சுதந்திரக் களத்தில் பெண்களின் பங்கு
###########################.
இரண்டு நாட்களாக சென்னையில் அடை மழை ...
ஆனாலும் இன்று காலை 8 மணிக்குக் கூடிவிட்டனர் அனைவரும் ,பள்ளி வளாகம் தண்ணீரில் குளிர்ந்து நனைந்திருந்தாலும் ...
JRC , Guides என சீருடைக் குழந்தைகள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் பொலிவுடன் குட் மார்னிங் சொல்ல ....
70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆங்காங்கே நிறைந்திருக்க ...
எங்கள் பள்ளியின் சுதந்திரதின விழாக் கொண்டாட்டம் ஆரம்பமானது. ..
தமிழாசிரியர் லீமா மிக அழகாகத் துவக்கி வைத்து , விழாவைத் தொகுக்கிறார்.
6 ஆம் வகுப்பு மாணவி பத்மப்பிரியா மிக அழகாக சுதந்திர தினம் பற்றி உணர்வு பீறிட எழுச்சியுடன் பேசி , கைதட்டல் வாங்குகிறார். இவர் என் வகுப்புக் குழந்தை ..
அடுத்து 9 ஆம் வகுப்பு மாணவி உரை .
தொடர்ந்து சுதந்திரம் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார் அதே 6 ஆம் வகுப்பு மாணவி ரக்க்ஷனா .. அவ்வளவு வேகம் , தெளிவு , நம்பிக்கை ... எனக்கு மிகப் பெருமையாக இருந்தது.
மீண்டும் 2 குழுப் பாடல் ராகம் அருமை. பாட்டு டீச்சருக்கு ஒரு வாழ்க போடணும் .குறுகிய காலத்தில் அற்புதமாக தயார்படுத்தியிருக்க அதில் 9 , 10 ஆம் வகுப்பு மாணவிகள் ரம்மியமாகப் பாடி வாழ்த்துகின்றனர் சுதந்திர தினத்தை ...
அடுத்தும் அதே வகுப்பு கீதாஞ்சலி , போராடிப் பெற்றாள் மேடையை (ஆம் , மழை ... நேரம் கருதி வேண்டாம் எனக் கூற ... ம்கூம் ..... ஆங்கில உரை ... தேங்க்யூ வரை )
தொடர்ந்து லீமா ஆசிரியர் என்னை அழைக்க ....
ஆரம்பமானது உரையாடல் ...
எல்லோருக்கும் காலை வணக்கம்...
வணக்கம் டீச்சர் ..
உங்களை எல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ... இந்த மழையிலும் இவ்வளவு சீக்கிரமா இங்கு வந்து சுதந்திர தினத்தை நினைவு கூர வந்தது பார்த்து இன்னும் மகிழ்வாயிருக்கு ...
எனக்கு முன்னாடி உங்க சகோதரிகள் சுதந்திர தினம் ,போராட்டம் பற்றி எல்லாம் பேசினாங்க....
நீங்களும் உங்க வரலாறு புத்தகத்தில் சுதந்திரம் பற்றி நிறைய படிச்சு இருப்பீங்க , ஆமா தானே ...
யெஸ் மிஸ் ....(கோரஸ்)
இப்போ , சுதந்திரம் அப்படின்னா என்னன்னு தெரியுமா ?
............................
நாம எல்லாம் இப்படி இங்க நின்று கொண்டு பேசுகிறோம் என்றாலே இதுவும் ஒரு சுதந்திரம் தான். ஆமா இப்படி எல்லாம் பள்ளிக்கு வர முடியாத ஒரு காலம் இருந்தது.
நான் இப்போ உங்க கூட மைக்ல பேசறது .... இது என்ன ? இது தான் பேச்சு சுதந்திரம் ...
நாம இப்போ வீட்ல தைரியமா பேசி , விருப்பத்த தெரிவிச்சு , வேண்டாம் என மறுத்து பேசறோமே அது கூட ஒரு வகையில் சுதந்திரம் தான்
அந்நியர் நம்மை அடிமைகளா வச்சு இருந்தப்போ நிறைய பேர் அவரவர் வாழ்வைத் தியாகம் செய்து , போராடித் தான் சுதந்திரத்த வாங்கித் தந்து இருக்காங்க ...
இந்த சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நாம படிக்கும் போது பெரும்பாலும் காந்தி , நேரு , சுபாஷ் சந்திரபோஸ் , பகத்சிங் , வீரபாண்டிய கட்டபொம்மன் , வ.உ.சி இப்படி நிறைய ஆண்கள் பற்றி எல்லாம் தான் படிச்சு இருக்கோம் , பேசறோம் , அவங்க மட்டும் தான் போராடினாங்களா ?
இல்லை , நாம பெண்கள் பள்ளியில் இருப்பதாலும் பெண்களாக இருப்பதாலும் , சுதந்திரப் போராட்டத்தில் கலந்து போராடிய பெண்கள் பற்றியும் நாம தெரிஞ்சுக்கணும் ...
ஆனா இந்த ஆண்கள் எல்லாம் போராடினாங்க தானே , அவங்கவங்க வீட்ல மனைவி இருப்பாங்க தானே அவங்க எல்லோரும் கூட உதவி செய்தாங்க , இப்போ எப்படி உங்க வீட்ல ஒரு வெற்றி வர அப்பாவோடு சேர்த்து அம்மாவும் உதவறாங்களோ அது மாதிரி ... எல்லா வீடுகளிலும் பெண்களும் சுதந்திரப் போரில் பங்கெடுத்தாங்க ... அவங்க பத்தி எல்லா புத்தகத்தில் போடல ...
அவங்க மட்டும் இல்லாம நம்ம வரலாற்றுல இடம் பிடிச்சவங்க கொஞ்சம் பேர் ..
வேலு நாச்சியார் .. கேள்வி பட்டு இருக்கீங்களா ?
ம் ம் ம் .....(கோரஸ்)
ம் ... அவங்க தான் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வங்க , 1700 களிலேயே ... எதிர்த்து இருக்காங்க , அதுவும் நம்ம தமிழ் நாட்டுல சிவகங்கை மாவட்டம் இருக்குல்ல .. அங்க தான். ..
அப்புறம் இராணி லட்சுமி பாய் ... குதிரை மேல ஒருத்தர் இருப்பாங்களே .. பாத்து இருக்கீங்களா ?
ஆமா ....(கோரஸ்)
அவங்க வட இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்தாங்க .. அப்புறம் ராணி சென்னம்மா கர்நாடகத்தில் , ஜல்காரியா ஆங்கிலேயரை ஏமாற்றி படையை முறியடிச்சிருக்காங்க .. ராணி அவந்தி பாய் , இப்படி நிறைய பேரை செல்லலாம் , அப்புறம் உங்க புத்தகத்துல வந்திருப்பாங்களே , ஹோம் ரூல் இயக்கம் கொண்டு, வந்த அன்னிபெசண்ட் அம்மையார் ....
அப்புறம் .. பாரதியார் பாடினாரே சுதந்திரத்திற்கு முன்னாலயே ...
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே -என மக்களிடம் சுதந்திர வேட்கையை உருவாக்கியது போல ,
தங்களின் கணீர் குரலால் விடுதலைப் பாடலைப் பாடிய டி.கே. பட்டம்மாள் இவங்க கூட ஒரு விதத்தில் சுதந்திரத்துக்கு போராடினவங்கதான்.
தில்லையாடி வள்ளியம்மை , நம்ம கடலூரில் இருந்து அஞ்சலையம்மாள் இப்படி ஆயிரக்கணக்கில் பெண்கள் நம்ம சுதந்திரத்துக்காகப் போராடி இருக்காங்க ...
சரி ... இவங்கள ஏன் தெரிஞ்சுக்கனும் ? இந்த ஒரு நாள் மட்டும் இவர்களைப் பற்றி பேசினால் போதுமா ?
இன்று நம்மைப் பொறுத்தவரை விடுமுறை ,இனிப்பு தருவாங்க, வீட்டுக்குப் போயி டிவி பார்க்கலாம் ... இது தானே ... அல்ல ..
வரலாறுகளைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யணும் , இவர்களது போராட்டம் வாழ்க்கையை பற்றி தெரிஞ்சுக்கும் போது நம்ம புரிதல் அதிகமாகி , நமக்குள்ளும் போராடும் குணம் வரும்.
இன்று இருக்கும் சமூக , பொருளாதார , அரசியல் சூழலை இந்த வரலாறோடு இணைத்து சமூகம் சார்ந்த சிந்தனையை நமக்குள் உருவாக்கிக் கொள்ளவும் இவர்களைப் பற்றிய அறிவு உதவும்.
நாம எல்லாத்தையும் வேற வேறயா பார்க்கிறோம் ,.... பள்ளி , சுதந்திரம் ,விடுமுறை , படிப்பு , போராட்டம் , சமூகம் , உணர்வு ..... இதெல்லாம் சங்கிலி மாதிரி , ஒன்னோடு ஒன்று தொடர்பு படுத்திப் பார்க்கும் பார்வையை நாம் வளர்த்துக்கணும் , அது நம் சிந்தனையை தெளிவாக்கி கூர்மையாக்கும் .
அது போன்ற சிந்தனையை உங்களுக்கு இந்த நாள் வழங்க வேண்டும் ,
மழையில் ரொம்ப நேரம் நிற்க முடியாது என நேரம் கருதி மீண்டும் ஒரு முறை சுதந்திர தின வாழ்த்துகளைக் கூறி விடை பெறுகிறேன் ..
ரக்க்ஷனாவின் (எனது வகுப்பு மாணவி , இன்று ஆங்கிலத்தில் உரையாற்றினார் )
பெற்றோர் ஓடி வந்து உங்களோடு ரக்க்ஷனா வை வைத்து ஒரு ஃபோட்டோ எடுக்கணும் , நேற்று தான் ப்ரிபேர் செய்து ஒரே நாளில் பேசிட்டா, உங்களைப் பற்றி தான் வீட்டில் தினம் நிறையப் பேசுகிறாள் என்றனர் .. (சந்தோஷமா இருந்தது )
10 ஆம் வகுப்பு ரசிகைகள் கூட்டம் , அருள் , குளோரி , ரம்யா , சங்கீதா , ரஞ்சனி உள்பட இன்னும் சிலர் ஓடி வந்து .. மிஸ் சூப்பரா பேசிட்டீங்க ...
9 ஆம் வகுப்பு கலைமதி , அபிநயா , ஆறாம் வகுப்பு எல்லோரும் நல்லா இருந்தது மிஸ் ..
ஆசிரியர் தோழமைகள் எல்லோரும் கைகொடுத்து .. நல்லா பேசறீங்க ...
மகிழ்ச்சி .. ஆனா ஆரம்பிச்சு மட்டும் தான விட்டேன் , பேசவே இல்லையேப்பா .... மழை என்பதால் மிக சுருக்கமாக முடிச்சுக்கிட்டேனே ...
வீடு வந்த பிறகு அலைபேசி அழைப்பு , தொகுத்த ஆசிரியர் லீமா .. உமா , ரொம்ப நல்லா பேசியது சிறப்பு , பெரிய பொண்ணுங்க கிட்ட ஒரு நாள் மீண்டும் பேசங்க ... கருத்து எல்லாம் நல்லா இருந்தது. தேவையான விஷயம் , நிச்சயமா ஒரு நாள் பேசுங்க ..
அவ்ளோதான மிஸ் .... பேசிடுவோம் ...
அன்புடன்
உமா (15.08.18)