இன்றைய சூழலில் கல்வி - 1
இந்தியாவின் இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான துயரத்தின் ஒற்றை அடிப்படையாகக் கல்வியின்மை இருக்கிறது - தாகூர்
அவரது கூற்று 150 வருடங்கள் கடந்து இன்றும் இந்தியாவைப் பல வழிகளில் அழுத்திக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.
சமூக முன்னேற்றம் என்பது கல்வியை அடிப்படையாகக் கொண்டே நிகழும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஒரு மனிதன் இந்த சமூகத்தில் தனக்கான எல்லாவித சுதந்திரத்தையும் புரிந்து கொள்ள உதவுவது கல்வி தான். மடை திறந்த அறிவை வழங்குவதும் கூட கல்வியின் அடுத்தடுத்த விரி சிந்தனைகளே எனலாம். இத்தகைய அறிவின் வாயிலை அடைய அறியாமை என்ற சிறைக்கதவைத் தகர்ப்பதாக நமது கைகளில் தரப்படும் பலமான ஆயுதம் ஒன்று உண்டெனில் அது பள்ளிக் கல்வி தான்.
இன்றைய நாளில் பள்ளிக் கல்வியை ஆய்வு செய்தோமானால் நாடு முழுவதிலும் கல்வி குறித்தான , பல பிரச்சனைகளை நம்மால் தொகுக்க முடியும் . தமிழகப் பள்ளிக் கல்விக்கும் இவை அனைத்தும் பொருந்தும்.
இப்படியான பள்ளிக் கல்வியின் ஒரு முக்கிய தவிர்க்க முடியாத இடமாக, நம் அனைவராலும் பார்க்கப்படுவது பத்தாம் வகுப்பு . இதற்கான பொதுத் தேர்வு ரத்து என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, வரும் நாட்களின் கல்வி குறித்தும் நம்மை சிந்திக்க வைக்கிறது.
பொதுத் தேர்வு ரத்து ... அடுத்து செய்ய வேண்டியது என்ன ?
தமிழகம் வேறெப்போதும் இல்லாத பேரிடர் காலத்தின் ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.
தொற்று பரவி வரும் இச்சமயத்தில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் குழந்தைகளின் உயிரைக் கருத்தில் கொண்டு , பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது அரசு. மாணவர் நலன் சார்ந்து எடுத்துள்ள அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் அனைவரும் வரவேற்கிறோம். அதே சமயத்தில் கல்வி முறையின் அடுத்த நகர்வு குறித்தும் பரிசீலிக்க வேண்டும் . தேர்வுக்கான மாற்று ஒன்றை நாம் கண்டறியத் தேவை எழுந்துள்ளது. நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் மதிப்பெண் சார்ந்த தேர்வு முறையை மாற்றும் காலகட்டமாக இந்தக் கொரோனா துயரக் காலம் பாடம் கற்றுக் கொடுக்கிறது.
மதிப்பீட்டின் இடைவெளி
தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடுவதும் அதன் அடிப்படையில் பள்ளிகளைக் கணிப்பதும் , பள்ளிக் கல்வியைச் சீரமைக்கும் போது சந்திக்கின்ற களப் பிரச்சனைகளில் முக்கியமானவை .தற்போது பள்ளிக்கல்வித் துறையில் நடைமுறையில் இருக்கும் மதிப்பீட்டு முறை குறித்து பார்ப்போம்.
கல்வி உரிமைச் சட்டத்தின் (2010) படி ஒரு குழந்தை ஒரு வகுப்பில் என்ன கற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல் , மேல் வகுப்பிற்குத் தன்னிச்சையாக (automatic) செல்லலாம். அதோடு இச்சட்டம் 8 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வைத் தடை செய்கிறது. ஆனால் பள்ளித் தேர்வுகளைத் (வாரியத் தேர்வுகளுக்கு மாற்றாக )
தடை செய்யவுமில்லை , அவற்றை ஊக்கப்படுத்தவுமில்லை .மாறாக ஒரு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டைப் (Continuous and Comprehensive Evaluation)
பின்பற்ற வழி காட்டுகிறது.
ஆனால் இம்முறையின் விவரங்களில் தெளிவு இல்லை. மதிப்பீட்டிற்கான இப்புதிய அணுகுமுறை நடைமுறையில் மதிப்பீடே இல்லாமல் போகிறது என சில மாநிலங்களில் கருத்துகள் உள்ளன . இவற்றில் உள்ள குறைகளைக் களைந்து இந்த முறையை அறிவியல் பூர்வமாக அணுகும் முறைகளைக் கண்டறிய வேண்டியத் தேவை மிக அவசரமாக நமக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் தேர்வு முறை பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பதும் உண்மை. பல நேரங்களில் தேர்வுகள் என்பவை குழந்தைகள் மீதான அதிகப்படியான அழுத்தத்தைத் தருவதுடன் , மனப்பாடமுறையை வலுவாக்குகிறது. ஆனால் தேர்வுகளை முற்றிலும் அகற்றிவிடுதல் என்பதும் ஏற்புடையதாக இருக்காது. ஆகவே தேர்வுக்கான மாற்றை உருவாக்கும் தேவையுடன் இந்த மதிப்பீட்டு முறையை சீரமைப்பதும் இன்றியமையாததாகப் பார்க்கலாம்.
மாணவர்களின் அடைவு குறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் உடனடியாகத் தெரிய வேண்டியது தேவை தான். ஆனால் அதே சமயம் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கூட அவை அவசியமானவை .ஆனால் பள்ளிகளின் நடைமுறை மதிப்பீட்டு முறைகளோ தேர்வு முறைகளோ பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. பள்ளிக் கல்வி முறையின் பொறுப்புணர்வின்மையை இதற்கானக் காரணமாகக் குறிப்பிடலாம். ஏனெனில் தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் என்ன படித்திருக்கிறார்கள் , என்ன படிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய புரிதலோ பெற்றோர்களுக்கு இல்லாமல் இருப்பதும் இந்த மதிப்பீட்டு முறைகளின் விமர்சனங்களாக உள்ளன . மதிப்பீட்டு இடைவெளி தான் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே தேர்வுக்கு மாற்று முறைகளை வடிவமைக்கும் தேர்வு சீர்திருத்தம் தேவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்
தேர்வுக்கு மாற்று முறை
கடந்த 8 ஆண்டுகளாக நமது பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை வலுவாக்கப்பட வேண்டும். திறன்கள் அடிப்படையில் மாணவரை மதிப்பீடு செய்யும் நடைமுறையான இந்த CCE முறை தான் மதிப்பெண்கள் சார்ந்த தேர்வுகளுக்கான சிறந்த மாற்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த CCE எனப்படும் (Continuous and Comprehensive Evaluation) தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை
ஏற்கனவே 9ஆம் வகுப்பு வரை நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. இதே முறையை
10 ஆம் வகுப்பிற்கும் இனி வரும் காலங்களில் நீட்டிக்கலாம் . அப்படிச் செய்தால் பொதுத் தேர்வு என்ற இறுக்க மனநிலையை உடைத்து மாணவர்களின் சுதந்திரமான மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி வகுக்கும் .
அதே போல தேர்வுகளின் உள்ளடக்கம் மற்றும் இயல்பு குறித்த ஆழ்ந்த சிந்தனை ஆசிரியர்களுக்கும் துறை சார்ந்த வல்லுநர்களுக்கும் தேவைப்படுகிறது. உதாரணமாக குழந்தைகளின் மனப்பாடம் செய்வதல்லாத பிற திறன்களையும் மதிப்பிடும் வகையில் தரமான தேர்வுகளை வடிவமைப்பது சாத்தியம் .அவ்வாறே மனப்பாடத்திலிருந்து திறன் அல்லது புரிந்து கொள்வதை நோக்கித் தேர்வுகளின் கவனத்தைத் திருப்புவதற்கு திறந்த புத்தக (Open Book) தேர்வுகள் உதவும்.
உடனடித் தேவை
மேற்கூறிய மதிப்பீட்டு முறைகளும் தேர்வுக்கு மாற்று என்ற கருத்தும் சார்ந்த சீர்திருத்தங்கள் ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனால் பள்ளி திறக்கும் நாட்கள் நம் கண்களுக்குத் தெரியவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட ஆக வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு வீடுகள் அவ்வளவு மகிழ்ச்சியைத் தராது என்பது கண்கூடு , ஏனெனில் இது ஒரு அசாதாரண காலம் . விடுமுறை தினங்களில் மட்டும் வீடுகளில் இருந்து பழகிய குழந்தைகள் மாதக் கணக்கில் வீட்டுக்குள் முடங்குவதை உளவியல் அழுத்தம் என்ற வார்த்தைகளால் கடந்து போக முடியாது.
பள்ளிகள் சில , குறிப்பாக தனியார் பள்ளிகள்
இணையவழிக் கல்வியைக் (Online Teaching) கையிலெடுத்துள்ளன. ஆனால் அது
குழந்தைகளுக்கு எவ்விதத்திலும் வகுப்பறைக் கற்றலைப் போன்று நிறைவு செய்யாது என்பது யதார்த்தம் .
நோய்த் தொற்று பரவலாக இருக்கும் பகுதிகளைத் தவிர்த்து அதிகப் பரவல் இல்லாத மாவட்டங்களில் அங்குள்ள கிராமங்களில் தகுந்த பாதுகாப்புகளுடன் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து ஆசிரியர்கள் உளவியல் சார்ந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம்.
பள்ளி திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள ஊர்களில் உள்ள பள்ளிகளில் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களை வரவழைத்து பகுதி பகுதியாக முறை வைத்து ( Alternative days - Shift) மாணவரை வரவழைத்து அதே போல ஆசிரியர்களையும் வரவழைத்து உரையாடல்கள் மேற்கொள்ளலாம்.
தேவைப்படின் எளிய வகைப் பாடங்களை மாணவர் மனநிலைக்கேற்ப அறிமுகப்படுத்தலாம் .
எல்லாவற்றையும் விட மதிய சத்துணவை நம்பி அரசுப் பள்ளிக்கு வரும் லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கின்றனர் .அவர்களுக்கான அத்தனை நிதி ஒதுக்கீடுகளும் இருக்கும். பள்ளி சமையவறையில் உணவு சமைத்து மாணவருக்கு வழங்கி வந்த நடைமுறையைத் தொடர வேண்டியது பள்ளிகளின் உடனடிக் கடமைகளுள் ஒன்று.
இன்றைய சூழலில் பள்ளி கிடையாது , குழந்தைகளுக்கு வீடு மட்டும் போதாது , ஜான் ஹோல்ட் அழுத்தமாய் வலியுறுத்திய ‘குழந்தைகளுக்கான மூன்றாம் இடம்’ (Third place) நினைவுக்கு வருகிறது. வீடும் பள்ளியும் போக குழந்தைகளுக்கான மூன்றாம் இடம்! என்கிறார் பேரா ச .மாடசாமி, இதயங்களை மலர வைக்கும் மூன்றாம் இடம். சக்கையாய்ப் பிழிந்து இதுதான் என்று இலக்கணம் வகுத்து வடிவமைக்கப்படாத மூன்றாம் இடம். புதுப் புது வடிவங்களில், புதுப் புதுக் கற்பனைகளுக்கு இடங்கொடுத்து மலரும் மூன்றாம் இடம்! இன்றைய தேவை என்கிறார்
இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தொடர்ந்து உரையாடுவோம்
இன்றைய சூழலில் கல்வி - 2
ஆசிரியர்களே தேவையில்லை என்கிறார் ரூசோ ,பள்ளிக் கூடமே அவசியமில்லை என்கிறார் ஜான்ஹோல்ட் .
நோய்த் தொற்றின் அச்சுறுத்தலும் ஊரடங்கும்
இவர்கள் கூற்றை உண்மையாக்கியிருப்பது யதார்த்தம் .
குழந்தைகளுக்கான மூன்றாவது இடத்தை சிந்திப்பது குறித்து சென்ற இதழில் பேசினோம். ஆனால் இன்று வேறொரு பிரச்சனை நம்மை திசை திருப்பியுள்ளது.
ஆம் ,நமது கல்வி முறையில்
பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்புகளாக அமைந்துள்ள 11 , 12 ஆம் வகுப்புகளின் சேர்க்கையில் இந்தக் கல்வியாண்டு முதல் கொண்டு வந்துள்ள மாற்றம் தான் அந்தப் பிரச்சனை .
மேல்நிலைக் கல்விப் பிரிவுகள் குழப்பத்திற்கு வழி வகுக்கின்றனவா ?
தற்போதைய மேல்நிலைக் கல்விப் பாட அமைப்புகள் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இவை உயர் கல்வி வாய்ப்புகளில் சிக்கல்களை விளைவிக்கும் வகையில் உள்ளன .
கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில் நம் தமிழகப் பள்ளிக் கல்வியில்
1977- 1978 கல்வியாண்டு முதல்
10+2 என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல்நிலைக் கல்வியில் பகுதி 1 மற்றும் 2 இல் மொழிப் பாடங்கள் தரப்பட்டிருக்கும் .இது தவிர பகுதி - 3 இல் சிறப்புப் பாடங்களாகக் கணிதம் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , விலங்கியல் , தாவரவியல் , கணக்குப் பதிவியல் , விவசாயம் ,மனையியல் , பொருளியல் , வணிகவியல் , அரசியல் அறிவியல் , வரலாறு , புவியியல்
இப்படி ஏறத்தாழ 30 பாடங்கள் உருவாக்கப்பட்டன. பகுதி 3 இல்
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நான்கு பாடங்களை மாணவர் படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுடன் சேர்த்து அவர்கள் படிக்க வேண்டியது மொத்தம் 6 பாடங்கள் , 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் .
இதை அடிப்படையாகக் கொண்டே கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர் பெறும் நடைமுறை இருந்து வருகிறது.
தமிழகத்தின் இந்த மேல்நிலைக் கல்வி முறை இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மையுடன் திகழ்ந்து வருவதாகவும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஏனெனில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தப் பாடப் பிரிவுகள் உயர்கல்வியில் வழங்கி வந்தன.
புதிய அரசாணை 166
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு புதியதாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசானை 166 - பள்ளிக் கல்வித் துறை 18.09.2019 , இன் படி பகுதி 3 - இல் புதியதாக ஒரு முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஏற்கனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஃபர்ஸ்ட் குரூப், செகன்ட் குரூப் என்ற வகையில் நான்கு பாடங்களைப் படிக்கும் மாணவன் இந்தப் புதிய அரசாணையின் படி மூன்று பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. மாணவர் மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டும் , உயர் கல்வி வேலை வாய்ப்பு இவற்றை அதிகமாக்கும் வகையிலும் இந்தப் புதிய முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர் விருப்பப் பட்டால் மூன்று பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது பழைய முறையான நான்கு பாடங்களுக்கான முறையையும் தேர்வு செய்து கொள்ளலாம்
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை நடப்புக் கல்வியாண்டிலிருந்து பின்பற்ற வழிகாட்டப்பட்டுள்ளது. இதன்படி மாணவன் 3 பாடங்களைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டிய மொத்தப் பாடங்கள் 5 மட்டுமே. இதில் 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும் . அல்லது மாணவன் 4 பாட முறையைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டியது 6 பாடங்கள் , மொத்த மதிப்பெண்கள் 600.
உண்மையில் என்ன நடக்கிறது
இந்தக் கல்வி ஆண்டில் கோவிட் - 19 பொது முடக்கத்தால் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்தாகி விட்டது என்பதை நாம் அறிவோம்.
தேர்ச்சி முடிவுகள் அரசின் வழிகாட்டலால் கிரேடு முறையில் தரப்படும் என்பதை விரைவில் எதிர் பார்க்கலாம். தனியார் பள்ளிகள் + 1 சேர்க்கையை தங்கள் வழியில் ஆரம்பித்து விட்டன. அரசுப் பள்ளிகளில் அரசின் முறையான வழிகாட்டலுக்காக தலைமை ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து விபரம் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு இந்தப் புதிய முறை குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர்களிடம் பேசும் போது புதிய 5 பாட முறைகளைக் குறித்தே விளக்கி வருவதாகவும் , அதை அடிப்படையாகக் கொண்டு தான் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாகக் கூறுகின்றனர். அதற்கு நியாயமான காரணங்களையும் முன் வைக்கின்றனர். அருகாமைப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் 5 பாடங்கள் இருந்து மற்றொரு பள்ளியில் 6 பாடங்கள் இருந்தால் குறைவாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் 5 பாடமுறை உள்ள பள்ளிக்கே செல்கின்றனர். ஆகவே மாணவர் சேர்க்கைக் குறைவதால் நாங்களும் 5 பாடங்களைக் கொண்ட பாடப் பிரிவையே அறிமுகப்படுத்துகிறோம் என்கின்றனர்.
அதே போல 6 பாடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருந்தாலும் குறைந்த அளவில் மட்டுமே மாணவர் இருந்தால் அந்தப் பாடப் பிரிவை நடத்த பள்ளிகளால் இயலாது , கண் முன்னாலே காலாவதியாகும் பாடப்பிரிவுகளும் பள்ளிகளும் .
ஒரு பாடத்தைக் குறைப்பது உயர்கல்வி வாய்ப்புகளுக்கான பல வழிகளை அடைக்கும்
நான்கு பாடங்களை உள்ளடக்கிய முறையில் உதாரணமாக
கணக்கு , இயற்பியல் ,வேதியியல் , உயிரியல் எனப் படிக்கும் போது ஒரு மாணவனுக்கு பொறியியல் , மருத்துவம் , விவசாயம் , உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வியல் வாய்ப்புகள் கிடைக்கும் . ஆனால் தற்போது உயிரியல் பாடத்தை நீக்கி அது மூன்று பாடமாகக் குறையும் போது பொறியியல் துறை மட்டுமே படிக்க இயலும். வேறு மருத்துவம் சார்ந்த உயிரியல் பாடப் பிரிவை சார்ந்த நிறைய வழிகளை அடைத்து ஒரு வழிப் பாதையாக மாற்றும் போது அங்கும் மாணவன் தன் வாய்ப்புகளை இழக்கிறான் .
அதே போல இயற்பியல் , வேதியல் , உயிரியல் மட்டும் உள்ள பாடப் பிரிவை புதியதாக அறிமுகம் செய்துள்ளது. இதில் கணக்குப் பாடமே இல்லாமல் ஒரு மாணவன் இயற்பியல் , வேதியியல் பாடங்களில் இடம்பெறும் கணக்குகளைத் தீர்ப்பது சவாலான ஒன்று.
நீட் தேர்வு எழுதும் மாணவருக்காகவே இந்தப் பாடப் பிரிவு என்பது போல தோன்றுகிறது. நீட் தேர்வில் சிபிஎஸ்ஸி பாடத்திட்டத்தில் தான் வினாக்கள் இடம்பெறும். அப்படி வினாக்கள் அமையும் போது அதில் இடம் பெறும் இயற்பியல் , வேதியியல் வினாக்களைத் தீர்ப்பது என்பது ,ஒரு அரசுப் பள்ளிப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே அடிப்படைக் கணக்குகள் படித்த மாணவனுக்கு
இயலாத காரியம் .
அதே போல அறிவியல் பாடப்பிரிவில் (science Group) மட்டுமே கணினி அறிவியலை தற்போதுள்ள பாட முறை தருகிறது . இவர்கள் மட்டுமே கணினி சார் கல்லூரிப் படிப்புக்கு செல்ல முடியும். கலைப்பிரிவு (ஆர்ட்ஸ் குரூப் ) மாணவர்களுக்கு கணினி பாடம் தற்போது இல்லை. எனில் ஆர்ட்ஸ் குரூப் தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி சார்ந்த உயர் கல்வியைக் கல்லூரிகளில் பெற முடியாது. அதே போல கணிணியும் இயற்பியல் வேதியல் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் பொறியியல் , கணினி துறைகள் மட்டுமே வாய்ப்பு உண்டு. கணக்கே இல்லாமல் இவர்கள் மேல்நிலைக் கல்வி முடிப்பர்.
இவ்வாறு பல குழப்பங்களை இப்புதிய அரசாணை விளைவிப்பதோடு உயர்கல்வியில் மாணவர்களுக்கான எல்லா வழிகளையும் அடைப்பதற்கான ஆபத்துகளைத் தருகிறது.
இது மட்டுமா ? இன்னும் விளைவுகள்
நமது மாணவர்களை , கணக்கும் அறிவியலும் என இரண்டும் படிப்பதை நிறுத்தி நீ ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய் என அரசாணை அவர்களது விருப்பத்தைத் தடை செய்கிறது. கணக்குப் பாடமே இல்லாமல் உயர்கல்விக்கு ஒரு அறிவியல் பாடப் பிரிவைப் பயின்ற மாணவன அனுப்பும் முறை மாணவர்களிடம் தேக்கத்தையும் அச்சத்தையும் தான் உண்டு பண்ணும்.
இரண்டு வகையான முறைகளையும் தானே தருகிறோம் என்று ஒரு பதில் அரசு சொல்லலாம். ஆனால் இதே போலத்தான் தமிழ் வழி , ஆங்கில வழி எனக் கொண்டு வந்து விருப்பம் போல பாட வழிகளைத் தேர்வு செய்யலாம் என்ற நடைமுறை , இன்று தாய் மொழி வழிக் கல்வியை இல்லாமல் செய்து விட்டதை இங்கு பொருத்திப் பார்க்கலாம் .
அதோடு 15 வயது மாணவன் கணக்கை மட்டும் தேர்வு செய்து உயர் கல்வி செல்லும் போது புரிதல் வந்த பிறகு அறிவியலும் படிக்கலாம் என விருப்பப்படும் போது இது உதவாது. பழைய முறையில் +2 படித்து பாலிடெக்னிக் செல்ல விரும்பும் மாணவர் லேட்டரல் என்ட்ரியில் 2 ஆம் வருடம் சேர்வர். புதிய முறையில் இதுவும் கூட தடைபடும் .
மூன்று பாடங்களை மட்டும் தேர்வு செய்யும் மாணவர் இழக்கும் உயர் கல்வி வாய்ப்புகளை வேறு மாநில மாணவர் எட்டிப் பிடிப்பர். இங்கு இந்த முறையில் படிக்கும் மாணவர்கள் வெளி மாநிலக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கூட வாய்ப்புகள் அற்றுப் போகலாம்.
தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை ஒன்று நீட் கோச்சிங் அல்லது ஜேஈஈ, ஐஐடி என குழந்தைகளை ஒற்றையடிப் பாதைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடும் வழி இது. கோச்சிங் சென்டர் நடத்துபவர்களுடன் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் , பிரின்ஸ் பால் ஒப்பந்தம் செய்து கொண்டு மாணவர்களிடம் பணம் பறிக்கும் கொள்ளைக்கும் இது எதிர்காலத்தில் வழி வகுக்கும்.
மூன்று பாடம் வரும் போது ஆசிரியர் பணி இடங்கள் குறைக்கப்படும். அறிவியல் பிரிவில் தாவரவியல் , விலங்கியல் பிரிவுகளுக்கான ஆசிரியர்களில் யாரேனும் ஒருவர் இருந்தால் போதும் என ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்படும். கணினி பாடப்பிரிவுகள் குறைவதால் கணினி ஆசிரியர்கள்
எண்ணிக்கை குறைப்பதோடு ,நியமனமே எதிர்காலத்தில் இருக்க வாய்ப்புகளில்லை என்ற நிலை உருவாகும். .
இது மறைமுகமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் நிலைக்கு வழிகோலும் .
இவ்வாறு மக்கள் மத்தியில் குழப்பங்களை விதைப்பதோடு எதிர்கால சமுதாயத்தின் உயர்கல்வியை கேள்விக்குள்ளாக்கும் ஆபத்தை இந்த அரசாணை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. பன்முக வழிகளை அடைக்கும் இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. எப்போதும் போல 600 மதிப்பெண் பாட முறை தான் மாணவரது உயர் கல்வி , வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் .
என்ன செய்யலாம்
வாழ்வியல் சார்ந்த சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆய்வுக் கூடங்களாகப் பள்ளிகள் மாற்றம் பெற வேண்டும். மேல்நிலைக் கல்வியில் பயிலும் பாடப் பிரிவுகள் சம வாய்ப்பு முறையில் பரவலாக்கப்பட வேண்டும் .வாழ்க்கையோடு தொடர்புடைய மண் சார்ந்த பாடங்களைத் தொழிற்கல்விப் பிரிவுகளில் அறிமுகப்படுத்தலாம்.
தமிழகத்தின் எல்லா ஊர்களின் மேல்நிலைப் பள்ளிகளிலும் விவசாயம் , தொழிற்கல்வி , அறிவியல் , கணக்கு , அரசியல் அறிவியல், நெசவு, வரலாறு , புவியியல் , இலக்கியம் , இசை , உளவியல் இப்படி ஏராளமான துறைகளை உருவாக்கிட வேண்டும். விரும்பும் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யும் உரிமை எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்க இது உதவும். இவ்வாறான கல்வி சீரமைப்பு காலமாக இந்தக் கொரோனா காலம் மாற்றம் பெறுவதே சிறப்பு .
உமா
இன்றைய சூழலில் கல்வி - 3
ஆன்லைன் கல்வியும் ஆஃப் லைன் கல்வியும்
ஜூலை மாதம் முடியப் போகிறது. வழக்கமான கல்வியாண்டு என்றால் பள்ளிகள் இயங்கி பாடநூல்கள் வழங்கப்பட்டு கற்றல் - கற்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் பள்ளிகள் திறக்கப் படாமல் போனதால் , அதற்கு மாற்றாக ஆன் லைன் வகுப்புகளை கையிலெடுத்தன தனியார் பள்ளிகள் .
கடந்த ஏப்ரல் , மே மாதங்களிலேயே NEET வகுப்புகளுக்காகவும் , 12 ஆம் வகுப்புகளுக்காகவும் ஆன் லைன் வகுப்புகளை துவக்கி மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் மன அழுத்தத்தை உருவாக்க ஆரம்பித்தன தனியார் பள்ளிகள் .
தற்போது முதல் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பள்ளி நடைமுறை போலவே காலை முதல் மாலை வரை ஆன் லைன் வகுப்புகள் ஊரெங்கிலும் பிரபலமாகி வருவது ஒரு புறம்.
கல்வி என்பதை ஒரு டிவைஸ் வழியே தர முடியுமா ? ஆசிரியர் - மாணவர் நேரடிக் கற்பித்தல் இல்லை என்றால் கற்றல் நடைபெறுமா ? இப்படி ஏராளமான கேள்விகள் ஒருபுறம். வீடுகளே குழந்தைகளுக் பள்ளிக் கூடங்களாகவும் பெற்றோருக்கு வேலை பார்க்கும் அலுவலகங்களாகவும் மாறிப் போய் மனதளவில் சிக்கல் உருவாகி இயல்பான உறவை சிதைக்கும் வன்முறை மறுபுறம். பெற்றோர்கள் புலம்பலையும் மாணவர் சலிப்புகளையும் காது கொடுக்க முடியவில்லை.
பல பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்கான இணைப்புகளைத் தராமல் குழந்தைகளது கல்விக் கட்டணம் முழுமையாகக் கட்டப்பட்டால் தான் சேர்த்துக் கொள்ளும் நிலை , இதையொட்டிய செய்திகள் , புகார்கள் என ஒரு புறம் பூதாகரமாகப் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன .
இந்த ஆன் லைன் வகுப்புகளால் தொடர்ந்து பல விபரீதங்கள் , தனக்கு ஆன் லைன் வசதியில் கற்றல் சூழல் கிடைக்காததால் கேரளாவில் 14 வயது மாணவி தற்கொலையில் ஆரம்பித்து தமிழகத்திலும் இப்படியான நிகழ்வுகள் நம்மை பயமுறுத்தின. அது மட்டுமா , கோவையில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் ஃபோனில் ஆன் லைன் வகுப்புகளை கவனிக்காமல் பாலியல் காணொளிகளைக் கண்டு நிஜ வாழ்க்கையில் பரிசோதிக்க அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்த குடும்பத்தில் ஒரு மாணவியை நாசம் செய்த செய்திகள் வரை நம்மை செய்வதறியாது திகைக்க வைக்கின்றன. அடுத்து,ஆன் லைன் வகுப்புக்காக தனது மகனிடம் ஸ்மார்ட் ஃபோன் தந்து பப்ஜி விளையாட்டின் அப்டேட்டுக்காக தனது வாழ்நாள் சேமிப்பான 16 லட்சம் ரூபாயை இழந்த தந்தையின் துயரம் பற்றி சொல்லவே வேண்டாம்.
கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஆன் லைன் வகுப்புகளைத் தடை செய்த நீதிமன்ற வழக்குகளும் நாம் கவனிக்க வேண்டியவை .
ஓரளவு வசதி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் கைகளில் அலைபேசி / கணினி வசதி இருப்பதால் பள்ளிகளுடன் மாணவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று இதை நேர்மறையாக எடுத்துக் கொள்வதா (அ) இதன் மோசமான விளைவுகளை வைத்து இணைய வகுப்புகளை ஆபத்து என எதிர்மறையாக அணுகுவதா என்று குழப்பத்தில் பெற்றோர்கள் இருக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள் சாத்தியமா
தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் 90% குழந்தைகள் பெரும்பாலும் ஆன்ட்ராய்டு வசதியுள்ள அலைபேசி , கணினி என எந்த வசதியும் இல்லாதவர்கள். அப்படியே வைத்திருந்தாலும்
இணைய வழிக் கல்விக்கு தினம் அவர்களது பெற்றோர்களால் ரீசார்ஜ் செய்ய பொருளாதார வசதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஊரடங்கால் அன்றாடம் வேலையே இல்லாமல் வருமானமின்றி இருக்கும் குடும்பங்கள் இந்த வசதிகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது எல்லோரும் முன் வைக்கும் வினா.
அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசும் போது பெரும்பாலும் தங்களை குழந்தைகளிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவதாகக் கூறுகின்றனர். வாட்ஸ் அப் வழியே பாடத் தொடர்புடையவற்றை அனுப்பி கற்றலில் ஈடுபடுத்தும் பணியைச் செய்து வருவதாகவும் கூறும் இவர்கள் , அந்த வசதி வெறும் 20% குழந்தைகளே பெற்றுள்ளனர் என்பதையும் வருத்தத்துடன் பகிர்கின்றனர்.
சத்துணவுக்காக பள்ளிக்கு வரும் பல லட்சம் குழந்தைகள் , மலைவாழ் பழங்குடியினப் பள்ளிகளில் படிக்கும் மலைப் பகுதி குழந்தைகள் , ஊரடங்கால் குழந்தைத் தொழிலாளராக மாறியுள்ள குழந்தைகள் என பல தரப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன் லைன் கல்வி எப்படி சாத்தியம் என்பது திரும்பத் திரும்ப நம் முன் எழும் சந்தேகங்கள்.
உலக நாடுகளில் பின்லாந்து , கனடா , அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் தற்போதைய சூழலில் ஆன் லைன் கல்வியை முன்னெடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் ஊரடங்கு சட்டம் போடுவதற்கு முன் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து ஒரு நாளில் சில மணி நேரங்களில் மட்டும் ஆன் லைன் வழியே குழந்தைகளை கற்றல் - கற்பித்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். முக்கியக் காரணம் அங்கு ஒரே கல்வி முறை -பாடத்திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால் இணைய வழிக் கல்வி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் கேரள மாநிலம் தொலைக்காட்சி முறை வழியே இணையவழிக் கல்வியை முன்னெடுத்துள்ளது. ஆனால் நமக்கு மாநில அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் , மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் , பன்னாட்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் என பல பிரிவுகளானப் பள்ளிகள் அங்கு பயிலும் குழந்தைகள் என வேறுபட்ட சூழலில் ஆன் லைன் கல்வி மிகப் பெரும் பிரச்சனையாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த 8 ஆம் தேதி நமது கல்வி அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். வரும் 13 ஆம் தேதி முதல் அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளது என்ற அறிவிப்பு. உடனடியாக ஊடகங்களின் பேசு பொருளாக மாறியது. இதை அடுத்து 9 ஆம் தேதி அறிவிப்பு மாறுகிறது .ஆன்லைன் வகுப்புகள் அல்ல , தொலைக்காட்சி சேனல்கள் வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும் என்ற செய்தி பரவுகிறது.
ஆசிரியர்கள் கருத்து
9 ஆம் தேதி வரை இந்த அறிவிப்பு குறித்து பள்ளிகளுக்கு எந்தவிதமான அலுவலகத் தகவலும் வரவில்லை என்பதே ஆசிரியர்களின் ஒட்டு மொத்த பதில் .அதோடு எந்த வகுப்பிற்கு எந்த தொலைக்காட்சி சேனலில் எந்த நேரத்தில் வகுப்பு எடுக்கப்படும் என்று தெரியவில்லை என்கின்றனர். அதன் பிறகு 10 ஆம் தேதி வருவதாக எடுத்துக் கொண்டாலும் இவற்றின் விபரங்களை மாணவரிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி .
அனைவருக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமாகாது. ஆனால் தொலைக்காட்சிக் கல்வி அனைவருக்கும் சாத்தியம்,பள்ளி நேரம் போல் நீண்ட நேர வகுப்புகள் பயன்தராது. அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் இருக்கலாம் என்ற கருத்தும் ஆசிரியர்களிடம் நிலவுகிறது.
அதே போல் பாடம் கற்றுக் கொள்ள மாணவர்கள் முன்வருவார்களா என்ற உரையாடலில் வந்து விழுந்த பதில்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
உணவுக்கே வழி இல்லாத குழந்தைகள் தொலைக்காட்சி வழியாக எதனைக் கற்க முன்வருவார்கள் ? தங்கள் பெற்றோர்களோடு வேலைக்குச் செல்லும் மாணவர்கள் வீட்டில் டிவி பார்த்து பாடம் கற்றுக் கொள்வது இயலாத காரியமே . டிவி வழியே கார்ட்டூன் / திரைப்படங்கள் பார்ப்பதும் கல்வி கற்பதும் ஒன்றல்ல இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
ஏற்கனவே அரசின் கல்வித் தொலைக்காட்சிகள் வழியாக நீட் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தனது வாழ்நாள் லட்சியமாக மருத்துவக் கனவைக் கொண்டிருக்கும் குழந்தைகள் கவனமுடன் அவற்றைப் பார்த்து கற்றலில் ஈடுபடுவது எதிர்பார்க்கலாம். ஆனால் முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடங்களை கவனிக்க வைப்பதற்கான எந்தத் திட்டமிடலும் நம்மிடம் இல்லை. இது பயன் தக்க வகையில் கொண்டு செல்வது நமக்கு மிகப் பெரிய சவால் தான் என்கின்றனர்.
பாடங்கள் தயாராக இருக்கின்றனவா
கடந்த ஒன்றரை வருடங்களாக கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகள் பல லட்ச ரூmய் செலவில் தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைத்து நடந்து வருகின்றன. அவை சரியான முறையில் செயல்பட்டு மாணவர்களிடையே முறையாகப் பார்க்கும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தற்போது சற்று இந்த வழிமுறையில் ஓரளவு வெற்றி கிட்டும். இதற்காக உழைத்து வந்த ஆசிரியர்கள் சில நாட்கள் முன்பு வருந்திய செய்தி ஊடகங்களில் வலம் வந்தது. ஒரு திட்டமிட்ட நடைமுறையில் தயாராக பணியாற்றி வந்த ஆசிரியர்களை இப்பணியில் தொடர அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வு நடந்தது . பாடங்கள் தயாராகவில்லை என்கின்றனர் கல்வித் தொலைக்காட்சியில் செயல்பட்ட ஆசிரியர்கள் .
டி என் . டிஜிட்டல் ரெபாசிட்டரி (TN Digital Repository) என்ற வாட்ஸ் அப் குழு மே மாத ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு ஆர்வமுள்ள ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு கற்றல் வளங்களை (Digital Lessons) உருவாக்கி வந்தனர். ஆனால் அவர்களிடையேயும் சரியான வழிகாட்டல் இல்லாமல் பணி தொய்வடைந்ததாகக் கூறுகின்றனர்.
கடந்த வாரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சிறு குழுக்களாக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பாடத் தலைப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப காணொளிப் பாடங்கள் உருவாக்கும் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே டிஜிட்டல் ரிசோர்ஸ் உருவாக்கும் குழு ஆசிரியர்கள் 11 ஆம் வகுப்பு பாடங்களுக்கு சிறந்த காணொளிகளை உருவாக்கி SCERT யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளதை இவ்விடத்தில் நாம் நினைவூட்டுகிறோம்.
மாநிலம் முழுவதும் ICT பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமாக இப்பணிகளில் ஈடுபட்டும் , தங்கள் பங்கை சரியான முறையில் கொடுக்கவும் தயாராகவே உள்ளனர். ஆனால் அவற்றை ஒருங்கிணைத்து, தொலைக்காட்சி ஊடகம் வழியே மாணவரிடம் கொண்டு சேர்க்க இன்னும் கூடுதல் திட்டமிடல் தேவையாக இருக்கின்றது.
ஆக இன்னும் முழுமையான திட்டமிடேலா
செயல்பாட்டுக்கான வழிமுறைகளோ இல்லாததால் இந்த தொலைக்காட்சி சானல் வழியே ஒளிபரப்பப்படும் பாட வகுப்புகளின் புரிதல் அனைத்து தரப்பிலும் முழுமையாக சென்றடைவதில் சிக்கல் நிலவுகின்றது.
கற்றல் - கற்பித்தல் நிகழ்வு தொலைக்காட்சி வழியே சாத்தியமா
கற்பித்தலும் கற்றலும் நிகழ உயிரோட்டமான வகுப்பறை மிகவும் அவசியம் என்பதை அனைவரும் அறிவோம் .இங்கு கற்பித்தல் மட்டுமே நிகழும் .
கல்வியைக் கற்கும் போது அது கேள்விக்கு உட்படுத்தப் படும் நிலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார் தோம் சாம்ஸ்கின் என்ற கல்வியாளர்.
அப்படி எனில் மாணவர்கள் பேசாத வகுப்பறைகளே இந்த ஆஃப் லைன் வகுப்புகளான தொலைக்காட்சி வகுப்பறைகள் . கற்றலின் படி நிலைகள் ஏதுமின்றி எந்திரத் தனமாக ஒருவர் பேசி வகுப்பு எடுப்பதை எவ்வளவு நேரம் மாணவர் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. ரிமோட் கன்ட்ரோலில் சண்டை போடும் வீடுகள் பெருகியுள்ள கொரோனா காலத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட சேனலில் பாடம் பார்ப்பானா அல்லது பிடிக்கவில்லை என்றால் ரிமோட் டில் மாற்றி சினிமாப் படத்தைப் பார்ப்பானா என்பதெல்லாம் அடுத்த வினாக்கள்.
ஒவ்வொரு பாடத்திற்கும் வேறு வேறு கற்பித்தல் முறைகள் , கற்றல் படிநிலைகள் உண்டு. சந்தேகம் வரும் மாணவனுக்கு சற்று புரிய வைத்து பாடம் நடக்கும் நிஜ வகுப்பறைகள் தான் கற்றலுக்கு வழி வகுக்கும் .இந்த பிம்ப வகுப்பறைகளை ஏதோ யாருமே பார்க்க வில்லை என்றாலும் படம் ஓடும் தொலைக்காட்சி வகுப்பறைகளாகவேக் கருதலாம்.
புரிதல் , உட்கிரகித்தல் , குழுப் படிப்பு , தேடுதல் , ஆய்வு மனப்பான்மை , மாணவர் -ஆசிரியர் பகிர்வு இவற்றை உள்ளடக்கிய வகுப்பறைகளுக்கு மாற்றாக மேற் சொன்ன வகுப்பறைகளைப் பார்க்கவே முடியாது.
மத்திய அரசின் வழிகாட்டுதலில் நாடு முழுவதும் ஆன் லைன் வகுப்பறைகள் உருவாகி வருவதன் மற்றொரு பரிமாணமே இந்த தொலைக்காட்சி வகுப்பறைகள் என்கின்றனர் கல்வியாளர்கள். எதிர்காலத்தில் ஆசிரியர் பணியிடங்களை துடைத்து வளரும் வர்த்தகக் கல்வியாக மாறிவிடும் அபாயத்தின் ஆரம்பமாகப் பார்க்கின்றனர்.
ஒக்லஹாமா பல்கலைக் கழக உளவியல் வல்லுநர் டக் வாலன்டினா கூறும் முடிவுகளுடன் கட்டுரையை நிறைவு செய்யலாம் .மாதக் கணக்கில் ஆன்லைன்/ ஆஃப்லைன் வகுப்பறையில் கல்வி கற்கும் குழந்தையின் மனதில் , பின்வரும் மூன்று முடிவுகள் உருவாகின்றன என்கிறார்.
வாழ்க்கை என்பது தனக்கும் கருவிகளுக்குமானது. மனிதர்களுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற நிலைப்பாட்டை ஒரு குழந்தை எடுக்கிறது. ஆகவே பெற்றோரிடம் பேச வேண்டுமென்றால் டெக்ஸ்ட் மெஸேஜ் வழியாகப் பேசலாம் எனத் தோன்றி. வெளியுலக மனிதரிடம் தனது தொடர்பை விரும்பாமல் போகும் மனநிலை உருவாகிறது. இது ஒருவிதமான மனநிலை, இதனால் மரணத்தில் கூட அவர்களது வாழ்க்கை முடியும் அபாயம் உள்ளது.
அடுத்து ஆன்லைன் கல்வியைத் தொடரும் ஒரு குழந்தை, தானா எல்லாம் நடந்து கொண்டுள்ளது. நம்மால் இதை நிறுத்தவே முடியாது , ஆசிரியரிடம் பேசவோ கேள்வி கேட்கவோ முடியாது , அதே போல் தான் சமூகமும் போல , தனக்கு நடக்கும் எதிலும் தான் தலையிட முடியாது என்ற முடிவுக்கு வந்து விடுகிறது. குழுவாக இயங்க முடியாமல் சமூகமாக வாழக் கற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இது மிகப்பெரும் ஆபத்து.
மூன்றாவது முடிவாக மாதக் கணக்கில் ஆன் லைன் கல்வியில் கற்கும் சூழலில் கற்றல் - எதிர்ப்பு (Anti Education) மனநிலைக்கு அக்குழந்தை தள்ளப்படுகிறது . இதனால் எதையுமே கற்றுக் கொள்ளாமல் எல்லாவற்றின் மீதும் குழந்தைக்கு சலிப்பு ஏற்படுகிறது.
இவற்றை எல்லாம் இன்றைய ஆன்லைன் / ஆஃப்லைன் கல்வி முயற்சியில் மனதில் இருத்த வேண்டி உள்ளது.
தொடர்ந்து பேசுவோம்
உமா