Tuesday, 29 January 2019

குடியரசு தினம்

குடியரசு   ???

ஒவ்வொரு வருடமும் பூரண சுதந்திரம் அடைந்த இந்த நாளை சடங்காகவே பார்த்து வருகிறது இந்தியா , குறிப்பாக தமிழ்நாடு தான் நான் கவனிக்கும்  பகுதி .

ஏதோ ....சுதந்திரப் போராட்டக்காலத்தில் வாழ்ந்த சில உணர்வுள்ள மனிதர்கள் மட்டுமே பொருள் புரிந்து கண்ணில் நீர் கசிய இது போன்ற தேசிய விழா நாட்களில் பள்ளிக்கூட விழாக்களிலோ பொது இடங்களின்  விழாக்களிலோ கலந்து கொள்ளும் சூழல்.

பள்ளிக்கூடங்கள் இயந்தரங்களைத் தயாரிப்பதால் குடியரசு தின வரலாறு குழந்தைகளின் உணர்வை ஒரு போதும் நெருங்கியதில்லை.

தனியார் பள்ளிகளில் வரலாற்றுத் துறை ஆசிரியர்கள் இருப்பது போல் இல்லாமல் இருக்கின்றனர். அங்கு மருத்துவத்திற்கும்  பொறியியலுக்கும் ஈர்க்கும் காந்தங்களே தயாரிக்கப்படுவதால்  வரலாற்றை  தொலைவில் இருந்து கூட பார்க்க விரும்புவதில்லை எவரும் .

அரசுப் பள்ளிகளிலும் கூட வரலாற்றுத் துறை ஆசிரியர்கள் சட்டப்படி நியமிக்கப்பட்டு இருந்தாலும் இந்த வரலாற்றை மாணவர் மனதில் விதைக்கும் முயற்சிகளில் எவருமே ஈடுபடுவதில்லை , கேட்டால் ஆயிரம் காரணம் சொல்கின்றனர் , அவை நியாயமாக இருந்தாலும் தார்மீகக் கடமையைத் தவற விடுவதாகவேக் கருதுகிறேன் .

பள்ளிகளிலும் வரலாறு சொல்லிக் கொடுக்கப்படாமல் வீடுகளிலும் அது பற்றிய புரிதல் இல்லா சூழலில் வளரும் குழந்தைகளிடம் உரிமை , போராட்டம் , சுய சிந்தனை , சமூகப் பிரச்சனை , தங்களது கடமை , அரசியல் சாசனம் , அரசியல் அறிவு , புரிதல் மனப்பான்மை , பொது நலம் , ஆய்வு செய்யும் மனநிலை , தேசப்பற்று , அன்பு இதெல்லாம் எப்படிங்க வரும் ?

பெரியார் , காந்தி , அம்பேத்கார் , நேதாஜி இப்படி யாரப்பத்தி  தெரியும் ?

இவங்கள பத்தி தெரியாம , சுதந்திரப் போராட்டம் முதற்கொண்டு இன்று நடக்கும் ஆணவப் படுகொலைகள் , உரிமைப் போராட்டம் , சாதியப் பிரச்சனைகள் , தொழிலாள் பிரச்சனைகள் , பாலியல் வன்கொடுமைகள்  , தனியார் மயமாக்கி உலக தாராளமயமாக்கல்  பிரச்சனைகள் , தனி மனித வாழ்வின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் என .. இன்னும் பல நூறுப் பிரச்சனைகளை எங்குமே பேசாது தனது 18 வயது வரை வெறும் பாடம் , தேர்வு மட்டுமே  அறிமுகம் செய்து அழுத்தம் கொடுக்கப்படும் வரும் தலைமுறை குழந்தைகள் என்ன ஆவார்கள் ???

சில லட்சம் வகுப்பறைகளில் ஒரு 20 ஆண்டுகள் பல கோடி இயந்தரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகப் பள்ளிகள் செயல்படும் போது ...

(சில விதிவிலக்கான வகுப்பறை , ஆசிரியர்கள் உள்ளனர் என்பதும் உண்மை )

வரும் விளைவுகள் அணுக்கரு பிளவை விடக் கொடுமையானவை.  அப்போதைக்கான அழிவாகத் தோன்றினாலும் நூற்றாண்டு கால அழிவுச் சுவடுகளைத் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்க ,

வரும் காலங்களில் குடியரசு என்ற வரலாறு அழிந்ததோடு குடியரசு என்ற வார்த்தையே கூட சுவடில்லாமல் அழிந்து போகலாம்.

எச்சரிக்கை ...

உமா

போராட்டம்

ஆசிரியர் போராட்டமும் மக்களின் அறியாமையும் ...

இங்கு பேசுபவர்கள் அனைவரும் அவரவர் பார்வையில் சரியாகவே பேசுகின்றனர் .

அரசையும் கேள்விகள் கேட்க வேண்டும் , கல்விக்காகப் பெறப்படும்  வரிப்பணம் முழுவதும் கல்விக்காக செலவிடப்படுகிறதா ?

GDP  டெல்லி அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் சற்றேறக்குறைய  28% ஒதுக்கும் போது நாம் முறையாக ஒதுக்க வேண்டிய 6% . கூட ஒதுக்குவதில்லையே

தொடக்கப் பள்ளிகளில்  25 பாடங்கள் (5 வகுப்புகளுக்கு 5 x 5 ) சொல்லித் தர 2 ஆசிரியர்கள் போதுமா ?

கழிப்பறை வசதிகளே ெசய்து தராத அரசுப் பள்ளிகளே பெரும்பான்மை

பொதுப் பள்ளி முறையை ஏன் செயல்படுத்தக் கூடாது ?

தமிழ் வழியை ஒழித்து ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றியுள்ள லட் சக்கணக்கான பள்ளிகளில் ஆங்கில வழியில் பயின்ற , பயிற்சி முடித்த ஆசிரியர்களை ஏன் நியமிக்க வில்லை ?

விளையாட்டுத் திடல் இல்லாத பள்ளிகளுக்கு குழந்தைகளின் உடல் திறன் குறித்த நிலை என்ன ?

முறையான ஆசிரியர்கள் , மற்ற வசதிகள் எதுவுமே இல்லாத மெட்ரிக் பள்ளிகளுக்கு எதற்கு அனுமதி வழங்குகிறது ?

அது போன்ற மேட்டிமைப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதும் மற்றவர் தெரிந்தவர் உறவினர் குழந்தைகளைப் படிக்க வைக்கப் பரிந்துரை செய்யும் உயர் மட்ட கல்வி அதிகாரிகள் முதல் மந்திரிகள் வரை கோழிப்பண்ணை பள்ளிகளை வளர்ப்பது ஏன் ? அப்புறம் அரசுப் பள்ளிகளை மூடுவது தவிர வேறு என்ன செய்ய முடியும் ?

ஆசிரியர் போராட்டம் விமர்சிக்கப்படும் அதே அளவு மக்களின் கல்வி சுரண்டல் , இலவசக் கல்விக்கு எதிரான வியாபாரப் போக்கு இதுவும் கேள்விகளுக்கு உள்ளாக்கப் பட வேண்டும் .

ஆசிரியரே இல்லாத வகுப்பறைகளில் தனது குழந்தைகளை எந்தப் பெற்றோரும் சேர்க்க  விரும்புவார்களா ?

அப்படி ஒரு சூழலை இந்த அரசாங்கம்  அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தி வைத்துள்ளது.

இருக்கும் 2 ஆசிரியர்களுக்கும்  1008 வேலைகளைக் (பதிவேடுகள் தயாரிப்பு , அவசர மீட்டிங் , தபால் - பதில் , சர்வே இப்படி ) கொடுத்து விட்டு , அவர்கள் அரசு அதிகாரிகளுக்கு பயந்து கற்பித்தவை கடைசி option ஆக வைத்தால் எந்தப் பள்ளிகள் சுகிக்கும் ?

இதில் முப்பருவக் கல்வி முறை வந்த பிறகு .... கற்பித்தலே சுத்தமாக நின்று செயல்பாடுகள் எனக் கூறி மாணவர்களை முற்றிலும் புரிதலற்ற நிலைக்கு வழி வகுக்கும் வகுப்பறைகளை உருவாக்க ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் அரசு ....

இப்படி உள் இருக்கும் பிரச்சனைகளை மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

இன்னும் நிறைய பிரச்சனைகள் உண்டு

Friday, 18 January 2019

வகுப்பறை உளவியல் 16

வகுப்பறை உளவியல் - 16
------------------------------------------
தாய் மொழிவழிக் கல்வி

வகுப்பறை உளவியல் என்பது மட்டுமே என் கண் எதிரில் விளைவுகளைக் கொண்டு வரும் செயல்பாடாகக் காண்பதால் என் குழந்தைகளுடனான உரையாடல்களைப் பதிவு செய்ய விருப்பமாக உடன்படுகிறேன்.

இது பரந்த வெளியில் பறக்கும் பறவையின் சுதந்திரம் போன்றது. நீர் நிறைந்த குளங்களில் குதூகலிக்கும் தவளைகளின் சத்தங்களுக்கு ஒப்பானது. நிபந்தனையற்ற அன்பு பாராட்டும் சூழல் ... ஆகவே ....

அது 6 A2 வகுப்பு , இரண்டாம் பருவம் தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு சில உரையாடல்கள்.

நீங்கள் எல்லாம் ரொம்ப முயற்சி செய்து தான் இந்தளவுக்கு மார்க் வாங்கி இருக்கிங்க , ஒரு சிலரிடம் போன டெர்ம் விட பெஸ்ட் வந்து இருக்கு, சிலர் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யணும் .

இதில் நிறைய பேரு (15/49 பேர் ) ரொம்ப திறமையானவங்க , ஆனா தமிழ் மீடியத்திலிருந்து இங்லீஷ் மீடியம் மாறியது தான் பிரச்சனை , நல்லா யோசிச்சுப் பாருங்க , உங்களுக்கு  5 வது வரை தமிழ் மீடியம் லதானே படிச்சீங்க , இப்போ இங்கிலீஷ் மீடியம் கஷ்டப்படுவது எனக்குப் புரிகிறது.

சில குழந்தைகளின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் , சிலரது கண்கள் கலங்கியும்  வருத்தமும் என்னையும் கலங்க வைத்தது , அவர்களை எப்படி சமாதானப் படுத்துவது என்று கூடத் தெரியவில்லை.

ஏனென்றால் தழுதழுத்தக் குழந்தைகள் எல்லோரும் முதல் பருவ ஆரம்ப நாட்களில் சிட்டாய்ப் பறந்து வகுப்பையே கலகலப்பாக்கி தங்கள் அதீத திறன்களால் தி பெஸ்ட் என்று மற்ற மாணவிகளால் பாராட்டுப் பெற்றவர்கள்.

நான் அறிவியல் பாடத்தை அப்போது அவர்களுக்கு எடுத்துக் கொண்டு இருந்தேன் , மொழி பற்றி பிரச்சனை இல்லை , பாடங்கள் சார்ந்து வகுப்பறை செயல்பாடுகளை நீங்கள் தமிழில் (அதுதான் அவர்களது தாய் மொழி) பகிரலாம் என்றும் எங்களுக்குள் ஒரு  புரிதல்
ஒப்பந்தம் ,அப்போதெல்லாம்  என்னைப்  பாடம் நடத்தவே விட மாட்டார்கள். நானும் அவர்களுடன் ஒருத்தியாக கற்றுக் கொள்ளும் மாணவியாகவே இருந்து விடுவேன். மாறி மாறி அந்த அறிவியல் பாடப் புத்தகத்தின் பக்கங்களை வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டும் , செயல்பாடுகளின் வழியாகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும்  தயாரிப்பு செய்து தினம் தினம் ஓடி வந்து  பாடம் நடத்தும் குழந்தைகள்   இந்த ஒரு 6 மாத காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக துவண்டு வருவதை  என்னால் உணர முடிந்தது.

தமிழில் 60 மதிப்பெண்களுக்கு 50 க்கு மேல் வாங்கும் குழந்தைகள் சமூக அறிவியல் பாடத்தில் 60க்கு 15 வாங்குவதற்கே சிரமப்படுகின்றனர். மொழிப் பிரச்சனையே தலையாயது , ஏனெனில் அவ்வளவு திறமை வாய்ந்த குழந்தைகள் தாய் மொழி என்றால் சொந்தமாக எழுதும் திறன் வாய்ந்தவர்கள் ,

(இவர்கள் மட்டுமல்ல மொத்த வகுப்புமே  பின்தங்கி உள்ளனர் என்பதும் , எல்லோருக்குமே தாய் மொழி தமிழ் என்பதும் , ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது எல்லாம் அவர்களுக்கும் உடன்பாடு இல்லை என்பதும் உரையாடலில் தெரிய வந்தது மற்றொரு கதை )

படைப்பாற்றலுடன் உள்ளே வந்த குழந்தைகளின் சிறகுகளை நசுக்கி அவர்களது இயல்பான வாழ்க்கை முறையை மடைமாற்றி தேக்க நிலையை அவர்களிடம் உண்டு பண்ணி சோர்வடைய வைத்து உள்ளது கல்வி முறை .

கலங்கிய கண்களை மகிழ்வாக்க என்ன செய்வது ? வீட்டில் பெற்றோருடன் பேசுங்கள் , பிரச்சனையைக் கூறுங்கள் , வரும் வருடங்களில் தமிழ் மீடியம் மாறி சேர்ந்து படியுங்கள் , உங்களுக்கான திறமைகளில் பள்ளி இறுதி வகுப்பு வரும் போது  நீங்கள் பல வெற்றிகளைப் பெற்று பள்ளியில் முதல் இடம் பெறுமளவிற்கு மதிப்பெண்கள் பெற வாய்ப்புகள் உண்டு , நீங்கள் புத்திசாலிக் குழந்தைகள் என்றும் ,

நான் உங்களைப் போல அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் தான் படித்தேன் , இன்று ஆங்கிலத்தில் என்னால் உரையாட , எழுத , பேச என எல்லாமும் முடிகிறது என எனது அனுபவங்களையும் நிறையக் கூறி ,

அடுத்தடுத்த நாட்களில் ,வீட்டில் அம்மா அப்பாவிடம் இது பற்றி பேசினிங்களா ? என்ன சொன்னாங்க ?

மிஸ் ... இங்லீஷ் மீடியமே படிக்கச் சொல்றாங்க மிஸ் , அப்போ தான் காலேஜ் போனா ஈஸியா இருக்குமாம் ... வேல கிடைக்குமாம் ..... வருத்தமுடன் பல குரல்கள் ......

கண் முன்னே கருகும் குழந்தைகளின்  சிந்தனைத் திறன் ... என்ன செய்து மீட்டெடுக்க முடியும் ? தாய் மொழி வழிக் கல்வியை  புரிய வைக்க இயலாத சமூகமாக மாறிப் போன அவலத்தை எப்படி சரி செய்ய முடியும் ???

ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது வேறு , வேற்று மொழியில் கணக்கையும் , சுற்றியுள்ள  அறிவியலையும் , நமது சமூகத்தின் வரலாற்றையும் படிப்பது வேறு என்பது யார் யாருக்குப் புரிய வைப்பது ???

தமிழ் நாட்டுலப் பிறந்து ,
தமிழ் மீடியத்துல படிச்சவங்க தானுங்க எல்லாப் பள்ளிக் கூடத்துலயும் பாடம் சொல்லித் தராங்கன்னு ஏன் யாருக்கும் தெரிய மாட்டேங்குது பொது ஜனங்களே.

எது எப்படியோ என் குழந்தைகள் எனர்ஜி லெவல் எப்படிக் கூட்டி அவர்களை சார்ஜ் குறையாமப் பாத்துக்கணும்னு எனக்குத் தெரியும் ..... அது அடுத்த வகுப்பறை உளவியலில் . .....

தொடரும்
உமா

வகுப்பறை உளவியல் _ 17

வகுப்பறை உளவியல் 17
---------------------------------------

மாணவிகளின் புத்தக விமர்சனம்

நான் ஒரு புத்தகத்த படிச்சு அது பத்தி எழுதற பழக்கம் சில வருஷமா தான் செய்யறேன்.

ஆனால் அதே சில வருடங்களாக குழந்தைகளிடம் புத்தகங்களைப் படிக்கத் தரும் போது அது பற்றி என்ன தோணுதோ அத எழுதச் சொல்லி , வகுப்பில் பகிர்வதும் அல்லது நேரடியாக அந்தப் புத்தகம் பற்றி அவர்களுக்குள் தோன்றுவதைப்  பேச வைப்பதும் என நகரும் தருணங்கள் எப்போதும் உண்டு .

கடந்த நவம்பர் மாதம் பள்ளியில் வகுப்பறை நூலகம் ஆரம்பித்த பிறகு , இது முறைப்படுத்தப்பட்டது. 6 ஆம் வகுப்பு குழந்தைகள் , இதற்காகத் தனியாக  நோட்டு போட்டு, படித்த புத்தகங்கள் பற்றிய அவரது எண்ணங்களை அவர்களது மொழியில் எழுத ஆரம்பித்தனர்.

தினமும் பாடம் நடத்தும் வேளையில் கூட , மிஸ் மிஸ் என சில குரல்கள் வரும் திசையில் நோக்கினால் கையில் நூலக நோட்டு வைத்திருப்பதோடு , படியுங்கள் என்ற தொடர் கொஞ்சல் இருக்கும்.

கடைசி 5 நிமிட நேரத்தில் அதைக் கையில் வாங்கி  அதை நான் படித்து , நல்லா இருக்கா , என்ன பண்ணியிருக்காங்கன்னு அவங்க நோட்டுல எழுதி பாராட்டி (அ) யோசனை சொல்லி , அதை வகுப்பு முழுவதும்  மற்றவங்க கிட்ட சொல்லி , கை தட்டி .. இப்படித்தான் ஒரு அழகியலை தனது எழுத்தில் தந்த சிநேகாவைக் கண்டறிய முடிந்தது.

தும்பி பற்றி கதைக் களம் வாழ்வியலோடு ஒப்பிடும் சாருலதாவைக் கண்டுபிடிக்க முடிந்தது.

ஆங்கிலப் புத்தகத்தைப் படித்து வந்து அதைத் தமிழில் விளக்கும் , ஒவ்வொரு முறையும் அவற்றைக் கரும்பலகையில் மன வரைபடம் போல வரைந்து விளக்கும் கீதாஞ்சலியையும் கண்டு கொள்ள முடிந்தது.

இன்னும் தான் படித்த புத்தகத்தில் உள்ள கதைகளை வைத்து தானே  புதிய கதைகள் எழுதும் அனுப்பிரியா , அதில் வரும் படங்களை அழகாக வரையும் விஷ்ணுப்பிரியா ,

இப்படி வரிசையாக விதவிதமானக் குழந்தைப் படைப்பாளிகளைக் கண்டு பிடிக்கவும்  கொண்டாடவும் இந்த வெளி உதவுகிறது. பாடப் புத்தகங்களைத் தாண்டி  மிகப் பெரிய பரந்த வானம் உள்ளது என்பதை ஒவ்வொரு முறையும் இவர்கள் தான் எனக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இது போன்ற செயல்பாடுகளை இங்குப் பகிர்ந்தது பார்த்து தும்பி -சிவராஜ் குழு , Siva Raj மைவிழிச் செல்வி Myvizhi Selvi
ஆகிய உறவுகள் ஒரு பெட்டி நிறைய புத்தகங்களை குழந்தைகளுக்காக அனுப்ப ,

ஜனவரி 3 அன்றே பரீட்சை பேப்பர் கொடுத்து வாங்கி அடுத்த  நிமிஷமே இந்தப் புத்தகங்களைக் கொடுத்தாச்சு.

வழக்கம் போல படிச்சு எழுதியிருக்காங்க , பார்த்தேன்.  மெர்ஸி நோட்டுல எழுதியிருந்தது .... ஒரு வித்யாசமா இருந்தது விமர்சனம் , ஆமாம் ... அவள் படித்த புத்தகம் The Cow in Our Economy ...

அதை  ஒரு உரையாடலாகவும் மன வரைபடமாகவும்  போட்டு எழுதியிருந்தாள் அந்தக் குழந்தை ...

இப்படியான குழந்தைகளைக் கொண்டாடவோ , அவர்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வது பற்றிய ஒரு எண்ணமோ இல்லாத ஒரு கல்விச் சூழல் தான் இங்கு நிலவுகிறது என்றால் அதுவே உண்மை.

இது போன்ற திறமைகளை  பாடத்துடன் தொடர்பு படுத்தி , கல்வி இணைச் செயல்பாடுகளாக மதிப்பீடு செய்யும் பயிற்சி ஆசிரியர்களால் பழக்கப் படுத்தப்படுவதே இல்லை.

ஏன் அவ்வளவு தூரம் ? கொஞ்சம் கூட இவர்களது திறன் கணக்கில் எடுத்துக் கொள்ள ஒரு வெளி (space) இல்லை ,

எப்போது இவை எல்லாம் ஒரு புள்ளியில் இயங்க ஆரம்பிக்கின்றதோ அப்போதுதான் உண்மையான கல்வி மலரும்.

மெர்ஸியின் விமர்சனத்தை இங்கு படமாகத் தருகிறேன் , நீங்களும் படித்துப் பாருங்கள்.

எங்கள் உலகம் மிக அழகான பரந்த வானம் , அங்கே சிறகுகளுடன் பறக்கும் பறவைகளாக எங்கள் குழந்தைகள் 🦅🦅❤️

உளவியல் தொடரும்
உமா

Friday, 11 January 2019

வகுப்பறை உளவியல் 15

வகுப்பறை உளவியல் : 15

நாம் தைரியமாக எதிர்க்க வேண்டும் கொடுமைகளை - 9 ஆம் வகுப்பு மாணவி ஆவேசம் .

கணக்கு வகுப்புகளுக்கு ஊடே புரட்சி வகுப்புகளும் அறிமுகம் செய்ய தேவை ஏற்பட்டு இருக்கு இந்நாட்களில் ..

குழந்தைகள் கணக்கு வகுப்புகளைக் கடினமாக இருப்பதாக உணர்ந்தாலும் எளிமைப் படுத்தும் முயற்சியில் பல ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டிய சூழல் நமது பொறுப்பு .

அது 9 ஆம் வகுப்பு , கணக்குடன் கதைப் புத்தகங்களையும் அறிமுகம் செய்யும் வழக்கம் எங்களிடையே உண்டு. எல்லாம் பேசுவோம் , கதை , கவிதை , சினிமா , பொருளாதாரம் , சமூகம் இப்படி அனைத்தும் எங்கள் உரையாடலில் இடம் பிடிக்கும் ,

ஒரு நாள் பெண்களுக்கான பிரச்சனைகளைப் பற்றி பேசப் பேச ஒரு குழந்தை கண்கள் பனித்தன, அயர்ந்து போகாதே நீ மட்டும் தனியாள் இல்லை , உன்னைப் போல சங்கடங்களை எதிர்கொள்ளும் பெண் குழந்தைகளும் அம்மாக்களும் நிறைந்த சமூகம் தான் இது என்று தைரியப்படுத்திய அதே நேரம் பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் புத்தகத்தைத் தந்து படிக்கக் கூறினேன் , இது நடந்தது 2 மாதங்கள் முன்பு ...

3 நாட்கள் முன்பு, பயிற்சிக் கணக்குகள் போடும் போதே ..புத்தகம் எங்கேம் மா? என்றேன்.  படிச்சிங்களா ? என்றேன். இதோ என்னுடனேயே வைத்துள்ளேன் , படிச்சேன் மிஸ்  என்றார்.. அது பற்றி கொஞ்சம் பேசுங்களேன் என்றேனே பார்க்கலாம் .

புத்தகம் மிகவும் என்னை பாதித்தது , நன்றாக இருந்தது என ஆரம்பித்த அவரது பேச்சில் ஆவேசம் கூடியது..

எங்கப்பா குடிச்சுட்டு எல்லாவற்றுக்கும்  அடிப்பார்  மிஸ் , எங்க வீட்ல என் தம்பிய ஒரு மாதிரியும் , என்னை ஒரு மாதிரியும் நடத்துவாங்க , எல்லா வேலையும் நான் தான் செய்யனும் , தண்ணீர் வெளியே போய் நான் தான் எடுக்கணும் , எப்போதும் இதல்லாம் கஷ்டமாகவும்  வெறுப்பாகவும்  இருக்கும். அம்மாவையும் திட்டி அடிப்பார். அடிமைகள் மாதிரி தான் வாழ்ந்தோம்.

இந்த புத்தகம் நீங்க குடுத்த உடன் இதப் படிச்சு படிச்சு , ஒரு நாள் எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சேன். எங்கப்பா கையை ஓங்கியவர் அதை அப்படியே நிறுத்திவிட்டு உள்ளே போய்ட்டார் , எங்கம்மா கிட்ட இந்த புத்தகத்தைக் காட்டி இதில் எல்லாம் எப்படி எழுதியிருக்கு பாரு மா , இதெல்லாம் தெரியாமலேயே இப்படி அப்பா சொல்வதெல்லாம்  கேட்டு அடிமையா இருக்கியே என்றேன். அதற்கு அம்மா இதல்லாம் புத்தகத்துல தான் மா வரும். நம்ம வாழ்க்கையில் நடக்காது என்று சொன்னாங்க மிஸ்.

நான் சொன்னேன், நீ வேணா அவருக்கு அடிமையா இரு , நான் ஒன்னும் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன் , இப்போ எல்லாம் அவருடைய வேலைய நான் செய்வதில்லை. நான் படுத்த பாய் மட்டும்  தான் எடுத்து வைக்கறேன். அவருடைய பாய் தல காணி அவரே தான் எடுத்து வைக்கிறார். காபி போட்டு வச்சா அவரே தான் எடுத்துக்கணும் , நான் எடுத்துத் தருவதில்லை .

இப்போதெல்லாம் அடிப்பதில்லையா? என்றேன் , அது மட்டும் அப்பப்போ செய்யறார். முறைப்பேன் , இந்த புத்தகத்தை மூஞ்சி மேல காமிப்பேன் , ஏற்கனவே காட்டியதுக்கு கோபம் வந்து ஒன்னும் செய்ய முடியாமல் போய்ட்டார் ,

என் தம்பிக்கு செல்லம் கொடுத்து , தப்பு செய்ய வழிகாட்டிட்டார்னு தோணுது அவன் 7 வது படிக்கிறான் மிஸ் , அவனுக்கு வேலையே தராம என்னை மட்டும் விரட்டுறாங்க , எதிர்த்து ஏன் இப்படி செய்யறீங்க ன்னு கேட்டா திமிரு என்று பேசுகிறார்கள் மிஸ் .... என்றார்.

என்ன மா ?யார் யார் வீட்டில் இந்த மாதிரியான பிரச்சனை இருக்கோ அங்கு நீங்களும் வீட்டில் கேளுங்கள் என்ற என்னிடம் , மாணவிகள் ... எப்படி மிஸ் கேட்பது ? எங்கப்பா  எப்பப் பாரு வேலைல இருக்கற டென்ஷனை வீட்ல எங்கிட்ட காமிக்கறார், பட்டையா அடிக்கறார் என்றார் ஒரு மாணவி .

அதற்கு மாணவியின் பதில் பெரும் குரலாக வருகிறது. நாம் நம் மீது தப்பில்லாத போது எதிர்த்துக் குரல் தரணும் , இல்லாட்டி நம்மள அடிமையா நடத்துவாங்க. அவங்களப் பொறுத்தவரை வீட்டுக்கு வரணும் , சாப்பிடணும் , ஜாலியா இருக்கணும் , வீட்ல பெண்கள் வேலைக்கும் போய் சம்பாதித்து தந்து , இவர்களுக்கு பணிவிடையும் செய்து , அடிமை மாதிரி இருக்கணும் என்று நினைக்கின்றனர். இதற்கு நாம உதவக் கூடாது என்று முகத்தில் வீர உணர்வுடன் தனது சக வகுப்பு மாணவியரிடம் பகிர்கிறார். எனக்கு உடலே சிலிர்த்தது.

எப்படி இந்தக் குழந்தைக்கு இவ்வளவு தைரியம் வந்துள்ளது என்று மகிழ்ந்தேன். பிரச்சனைகளை  வெளியே  கொண்டு செல்கிறோம் என்று தெரிந்தால் ஆண்கள் தவறு செய்வதை விட்டு விடுவார்கள் , ஆகவே நியாயமான பிரச்சனைகள் உங்கள் குடும்பத்தில் இருப்பின் அப்பாவிற்கு பேசிப் புரிய வையுங்கள் என்றேன். உங்கள் மீது தவறு எனில் மாற்றிக் கொள்ளுங்கள்  , பெண் குழந்தைகளை அடிக்கும் அப்பாவை  எதிர்த்து கேள்வி கேளுங்க , அதற்கு அவர்கள்  கேட்கவில்லை என்றால் அடித்தால் கையை உயர்த்துங்கள் திரும்ப ... என்றும் கூற வேண்டியதாயிற்று.

இதன் பின்னணியில் நிறைய பெண்களின் வாழ்க்கை சோகங்கள் அடங்கியிருக்கிறது என்பது தான் உண்மை.

அதோடு அப்புத்தகத்தை அம் மாணவிக்கே பரிசாகத் தந்து விட்டேன் , அவள் பின்னாளில் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் வலிமை மிக்க பெண்ணாக வருவாள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

உளவியல் தொடரும்
உமா