Friday, 15 June 2018

வகுப்பறை உளவியல் - 10

வகுப்பறை உளவியல் : 10
------------------------------------------
அன்பெனப்படுவது ...

ஜூன் 1 முதல் 15 வரையிலும் ... பள்ளி வளாகத்தைச் சுற்றி சுற்றி என்னையும் சுற்றி வரும் குழந்தைகள் ...

மிஸ் நீங்க ஏன் எங்களுக்கு வரல ? போன வருஷம் மட்டும் 7 A1 க்கு சயின்ஸ்க்கு போனிங்க தானே .. இந்த வருஷம் எங்களுக்கு ஏன் வரல ?
(இது 6ஆம் வகுப்பு சென்ற கல்வியாண்டு குழந்தைகள் )

ஜூன் 4 அன்று மாலை பள்ளி முடிந்தது விட்டிற்குச் செல்லும் தருவாயில் , ஒரு மாணவி அம்மாவுடன் மைதானப் பகுதியில் நின்றிருக்க , முகம் மிக வாடியிருக்க , அருகில் சென்று .. என்ன கார்த்திகா .. எப்படியிருக்க .. நான் கேட்ட மாத்திரத்தில் கண்களிரண்டும் நீர் சொறிய .. அச்சோ என்ன ஆச்சுங்க .. அவங்க அம்மா மிக வருத்தத்துடன் .. நீங்க தான் இந்த வருஷமும் இவள்  க்ளாஸ்க்கு போவீங்கன்னு நம்பி தான் இந்த ஸ்கூலுக்கே வந்தா .. நீங்க வரலயாம் ..வீட்லயும் ஒரே அழுகை. .. எனக் கூற , அவளை அணைத்துக் கொண்டு , கண் துடைத்து ... இங்க பாரு குட்டி , மிஸ் கடைசி வரை உன் கூடவே வரமாட்டேன். வளர வளர எல்லாருமே மாறுவாங்க , புது டீச்சர்ஸ் உம் நல்லா க்ளாஸ் எடுப்பாங்க .. நான் இந்த கேம்பஸ்ல தான் இருப்பேன் ,தினம் காலைல வந்த உடன் பார்க்கலாம். எப்போல்லாம் உனக்குக் கஷ்டமா இருக்குதோ அப்பெல்லாம் என்ன வந்து பாரு , பேசலாம் , உனக்கு ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்லு, எந்தப் பாடம் என்றாலும் புரியலன்னா வந்து கேளு .. என்னைக்கும் மிஸ் உங்கூட இருப்பேன் ... என்று கூறி ஒரு வழியா சமாதானம் செய்த பிறகு ....சரி நான் இங்கேயே படிக்கிறேன் என்றாள்.

கடந்த 10 நாட்களாகவே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஓடி வந்து எனக்கு விஷ் பண்றதும் ,ஏக்கத்துடன் என்னைப் பார்ப்பதும் எனக்கு மனதைப் பிசைகிறது. இடையில் தனியே வந்து .. என்ன இருந்தாலும் உங்களத் தவிர சயின்ஸ் க்ளாஸ் வேற வங்க எடுப்பது பிடிக்கல மிஸ் .. என்று கூற .. போகப் போக சரியாகிவிடும் கண்ணு என்றேன். என்னவோ மிஸ் எங்க க்ளாஸ் ல நீங்க இல்லாதத நினைச்சுப் பார்க்க வே முடியல என்று கூறிச் சென்றாள். அவளது விழிகளின் பொலிவு என்னவோ குறைந்து போனது மீள வேயில்லை ...

இன்னும் இரு குழந்தைகள் காவ்யாவும் ஷாலினியும் .. மிஸ் நீங்க ஏன் மிஸ் வரல ?நான் 8-B க்கு கணக்குக்குப் போறேன் டா ... HM என்ன சொன்னாங்களோ அத தான் கேட்க முடியும் ? என்றேன்.
நோ .. மிஸ். நீங்க எங்களுக்கு தான் வருவேன்னு சொல்லி வந்துடுங்க மிஸ்.
அப்படி எல்லாம் கேட்கக் கூடாது மா ..
நீங்க தான் மிஸ் வரணும் ,HM இட்ட போய்க் கேட்க பயமா இருக்கு , ஆனா தைரியத்த வரவச்சுக்கிட்டு கேட்கப் போறேன் மிஸ். சரி சும்மாவாச்சும் எங்க க்ளாஸ் க்கு வாங்க ப்ளீஸ். நீங்க இல்லாம க்ளாஸ் பிடிக்கல ...

சென்ற வருடம் 6ஆம் வகுப்புக் குட்டிகள் இப்போ ... மிஸ் கணக்குக்கு நீங்க வாங்க மிஸ். எங்களுக்கு அப்போதான் மிஸ் நல்லாப் புரியும் , ஒரு குழந்தை  .. ஏன் மிஸ் ? நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டமா ? ஏன் எங்க கிளாஸ் க்கு வர மாட்டேன் றிங்க ? எப்படிப் புரிய வைப்பது இவளுக்கு ...

நேற்று மதிய உணவு இடைவேளையில் இரு குழந்தைகள் ... தயங்கி நிற்க வாங்கம்மா என்றேன். மிஸ் மனசு கஷ்டமா இருக்கு .. ஏன் ?என்றதற்கு .. மிஸ் சயின்ஸ்க்கு நீங்க போன வருடம் சொன்ன மாதிரி ஆக்டிவிட்டீஸ் பாட்டும் கதையும் ரெடி பண்ணோம்... ஆனா ...மிஸ்  கம்யூட்டர் ல போய் பிரிண்ட் அவுட் எடுத்து வரச் சொல்லிட்டாங்க ... செலவாகுமே மிஸ். அதான் உங்க கிட்ட சொல்லிட்டுப் போக வந்தோம்.

மிஸ் ... நீங்க இல்லாம க்ளாஸ் போரடிக்குது. மிஸ் ... இந்த சயின்ஸ் மிஸ் வேகமா க்ளாஸ் எடுக்கறாங்க , வந்த உடனே புக் எடு ..இந்த பேஜ் எடுன்னு பட படன்னு நடத்தறாங்க , ஜாலியாவே இல்ல மிஸ் ... பிடிக்கல ...

நேற்று 10 ஆம் வகுப்பில் கணக்கு நடத்திக் கொண்டு இருந்தேன். இடைவேளை மணி அடித்து 3 நிமிடம் வரையிலும் கணக்கை நடத்திவிட்டு வெளியே வர ..... கடந்த வருடம் 7 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்திற்கு நான் சென்ற மாணவிகள் வெளியில் நின்று கொண்டு , மிஸ் ... எவ்ளோ நேரமா உங்களுக்காக வெயிட் பண்றோம் தெரியுமா ? ஒருவள் எனது கையைப் பிடித்துக் கொண்டாள். இன்னொரு வள் கண்களில்  நீர் எட்டிப் பார்க்கிறது. மிஸ், எங்களால் உங்கள விட்டு இருக்க முடியல மிஸ்.... அவர்கள் முன் எனது ஏக்கத்தையும் காட்டிக் கொள்ள முடியவில்லை.

காயத்ரி ஓடி வந்தாள் , றெக்கை புத்தகம் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். மிஸ் , நீங்க புக் குடுத்து குடுத்து எங்க வீட்டு  ஷெல்ப் நம்பிடுச்சு எனக் கூறி மறவாமல் , மிஸ் நீங்களே மேத்ஸ்க்கு வாங்களேன் ப்ளீஸ்.

ப்ரியா .... 6 ஆம் வகுப்பில் கணக்குப் பிடிக்காது என்று கூறி மூன்றாம் நாள் கரும்பலகையில் கணக்கு போட்டு மற்றவருக்கு நடத்திய மாணவி , ஒடி வந்து .... மிஸ் உங்கள ஸ்கூல் முழுக்கத் தேடினேன் தெரியுமா ? நீங்க ஏன் எங்க க்ளாஸ் க்கு வரல ?

நான் சொன்னது 10% மட்டுமே ....90% பேச இங்கு இடமில்லை ..... சென்ற வருடம் வெறும் 3 மாதங்கள் அவர்களோடு இருந்த நேரங்கள் இவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்துமா ? என்றால் ஏற்படுத்தி உள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் நடுநிலைப் பள்ளிகளைப் போலன்றி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புதிய ஆசிரியர்கள் தங்களுக்கு வருவதை குழந்தை மனங்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

தினமும் அவர்களின் உலகத்தில் இவர்தான் இருக்க வேண்டும்  என உறுதியாக எதிர்பார்க்கின்றனர். அதனடிப்படையில் ஆசிரியர்களை go with class முறையில் பாடங்களுக்காக அமர்த்தினால் இந்த உளவியல் சரியாகி கற்றலும் மேம்படும்.

தொடரும்
அன்புடன்
உமா

Thursday, 14 June 2018

உத்திரமேரூர் அதிசயம்

உத்திரமேரூர்  அதிசயம்
       உத்திரமேரூர் என்றால் கல்வெட்டுக்கள் தான் நமக்கு நினைவு வரும்,இந்தக் கட்டுரையின் மூலம் உங்களோடு வேறு ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
       காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் 1-3 வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் அன்பழகன் பிப்ரவரி 28-ல் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு,QED+நியூட்டன் சர்.சி.வி.இராமன் அறிவியல் மன்றம் இணைந்து பிப்ரவரி 25 ஆம் நாள் நடத்தும் விழாவிற்கு நடுவராக வர ஈரோடு  மாவட்டம், நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியரான எனக்கு,அழைப்பு விடுத்திருந்தார்.
       ஒரு நாள் முன்னர் தான் சென்னை PSPB மில்லினியம் பள்ளியில் நடந்த Partnership Learning நிகழ்வில் சந்தித்த போது கூறினார். தாம்பரம் வழியாக PSPB செல்லும் போது ஷங்கர் சாரின் மகிழ்வுந்தில் எனக்கும் இடம் தந்து மூவரும் சென்றோம். வழியில் CBSE ரமண மகரிஷி வித்யாலயா பள்ளி தாளாளரும் பள்ளி முதல்வருமான லலிதா சந்திரசேகரன் அவர்களையும் சந்தித்து பிப்ரவரி 25-ஆம் தேதிக்கான விழா நிகழ்ச்சிகளின் நடுவராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து,என்னையும்,ஷங்கரையும் அவரிடம் அறிமுகம்  செய்து வைத்தார்.
       பின்னர் பிப்ரவரி 25 காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதால்,என்னையும் பள்ளி முதல்வர் அவர்களொடு இணைந்து கொள்ளுங்கள் எனவும் கூறினார் அன்பழகன். அந்த அம்மையாரும் மகிழ்வுந்தில் வருவதாக்க் கூறி,அவரது தொடர்பு அலைபேசி எண்ணையும் என்னிடம் கொடுத்தார்.பிறகு Partnership programme –ல் கலந்து கொண்டு மாலை 7 மணி அளவில் வீடு திரும்பினோம்..
       பிப்ரவரி 25 ஆம் நாள் காலை 8 மணிக்கு,நான் வண்டலூர் அருகே OMR சாலை இணையும் இடத்தில் காத்திருந்தேன்.லலிதா சந்திர சேகரன் அவர்களை இரண்டு முறை அலைபேசியில் 2 தொடர்புகொண்டு எதிர்பார்த்திருந்தேன். GST சாலையின் காலைபரபரப்பு,வேகம்,மக்கள் நெருக்கம் அனைத்தையும் ரசித்துக் கொண்டு காத்திருந்தேன்.8.20 மணியளவில் அவர்களது மகிழ்வுந்து என் அருகே வந்து என்னையும் உள்வாங்கி, காஞ்சிபுரம் நோக்கிச் சீறியது
       காஞ்சிபுரம் தாண்டி உத்திரமேரூருக்குள் மகிழ்வுந்து பயணிக்க,  அதனுள்ளே லலிதா சந்திரசேகரன் அவர்களுடன் எனது  பள்ளிப்பணி பற்றி உரையாடிக்கொண்டும்,அரசு பள்ளிகளின் தரம்,தற்போதுள்ள நிலை என்று பலவாறு கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டும் வந்தோம்….மேலும் அவர், தானும் அரசு பள்ளியில் தான் பயின்றதாகக் கூறினார்,அன்பழகன் போன்ற ஆசிரியர்களை சந்திக்கும் போது மகிழ்ச்சியாக எண்ணுவதாகவும் கூறினார்.
      அவரோடு அவரது பள்ளி ஆசிரியர் லக்ஷ்மி என்பவரும்உடன் வருகிறார் .மேலும் தற்போதுள்ள சமச்சீர் புத்தகங்களின் தரம்,CCE மதிபீட்டு முறை என எங்கள் உரையாடல் விரிந்து கொண்டே செல்ல, உத்திரமேரூர் வந்துவிட்டது.
      எனது சிறுவயதில் வரலாற்றுப் பாடங்களில் உத்திரமேரூர் என்ற இடத்தின் பெயரை கல்வெட்டுக்களுக்கான தலைப்பின் கீழ் படித்திருக்கிறேன்.அப்போதே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்ததுதான் இந்த இடம்.இன்று அங்கே இருக்கும் ஓர் பள்ளியில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தது, இளைய பிராயத்தின் வரலாற்றுப் புத்தகங்களில் நினைவு கூர்தலை ஏற்படுத்தி, மன மகிழ்ச்சியைத் தந்தது.
        தனது பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப் பதால் அண்டைப் பள்ளியான பாலர் நேசன் நடுநிலைப்பள்ளியில்  விழா ஏற்பாடு செய்திருந்தார் அன்பழகன் ஆசிரியர்.இவரைப் பற்றிக் கூறவேண்டுமானால் பக்கங்கள் போதாது.இருப்பினும் ஒரு அறிமுக உரை,சமீபத்தில் உலக அளவில் ஜப்பான் நாட்டில் நடைபெற்ற அறிவியல் பயிற்சிக்காக, நம் தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு,  ஜப்பான் சென்று 45 நாட்கள் தங்கி பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தவர்.
       அந்தப் பயிற்சியின் சிறப்புகள் ஏராளம், உலக அளவில் 12 ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட, அவர்களுள் ஒருவர் இந்தியர்,அந்த ஒரே இந்தியராக நம் மாநிலத்திலிருந்து சென்றவர் தான் இந்த அன்பழகன் அறிவியல் ஆசிரியர். புதிய தலைமுறைப் புத்தகத்தின் கல்வி இதழின் நான்கு பக்கங்களை  அலங்கரித்து  இருந்தார்.
       ஜப்பானில் பெற்ற பயிற்சி அனுபவங்களால்,சுட்டி விகடன் கனவு ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் இவருக்குண்டு .இவ்வளவு சிறப்புகளும் எதனாலே என்றால், பள்ளிக் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பணி புரிவதாலும், அவர்களுக்குக் கல்வி புகட்ட கணினி வழி நுட்பங் களைக் கற்றுக் கொடுத்து பள்ளியை Update செய்து கொண்டே இருப்பதாலும் தான்.
       சரி,பிஃப்ரவரி 25க்கு வருவோம்,பாலர் நேசன் நடுநிலைப் பள்ளி பெயரிலேயே குழந்தைகளுக்கு நேசம் மிகுந்ததாய் இருந்தது. உள்ளேசென்று பார்த்து, அந்த நாள் முழுவதும் அவர்களோடே இருந்த பொழுது நேசமான பள்ளியின் பொருள் ஊர்ஜிதமானது.
        பள்ளி வளாகத்தை அடைந்த உடன் மகிழ்ச்சி, வகுப்புகளில் ஆசிரியர்கள் அவரவர் பணி செய்ய, தலைமை ஆசிரியர் எங்களை வரவேற்று,பள்ளி பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் போது,பள்ளி மாணவ மாணவிகளில் சிலர் அவர்களது பணி நிமித்தம் அந்த அறைக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். அப்படி வரும்போது ஒருவர் தவறாமல் (அனைத்து) புதிய நபர்களான எங்களுக்கும் வணக்கம் சொல்லி புன்முறுவலுடன் வெளியேறினர்.
       ஒரு ஐந்து பேர் அடங்கிய மாணவர் குழு மைதானத்தின்  ஒரு புறம் அந்நாளின் விழாவை முன்னிட்டுக் கூடாரம் அடித்து சாமியானா போடும் வேலையில் மும்முரமாக இருந்தனர். அதைப் பார்த்த லலிதா மேடம் ஆனந்தப்பட்டும், அதேவேளையில் ஆதங்கமும்  அடைந்தார்.
       ஆனந்தம் என்னவெனில்,பணிச்சுமை என்று புறந்தள்ளாமல் பள்ளி மாணவரே இந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர்.நிலத்தில் ஆணி அடிக்கும்போது கூட,சரியான கோண அளவுகளில் அவர்கள் பொருத்திதான் அடிக்க வேண்டும். அவர்களுக்கேத் தெரியாமல் கணிதபாடத்தில் கோணங்கள், அளவீடுகள்,கூம்பு வடிவம் என கற்றுக் கொள்கின்றனர் என ஆனந்தப்பட்டார்.
       அதே சமயம் ’’எனது பள்ளி மாணவரிடம் இது போன்ற பணிகளைச் செய்ய, தைரியமாகப் பணிக்க, இன்றைய கல்விமுறை சூழல் அமையவில்லை’’ எனவும் ஆதங்கப்பட்டார்.விழா நிகழ்ச்சி களைத் தொடங்க ஆரம்ப முன்னறிவிப்பை சிற்றுரையாகத் தந்து தொடங்கி வைத்தார் அன்பழகன் ஆசிரியர்.
       எனக்குப் பேச்சுப் போட்டிகளை மதிப்பிடும் நடுவர் பணி தரப்பட்டது.அன்றைய நாளின் சாரம் இதுதான்………………………………………………………..
      ”அவரது உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஆறு பள்ளிகளிலிருந்து குழந்தைகள் போட்டிகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர் .ஒருவர்-இருவர் அல்ல,ஐம்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில்,… பலதரப்பட்ட சிந்தனைகளை ஒன்று குவித்து ஓரிடத்தில் சந்திக்க வைப்பதே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.ஆனால் அவர் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் “ஒளியியல்” என்ற தலைப்பைத் தந்து அனைவருக்கும் வாழ்க்கை ஒளியைப் பெற வழிகாட்டி இருந்தார்.
        அருகாமைப் பள்ளி ஆசிரியரின் உதவி பெற்றிருந்தாலும், பொறுப்பேற்று அத்துணை நிகழ்வுகளையும் ,அவர் ஒருவரே முன்னின்று,அழகாக அணிவகுத்து,நேர்த்தியாய், நேரம் வகுத்து போட்டிகளடங்கிய விழாவை முடிவுக்குக் கொண்டு வந்தார்.அவரது QED+நியூட்டன் சர்.சி.வி.இராமன் அறிவியல் மன்றச் சிந்தனை தனது வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைச் செல்வங்களை “ஒளி” பற்றியத் தேடலைக் கற்றுக் கொடுத்துள்ளது.எங்கிருந்து முளைத்தன இத்தனை சிறகுகள் ?............ஆம்…………….சிறகெனக் குறிப்பது குட்டிக் குழந்தைகளின் சிந்தனைத் தேடல்களையே….
        6 முதல் 8 வகுப்புகள் வரையுள்ள நடுநிலைப் பள்ளிக் குழந்தைகள் “ஒளி” பற்றி ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தையே எழுதும் அளவிற்கு தங்கள் தேடலை வரிசைப்படுத்தியது,எனக்குமட்டுமன்று வந்திருந்த அத்துணை நடுவருக்கும் வியப்பே.
       ஆம்,பேச்சு,எழுத்து, வினாடி-வினா,ஓவியம் மற்றும் அறிவியல் உபகரணம் தயாரித்தல் என ஐந்து வெவேறு தலைப்புகளிலும் “ஒளியியல்” என்ற அறிவியல் பார்வையைப் பதித்து வெவ்வேறு கோணங்களில் தங்கள் கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் பறை சாற்றினர் உத்திரமேரூர் ஒன்றிய சிறார்கள்.
       அறிவியல் கருத்துரு என்றாலும் மொழிப்புலமையை பேச்சு,கட்டுரைப் போட்டி இவற்றிலும்,கலைத்திறமையை ஓவியப்போட்டியிலும்,ஒற்றுமை-புரிதல்-சமூக இணக்கம் இவற்றை வினாடி-வினாப் போட்டியிலும்,மேற்கண்ட அத்தனைத் திறன்களோடு கணித அறிவையும் ஒருங்கிணைக்க அறிவியல் உபகரணப் போட்டியிலும் கொண்டு வந்து,ஒரு எடுத்துக்காட்டான மாணவ சமுதாயத்தை உருவாக்க, செயல்களில்  இறங்கியுள்ள அவரது பணிக்கு வாழ்த்துக்கள் கூறியே ஆகவேண்டும்.
         மேலும் பாலர் நேசன் பள்ளியைப் பற்றிக் கூற வேண்டுமானால்,காலை 9.30 மணிக்கு அவரது பள்ளியில் நுழைந்ததிலிருந்து மாலை 3.45-க்குப் புறப்படும் வரை சிறப்புகள் மட்டுமே.விருந்தினர் உபசரிப்பு,பள்ளி வளாகத்தூய்மை,மாணவரது அன்பான விசாரிப்புகள்,பள்ளி தளாளரின் பரிவான பேச்சு,அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பு,விழா வடிவமைப்பு,ஒருங்கிணைப்பு எனக் கூறிக்கொண்டே போகலாம்
          அங்கே தாளாளரின் துணைவியார் லில்லி என்பவரைச் சந்தித்தோம்.எந்தக் குழந்தையாக இருந்தாலும் ஆங்கிலக் கற்றலில் எவ்வளவு பின் தங்கியவராக இருந்தாலும் அவர்களைக் கற்றலில் ஈடுபடுத்தி நன்றாக ஆங்கிலம் படிக்க வைத்து விடுவார்கள் என, தாளாளர் கூறினார்.தற்போது லில்லி அம்மா தோற்றத்தில் முதுமையடைந்து விட்டார்,
            ஆனால் அவரது இளமையை எண்ணங்களில் கண்டேன்.   என்னோடு பேச்சுப் போட்டியின் நடுவராக இருந்த அவர்,மாணவரது குரல்,கருத்துகள்இவற்றை  வெளிக் கொணர அவர்களை Motive செய்து கொண்டே இருந்ததும்,அவரை விட அனுபவத்திலும் வயதிலும்சிறியவராக இருந்தும் என்னோடு அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பேச்சுப் போட்டி மாணவர்களை தேர்வு செய்வதில் அவர் காட்டிய அக்கறை,மாலை விழா முடிவில் அவரது பள்ளி மாணவிகள் அவரே எழுதிய பாட்டிற்கு, அவரே ஒலிபெருக்கியில் பாட,நடனமாட பயிற்றுவித்துள்ள விதங்களில் அவரது சுறுசுறுப்பு,மாணவருக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்புரை தரும்போது அவர் அளித்த ஒழுக்கம் பற்றிய டெமோ,உடல் அசைவுகளின் மூலம் அவரளித்த ஒழுக்கம் விழுப்பம் தரலான்………குறள் விளக்கம் இவை அனைத்தும் நெஞ்சில் நின்றன.
          அதே போன்று பள்ளிக் குழந்தைகளின் திறமைகளை சரியான தருணத்தில் வெளிக்கொணர அவர்கள் பின்பற்றும் வழிகளையும் போட்டிகளின் முடிவுகளிலிருந்தும்,மாணவரின் பங்கேற்றலில் இருந்தும் கண்டு கொண்டேன்.
          அன்பழகனின் முயற்சி அவரது பள்ளி சிறாருக்கு மட்டுமின்றி,அவரது சுற்று வட்டாரப் பள்ளிக் குழந்தைகளுக்கும் தோன்றின் புகழொடு தோன்றுக………என வளர வழிகாட்டியுள்ளது.
போட்டிகள் முடிந்து மாலை பரிசளிப்பு விழா,அனைத்து மாணவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள்,முதல் மூன்றுஇடங்களைப் பெற்றவருக்கு தலா ஒரு சான்றிதழ்,மெடல்,புத்தகப் பரிசுகள்,பேனாப் பரிசுகள் என அத்துனை நிறைவாய் ஒரு விழாவைத் திருமணம் போல் தடபுடலாய் நடத்தி இருக்கிறார் அன்பழகன்.
         அவரது நண்பர் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை ஓருங்கிணைத்து  அடுத்தடுத்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியரான அவர் இடையிடையே ஒலிபெருக்கியில் அறிவியல் ஆராய்ச்சியாளர் சிலரின்  வாழ்க்கை வரலாறுகளின் சுவாரஸ்யமான பகுதியை சுருக்கமாகக் கூறிக்கொண்டே இருந்தது,அவரது வாசிப்பின் ஆழத்தை நமக்குக் காட்டியது.
         அதோடு இந்தப் போட்டிகளை வழக்கமாகத் தொடர்ந்து நடத்தி வருவதற்கு ஊக்கம் தரும் உதவித் தொடக்க அலுவலர் அந்த ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு இந்த மன்றங்களின் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை உற்சாகத்தோடு பகிர்ந்தார்.
          நிகழ்ச்சிக்கு வந்திருந்த என்னைப் போன்ற புற ஆசிரியர்கள், QED நிறுவனத் தலைவர் என்று அனைவரையும் ”நூலும்(book) சாலும்(shawl)”தந்து கௌரவித்து,மாணவருக்கு வாழ்த்துக்கள்  வழங்கி எங்களுடைய கருத்துக்களையும் நாங்கள் வெளிப்படுத்த,திருவிழா போன்றதோர் நிகழ்வு முடிவுக்கு வந்தது.ஆனால் அந்த நாளின் சுவை மூளை செல்களுக்குள் இன்னும் சுவைக்கிறது.

                                               எழுத்து :        சு.உமாமகேஸ்வரி,
                                                                      பட்டதாரி ஆசிரியர்(கணக்கு),                                                            
                                                                      அரசு மேல்நிலைப் பள்ளி   ,
                                                                       நல்லாம்பட்டி,
                                                                        ஈரோடு மாவட்டம்
*************************************************************************************************

Wednesday, 6 June 2018

வகுப்பறை உளவியல் : 9

அரசுப் பள்ளிகள் - வேற்றுமையில் ஒற்றுமை :

வகுப்பு : 6 A2

இன்று  புதியதாக சேர்ந்த குழந்தைகளைக் காண வகுப்பிற்குள் நுழைய...

வண்ண வண்ண நிறங்களில் தேவதைக் கூட்டம் வகுப்பு முழுவதும் ...

குட் ஆஃப்டர் நூன் டியர்ஸ் ....

குட் ஆஃப்டர் நூன் மிஸ் .. எனக் கோரஸ் பாட ...

நான் உங்க புது மிஸ் .. என் பேரு என நான் சொல்ல வாயெடுக்குமுன் ஒரு கூட்டம் உமாமகேஸ்வரி என குதித்து மகிழ்ச்சிப் பொங்க கத்தினர் ... எவ்ளோ ஃபாஸ்ட்டா நம்மைப் பற்றி விசாரிச்சு வச்சுட்டாங்க !!!

சரி ... நான் என்ன சப்ஜெக்ட்டுக்கு வந்தேன் தெரியுமா ?
சயின்ஸ் மிஸ் ...
எப்படித் தெரியும் ??
எல்லா மிஸ் உம் வந்துட்டாங்க , சயின்ஸ் மட்டும் தான்  இன்னும் வரல .. அப்புறம் நீங்க தான் க்ளாஸ் மிஸ் .... அப்பப்பா செம சுட்டிகள்.

சரி... உங்க பேர் எந்தப் பள்ளி என சொல்லி அறிமுகப்படுத்திக்கலாமா ???

My Name is .....
I am from ......

38 பேரும் தங்களை அழகாக அறிமுகப்படுத்திக் கொண்டனர் ...
ஒரே ஆச்சர்யம் .....

18 வகையான பள்ளிகளிலிருந்து வந்திருந்தனர். 15 தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளும் , 3 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தமிழ் வழிக் கல்வியிலிருந்தும் வந்திருக்க ..... என்னால் நம்பவே முடியவில்லை .....

ஏனென்றால் எல்லாப் பள்ளிகளைப் பற்றியும் ஒரே விதமாக ஆனால் வேறு வேறு  மழலை மொழிகளில் Feed Back ...

பத்மப்பிரியா , கரிஷ்மா , சந்தியா , அனுப்பிரியா , 2 மோனிஷா , 2 மோனிகா , அபிராமி , மெர்ஸி , ஜீவிதா , 2 மகேஸ்வரி , சிநேகா , காயத்ரி , மதுமிதா ,..... 38 பேர்களும் விதவிதமாக ..... பள்ளிகளின் பெயர்களும் தினுசு தினுசாக .....

அறிமுகப் படலம் முடிந்ததும் .....

இந்த ஸ்கூல் பிடிக்குதா ? எனக் கேட்க
எஸ் மிஸ் என கோரஸ் ... ஏன் என்று கேட்க , நிறைய பதில்கள் ....

மிஸ் இங்க ஃபீஸ் ரொம்ப கம்மியா தான் வாங்கறாங்க ,

மிஸ் ... இங்க தான் இன்டர்வெல்ல விளையாட விடறாங்க ...

மிஸ் .... இங்க எல்லா டீச்சர்ஸ் உம் நல்லா பேசறாங்க ....

மிஸ் .... இங்க ஜாலியா இருக்கு ....

மிஸ் ..... இங்கு சத்துணவு நல்லா இருக்கு ....

மிஸ் .... இங்க நிறைய மரங்க இருக்கு .....

மிஸ் ... இங்கு நிறைய சொல்லித் தருவாங்க ... ( என்ன எனக் கேட்க ... Craft work எனக் கூறினார் ஒரு மாணவி )

மிஸ் ... இங்கு புத்தகமெல்லாம்  ஃபிரியா தராங்க .....

மிஸ் .... இங்க டீச்சர்ஸ் நல்லா சொல்லித் தராங்க. .....

ஒரே நாளில் எப்படித் தெரியும் ?பொய் சொல்லக் கூடாது என்றதற்கு ....

பொய் இல்ல மிஸ் ... நிஜமா தான் ... ஒரே நாளில் நல்லாப் புரியற மாதிரி சொல்லித் தந்தாங்க ....

நான் இன்னும் பாடமே நடத்த ஆரம்பிக்கலயே... எனக் கூற ,

உங்களப் பார்த்த உடனே பிடிச்சுருச்சு என்றார் ஒரு மாணவி .....

அப்புறம் .... நீங்க பேருக்கெல்லாம்  அர்த்தம் சொல்லித் தறீங்க அதனால பிடிச்சுருக்கு என்கிறார் ஒருவர்.

சரி .... இரண்டு பேர் CBSE பள்ளியிலிருந்து மாறி எம் பள்ளிக்கு வந்திருந்தனர்.

எல்லோருமே அவர்கள் கேட்கும் கட்டணத் தொகையால் அச்சப்பட்டு கட்ட முடியாமல் வெளியேறி வந்துள்ளார்கள்.

மகிழ்ச்சியான கற்றல் அரசுப் பள்ளிகளில் தான் கிடைக்கின்றது என இரண்டு நாட்களில் உணர்ந்து மனம் திறந்த தேவதைகள் ....

அரசுப் பள்ளி ( ஊ.ஒ.து.ப ) களிலிருந்து தமிழ் வழியிலிருந்து 7 பேர் இந்த ஆங்கில வழிக்கு வந்துள்ளனர். அவர்களிடம் ஏன் ... தமிழ் வழியில் படிக்கலாமே என்றதற்கு .....

மில் .... 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுதணுமா மே.... எனப் போட்டித் தேர்வுகளுக்கு இப்போதே தயாராக அவர்களது பெற்றோரால் அறிவுரைக்கப்பட்டு வந்திருக்கும் குட்டிப் பட்டாளம் இவர்கள் ...

அப்புறம் வகுப்பு பாடம் நோக்கி பல் வித உரையாடல்களோடு ஆரம்பித்து திடீரென 2 பிரிவேளைகள் முடிய ......

வேற்றுமையில் ஒற்றுமையாய் அரசுப் பள்ளியைத் தேடி வந்து 18 வேறு வேறு  யார் பள்ளிக் குழந்தைகளை நாளை முதல் எத்தனை வகையான அணுகுமுறையில் கையாள்வது என எண்ணிக் கொண்டு ...

அன்பின்
தேவதைகளோடு
உமா

உளவியல் தொடரும்