Monday, 15 July 2019

வகுப்பறை உளவியல் 23

வகுப்பறை உளவியல் 23

காது கொடுத்து கேட்க சில நிமிடங்கள் ....

அரசுப் பள்ளி என்பது....
உளவியலாளர்கள்  நிரம்பிய மருத்துவமனை போல ....

பல நேரங்களில்
எம் குழந்தைகளுக்கு பள்ளி என்பது
பிரார்த்திக்கும் ஆலயங்களாகவும் , ஆசிரியர்கள் என்பவர்கள் ஆலயங்களில் இருப்பவர்களாகவும்  தேவைப்படுகின்றனர். இங்கு ஒரு சின்ன உதாரணம் ..

அது ஒரு செவ்வாய்க்கிழமையின் மதியப் பிரிவேளை , கணக்கு வகுப்பு , Math Lab இல் அதன் ஒழுங்கிற்கிணங்க , அவரவர் இருக்கையில் அமர்ந்து அவரவர் கணினியில் மாணவிகள் கணக்குப் பாடம் படித்துக் கொண்டிருக்க , அஜிதா தனது இரட்டைப் பின்னலில் ஒன்றின் ரிப்பன் தனியே கையிலெடுத்து , ஏதோ செய்து கொண்டிருக்க ... அஜிதா ... என்ன பண்றேம்மா ? கணக்கு போடு ... இது என் குரல் ..

கேட்ட ஒரு கேள்விக்காக என் அருகே ஓடி வந்த அவர் நான் கேட்காமலேயே மளமளவென்று சொற்களை இணைத்து உணர்வுகளோடு குழைத்து பட படவென்று பேச எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அந்த செவ்வாயின் சில நாட்களுக்கு முன் வியாழன் மாலை எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு அஜிதா 6th என்று என் அலைபேசியில் சேமித்திருந்தேன். எப்போதும் பாட சந்தேகங்களை வாட்ஸ் அப்பில் கேட்கும் பழக்கம் இவரிடம் உண்டு ... ஆகவே , எடுத்த உடன் சொல்லு அஜிதா என்றேன். மறு முனையிலிருந்து வேறு ஒரு குரல் ,டீச்சர் நான் அஜிதா அம்மா பேசறேன் , என் அக்கா வீடு விசேஷம் , போகணும் , ஒரு நாள் லீவு வேணும் , அஜிதாவைக் கூப்பிட்டா ... வரமாட்டேன்றா, லீவு போட மாட்டேன்றா ... எவ்வளவு கேட்டாலும் ஒத்துக்க மாட்டேன்றா , என்ன செய்யறதுன்னு தெரியல , என் கூடப் பிறந்த அக்கா வீட்டு விஷேசம் என்றதோடு , நான் மகளுக்குத் தெரியாம தான்  உங்ககிட்ட  பேசறேன் , எப்படியாச்சும் சொல்லுங்க என்கிறார் .

விருப்பு எடுக்க விருப்பமில்லாத குழந்தையை எப்படிக் கட்டாயப்படுத்துவது , சரி தாத்தா , பாட்டி யாராச்சும் ...? என்றேன். இல்லை நாங்க மட்டும் என்கிறார்.

சரி , அவரிடம் கொடுங்கள் என்று பேச , மிஸ் , என்னைக் கட்டாயப் படுத்தறாங்க மிஸ் , நிறைய ேஹாம் வொர்க் தருவாங்க , செய்ய முடியாது , நான் போகவில்லை மிஸ் , அவர்களையும் போக வேண்டாம் என்று கூறுங்கள் என்கிறார் , எனக்கு என்ன சொல்வது என்றே தெரியல , சரி எங்க வீட்டுக்கு வந்து விடு , அவர்கள் போக வேண்டும் , அம்மாவின் உடன்பிறந்தவர் வீட்டு விஷேசம் , அவர்களுக்கும் ஆசை இருக்கும் தானே என்றேன் , ம் ..சரி என்று கூறி , அப்பாவின் அனுமதி கிடைக்கவில்லை உங்க வீட்ல தங்குவதற்கு , என்கிறார்.

சரி , எல்லா பாடப் புத்தகத்தையும் எடுத்துட்டுப் போம்மா , அங்கே நேரம் கிடைக்கும் போது படி , அம்மா திட்ட மாட்டாங்க என்று சமாதானம் கூறி , லீவ் போடு பரவால்ல எனக் கூறி அவங்கம்மாவும் சந்தோஷமா தேங்க்ஸ் சொல்லித் தான் விசேஷத்திற்கு சென்றனர் .

வெள்ளி , திங்கள் விடுமுறை எடுத்து விட்டு செவ்வாயன்று பள்ளி வந்த மாணவி தான் என்னிடம் அவ்வளவு பேசினார்.

ஏன் ரிப்பன் கழன்டுவிட்டது? என்ற என் ஒரு கேள்விக்கு , நம் சமூகத்தின் , பெண் குழந்தைகளின் சூழலை என்னருகே வந்து மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறார்.

ஆம் .... அவர் பேசியதை இங்கே அப்படியே தருகிறேன்.

மிஸ் ஊருக்கு போயிட்டு நைட் 2 மணிக்கு தான் வந்தோம் , எங்க வீட்ல  எல்லா வேலையும் நாங்க தான் செய்யணும் , அம்மா டிபன் கடை வச்சு இருக்காங்க , தினம் 2 கிலோ வெங்காயம் வெட்டுவேன் , நான் ஆச்சர்யமா பார்க்க , கட்டர் இருக்கு மிஸ் , அதுல சீக்கிரம் வெட்டிடுவேன் , பாத்திரம் வெளக்கணும் மற்ற வீட்டு வேலை செய்யணும் , ஹோம் வொர்க் சில நாள் அதான் செய்யாம வந்துடுவேன் , அம்மா நாங்க (பொண்ணுங்க ) படிக்க முடியாம வேலை செய்வது பார்த்து கஷ்டப்பட்டு அழுவாங்க மிஸ் , அதுக்கு தான் நான் ஸ்கூல்லயே முடிந்த வரைக்கும் படிக்கிற வேலை எல்லாம் முடிச்சுடுவேன் .சில நாள் லேட்டா வருவது கூட கஸ்டமர் வந்து நிப்பாங்க , டிபன் எடுத்து தருவதால கொஞ்சம் லேட் ஆனாலும் நாகல்கேணியிலிருந்து அப்பா கூட்டி வர லேட்டாகிடும் மிஸ்

நேத்து ,நைட் 2 மணி நேரம் மட்டும் தான் தூங்கினேன் , அதான் தலை சரியா பின்ன முடியல ... இப்படி 5 நிமிடத்திற்கும் மேல் பட படவெனக் கூறுவதைக் கேட்டு , பரவால்ல லேட் ஆனா , நீ கவலைப்படாதே , கிடைத்த நேரத்தில் படி என்ற என் மிகச் சில வார்த்தைகளில் முகம் முழுக்க சந்தோஷச் சிதறல்கள்.

அஜிதாவின் மன அழுத்தம் குறைந்து போனதை என் கண் குளிரப் பார்த்தேன் , இது போதும் அவரது சின்ன சிக்கல் தீர்ந்து வேகமாகக் கணக்கு போட ஆரம்பித்து விட்டார். அவர் மிக அழகான கையெழுத்தும் மிக நல்ல குரல் வளமும் மிக அருமையாகப் படிக்கும் தன்மைகளும் பெற்ற மாணவி தான். ஆனாலும் இந்த சிக்கல்கள் அவரின் மனதிற்குள் . குழந்தைகளின் மனம் ஆரோக்கியம் பெற ......எனக்கு எப்போதும் சிலபஸ் முடிப்பதை விட இப்படியான அணுகுமுறையே முக்கியமாகத் தோன்றுகிறது.

(மாணவியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது )

தொடரும்
உமா