Friday, 27 December 2019

Tamil Hindu 1

https://www.hindutamil.in/news/vetrikodi/serial/528647-mella-naluvum-kalvi-3.html

Tamil Hindu - 4

https://www.hindutamil.in/news/vetrikodi/news/532313-talk-with-children.html

Hindu Tamil

வெற்றிக் கொடி

Published : 27 Dec 2019 04:10 PM
Last Updated : 27 Dec 2019 04:10 PM

#குழந்தைகளுடன்_உரையாடுவோம் - 4:

வகுப்பறை என்னும் திறன் அறியும் களம்!

talk-with-children

நமது கல்வி முறையின் பெரும்பகுதி தேர்வை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. அதன் நீட்சியாக பாட நூலின் மொத்த ஆக்கிரமிப்பு மட்டுமே குழந்தைகளுக்கு முழுமையான வகுப்பறை அனுபவங்களாக மாறி விடுகின்றன. வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் சுதந்திரமான ஒன்றாக இருக்க வேண்டும் . அப்போதுதான் மகிழ்ச்சியான கற்றல் - கற்பித்தல் நடைபெறும் என்பதோடு மாணவரின் திறன்கள் வெளித்தெரிய ஆரம்பிக்கும்.

ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்களை அறிதலும், அதைக் குறிப்பிட்டு பலர் முன்னிலையில் பாராட்டுவதும், சிறு பரிசுகள் வழங்குதலும் நடைபெற வேண்டும். அப்படியான வகுப்பறையில் மாணவர்கள் எப்போதும் உற்சாகத்துடனேயே காணப்படுகிறார்கள். அங்கு கடினமான பாடங்களும் குழந்தைகளுக்கு விருப்பமாகி விடுகின்றன. ஆரம்ப காலங்களில் மாணவரது ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பாராட்டு அடிப்படையாக அமைகிறது.

எப்போதுமே வகுப்பறையில் குறும்புக்கார குழந்தையாக அனைத்து ஆசிரியர்களையும் வருத்தப்பட வைக்கும் 7-ம் வகுப்பு மாணவி நந்தினி. ஆனால் நந்தினியிடம் அற்புதமாக வரையும் கலை இருப்பதையும் கைவினைப் பொருட்கள் செய்யும் திறன் இருப்பதையும் ஆசிரியர் ஒருவர் கண்டறிகிறார். அதற்காக சிறு சிறு பாராட்டு வார்த்தைகளை வகுப்பறையில் கூறுகிறார்.

நந்தினி உற்சாகமாகி விடுவதுடன் தனது குறும்புகளை திறன்களாக வெளிப்படுத்துகிறார். ஓவியங்கள் வரைதல், கதைகள் எழுதுவது, எழுதிய கதைகளுக்கு தானே ஓவியங்கள் வரைவது என அந்த மாணவி தன்னை வளர்த்துக் கொள்கிறார். தற்போது தேர்வில் 70% மதிப்பெண்கள் வாங்குமளவிற்குத் தயாராகி விட்டார். இது அவரைப் பொறுத்தவரை மிகப்பெரிய நடத்தை மாற்றம். சரியான திறன்களை அடையாளம் கண்டு அதற்கான வாய்ப்பையும் சுதந்திரத்தையும் வகுப்பறையில் தந்ததால் தான் இது சாத்தியமாயிற்று.

அதே வகுப்பறையில் மோனிஷா தனது புத்தக வாசிப்பு அனுபவத்தை எழுதத் தொடங்கியவர். அவரது ஆர்வத்தைக் கண்டு, ஒரு சிறுவர் புத்தகத்திற்கு அவர் எழுதிய பின்னூட்டத்தை புத்தகத்தின் பின் அட்டையில் இடம் பெறச் செய்கிறார் ஆசிரியர். அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய பாராட்டு. தனது பெயருடன் தான் எழுதிய கருத்தை அனைவரும் வாசிக்கும் ஒரு புத்தகத்தில் காண்கையில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுகிறார் மோனிஷா. நான் எதிர்காலத்தில் ஒரு எழுத்தாளராக வருவேன் என்றும் சொல்கிறார்.

*படிப்பு- கசப்பு*

அனுப்ரியாவுக்கு படிப்பது என்றால் எட்டிக் கசப்பு. ஆனால் வகுப்பறையில் ஒரு நாள் செயல்பாடாக ஆசிரியர் தந்த ’காற்று’ தலைப்பிலான பாடப்பகுதியை ஆசிரியரை விட அற்புதமாக நடத்திக் காட்டுகிறார். உரையாடல் வழியாக ஒரு கருத்தை மற்றவரிடம் பதிய வைக்கும் திறன் ஏழாம் வகுப்பு மாணவி அனுவிடம் இருப்பதைப் பாராட்டுகிறார் ஆசிரியர். அவரது கவனம் கூடுதலாகி, படிப்பிலும் சற்றே மாற்றம் உருவாகிறது.

முதல் மதிப்பெண் வாங்கும் மகேஸ்வரிக்கு வகுப்பைக் கவனித்துக் கொள்ளும் தலைமைப் பண்பில் சந்றே திறன் குறைவு . ஆனால் மெதுவாகக் கற்கும் மாணவரை அருகில் அமர வைத்து அவர்களுக்குப் புரியும்படியாக கணக்கைக் கற்றுக் கொடுத்து ஆர்வத்தைத் தூண்டுவதில் திறமையுடையவர். ஆயிஷா சித்திகா எப்போதும் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவராக இருக்க ஒரு நாள் பேச்சுப் போட்டியில் பேச அழைக்கப்படுகிறார். கல்வி குறித்து அவரது பார்வையும் எப்படி மாற்றம் பெற வேண்டும் என்றும் யதார்த்தமாகப் பேசுகிறார் . மாணவிகளின் கைத்தட்டல் வகுப்பை கலகலப்பாக்குகிறது. அந்த உற்சாகமும் பாராட்டும் அடுத்த தேர்வில் அவரை நல்ல மதிப்பெண் பெற வைக்கிறது.

ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர் சாருலதா. அவரை சாருவின் பெற்றோர் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்த்துவிட்டனர். ஆங்கில வழியில் அனைத்துப் பாடங்களும் சாருலதாவை மிரட்டுகின்றன, பயப்படுகிறார். ஆனால் அவளிடம் விடாமுயற்சி அதிகமாக இருப்பதைக் கண்டறிகிறார் ஆசிரியர். விளைவு ஆங்கிலத்தில் 95 சதவிகித மதிப்பெண் பெறும் திறன் பெறுகிறார். அது மட்டுமல்ல , ஆங்கிலப் புத்தகத்தின் பாடப்பகுதியை வீட்டில் படித்து குறிப்பெடுத்து அகராதியைப் பயன்படுத்தி வகுப்பறையில் மற்ற அனைவருக்கும் பாடமே நடத்துகிறார்.

*தேர்வுக்கு தயார் செய்யும் கூடங்கள்*

இவ்வாறு நம்மிடம் வகுப்பறையில் உறவாடும் ஒவ்வொரு குழந்தையும் அவர்களிடம் ஏதோ ஒரு திறனுடன்தான் வருகின்றனர். மதிப்பெண்களை மட்டும் கவனத்தில் கொண்டு நாம் அவர்களை அணுகும்போது, அவர்களது திறன்கள் அறியப்படாமலேயே மருகி விடுகிறது. அதோடு அவர்களது மனம் சோர்வுக்கு ஆளாகி விடுகிறது. தங்களுக்குப் பிடித்தமான ஒரு கலையை அல்லது பணியை அவர்கள் செய்யாமல் விடுவது எண்ணி மனதிற்குள்ளேயே உழல்கின்றனர். அதைப் பகிர்ந்து கொள்ள ஒரு இடமின்றி மனவியல் சிக்கலுக்குக் கூட ஆளாகிவிடுகின்றனர். ஏனெனில் வீடுகள் பெரும்பாலும் தேர்வுக்கு அவர்களைத் தயாரிக்கும் கூடங்களாக மட்டுமே செயல்படுகின்றன.

பெற்றோர்கள் தங்களுக்குப் பிடித்த அல்லது தெரிந்த திறன் அடிப்படையில் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர். எத்தனையோ குழந்தைகள் பெற்றோருக்காக பாட்டு க்ளாஸ் , டான்ஸ் கிளாஸ், இந்தி க்ளாஸ் போனோம் எனக் கூறுவதைக் கேட்க முடிகிறது. ஆனால் குழந்தைகள் அவர்களுக்கான விருப்பமான திறனில் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான களம் வகுப்பறைதான். ஆசிரியர்கள்தான் அதற்கு வித்திட வேண்டும். அதற்காக நாம் பாடநூல் , பாடத்திட்டத்தை விட்டு விட வேண்டும் என்று அர்த்தமல்ல.

மேற்சொன்ன அனைவரது திறன் சார்ந்த செயல்பாடுகளும் பாடப் புத்தக இணைச் செயல்பாடுகளுடன் இணைத்து விடும் திட்டமிடல் இந்த வகுப்பறையில் நிகழ்ந்தது. தலைமைப் பண்புகள், பேச்சாற்றல், எழுத்தாற்றல், வரைதல் இப்படியான எல்லாப் பண்புகளும் வகுப்பறையில்தான் ஆரம்பமாகின்றன.

அவற்றை பாடப் புத்தகச் செயல்பாட்டில் இணைத்து வெளிப்படுத்த வழி காட்ட வேண்டும். இதுவே நமது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ( CCE - Continuous Comprehensive Evaluation) முறை. இந்தப் புரிதலை ஆசிரியர்கள் நமக்குள் விரிவாக்கம் செய்து கொண்டால் கல்வியின் மதிப்பீட்டு முறைக்கும் பொருள் உருவாகும் .

திறன் கண்டறிவது எப்படி?
ஆரம்ப காலங்களில் மாணவர்களின் ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவிற்கும் பாராட்ட வேண்டும் . பாராட்டுகள் நிச்சயமாக அவர்களை அடுத்தடுத்த படிநிலைகளுக்குப் பயணப்பட வைக்கும். பாராட்டுகள் உற்சாகமான வார்த்தைகளாகவோ சிறு பரிசுப் பொருட்களாகவோ புத்தகம், பேனா, ரப்பர், பென்சில் இப்படியான பரிசுகளாகவோ இருக்கலாம்.

தனது வாழ்நாளில் ஏறக்குறைய 15 வருடங்கள் பள்ளிகளில் கழிக்கும் குழந்தைகளின் விருப்பு, வெறுப்பு, அன்பு, கோபம், நடத்தை மாற்றங்கள் என அனைத்தும் வகுப்பறைக்குள்தான் உருவாகின்றன. இயன்றளவு அவர்களது திறனறிந்து விட்டால் அவர்கள் சிறந்த மனிதர்களாக உருவாக ஆசிரியர்கள் உதவிட முடியும். பல்வேறு குடும்ப சூழ்நிலைகளின் வெக்கையிலிருந்து நிழல் தேடி வரும் அவர்களுக்கான இடம் பள்ளியின் வகுப்பறைகளே. ஆகவே திறன் அறியும் களங்கள் வகுப்பறைகள்தான், தூண்டுகோல் பாராட்டுகள்தான்.

தொடர்ந்து உரையாடுவோம்.

உமா மகேஸ்வரி, ஆசிரியர் - தொடர்புக்கு: uma2015scert@gmail.com
..

Thursday, 26 December 2019

Tamil Nadu - 3


https://www.hindutamil.in/news/vetrikodi/news/530944-talk-with-children-3.html

குழந்தைகளுடன் உரையாடுவோம்

மெல்ல நழுவும் கல்வி - 3

 நழுவாமல் இருக்க பல அம்சங்கள் ….

கல்வி இணைச் செயல்பாடுகள் 

அது ஒரு சனிக்கிழமை , ஆனாலும் குழந்தைகள் ஆவலோடு பள்ளியை நோக்கி மகிழ்ச்சியுடன் ஓடி வருகின்றனர். ஏனென்றால் வழக்கமான பாடங்களைப் படிப்பதை அன்றொரு நாள் நிறுத்திவிடுகின்றனர். மாற்றாக , குழந்தைகளுக்குப்  பிடித்த வேறு விதமான கற்றல் அனுபவங்களை அளிக்கின்றனர் அப்பள்ளி ஆசிரியர்கள் . ஆம் , அந்த தொடக்கப் பள்ளி ஈரோடு மாவட்டத்தில் நகரின் மையத்தில் அமைந்துள்ள பள்ளி . ஈ.கே.எம் அப்துல் கனி மதரசா இஸ்லாமிய ஆரம்பப் பள்ளியின் 25 வகுப்பறைகளும் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன. பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள்  இந்த அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளியைச் சுற்றி இருந்தாலும் 720 குழந்தைகள் இப்பள்ளியை நோக்கி வரக் காரணம் என்ன ? குழந்தைகள் மகிழ்ச்சியாக கற்கின்றனர். அதற்கு பல்வேறு விதமான கல்வி இணைச் செயல்பாடுகளை உட்புகுத்தி குழந்தைகளை கற்றலுக்குள் அழைத்து வரும் ஆசிரியர்கள் . கதை , பாட்டு , வில்லுப்பாட்டு , நடனம் ,நாடகம் ,வரைதல் , குழந்தைகள் திரைப்படங்கள்  விளையாட்டுப் பயிற்சிகள் , கராத்தே , கணினிப் பயன்பாடு , யோகா, களப்பயணம் விழாக்கள் என நீள்கிறது இவர்களது பட்டியல் . கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு புத்தகத்தை வடிவமைத்துள்ளது இப்பள்ளியில் தான் . தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத சிறந்த நடைமுறை .

நான்கு வகை பிடித்தமான விஷயங்கள் 

 மாதம் தோறும் ஒரு சனிக்கிழமை , அந்த நாள் முழுவதும் மாணவர்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் .கதை , பாட்டு , நாடகம் (Dramma, Songs & Stories), குழந்தைகள் சினிமா ( Children movie) ,வரைதல் (Painting) ,  கைவேலைப் பொருட்கள் தயாரிப்பு (Art & Craft) என்ற நான்கு வகுப்புகளை வடிவமைத்துள்ளனர் அப்பள்ளி ஆசிரியர்கள் . ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் அப்பள்ளி ஆசிரியர்களாலேயே கற்றுத் தரப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு பிடித்தமானவற்றை தங்கள் கைகளால் வரையவும் பொருட்களை செய்து காட்டவும் ஒவ்வொரு பணியில் ஈடுபடுகின்றனர். அதோடு உலகத் தரம் வாய்ந்த குழந்தைகளுக்கான திரைப்படங்களை திரையிட்டு மகிழ்விக்கின்றனர். கடந்த வாரம் கூட மோனா (Moana) என்ற குழந்தைகள் திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்துள்ளனர் குழந்தைகள். 

அதோடு அந்த நாளின் இறுதியில் குழந்தைகள் தங்கள் கைகளால் செய்த பொருட்கள் , வரைந்த ஓவியங்கள் இவற்றையெல்லாம்  காட்சிப் படுத்தும் வேலையையும் செய்கின்றது பள்ளி .. அந்த நேரத்தில் அவர்களுக்கு பாராட்டும் சிறு சிறு ஊக்கப் பரிசுகளும் அளிக்கப்படுகின்றன. குழந்தைகள் தன்னம்பிக்கைப் பெறுகின்றனர். அடுத்தடுத்த நாட்களில்  மகிழ்வோடு பள்ளிக்கு வர அவர்களது ஆர்வத்தைத் தூண்டுகின்றன இந்த கல்வி இணைச் செயல்பாடுகள். 

பள்ளிக்கான பொதுக் கற்பித்தல் முறை

அது மட்டுமல்லாமல் மாதத்தின் மற்றொரு சனிக்கிழமை முழுவதும் ஆசிரியர்கள்  மட்டும் வரவழைக்கப்படுகிறார்கள் .25 வகுப்புகளுக்கு 30 ஆசிரியர்களைப் பள்ளியில் பணியமர்த்த ஏற்பாடு செய்துள்ளார் தலைமை ஆசிரியர் . பொதுவாக அரசுப் பள்ளிகளில் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் இல்லாத நிலையில் இங்கு வகுப்பிற்கு ஒருவர் என 25 ஆசிரியர்கள் இருப்பதுடன் , 5 ஆசிரியர்களைக் கூடுதலாக , தனிக் கவனம் எடுத்து குழந்தைகளுக்காக நியமித்துள்ளனர் நிர்வாகமும் தலைமை ஆசிரியரும் . இவர்கள் அனைவரும் சனிக்கிழமை முழுவதும்

குழந்தைகளுக்காக ஏதுவான  கற்பித்தல் முறைகளை தங்களுக்குள்ளேயே    விவாதிக்கின்றனர் .

மொழிப் பாடத்திற்கும் கணக்குக்கும் இவர்கள் செய்யும் இந்த முயற்சி குழந்தைகளிடம்  கற்றலின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றினாலும் , பொதுவாக  எந்த முறையில் மொழிப் பாடத்தைக் கற்பித்தால் மொழித் திறன்களை குழந்தைகள் விரைவில் அடைவர் என்று கலந்துரையாடு , கணக்கை எவ்வாறு கற்பித்தால்  குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்கின்றனர் என்பதை விவாதித்து தகுந்த முறையைத் திட்டமிடுகின்றனர். இந்த ஆசிரியர் அமர்வு மாதம் ஒரு முறை தொடர்ந்து நிகழ்கிறது.  எல்லாவற்றையும் குழந்தைகளை மையப்படுத்தியே சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். அவற்றையே தங்கள் வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்துகின்றனர் .இவற்றின் இறுதி விளைவு குழந்தைகள் விருப்பத்துடன் கற்பதாக மாற்றம் பெறுகிறது. 

பரிசுகளும் பாராட்டுகளும் அனைவருக்கும்

 குழந்தைகளுக்குப் பரிசு வழங்குவதும் பாராட்டும் எல்லாப் பள்ளிகளிலும் செய்கின்ற செயல் தான். ஆனால் மதரஸா பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகளில் எல்லாக் குழந்தைகளையும் ஈடுபட வைத்து எல்லோருக்கும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கும் நடைமுறையை இப்பள்ளி கொண்டுள்ளது. ஒரு பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் , வீட்டில் அதிக விலை கொடுத்து ஏதாவது  வாங்கித் தந்தால் கூட எம் பொண்ணுக்கு முகத்துல சந்தோஷமே வர்றது இல்லங்க , நீங்கள் கொடுக்கும் மெடலுக்காக அவ்வளவு உற்சாகமாகி விடுகிறாள் எனக் கூறி பூரித்துள்ளார். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது குழந்தைகளை அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் தொடர்ந்து பாராட்டிட. ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும்  

 கற்றல் நிகழும் தருணங்கள் 

இந்த ஆசிரியர்கள் குழு மாணவர்களுக்குத்   தரும் பயிற்சியும் மாணவர்களது முயற்சியும் ஒன்றிணையும் தருணத்தில் தான் கற்றல் நிகழ்ந்து விடுகிறது. ஒரு வகுப்பறைக்குள் ஒரு நாளின் எட்டு பிரிவேளைகளையும்  பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கற்பித்தலால் மட்டும் நமது மாணவர்களிடம் கற்றல் நிகழ்கிறது , என்பதை முற்றிலும் பொய்யாக்குகிறது இந்தப் பள்ளியின் சூழல். கற்பித்தல் - கற்றல் - நடத்தை மாற்றங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவற்றைத் தனித்தனியாகப் பிரித்திட இயலாது.

சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரு வகுப்பறையில் இவை நிகழாது. அவற்றை உடைக்க வேண்டும். ஆசிரியர்கள்  குழந்தைகள் நலம் விரும்பும் ஆசிரியர்களாக மாற வேண்டும். அவ்வாறு ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள 

போதுமான சூழலையும் சுதந்திரத்தையும் தலைமை ஆசிரியர் உருவாக்கித் தர வேண்டும். ஒட்டு மொத்த இந்த தொடர் செயல்பாடுகள் குழந்தைகளை மையமாக வைத்து நகர வேண்டும் .மேற்சொன்ன அனைத்தும் இங்கு நிகழ்ந்து இருக்கின்றது.  

பெற்றோர் விரும்பும் பள்ளி 

நீங்கள் சந்திக்கும் ஆசிரியர்  யாரேனும் ஒருவரைக் , உங்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர்  கூட்டத்திற்கு எத்தனைப் பெற்றோர்கள் வருவார்கள் என்று கேட்டுப் பாருங்கள் . பத்து பேர் இருபது பேர் என்பது தான் பொதுவான பதிலாக இருக்கும். ஆனால் மதரசா பள்ளியில் முந்நூறுக்கும் குறையாமல் பெற்றோர் வருகின்றனர். குழந்தைகளின் தேவை , கற்றல் நிலைகளை உயர்த்த அவர்களது பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்கிறார்.  அதனடிப்படையில் , பள்ளிக்குள் தேவையான மாற்றங்களை  

செய்து வருகின்ற தலைமை ஆசிரியர் .பெற்றோர்கள் விரும்பும் பள்ளியாக  இப்பள்ளியை மாற்றியது கூட குழந்தைகளின் மனதில் விரும்பும் மதரஸா பள்ளி உருவானதற்குக்  காரணமாக இருக்கலாம்.

மாணவர் உளவியல் சார்ந்து வலிமையான பள்ளி 

மேற்கண்ட ஒவ்வொன்றும் அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் உளவியலை வலுவாக்குகிறது. நல்ல சூழலில் வளரும் கல்வி கற்கும் குழந்தைகளது மனநிலை ஆரோக்கியமாக இருக்கும். கற்றல் சுதந்திரமாகவும் , விருப்பத்துடனும் , மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கைத் தருவதாகவும் அமையும் போது இயல்பாகவே கற்றல் எளிதாகிறது. இவற்றுக்குப் பாடப் புத்தகங்கள் ஒரு போதும் தடையில்லை 

சங்கிலித் தொடர் நிகழ்வு 

 இப்படியான குழந்தைகள் மகிழும் பள்ளியாக, அவர்கள் விரும்பும் பள்ளியாக இருந்தால் நழுவிச் செல்லும் கல்வியை இறுகப் பற்றிக் கொண்டு காப்பாற்றி விடலாம். . அதற்கு பல கரங்கள் தேவைப்படுகின்றன. ஆசிரியர்களிடையே நல்லுறவு , தலைமை ஆசிரியரின் அக்கறை , தலைமை ஆசிரியர் - ஆசிரியர் இடையேயான புரிந்து கொள்ளுதல்  , பெற்றோர் ஆசிரியர் இடையிலான நல்லுறவு , குழந்தைகளது பல்திறன் வளர்க்கத் தளம் , சிறந்த நிர்வாகம் ஆகியன . ஒரு குழந்தையின் முகம் மலர அகம் குளிர ஒரு ஆசிரியரின் அன்பான ஒரு சொல்லைக் கடந்து குழந்தையின் வாழ்க்கை மலர தளம் அமைக்கும் பள்ளிகள் வேண்டும். 

பேசுவோம். 

உமா ஆசிரியர் 

 

காமதேனு - ஆசிரியர் சங்கங்கள்

ஆசிரியர் சங்கங்கள் செய்யும் ஆதிக்கங்கள்  

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் , கற்றல் - கற்பித்தல் குறித்த பிரச்சனைகளைப் பற்றி பேசும் போது ,   ஆசிரியர் சங்கங்கள் குறித்து தவிர்த்துவிட்டு நம்மால் பேச முடியாது. ஆம் ஒரு காலத்தில் சுமார் 30 , 40 வருடங்களுக்கு முன்பிருந்த ஆசிரியர்களின் பொருளாதார நிலை வேறு. இன்றைய பொருளாதார நிலை வேறு. இந்த மாற்றங்களிலும் சரி, கல்வி நிலையின்  வளர்ச்சி , கல்வியின் தரத்தில் வீழ்ச்சி எல்லாவற்றிற்கும் ஆசிரியர் சங்கங்களுக்கு மிகுந்த பங்குண்டு என்றால் மிகையாகாது. 

சங்கங்களின் வலிமை

கல்வித் துறையின் அத்தனை அதிகாரிகளும் , துறையின் செயல்முறை முடிவுகளை ஒரு நிமிடம் யோசித்து தொடரவோ நிறுத்தவோ செய்கின்றனர் என்றால் அதன் பின்னர் இருப்பது சங்கங்களின் தலையீடாக இருக்கும் . ஆசிரியர் சங்கங்கள் தங்கள் உயர்ந்த சிந்தனை ,வழிகாட்டுதல்களால் அனைவரிடமும் மிகுந்த மரியாதை பெற்றிருந்த காலம் என ஒன்று இருந்தது. ஆனால் இன்று அவற்றின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர் ஆசிரியர்கள் . தனது தார்மீக வலிமையை இழந்து,  அரசால் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலைக்கு ஆளாகி இருக்கின்றன ஆசிரியர்கள் சங்கங்கள். அதற்குக் காரணமும் சங்கங்களின் செயல்பாடுகளே. ஏன் இந்த மாற்றங்கள் ? இழி நிலைகள் ? ஆசிரியர் சங்கங்களின் உண்மையான பணி என்னவாக இருக்க வேண்டும் ? அது என்னவாக இருந்து வருகிறது சற்றே ஆராய்வோம் .

ஆரம்ப காலங்களில் ஆசிரியர் சங்கங்கள்

 

இன்றைக்கு வாழும் மூத்த கல்வியாளர் முனைவர் ச.சீ .இராஜகோபாலன்  அவர்கள் உட்பட பலரும் சங்கங்கள் உருவான காலகட்டங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆசிரியர்கள் நலன் கருதி தங்களை ஈடுபடுத்தி பொறுப்புடன் செயல்பட்டு வந்துள்ளனர். அதன் விளைவுகளாக பல முன்னேற்றங்கள்  நிகழ்ந்துள்ளன . தொழிற் சங்கங்கள் உருவாகி தொழிலாளிகளின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தது போலவே , ஆசிரியர்களாகப் பணிபுரியும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பாக எத்தனையோ நலத்திட்டங்களை , அரசாணைகளைப் பெற்று கோலோச்சியிருந்திருக்கின்றன சங்கங்கள். 

வயதில் மூத்த சங்கப் பொறுப்பாளர்களிடம் உரையாடும் போதும் அல்லது அந்த சங்கங்களில் அப்போது உறுப்பினர்களாக இருந்து தற்போதும் உறுப்பின்களாக இருக்கும் ஆசிரியர்களிடம் பேசும் போதும் அவர்கள் கூறுவன.அதன் உண்மைத் தன்மை , போராட்ட குணம் , நேர்மை , தன்னலமற்ற அணுகு முறை , ஆசிரியர் நலன் சார்ந்த செயல்பாடுகள் , தியாகம் , கூட்டு வலிமை இவை பற்றி எல்லாம் பெருமையாகவும் அன்றைய சங்கங்களின் உறுதித் தன்மை குறித்தும் பகிர்கின்றனர். 

தற்கால நிகழ்கால ஆசிரியர் சங்கங்கள் 

ஆசிரியர் சங்கங்கள் தன்னலமில்லாது  போராடி சம்பள உயர்வு, நமக்கான உரிமைகள், சலுகைகளை பல தியாகங்களைச் செய்து பெற்றுத் தந்துள்ளன என்பதெல்லாம் மறுக்கவோ மறக்கவோ முடியாது .

ஆரம்பத்தில் மிக நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சங்கங்கள், நாட்கள் செல்லச்  செல்ல பல ஆசிரியர் சங்கங்களாக உருவெடுத்த பின்தான் ஒற்றுமை இன்றி சுயநலத்தோடு செயல்பட ஆரம்பித்து விட்டன. 

ஒவ்வொரு பாடத்திற்கும் சங்கம், அவர்களுக்குள்ளேயே நீ பெரிதா, நான் பெரிதா என்ற போட்டி. இதனாலேயே மதிப்பையும், நம்பிக்கையையும்  இழந்து விட்டன. மேலும் சில சங்க உறுப்பினர்கள் சங்கத்தை, தம் சொந்தப் பிரச்னைகளை சமாளிக்கவும், சங்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டு, தட்டிக் கேட்பவர்களை ஏதாவது ஒரு பிரச்னையில் மாட்டிவிட்டு தங்களை முக்கியப்  பிரமுகர்களாக காட்டிக்கொள்கின்றனர். ஆசிரியர்களின் உடல், மனம் சார்ந்த எவ்வித பாதிப்புகளையும் யாரும் கண்டுகொள்வதில்லை.உயிர் போகும் சூழ்நிலையிலும் ஆசிரியர்களுக்காக பேசுபவர்கள் யாருமில்லை என்பதே மிக வருத்தமான உண்மை. என்கின்றனர் ஆசிரியர்கள் . இப்படியாக தற்கால சங்கங்கள் வலம் வருகின்றன. 

எந்தக் கொள்கைப் பிடிப்பும் இல்லாமல் , நேர்மையற்ற வழிகளில் இயங்குபவையாக இருக்கின்றன.

எத்தனை எத்தனை சங்கங்கள் ஆனால் வீழ்ச்சிகள் மட்டுமே 

சங்கப் பிரதிநிதிகளுக்குள் போட்டி மனப்பான்மை , ஈகோ பிரச்சனை , ஒற்றுமையின்மை இவற்றின் விளைவே இன்று 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக உருவெடுத்துள்ளன .

கொள்கைப் பிடிப்புடன் இல்லாமல் நடுநிலை காக்காமல் சங்கங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் எண்ணிக்கையைக் கூட்டியதே அன்றி சங்கங்களின் வலிமையை அல்ல .

ஆம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் , ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் இப்படி இரு பிரிவுகளில் சங்கங்கள் . ஆரம்பப் பள்ளி , தொடக்கப் பள்ளி இரண்டும் ஒரே பொருளைத் தந்தாலும் வேறு வேறு சங்கங்கள் . பட்டதாரி ஆசிரியர்களுக்கென்று தனி சங்கங்கள் , தமிழாசிரியருக்கென தனி சங்கங்கள் , இப்படியே ஒவ்வொரு பாட வாரியான பெயரில் சங்கங்கள் , முதுகலைப் பிரிவிலும் இப்படியே . தலைமை ஆசிரியர்களுக்கென தொடக்க , நடுநிலை , உயர் தொடக்க நிலை , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகள் என பல பிரிவு சங்கங்கள் , உடற்கல்வி ஆசிரியர்களுக்கென  சங்கங்கள் , பதவி உயர்வு பெற்றவருக்கென சங்கங்கள் , மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கென சங்கங்கள் , சிறப்பு ஆசிரியர்களுக்கான சங்கங்கள் ,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் , ஓய்வு பெற்ற மற்ற பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆசிரியர் சங்கங்கள் இயங்கி வருகின்றன .4 எருதுகளும் ஒரு சிங்கமும் என்ற கதையில் வருவது போல் இவ்வளவு பிரிவினை இயல்புடைய உதிரிகளாக இயங்கும் ஆசிரியர்களை அரசு தன் போக்குக்கு ஆட்டுவிக்கின்றது என்றால் மிகையாகாது.

போராட்டங்களில் ஆசிரியர் சங்கங்களை தோற்கடித்த அரசும் மக்களும் 

போராட்ட காலங்களில் ஒன்று சேரும் சங்கங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன் வைப்பதில் காட்டும் தீவிரங்களை மாணவர் சார்ந்த நலன்களை போராட்டக் கோரிக்கைகளாக அழுத்தமாகக் காட்ட வில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு தலைமுறை வளர்ச்சியில் ஆசிரியர்கள் ஊதியம் உயரக் காரணமாக இருந்த சங்கங்கள் தரமான கல்வியை பள்ளிகளில் வழங்கி அரசுப் பள்ளிகளின் தீவிர வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருந்தால் கடந்த வருடம் நடந்த அரசு ஊழியர்களின் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்  கடுமையாக தோல்வியைத் தழுவி இருக்க வாய்ப்புகள் இல்லை. மக்களின் பார்வையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் என்றாலே ஊதியத்திற்கும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பணத் தேவைகளுக்கானது என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்ய ஆசிரியர்களே காரணமாகிவிட்டனர். அதனாலேயே பள்ளி கட்டமைப்பு உட்பட பள்ளிகளில் ஏராளமான பிரச்சனைகள் இருந்தாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை , ஆகவே சம்பளம் அதிகம் என்ற கருத்தை பொதுப் புத்தியில் உருவாக்கி வைத்துள்ளனர்.ஊடகங்களும் இவற்றில் தங்கள் பங்குக்கு ஆசிரியர் சங்கங்கள் குறித்து எதிர்மறைக் கருத்துகளை மக்கள் மத்தியில் விதைத்துள்ளன. இவற்றைக் களையும் நோக்கில் எந்த முயற்சிகளையும் ஆசிரியர் சங்கங்கள் எடுப்பதில்லை என்பதைத் தான் நாம் இங்கு பதிவு செய்கிறோம். 

பெற்றோர்களை விட்டு விலகிய ஆசிரியர்கள் , தேர்வுக்கு மட்டுமே மாணவரைத் தயார்படுத்த தில் முனைப்பு காட்டி விட்டு நல்லுறவை மாணவரிடம் ,பெற்றோரிடம் இழந்து விட்ட ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருந்து எதையும் சாதிக்க இயலவில்லை. 

ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு தராத சங்கங்களும் பொறுப்பாளர்களும் 

நடந்து முடிந்த போராட்ட நேரங்களில் கூட சங்கப் பொறுப்பாளர்கள்  தலைமறைவு ஆகியதும் , உறுப்பினர்கள் பலரும் காவல் துறையால் சிறை சென்றதும் , தண்டனையாக 17 B பெற்றதும் சில மாவட்டங்களில் பணி மாறுதலே ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டதும் என அடுக்கடுக்கான பிரச்சனைகளுக்கு சங்கங்களால் தீர்வு கிடைக்கவில்லை.  

சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு மட்டுமே நன்மை செய்கிறது. உறுப்பினர்கள் ஆண்டுதோறும் சந்தா கட்டுவதற்கே உண்டு என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு. 

சங்கங்களை, மாநிலம் , மாவட்டம், ஒன்றியம் என அனைத்து தரப்பிலும் பொறுப்பாளர்களின் சுய லாபத்திற்காகவும் தன்னை முன்னிலைப் படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.

ஆசிரியர்களின் நலத்தை மட்டுமே முக்கியமாக நினைத்து தோற்றுவித்த சங்கத்தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அடிப்படைத் தேவைகளுக்கு கூட ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு தர இயலாத சங்கங்கங்களாக மாறி விட்டன .

சங்கங்களின் போக்கில் வெளிப்படையான விமர்சனங்கள் என்னென்ன ?

மாநிலப் பொறுப்பில் இருப்பவர்கள் அடிக்கடி பள்ளிக்கே செல்லாமல் கல்வித் துறை இயக்குநர்கள் அலுவலகத்தில் அடிக்கடி கூட்டம் கூட்டமாக வருவதை தற்போதைய பயோ மெட்ரிக் முறை குறைத்துள்ளது . 

 ஓராசிரியர் , ஈராசிரியர் பள்ளிகளில் கற்றல் -

கற்பித்தலில் இருக்கும் சிக்கல்கள் பற்றி இவர்களால் எதுவும் மேலிடம் எடுத்துச் செல்ல இயலவில்லை .தனியார் பள்ளிகளின் அதீத வளர்ச்சியை ஒழிக்க இந்த ஆசிரியர் சங்கங்கள் என்ன முயற்சிகளை எடுத்தன ? அரசின் தனியார் மயக்  கல்விக் கொள்கைகள் குறித்தும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்தும் ஆசிரியர் சங்கங்கள் பெரிய அளவில் மாற்றங்களுக்கு முயலவில்லை. தமிழ் வழிக் கல்வி என்ற ஒன்று அழிந்து விட்ட சூழலை தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் உருவாக்கியதில் இந்த சங்கங்களின் மெளனமான கடந்து போன பார்வைகளுக்கு பெரும் பங்குண்டு .இது மட்டுமா ? பள்ளிகளில் பல ஆயிரம் கோடிகளில் ஆரம்பிக்கப்படும் அரசின் திட்டங்கள் பலவும் நீர்த்துப் போவதைக் கண்காணிக்கவோ நல்வழிப்படுத்தவோ சங்கங்கள் பொறுப்பு எடுத்துக் கொள்வதில்லை.

இன்று பட்டதாரி ஆசிரியர்களது நியமனமே இல்லை என்ற அறிவிப்பை  கல்வித் துறை தருவதற்கு 20 , 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நிரவலில் வெளியேறுவதற்கு என எல்லாவற் றிற்கும் சங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் .பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் செய்யும் நிதி குறித்த ஊழல்கள்  பற்றிய பிரச்சனைகளையும் சங்கங்கள் கவனம் கொள்வதில்லை .

ஆசிரியர்களின் பணி மாறுதல் , தேர்வுப் பணிகள் , தேர்தல் பணிகள் , ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் , பதவி உயர்வு  என எல்லாவற்றிலும் சங்கங்களின் தலையீடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பதைக் காணலாம் . சில ஆசிரியர்கள் சங்கங்களின் பெயர்களைக் கூறிக் கொண்டு பள்ளிகளின் பணிகளில் தொய்வு காட்டுவதும் , விடுப்பு எடுப்பதில் ஏமாற்று வேலை செய்வது , வகுப்பறைகளுக்கே செல்லாமல் கற்பிக்காமல் சொந்த வேலைகளுக்கு பள்ளி நேரத்தைப்  பயன்படுத்துவது என அறமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சங்கப் பொறுப்புகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு மட்டும் சலுகை அளித்து மற்றவர்களை புறக்கணிக்கும் நிலைகளும் உண்டு. துறை ரீதியாக தண்டனை பெறும் குற்றங்கள் புரியும் ஆசிரியர்களையும் காப்பாற்றி விடும் வேலைகளையும் சங்கப் பொறுப்பாளர்கள் செய்வதால் தவறுகள் பெருகுகின்றன. 

இவை மட்டுமன்றி , சங்கப் பொறுப்பிலுள்ள ஆண் ஆசிரியர்கள் , சங்கத் தலைமைகளுடன் நெருக்கமான ஆண் ஆசிரியர்கள் பள்ளிகளில் பாடப்பிரி வேளை (Time table) பணிகளில் கூட பெண் ஆசிரியர்களுக்கு அதிக பணி தருவது , பணிச் சுமைகளை பெண் ஆசிரியர்கள் தலையில் கட்டுவது , எதிர்த்துக் கேட்டால் அதிகமாக ஒடுக்குதலுக்கு உள்ளாகின்றனர். இது போல பல ஒடுக்கு முறைகளில் சங்கங்களின் தலையீடுகள் தொடர்புடையதாக இருக்கின்றன. சங்கங்களின் பொறுப்புகளில் பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை. இது மட்டுமா , நேர்மையாக பார்வையிடச் செல்லும் கல்வித்துறை அதிகாரிகளுக்கே பிரச்சனை தரும் இழி செயல்களையும் சங்கங்களின் உதவியால் ஆசிரியர்கள் செய்கின்றனர். ஆகவே பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் கூட சங்கங்களிடம் மிக கவனமாக நடந்து கொள்வதாகத் தெரிகிறது. 

தற்போது மத்திய அரசு வெளியிட்ட வரைவுக் கல்விக்  கொள்கை குறித்து கூட சில சங்கங்கள் பிரச்சாரம் , எதிர்ப்புக் குரல் , விளக்கக் கூட்டம் என முன்னெடுக்க மற்ற அனைத்து  சங்கங்களும் அது குறித்த புரிதலே இல்லாமல் இருக்கின்றன.

ஆசிரியர் சங்கங்கள் எப்படி தங்களை மாற்றிக் கொள்ளலாம் ?

மாணவர் நலன் சார்ந்து போராட்டங்களை முன்னெடுக்கலாம். ஆசிரியர்களை அச்சுறுத்தாமல் நல்ல சூழலை உருவாக்கலாம் , அரசின் கல்விக் கொள்கைகளை  குழந்தைகள் நலன் சார்ந்து மக்கள் நலன் சார்ந்து ஏற்புடையதா என ஆராய்ந்து பொது மக்களிடம் பெற்றோரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் .போராட்ட வடிவங்களை மாற்றலாம் . கற்பித்தல் பணி , பள்ளிப் பணிகளை சரிவர செய்து பள்ளி நேரங்களில் அலுவலகம் , அதிகாரிகளை சந்திப்பது இவற்றைத் தவிர்க்கலாம் . நேர்மையான முறையில் எல்லோரையும் சமமாக பாவிக்கும் வெளிப்படைத் தன்மையுடனான ஜனநாயக சங்க நடைமுறைகளைப் பின்பற்றிட வேண்டும். ஆசிரியர் நலனுடன்  மாணவர் நலன் சார்ந்தும் ஆசிரியர் சங்கங்கள் உருவானால் எல்லோருக்கும் நல்லது. 

உமா

மாநில ஒருங்கிணைப்பாளர்

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் .