Sunday, 23 December 2018

பெருகி வரும் மரணங்கள்

பெருகி வரும் மரணங்கள் -
அரசுப் பள்ளிகள் மூடல்

எத்தனையோ பேர் போராடி கல்வி உரிமைச் சட்டத்தை இந்தியாவில் அமலுக்குக் கொண்டு வந்தாலும் எங்கயும் நடைமுறையில் இல்லை.

குழந்தைகள் பேரைச் சொல்லி பணமா ஒதுக்கி தனித்தனியா பாக்கெட்ல போட்டுட்டு ஏமாத்தறதுக்கு அரசே எல்லா மாநிலத்திலும் துணையிருக்கு .

பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளுக்கு தேவையான வசதி செய்து குடுக்காத அரச கேள்வி கேட்க யாருமே இல்லை ,

ஆசிரியர்கள் ஒருத்தர் கூட குழந்தைங்க சுகமா , நிம்மதியா பள்ளிக்கூடத்துல
இருக்க, கழிப்பறை , குடிநீர் , கட்டமைப்பு , ஆசிரியர் பணி நியமனம் இது பத்தி எதிர்க் குரல் தர முன்வராத நிலைமை.

சட்டத்தில் இருப்பதை எம் பள்ளிக்கூடத்துல நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்யாத இருக்கும் நானெல்லாம் ஒரு ஆசிரியரா இருக்கத் தகுதி இல்லாதவன்னு நினைச்சு வருத்தம் மட்டும் பட்டுகிட்டு இருக்க மாட்டேன்.

கல்விக்கான வரின்னு எல்லார்கிட்டயும் அரசு கரெக்டா ஃபைன் போட்டு கூட வாங்குதே , அதுக்கு  அய்யோ என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னு பயந்துகிட்டு கட்றோமே , எப்பவாச்சும் அந்த கல்வி வரி பணம் எல்லாம் மாநில அரசோ மத்திய அரசோ முழுசா கல்விக் கே செலவு செய்யுதான்னு யாராச்சும் கேள்வி கேட்கறமா ?

ஆயிரம் திட்டங்களைக் கொண்டு வந்து கோடி கோடியா பணம் ஒதுக்கி பட்ஜெட் போட்டாலும் எத்தனை லட்சக்கணக்கான குழந்தைங்க நாடு பூராவும் தெருவோரம் பிச்சை எடுக்கறத கடந்து தானே போறோம் ?

சின்னதும் பெருசுமா  அமைப்பு சார்ந்து களப்பணி செய்தாலும் இது பற்றிய விழிப்புணர்வோ  ஆதங்கமோ கோபமோ பொதுமக்களுக்கு மத்தியில் ஏன் நம்மால கொண்டு வர முடியல ?

எப்போதும் பற்றாக்குறை , எங்கு உழைக்கும் வர்க்கம் முதலாளி வர்க்கம் என்ற பிரிவினை தானே முன்னாடி  நிக்குது. பொதுவுடைமைக்  கோட்பாடுகள் என வரிகளில் படிச்சா போதுமா ?

சின்ன முயற்சி கூட வாத்தியார் கூட்டம் எடுக்க மாட்டேன்னுது. எடுக்கறவங்க பின்னாடி வரவும் தயக்கம் காட்டுது.

சுருங்கிப் போய் இருக்காங்க இங்க எல்லாரும் , தன் வீடு , தன் குழந்தைகள்  , அவர்களது வாழ்க்கை என. இந்த சமூகமும் நமக்குள்ள தானே என கொஞ்ச நேரம் ஒதுக்கினா என்ன ?

இப்படியே போய்க்கிட்டு இருந்தா எல்லா கல்வித் திட்டங்களும் தனியார் MNC நிறுவனங்க கைக்கு போய் கடைசியா அரசுப்பள்ளிக்கூடங்க எல்லாம் , ஒரு காலத்தில் இங்க படிச்சாங்க என சோக வரலாறு சொல்ற இடுகாடாக மாறிவிடும் .

இப்போ வந்து இருக்கும் சமக்க்ஷர அபியான் திட்டம் வெறும் 2 வருஷக் கூத்துக்கு எத்தனையோ ஆயிரம் பில்லியன் பணம் நிதியா ஒதுக்கி இருந்தாலும் , கான்ட்ராக்ட் டீச்சர தேடறாங்களே , இது எப்படி ஒரு அறமாகும் ?

தலைமை ஆசிரியரா இருக்க 25000 தான் தருவோம் னு ஒப்பந்தம் செய்தா முழுமையா கல்விப் பணிய நம்மால அவங்ககிட்ட இருந்து எப்படி எதிர்பார்க்க முடியும் ? அரசுப் பள்ளிக் கூடங்கள் எப்படி நல்ல கல்வி தர முடியாம போகும் ? எல்லா ஊர்களிலும் கேந்திர வித்யாலயாவத் தேடிப் போகும் மக்கள் மாநில அரசுப் பள்ளிகளை ஏன் புறக்கணிக்கனும் ? என்னிக்காச்சும்  யோசிக்கறோமா ?

அந்த பள்ளியில கற்பித்தல் பணி மட்டும் தான் ஆசிரியர் பண்றாங்க , ஓரளவு கட்டமைப்பு வசதிகளும் இருக்கு , அப்படின்னா , அதையே அரசுப் பள்ளிகளிலும்  பின்பற்றினா, தானா வந்து   குழந்தைகளை சேர்க்கப் போறாங்க பெற்றோர்...

அதைய ஏன் இந்த அரசாங்கம் செய்ய மாட்டேன்னுது ? இங்க இருக்கற
டீச்சர்க்கு  கற்பித்தல தவிர மத்த எல்லா வேலையும் தருவாங்க , அதையெல்லாம் செய்து முடிச்சுட்டு நேரம் இருந்தா தான்பசங்களுக்கு பாடம் நடத்த றோம் , இல்லன்னா அவங்க நம்மள கேள்வியா கேட்கப் போறாங்க , அல்லது அவங்கள பெத்தவங்க தான் வந்து கேட்க முடியுமா ?

கலெக்டர் குழந்தைங்களும்  டாக்டர் , என்ஜினியர் பசங்க, அதிகாரிங்க பசங்க படிச்சா பயந்துட்டு வேலையும் நடக்கும் , எல்லா பள்ளிக்கூடத்திலயும்  கூட்டமும்  இருக்கும். ஆனா அவங்க எல்லோரும் மஞ்ச பஸ் க்கு தான பிள்ளைய அனுப்ப றாங்க , நாம மட்டும் இங்க அனுப்பிடுவோமா ?  அது எப்படி .. நம்ம குழந்தைங்க இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிச்சா தானே நமக்கும் பெருமை .

அப்போ கல்வி உரிமைச் சட்டம் எப்படித் தான் விளங்கும் ?போங்க ...

Saturday, 1 December 2018

ஆன் லைன் அட்டென்டன்ஸ்

அட ... புதுப்பிரச்சனை  (26.11. 18)

ஏற்கனவே குழந்தைகளால் போக்குவரத்து நெரிசல் , பேருந்துப் பயணம் , டிரெய்ன் என குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர இயலுவதில்லை , குறைந்தது 50 பேர் தினமும் தாமத வருகை தான். ..

ஆனால் , இன்று நாங்கள் 8.45 இலிருந்து காலை பள்ளி வளாகத்தில் .. கையில் அலைபேசியின் ஆதிக்கத்துடனேயே ..

காரணம் என்னவென்று கேளுங்கள் ... மாணவிகளின் வருகை TNSCHOOLS செயலி வழியாக 9.30 க்குள் அனுப்ப வேண்டும் ...

எனக்கு அந்த app ஓபன் ஆகவே இல்லை மிஸ் , உங்களுக்கு ?... என் மொபைலில் சுத்திகிட்டே இருக்குதுப்பா ... எனக்கு hang ஆகுது மிஸ் , எனக்கு இன்ஸ்டால் ஆகவே மாட்டேன்னுதுப்பா , எனக்கு ஓபன் ஆச்சு , ஆனா அதுக்குப் பிறகு வேல செய்யலப்பா .. இப்படியான குரல்கள் 9.30 வரையில் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருக்க ... எனக்கு please wait தான் காமித்துக் கொண்டே இருக்க , அட போங்கப்பா .. நான் கணக்கு நடத்த போய்ட்டேன். இது கொஞ்ச நேரத்தில் மறந்தே போனது. ..

2 பிரிவேளை முடிந்து ஆசிரியர் அறைக்கு செல்ல ... என்ன உமா மிஸ் .. நீங்க இன்னும் அட்டன் டென்ஸ்  ஆன் லைன்ல போடலயா ???, எனக்கு please wait தான் காமிக்குது என்றேன்.

எனக்கும் தான் , ஆனா நான் எலிசபெத் மிஸ்  மொபைல் லில் போட்டுட்டேன் என்றார் தமிழ் .. ஓ.. அப்படியா ? சரி எனக்காகவும் உதவினார் எலிசபெத் (வாழ்க) இது நடந்தது 11.15க்கு .. எங்களுக்கு எல்லாம் க்ரீன் டிக் வந்தது. உங்களுக்கு மஞ்சள் காமிக்குது .. இவ்ளோ நேரம் ஆகிடுச்சு என்பதாலா ?? எலிசபெத் கேட்க ...

நானோ .. பரவாயில்லை மிஸ் எனது வகுப்பு போட முடியவில்லை என்றால் என்னை யாராவது மெமோ கொடுக்கட்டும் , அப்போதுதான் இதற்கு சில கேள்விகளை யாவது என்னால் கேட்க முடியும் , என்றேன்.

தொடர்ந்து உணவு இடைவேளையில் கூட .. யாரும் உணவு உண்பதை மறந்து இதை எடுத்துக் கொண்டு ஒரு கையில் அட்டென்டன்ஸ் , ஒரு கையில் மொபைல் ...

மனம் உளைச்சலுடன் சுழல ஆரம்பித்து ஆசிரியர்களது மனநிலை .....

எனக்குள்  சில சந்தேகங்கள் .... பல கேள்விகள் ....

* எல்லா ஆசிரியர்களும் ஆன்ட்ராய்டு மொபைல் வச்சிருக்கணும்னு இந்திய கல்வி உரிமைச் சட்டம் சொல்லுதா ?

* அப்படியே இருந்தாலும் எல்லா ஊர்களிலும் இணைய இணைப்பு சப்போர்ட் பண்ணுமா ?

* காலைல புத்துணர்வா பாடம் நடத்தாம இந்த வேலைய டீச்சர்க் கிட்ட தந்து மன உளைச்சல் தரும் முறை எந்த வகையில் சரி ?

* எல்லா வசதிகளையும் அரசு செய்து விட்டு பிறகு இதை நடைமுறைப்படுத்தலாமே ?

* இவை எல்லாம்  எதுக்காக ? என்ன மாற்றம் வந்துவிடும் ?

* இதை எல்லாம் ஆசிரியர் சங்கங்கள் கேட்காதா ??

* ஒரு ஆசிரியர் இதையே பார்த்தால் , முதல் பிரிவேளை வேறு வகுப்புக்கு செல்கையில் பாடம் பாதிக்கப் படாதா ?

* இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் புரிய வைக்க  களத்தில் இருக்கும் ஆசிரியர்கள்  தலைமை ஆசிரியர்களிடம் கூறவும் , தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளுக்கு சொல்லவும் என்ன தயக்கம் ?

* பிரச்சனைகளைக் கூறினால் தானே தீர்வுகளை நோக்கி நகர முடியும் ?

எனக்கான பிரச்சனையை யாரிடம் கூற ?

களம் விரியும்
உமா

வகுப்பறை உளவியல் 15

வகுப்பறை உளவியல் : 15

நாம் தைரியமாக எதிர்க்க வேண்டும் கொடுமைகளை - 9 ஆம் வகுப்பு மாணவி ஆவேசம் .

கணக்கு வகுப்புகளுக்கு ஊடே புரட்சி வகுப்புகளும் அறிமுகம் செய்ய தேவை ஏற்பட்டு இருக்கு இந்நாட்களில் ..

குழந்தைகள் கணக்கு வகுப்புகளைக் கடினமாக இருப்பதாக உணர்ந்தாலும் எளிமைப் படுத்தும் முயற்சியில் பல ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டிய சூழல் நமது பொறுப்பு .

அது 9 ஆம் வகுப்பு , கணக்குடன் கதைப் புத்தகங்களையும் அறிமுகம் செய்யும் வழக்கம் எங்களிடையே உண்டு. எல்லாம் பேசுவோம் , கதை , கவிதை , சினிமா , பொருளாதாரம் , சமூகம் இப்படி அனைத்தும் எங்கள் உரையாடலில் இடம் பிடிக்கும் ,

ஒரு நாள் பெண்களுக்கான பிரச்சனைகளைப் பற்றி பேசப் பேச ஒரு குழந்தை கண்கள் பனித்தன, அயர்ந்து போகாதே நீ மட்டும் தனியாள் இல்லை , உன்னைப் போல சங்கடங்களை எதிர்கொள்ளும் பெண் குழந்தைகளும் அம்மாக்களும் நிறைந்த சமூகம் தான் இது என்று தைரியப்படுத்திய அதே நேரம் பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் புத்தகத்தைத் தந்து படிக்கக் கூறினேன் , இது நடந்தது 2 மாதங்கள் முன்பு ...

3 நாட்கள் முன்பு, பயிற்சிக் கணக்குகள் போடும் போதே ..புத்தகம் எங்கேம் மா? என்றேன்.  படிச்சிங்களா ? என்றேன். இதோ என்னுடனேயே வைத்துள்ளேன் , படிச்சேன் மிஸ்  என்றார்.. அது பற்றி கொஞ்சம் பேசுங்களேன் என்றேனே பார்க்கலாம் .

புத்தகம் மிகவும் என்னை பாதித்தது , நன்றாக இருந்தது என ஆரம்பித்த அவரது பேச்சில் ஆவேசம் கூடியது..

எங்கப்பா குடிச்சுட்டு எல்லாவற்றுக்கும்  அடிப்பார்  மிஸ் , எங்க வீட்ல என் தம்பிய ஒரு மாதிரியும் , என்னை ஒரு மாதிரியும் நடத்துவாங்க , எல்லா வேலையும் நான் தான் செய்யனும் , தண்ணீர் வெளியே போய் நான் தான் எடுக்கணும் , எப்போதும் இதல்லாம் கஷ்டமாகவும்  வெறுப்பாகவும்  இருக்கும். அம்மாவையும் திட்டி அடிப்பார். அடிமைகள் மாதிரி தான் வாழ்ந்தோம்.

இந்த புத்தகம் நீங்க குடுத்த உடன் இதப் படிச்சு படிச்சு , ஒரு நாள் எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சேன். எங்கப்பா கையை ஓங்கியவர் அதை அப்படியே நிறுத்திவிட்டு உள்ளே போய்ட்டார் , எங்கம்மா கிட்ட இந்த புத்தகத்தைக் காட்டி இதில் எல்லாம் எப்படி எழுதியிருக்கு பாரு மா , இதெல்லாம் தெரியாமலேயே இப்படி அப்பா சொல்வதெல்லாம்  கேட்டு அடிமையா இருக்கியே என்றேன். அதற்கு அம்மா இதல்லாம் புத்தகத்துல தான் மா வரும். நம்ம வாழ்க்கையில் நடக்காது என்று சொன்னாங்க மிஸ்.

நான் சொன்னேன், நீ வேணா அவருக்கு அடிமையா இரு , நான் ஒன்னும் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன் , இப்போ எல்லாம் அவருடைய வேலைய நான் செய்வதில்லை. நான் படுத்த பாய் மட்டும்  தான் எடுத்து வைக்கறேன். அவருடைய பாய் தல காணி அவரே தான் எடுத்து வைக்கிறார். காபி போட்டு வச்சா அவரே தான் எடுத்துக்கணும் , நான் எடுத்துத் தருவதில்லை .

இப்போதெல்லாம் அடிப்பதில்லையா? என்றேன் , அது மட்டும் அப்பப்போ செய்யறார். முறைப்பேன் , இந்த புத்தகத்தை மூஞ்சி மேல காமிப்பேன் , ஏற்கனவே காட்டியதுக்கு கோபம் வந்து ஒன்னும் செய்ய முடியாமல் போய்ட்டார் ,

என் தம்பிக்கு செல்லம் கொடுத்து , தப்பு செய்ய வழிகாட்டிட்டார்னு தோணுது அவன் 7 வது படிக்கிறான் மிஸ் , அவனுக்கு வேலையே தராம என்னை மட்டும் விரட்டுறாங்க , எதிர்த்து ஏன் இப்படி செய்யறீங்க ன்னு கேட்டா திமிரு என்று பேசுகிறார்கள் மிஸ் .... என்றார்.

என்ன மா ?யார் யார் வீட்டில் இந்த மாதிரியான பிரச்சனை இருக்கோ அங்கு நீங்களும் வீட்டில் கேளுங்கள் என்ற என்னிடம் , மாணவிகள் ... எப்படி மிஸ் கேட்பது ? எங்கப்பா  எப்பப் பாரு வேலைல இருக்கற டென்ஷனை வீட்ல எங்கிட்ட காமிக்கறார், பட்டையா அடிக்கறார் என்றார் ஒரு மாணவி .

அதற்கு மாணவியின் பதில் பெரும் குரலாக வருகிறது. நாம் நம் மீது தப்பில்லாத போது எதிர்த்துக் குரல் தரணும் , இல்லாட்டி நம்மள அடிமையா நடத்துவாங்க. அவங்களப் பொறுத்தவரை வீட்டுக்கு வரணும் , சாப்பிடணும் , ஜாலியா இருக்கணும் , வீட்ல பெண்கள் வேலைக்கும் போய் சம்பாதித்து தந்து , இவர்களுக்கு பணிவிடையும் செய்து , அடிமை மாதிரி இருக்கணும் என்று நினைக்கின்றனர். இதற்கு நாம உதவக் கூடாது என்று முகத்தில் வீர உணர்வுடன் தனது சக வகுப்பு மாணவியரிடம் பகிர்கிறார். எனக்கு உடலே சிலிர்த்தது.

எப்படி இந்தக் குழந்தைக்கு இவ்வளவு தைரியம் வந்துள்ளது என்று மகிழ்ந்தேன். பிரச்சனைகளை  வெளியே  கொண்டு செல்கிறோம் என்று தெரிந்தால் ஆண்கள் தவறு செய்வதை விட்டு விடுவார்கள் , ஆகவே நியாயமான பிரச்சனைகள் உங்கள் குடும்பத்தில் இருப்பின் அப்பாவிற்கு பேசிப் புரிய வையுங்கள் என்றேன். உங்கள் மீது தவறு எனில் மாற்றிக் கொள்ளுங்கள்  , பெண் குழந்தைகளை அடிக்கும் அப்பாவை  எதிர்த்து கேள்வி கேளுங்க , அதற்கு அவர்கள்  கேட்கவில்லை என்றால் அடித்தால் கையை உயர்த்துங்கள் திரும்ப ... என்றும் கூற வேண்டியதாயிற்று.

இதன் பின்னணியில் நிறைய பெண்களின் வாழ்க்கை சோகங்கள் அடங்கியிருக்கிறது என்பது தான் உண்மை.

அதோடு அப்புத்தகத்தை அம் மாணவிக்கே பரிசாகத் தந்து விட்டேன் , அவள் பின்னாளில் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் வலிமை மிக்க பெண்ணாக வருவாள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

உளவியல் தொடரும்
உமா

மாணவர் மதிப்பிடு 7

மாணவர் மதிப்பீடு : 7

கல்வி சித்தாந்தங்களும்  , கல்வி சார்ந்தஅரசு செயல்முறைகளும் , அவற்றை கடத்திச் சென்று  ஆணிவேர்களின் இடத்தில் வாழும் குழந்தைகளின் பழக்கத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்புகள்  கடமைகள் கொண்ட ஆசிரியரது எண்ணங்களும் குழந்தைகளது மகிழ்ச்சியான கற்றலைச் சார்ந்ததாக இருத்தலே நலம்.

குழந்தைகளுக்கான நம்பிக்கையாக நாம் இருப்பது அவர்களுக்குள் எவ்வளவு சந்தோஷத்தை மலர வைக்கின்றது என்பதை இங்கு பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

(சில வாரங்களுக்கு முன்பு வரை எனது மாணவர்கள் தந்த என்னைப் பற்றிய மதிப்பீட்டு கடிதங்களை இங்குப் பகிர்ந்தேன் , அதன் தொடர்ச்சியாக ..)

வகுப்பறை உளவியல் 14 இல் எனது குழந்தைகளின் வகுப்பறை நூலகம் பற்றி உங்களோடு பகிர்ந்து இருந்தேன். அதன் பலனாக இந்த 10 நாட்களில் தினமும் குழந்தைகள் புத்தகம் வாசிப்பது அவர்களைப் புத்துணர்வூட்டுவதாகக் கூறுகின்றனர்.

நேற்று மாலை பள்ளி விட்ட நேரம் .6 ஆம் வகுப்பு அஃப்ரின் ஓடி வந்தார். என்னிடம் ஒரு எழுதிய தாளை நீட்டினார். சிரித்துக் கொண்டே ... மிஸ் .. இத நீங்க படிச்சுப் பார்க்கணும் என்றார்.

கண்டிப்பாக தங்கம் என்றேன்.
இதோ .... அவர் எழுதியதை அப்படியே இங்குப் பதிவு செய்கிறேன். நான் எதுவுமே சொல்லவில்லை ... அவர்களது உண்மை மனநிலை இது. ( பிழைகள் கூட திருத்தப்படாமல் இருக்கும் )மழலையின் கடிதம் உங்களுக்கும் ..

26.11.18 -புதிய பயணம் Feedback

My Uma Miss 😍🤣😍😅😃

Ever a Smile Don't Cry (இது மட்டும் எப்போதும் அவர்களிடம் நான் கூறுவது , கரும்பலகையில் இது தான் இருக்கும் )

மிஸ் first time நா வந்து book படிக்கிறே , அனால் எனக்கு கதை நா ரொம்ப பிடிக்கும். நா books வாங்க மட்டா  எதுக்கு நா books எங்கு வங்கு தரமட்டாக .ஆனா இப்ப நீங்க எங்களுக்கு Class room library னு ஒரு புதிய பயணம் மா இருந்துசு மிஸ் .ஒரு புதிய விஷ்யாம்  குடித்துங்க .அது எங்க எலருக்கோ ரொம்ப சந்தோஷமா இருக்கும் மிஸ் , நீங்க எங்களுக்கு Class room library குடுத்துங்கலே அப்போ நா எங்க வீட்டில சொன்ன அப்போ எங்க அப்பா OKay ma நா இனிமே ஒனக்கு books வங்கி தரா ஆனா எனக்கு Daily லா வங்கி தர முடியாது. அதுனால் நா ஒனக்கு Monthly I book வாங்கி தர னு சொன்ன க மிஸ். அப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துசு. இது எல்லா உங்களை தா மிஸ் நடந்து சி . Thank you Miss I relay like you Miss. ஒரு நாள் புதிய பயணம் புத்தகம் கடசி  பக்கம் படிக்க வரும் போது அம்மா functions கு குட்டிட்டு போய் டாக ,அப்போ நா அய்யோ என்ன டா இது கடசி பக்கம் படிக்க போது குட்டிட்டு போய் டாகலே எப்போ தா வீட்டு போய் அந்த book படிப்போனு தொனுச்சு .Sema ஒரு ஒரு Page aya அடுத்து என்ன அடுத்து என்னனு அவ்லோ interesting இருந்துசு  இதுகலே நீங்க தா முழு காரணம் மிஸ் , நா ரொம்ப Lucky மிஸ். நாங்க 12th போன லும் நீங்க தா எங்களுக்கு மிஸ் .ஆ வரவேணு மிஸ். அந்த book ரொம்ப Superaya இருந்து சு , அது எனக்கு ரொம்ப புடிச்ச book இருந்துசு , இனிமே எங்களுக்கு இந்த மாதிரி books கேட்கனும் மிஸ் , எனக்கு இனிமே இந்த மதிரி வயிப்புகள் கேட்கணும் மிஸ். அதுக்கு நீங்க தா காரணம் மிஸ்.

Thank you .                               By
                                                   Affrin.T
[ எங்க எலருக்கோ பிடிச்ச தங்க மான மிஸ் Uma மிஸ் ... ]

நாம் கேட்காமலேயே இவர்கள் போன்ற குழந்தைகளின் மதிப்பீடு ..  இன்னும்  அவர்களுக்கான தேடலின் களத்தை எனக்குள் விரிவாக்குகிறது.

வளரும்
உமா

Saturday, 17 November 2018

வகுப்பறை உளவியல் 14

வகுப்பறை உளவியல் : 14

குழந்தைகளுக்காக குழந்தைகளாலேயே ....
(17.11. 18)

பல வருடங்களாக எனது வகுப்பறைகள் , நான் பணிபுரியும்  பள்ளி முழுமையாகவும் புத்தகம் வாசிப்பது என தொடர் முயற்சிகள் எடுத்து வந்தாலும் , நூலகங்களுக்கே அழைத்துச் சென்று உறுப்பினராகி வாசிக்க வைப்பது , சிறு சிறு வாசிப்பு முகாம்கள் என பல இருந்தும் முதன் முறையாக வகுப்பறை
நூலகம் என முறையாக ஆரம்பித்தது நேற்று தான் ...

இந்தக் கல்வி ஆண்டு ஆரம்பித்தது முதலே புதியதாக வந்த எனது 6 ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கு மாற்றி மாற்றி புத்தகம் கொண்டு வந்து தருவேன் .. இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால்  49 மாணவிகள் இருக்கும் வகுப்பில் அனைவருக்கும் நினைவு வைத்து மாற்றி மாற்றி புத்தகம் வழங்குவது சற்றே சிரமமாக இருந்தது.

குழந்தைகளும் .. மிஸ் எனக்கு புத்தகம் தரவில்லை என தினமும் முகத்தைத் தூக்கி வைத்து , கோவிச்சுக்கு வாங்க ....

இன்னொரு முக்கியப் பிரச்சனை ஆங்கில வழி என்பதால் தமிழ் வாசிப்புக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை ...

ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் அவர்களுக்குள் சண்டை என பல சின்னச் சின்ன பிரச்சனைகள் ...

பாடப் புத்தகம் தாண்டிய எந்தப் புரிதலும் 40 குழந்தைகளுக்கு  இல்லவே இல்லை ...

இவற்றின் விளைவு நிரந்தரமாக வகுப்பறை நூலகம் ஒன்று அமைக்க எல்லோரும் சேர்ந்து முடிவு செய்தோம் ...

குழந்தைகள் தினமான நவம்பர் 14 இன் சிறப்பாக இதைத் துவக்க முடிவெடுத்து சனிக்கிழமை 17.11 .2018 அன்று திறப்பு விழா .... ஏதேதோ அலங்காரம் ...

கதைப்புத்தகங்கள் விழியனின் பென்சிலின்  அட்டகாசத்தில் தொடங்கி , ஒரே ஒரு ஊரிலே எண்களின் கதை , பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள் , 8 மாம்பழங்கள் , பூஜ்ஜியமாம் ஆண்டு , ஒரே ஒரு ஊரிலே , ராஜாளிக் கதைகள் , மஞ்சள் பையும் மோப்ப நாயும் ,தப்பியோடிய குட்டி முயல் , குட்டியானை , ஸ்னுப்பியும் ஸ்நிப்பியும் இப்படி 30க்கும் மேற்பட்ட கதைப் புத்தகங்கள் , மாத இதழ் கலைக்கதிர், யாதும்  உட்பட சில , தும்பி , றெக்கை இப்படி ...

ஆங்கில கதைப்புத்தகங்கள் , புதிர்க் கதை , காகிதப் பாவைகள் , நக்கீரன் 2018 , பொது அறிவுக் களஞ்சியம்  என 50 க்கும் அதிகமான புத்தகங்கள் எங்கள் வகுப்பறையை நிரப்பி இருக்க நூலகம் திறந்தோம் ... (அடுத்தடுத்த வாரங்களில் இந்த எண்ணிக்கை  100 ஐத் தாண்டும் )

மிஸ் ... உங்க கையால எங்கள் எல்லோருக்கும் புத்தகம் தர வேண்டும் ...என ஒரே குரலில் , எப்பவுமே நான் தானே தங்கங்களா தரேன் ... என்றதற்கு

வகுப்புத் தலைவி வருகைப் பதிவேட்டின் படி ஒவ்வொருவரது பெயரையும் வாசிக்க , எல்லோருக்கும் வழங்கப்பட்டது புத்தகங்கள் , வேண்டாம் என்றாலும் K .மகேஸ்வரி எப்போதும் உரிமையுடன் என் கைப்பேசியைப் பிடுங்குவது போல் எடுத்து , மிஸ் ஃபோட்டோ எடுக்கறேன் ..... எனக் கொஞ்சுகிறார்.

சரி. ..சிரிங்க எனக் கூறி ஒவ்வொருவருக்கும்  புத்தகம்  வழங்க வழங்க க்ளிக் செய்கிறார்.

அதன் பிறகு எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ... என்னவெனில் , ஒவ்வொருவரும் ஏற்கனவே நம் வகுப்பில் நடைமுறையிலிருக்கும்  புத்தகம் படித்து நூல் குறிப்பு , விருப்பங்கள் (feed back) பதிவு செய்யும் வழக்கத்தைத் தொடர வேண்டும் என்பது.

இதன் முன் வேலையாக நாம் செய்தது , நூலகம் பற்றி , வாசித்தல் பற்றி தேசத் தலைவர்கள் , வரலாற்று மேதைகள் , அறிவியல் அறிஞர்கள் , மொழிப் புலவர்கள் என அனைவர் கூறிய கருத்துகளும் ஒரு பிரிவேளையில் பகிர்ந்து உரையாடப்பட்டது. இது தான் வகுப்பறை நூலகம்  உருவாக்கம் பற்றிய, வாசிப்பு பற்றிய ஒரு  தாக்கத்தை அவர்களிடையே உருவாக்கியதாகக் கருதுகிறேன்.

ச .தமிழ்ச்செல்வன்  ,  எஸ்.இரா,பாலபாரதி
லியோ டால்ஸ்ட்டாய்  , ஷேக்ஸ்பியர் , விழியன்  Umanath Selvan, பாவண்ணன்,முனைவர் இரா. மோகனா ஆயிஷா .நடராஜன் , இப்படி பல வித எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது எனக்கு ஒரு சின்ன சந்தோஷம். (எனக்கு எல்லாம் 40 வயதில் அறிய வந்தவர்களை என் குழந்தைகளுக்கு 11 வயதில் அறிமுகப்படுத்தியது பெரும் மகிழ்வு )

மோனிஷாவிடம் ஒரு நோட்டைத் தர , அவரது பணியின் வேகம் அதை நூலகப் புத்தகங்கள் வழங்கும் ஏடாக்கி, மாணவர் பெயர் புத்தகம் வழங்கப்பட்டது எழுதி கையெழுத்துப் பெற்று விட , தொடர்ந்து வாசித்தலுக்கான களமானது எங்களது ஆங்கில வகுப்பறை , சனிக்கிழமை இப்படியான வகுப்பறையாக மாறியது .

நீங்கள் கேட்கலாம் ..... பாடம் எப்போ நடத்துவீங்க என ... அது இதுவும் 40 மதிப்பெண்களுக்கான கல்வி இணைச் செயல்பாட்டின் ஒரு பகுதிதானுங்கோ .....

ஏற்கனவே சில குட்டித் தங்கங்கள் கதை , கவிதை , ஒவியம் என எழுதி வரைய ஆரம்பித்துள்ளனர். இதெல்லாம் தொடர வேண்டும் என எங்கள் ஒப்பந்தத்தை வலுப்படுத்தினோம் .....
என இங்குப் பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

உளவியல் தொடரும்
உமா