லாக் குழந்தையையும் எளிதில் அத்தனையையும் கற்க அழைத்து வருவது வெளிப்படையாகக்  கூற வேண்டுமெனில் இயலாத ஒன்று.

மிக முக்கியமான ஒன்று , QR CODE இன் பகுதிகளை வகுப்பறையில் பயன்படுத்து எவ்வாறு ? ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவார்கள் , எல்லோருமா பயன்படுத்துவார்கள் என்றால் அது கேள்விக் குறியே. .

ஒரு வகுப்பின் 30 (அ) நாற்பது மாணவர்களுக்கும்  எவ்வாறு இதைக் காட்டுவது ?45 நிமிடத்தில் பாட நூலின் சில பஸ் என சொல்லப்படும்  பாடப்பகுதியை முடிப்பார்களா ? QR CODE பயன்படுத்துவார்களா ? மாணவரின் பிரச்சனைகளை அணுகி அவர்களைப் படிக்கத் தயாரிப்பு செய்வார்களா ? ஏனெனில் சிறு அலைபேசியில் 2 மாணவரை வேண்டுமானால்  ஒன்றாக அழைத்துக் காட்டலாம். வகுப்பு முழுவதிற்கும்  அதைக்  காட்டுதல்  முழுவதும்  இயலாதது. ஒவ்வொரு வகுப்பிலும்  ஸ்மார்ட் க்ளாஸ் என்று சொல்லப்படும் வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

அதை விட 11 ஆம் வகுப்பில் புத்தகத்தின்  அதிகப் பாடச் சுமையால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் மாணவர்கள் ஃபர்ஸ்ட் குரூப் என்று சொல்லப்படும் இயற்பியல் , வேதியியல் , உயிரியல் பாடப் பிரிவில் சேர அஞ்சி வெளியேறும் சூழல் , ஒரு தலைமை ஆசிரியர் ஈரோடு மாவட்டத்தில் கூறும்போது ஒரு குறிப்பிட்ட பள்ளியில் அந்தப் பாடப் பிரிவு சேர்க்கை பூஜ்ஜியம் , நன்றாக தேர்வு முடிவுகள் தந்து சிறப்பான பள்ளி எனப் பெயர் பெற்ற தனது பள்ளியில் கடந்த ஆண்டை விட 11 ஆம் வகுப்பு சேர்க்கை ஏறத்தாழ பாதியாகக் குறைந்தும் கணினி வகுப்புப் பிரிவில் மிகக் குறைவான சேர்க்கை எனவும் , இது ஆரோக்கிய மற்ற சூழலை உண்டு பண்ணி இருக்கிறது என வருத்தப்படுகிறார். காரணம் , உயிரியல் பிரிவு புத்தகங்களின்  மட்டுமே  1000 பக்கங்கள் கொண்டுள்ளன , எம் பள்ளியில் ஜூன் மாதம் படித்து விட்டு இயற்பியல் , வேதியியல் பாடச் சுமையைத் தாங்க முடியாமல்  வேறு பிரிவிற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ள மாணவர்களைக் குறிப்பிட்டு வருத்தப்படுகிறார்.

வேலூர் மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் மேற்சொன்ன காரணத்தால் மாணவர் இல்லாததால் அந்தப் பாடத்திற்கு ஆசிரியர் தேவையற்றதாகி அந்தப் பணியிடம் நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்.. இது தமிழகத்தின் பல பள்ளிகளுக்கும்  பொருந்தும்.

இவற்றை சரிகட்ட மாற்று வழி என்ன ? என்ற சிந்தனையை உங்கள் முன் வைக்கிறேன். மீண்டும்  மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா ? யோசியுங்கள்.

மற்றுமொரு பெரிய சிக்கல் ஆங்கில வழியாக மாறிக் கொண்டிருக்கும் தமிழ் வழிப்  பள்ளிகள்  , அங்கே தமிழ் வழியே கற்பித்துக் கொண்டுள்ள ஆசிரியர்களே ஆங்கில வழியில் கற்பிக்கப் பணிக்கப்படுகின்றனர்.  எந்தவித பயற்சியும் இல்லாமல் , ஆங்கிலத்தை தமிழ் வழியிலேயே கற்பிக்கும் சூழலில் ஆங்கில வழியில் உள்ள பாடநூல்கள்  மற்றொரு சவால்.

பாடநூல்கள் தனியாகப் பேசக் கூடிய பொருள் அல்ல , அது பள்ளி சூழல் , ஆசிரியர் நிலை , திறன்கள் , குழந்தைகளின் திறன்கள் , தலைமை ஆசிரியரின் கவனம் , உயர் அலுவலர்களின் அணுகுமுறை ,தேர்வு முறைகள் , பெற்றோர் சமூகம் எல்லாமும் இணைந்த ஒரு சங்கிலிப் பிணைப்பு.

ஆகவே பள்ளிகளில்  உண்மை நிலையில் தகுந்த சூழலும் , ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தியும் திறம்பட  மேற்பார்வை செய்யும் தலைமையும் நிறைந்த பள்ளிகளாக இருப்பதோடு  மாணவரிடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களது மனப்பான்மையும் தான் உள்ள படியே மாற்றங்களை விளைவித்து புத்தகத்தின் சிறப்புகளை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும் .

உமா

கற்க மேத் லேப்

இன்றைய நாளின் சிறப்பு :26.07.2018
***************************************

உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துதல் :
----------------------------------------------------------------
சென்னையைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் தான் உள்ளூர் வளமாக விரவி இருக்கிறது.

பள்ளிகள் எல்லாம் கற்பித்தலில் புதுமையை நோக்கிச் செல்லும் காலகட்டமாக இருக்கும் இவ்வேளையில் , கணக்குப் பாடத்தை கணினி வழிக் கற்க எம் பள்ளி மாணவிகளுக்கு கணினி ஆய்வகம் எனப் பொருள்படும் Computer lab இன்று திறக்கப்பட்டது.

வளர்ச்சியடைந்த நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தாலும்  , அதிக சிந்தனையும் மீத்திறனும் பெற்ற மாணவிகளாக இருந்தாலும் ,தனிப் பட்ட முறையில் அரசுப் பள்ளி என்றாலே அங்குள்ள மாணவர்கள் சற்று பொதுவான பார்வையில் ஏளனமாகத் தான் பார்க்கப்படுகின்றனர். அவர்களது குடும்ப சூழல் நாடு முழுவதும் ஒரே நிலையே.

வாய்ப்புகள் கிடைக்காமல் , ஒதுக்கப்படும் சூழல் , பாகுபாடு என இங்கு ஒரு தலைமுறைக்கு முன்பிருந்த பள்ளி சூழல் தான் இன்றும் பல ஆயிரம் பள்ளிகளில் நிலவுகின்றன.

ஒரு தனியார் நிறுவனம் தாம்பரத்தில் அமைந்துள்ளது , எமது பள்ளிக்கு உதவ முன்வந்து அணுகி பல முறை வந்திருக்கின்றனர். பெரிய பள்ளி , பணிச்சுமை அதிகம் என்பதாலும் மேலும் சில காரணங்களாலும்  தானாக வந்த வாய்ப்பு ஏற்கப்படாமலிருக்க ,

நான் இப்பள்ளிக்கு வந்து மிகச் சில மாதங்களே ஆகியிருந்த வேளையில் ,  சமீபத்தில் தான் நான் பள்ளிக்கு வந்திருந்தாலும், குழந்தைகளுடன் ஒட்டிக் கொண்டு , அவர்களோடே இருப்பதைப் பார்த்த தலைமை ஆசிரியர் எனக்கு ஒரு வாய்ப்பு தந்தார்.

ஆம் , அந்த தனியார் நிறுவனம் மீண்டும்  வந்த போது என்னை அழைத்து இது பற்றி பேச , இரு கரம் கூப்பி வாங்க வாங்க ... எதுவாக இருந்தாலும் குழந்தைகளுக்காக செய்வோம் எனக் கூறி , எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க ,

அவர்களோடு தொடர்ந்து 5 மாதப் பயணம் ,இன்று எனது பள்ளியில் 53 மேசைக் கணினிகள் அடங்கிய கணக்கு கணினி  ஆய்வகம் ... இன்று ஆரம்பமானது .

6, 7, 8 ஆம் வகுப்புக் குழந்தைகளில் (தற்போதைக்கு) ஆங்கில வழி மாணவிகள்  ஒவ்வொன்றிலும் இரு வகுப்புகளுக்கு இந்த 'கற்க மேத் ' லேப் பயன்படுத்தப்படும் ,

இதற்காக ஒரு நிறுவன மேலாளர் ,ஒருங்கிணைப்பாளர் கொண்ட பெரிய குழு தொடர்ந்து உழைத்தது. உபகரணங்கள் வழங்கியதோடு அந்த பெரிய வகுப்பறைக்கு வண்ணமடித்து , மாதம் தோறும் சம்பளம் தந்து ஒரு கணினி ஆசிரியர் நியமித்து அத்துணை பெரிய உபகாரத்தைச் செய்துள்ளனர் ,

கற்பித்தலுக்கான மென்பொருள் , வழிகாட்டல் இவை அனைத்தும் கிருத்தி வாசன் என்ற நபர் (AItius foundation) , கான் அகாடமி வீடியோஸ் முதற்கொண்டு பயன்படுத்தி வடிவமைத்துள்ள ஒரு குழு , அவர்களின் தலைமை இவர் , இவரது சந்திப்பு , விளக்கங்களைத் தொடர்ந்து மே மாத விடுமுறையில் இதற்கான வகுப்புகளை எம் பள்ளி  கணக்கு ஆசிரியர்களை அழைத்துச் சென்று தீர்மானமாக ஏற்றுக் கொள்ள ஒரு சந்திப்பும் நடந்தது.

இதற்கு ஆரம்பமாக ஏற்கனவே கிருத்தி வாசன் வழிகாட்டலில் இயங்கும் எக்மோர் அருகே ஒரு பள்ளியைப் பார்வையிடச் சென்றோம் நானும் மற்றொரு ஆசிரியர் புவனாவும் , அந்த சந்திப்பின் போது  நான் பேசியதும் , காட்டிய ஆர்வமும் , கொடுத்த வாக்குறுதியுமே இந்த ப்ராஜக்ட் எம் பள்ளிக்கு வருவது உறுதியானது.

எல்லாம் முடிந்து கல்வி அலுவலர் அனுமதி பெற்று மற்றுமுள்ள சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவடைந்து ஆசை ஆசையாய் இதோ எனது பள்ளிக் குழந்தைகள் பரவசத்துடனே ...

இதற்கான நடைமுறை மிகப் பெரிய சவால் , ஆசிரியர்களுக்கு .. ஆம் இதற்கான கால அட்டவணை நேரம் அனைத்தும் மாற்றி , அறிவியல் பாடம் எடுத்த எனது மாணவர்களுக்கு இன்று முதல் இந்த ப்ராஜக்ட்டால் கணக்குப் பாடம் எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளேன்.

முதலில் 6 ஆம் வகுப்புக் குழந்தைகள் 94 பேர் (இரு பிரிவுகள் ) தேர்வு செய்து ,இதற்காக அடிப்படை கணக்கு செயல்பாடுகளில் தேர்வு வைத்து , மாணவர் நிலை அறிந்து அவர்களுக்கான பாடப்பொருளை ஒவ்வொரு கணினியிலும் உள்ளீடு செய்து , தனித்தனியாக கணினி எண் தந்து , இன்று அவர்களுக்கு வரிசையில் நிற்பது முதல் உள்ளே வந்து அமர்வது , நோட்டுகளை வரிசை மாறாமல்  எடுப்பது , திரும்ப வைத்து விட்டு வெளியே செல்வது , கணினியில் அமர்ந்து அதை இயக்கப் பழக்குவது , தங்களது User Name , Password பயன்படுத்தி ,log in , log Out செய்து முடிப்பது என அனைத்தும் பயிற்சி தருவதாக  அமைந்தது இன்றைய தொடக்க நாளில் .

பள்ளியின் குழந்தைகள் ,ஆசிரியர்கள் அனைவருக்கும் Dairy Millk தந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது Urjta நிறுவனமான இந்த ப்ராஜக்ட் தந்த நிறுவனம் .

அனுமதித்து உள் வர உதவிய தலைமையாசிரியர்  , குழந்தைகளுக்காக கற்பித்தல் முறையில் மாற்றம் தர ஏற்றுக் கொண்ட கணக்கு ஆசிரியர்கள் , பள்ளிக்கு இதை எடுத்துச் செல்ல அனுமதி தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் , 3 மாதமாக ஆய்வகத்தைத் தயார் செய்த பணியாளர்கள் , விரும்பி ஏற்ற மாணவர்கள் , மென்பொருள் தந்த Altius foundation , கிருத்தி வாசன் குழு , மொத்தமாய் பல லட்சம் ரூபாய்களை வாரிக் கொடுத்த ஊர்ஜிதா நிறுவன மேலாளர் ,ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும் மாணவர்கள், பள்ளித் த.ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களின் சார்பாக .

சிறப்பு நன்றி ஒருங்கிணைப்பாளர் ரோஸ்லின் அவர்களுக்கு ...

மிகப் பெரிய கூட்டு முயற்சியால் விதைக்கப்பட்டுள்ள இந்த நற்செயல் இன்னும் சில வருடங்களில்  மிகப் பெரிய விருட்சமாகும் என்பதில் பெரிய நம்பிக்கைக் கொள்கிறேன்.

அன்புடன்
உமா

Tuesday, 17 July 2018

வகுப்பறை உளவியல் - 13

வகுப்பறை உளவியல் : 13

நம் வகுப்பறைக் குழந்தைகள் எப்போதும் பாடத்தோடு மட்டுமே தங்களை திருப்தி படுத்திக் கொள்வதில்லை என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன்.

ஒரு சில ஆசிரியர்களின் எண்ணம் என்னவோ , இல்லை அவர்கள் அப்படி எதுவும் வெளிக்காட்டுவதில்லையே , எங்களிடம் எதுவுமே பேசுவதில்லையே என்பது.

ஆசிரியர சகோதரர்களே தயவு செய்து அவர்களுக்கான கருத்துப் பரிமாற்றத்திற்கு இடம் தாருங்கள்  , நேரம் ஒதுக்குங்கள் .

அவர்கள் நம்மை (ஆசிரியர்கள்) உற்று நோக்குகின்றனர். அவர்களைச் சுற்றி உற்று நோக்குகின்றனர். பிரச்சனைகளை அணுகவும் கலையவும் கூட வழிகாட்டுகின்றனர், எல்லாவிதத்திலும்.

பள்ளி ஆரம்பித்து முதல் வாரத்தில் இருந்தே 10 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கணக்குக்கான சிறப்பு வகுப்பு மாலை 5.30 வரை இருந்து வருகிறேன். இது எனக்கும் மாணவருக்குமான உடன்படிக்கை , யாரும் கட்டாயப்படுத்தவில்லை. 

அந்த 4.15-5.30 என்ற நேரத்தில் தான் எங்களுக்குள் அதிகப் புரிதல் வந்தது. கணக்கு நடத்துவது மட்டுமல்ல எங்கள் நோக்கம் , அவர்களது 9 ஆம் வகுப்பு வரையிலான கற்றல் சூழல் பற்றிக் கூறுவார்கள் . யாரைப் பிடிக்கும் , ஏன் பிடிக்கும் ? கணக்கு சுத்தமும் பிடிக்கவில்லை என்று தான் ஆரம்ப நாட்கள் கருத்து வெளியீடு இருந்தது.

திடீரென குளோரியும் ரஞ்சனியும் கணக்கு  மிக சீரியஸாகப் போடும் போது மிஸ் , எங்களுக்குப்  பாண்டா கதை சொல்லியே ஆகணும் மிஸ் என்பார்கள்.

8 , 6 வகுப்புக் குழந்தைகளும் 4 , 5 பேர் ஆர்வமாக சிறப்பு வகுப்பிற்கு உட்கார்ந்து அவங்க பாடத்தப் படிப்பாங்க , கணக்கு போடுவாங்க , நிமிஷத்துக்கு ஒரு முறை சந்தேகம் கேட்பாங்க. அவங்க அளவுக்குக் கூட சிரத்தையா இல்லாம 10 ஆம் வகுப்பு குழந்தைங்க விளையாட்டா இருப்பாங்க , அதற்கும் ஈடு கொடுத்து அவங்கள அழைச்சுக்கிட்டுப் போக வேண்டிய சூழல் ..

மிஸ் , இது போதும் ....என்றால் ,கணக்கை நிறுத்திடனும் , இல்லாட்டி  ஒன்னும் பண்ண மாட்டாங்க , தலைவலி , வயிற்று வலி எல்லாம் தலைகாட்டும். ஆகவே .. போதுமா சரி .. கொஞ்சம் அரசியல் பேசுவோம் , பெண் பிள்ளைகளுக்கே உள்ள வலிகள் , சூழல் , எப்படி எதிர்கொள்வது  , எப்போதும் சிரித்திருப்பது என எல்லாவற்றையும் பேசுவோம் .. மீண்டும் கணக்குக்கே  வந்து விடுவேன்.

அருள் நந்தினி சொல்லுவாங்க ஒரு அழகான சிரிப்புடன் , மிஸ் ... கடைசியா மேத்ஸ் மறக்க மாட்டேன்றிங்களே.என்னடா கண்ணு பண்றது ? நம்ம வேலை அது தானே  .. என்று பேசி இணைந்து விடுவோம்.

ரூபினி அடிக்கடி சமூக சேவை பற்றிக் கேட்பார். வகுப்புக்கு சென்ற இரண்டாம் நாளே ..நான் முதல்வரானால் தலைப்பு பற்றி கொஞ்சம் கருத்துகள் கேட்டார். எதற்கு என்றதற்கு ... டியூஷன்ல  போட்டிங்க மிஸ் என்றார் .. நீட்டிலிருந்து கல்வி உரிமைச் சட்டம் ,PTA , SMC எனவும் , வேறு பலவும் பேசப்பட்டு கொஞ்ச நாள் கழிச்சு .. மிஸ் நான் இரண்டாவது பரிசு என்றார்.

கொஞ்சமும் வகுப்பில் பேசாத கவனிக்காத  சுபாஷினியை ஒரு நாள்  அழைத்து ஏன் இப்படி இருக்கே என சற்றே  சத்தமாகக் கேட்க .. அழுகையுடன் அவர் சொல்லியது .. மிஸ் படிக்க ரொம்ப ஆசையா இருக்குங்க மிஸ் , ஆனா புரியல .. அடடா நீ அழாதே குட்டி .. சுலபமா படிச்சுடலாம் என்று கூறினாலும் அவருடன் தினம் போராட வேண்டியுள்ளது.

தினம் தினம் பஸ் பிடிக்கப் போக அனுமதி கேட்கும் ஹரிணி , மிஸ் IT சேர எந்த க்ரூப் எடுக்கணும்னு அடிக்கடி கேட்கும் ரோஹிணி ... விஜய் பர்த்டே கொண்டாடணும் மிஸ் , உங்களுக்குப்  பிடிச்ச நடிகர் யார் எனக் கேட்கும் உமா , காய்ச்சல் வர்ற மாதிரி இருக்குன்னு அடிக்கடி வீட்டுக்குப் போகக் கேட்கும் மோனிகா , மிஸ் இங்க வாங்களே என்று ரகசியமாக் கூப்பிட்டு காதுக்குள் வினாடி வினா கேள்வி கேட்கும் ரம்யா , என இவர்கள் அனைவரையும் ஒரு சேர அழைத்து அரவணைத்தே செல்ல வேண்டுமாய் இருக்கிறது எனது கணக்கு வகுப்புகள் . ....

இப்படி பயணித்ததால் கடந்த ஒன்றரை மாத காலத்தில் அவர்களுக்கும்  எனக்குமான உறவு பலப்பட்டது. ஜூலை 1 முதல் எல்லாப் பாடங்களும் தினம் ஒரு நாள் 5 மணி வரை என வகுப்புகள் ஆரம்பிக்க நாங்கள் 5 முதல்5.45 வரை எங்கள் நேரத்தை நீட்டிக் கொண்டோம்.

ஒரே பிரச்சனை .. ரொம்ப லேட்டாகுது மிஸ் ..7 மணி வரை கூட இருப்போம் , ஆனா பசிக்குதுங்க மிஸ் என்று குழந்தைகள் முகம் வாட .. ஆரம்பித்தது , வகுப்பு முடியும் போது தினமும் சின்னதாய் அவர்களது பசியாற்ற பிஸ்கெட் ஏற்பாடு செய்தேன். சந்தோஷமாக குழுக்கற்றலும் இணை கற்றலும் என் மூலம் கற்றலும் இப்படி ...

கடந்த வாரம் பேசும் போது வேல்விழி சொன்னது .. மிஸ் ... இத்தன வருஷத்தில் இப்போதான் கணக்குக்கு க்ளாஸ் ஒர்க் தினமும் எடுத்து எழுதியிருக்கேன். உங்களால தான் கணக்கு போடறேன். தைரியமா இவற்றைப் பேச விடுவதால் நம் மீது அவர்களுக்கு நம்பிக்கை வருகிறது.

பயிற்சிக்கு சென்ற 4 நாட்களும் கணக்கு வகுப்புகளில் இயல்பாகக் கற்றல் நடந்துள்ளதை அவர்களே வந்து சொல்றாங்க ...

நேற்று மாலை 5.05க்கு நான் வகுப்பிற்குள் நுழைய  ஒரே கூச்சல் ... மிஸ் முதல் இடைப் பருவத் தேர்வு வருதுன்னு  எல்லா மிஸ் உம் டெஸ்ட் தந்து இருக்காங்க , தலை வலிக்குது. ஏதாச்சும் பேசலாம் மிஸ் எனக் கூற ... யோசித்துக் கொண்டிருக்கும் போதே ..

ஏதேச்சையாக அரிமா சங்க நண்பர்  Sathyanarayanaraj Balaguru   வர ... அவரை அறிமுகப்படுத்தி ... இவர் உங்களோடு பேசுவார் என வழி விட ... சுமார் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக கலந்துரையாடி ஒரு மோட்டி வேஷனல்  ஷெசன் எடுக்க , அவர்களிடமிருந்து பல சந்தேகங்கள் , ஆர்வம் எக்கச்சக்க கேள்வி கேட்க .... வாழ்வின் இலட்சியம் எப்படி இருக்க வேண்டும் , நோக்கம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் ,எந்த பாடப் பிரிவு எடுத்தால் என்ன படிக்கலாம் ? நீட்டுக்கு என்ன செய்ய  என்று அவருடன் பலவாறு விவாதித்தனர். வழிகாட்டி வகுப்பை அவர்கள் விரும்பினர் என்பது வீட்டிற்குச் செல்லும் முன் அவர்களது சந்தோஷப் பகிர்வால் அறிந்து கொண்டேன்.

(அவர்களுக்கான மாலை சிற்றுண்டியாய் Chennai vision 101 லயன்ஸ் கிளப் சார்பாக 3 நாட்களுக்கான பிஸ்கட்ஸ் வழங்கிச் சென்றார். அன்பும் நன்றியும் சத்ய நாராயணன் )

இன்று வகுப்பிற்குள் செல்லும் போது
நேற்றைய  மாலை வகுப்பு மிகப் பயனுள்ளதாக இருந்ததாகவும் வரும் தேர்வில் தங்களால் முடிந்த வரை சிறப்பாக செய்வதாகவும் நான் கேட்காமலேயே  உறுதி கூறினார் .

இப்போதெல்லாம் அவர்களாகவே கணக்குப் போட்டுப் பார்க்கத் தயாராகிவிட்டனர் , இன்று மாலை  5.50 க்கு வீட்டிற்குத் திரும்பும் போது , தீபா வந்து மிஸ் இப்பவெல்லாம்  நீங்க சொன்னது மாதிரியே நைட் 10 மணி வரைக்கும் படிக்கிறேங் மிஸ் ... டிவி எல்லாம் பார்ப்பது இல்லை , எங்கம்மா சொல்றாங்க .... நீயா இது ?திருந்திட்டியான்னு .... என சிரித்துக் கொண்டே என்னிடம் கூறி மகிழ்கிறார்.

வகுப்பறை வசப்பட ஒரு மென் சொல்லும்  சிறு புன்னகையும் போதும் என எனக்குக் கற்பித்த அன்பு தேவதைகள்  இவர்கள் .

தொடரும் உளவியல்....
அன்புடன்
உமா