Monday, 20 July 2020

தேசியக் கல்விக் கொள்கை - 1

நான் ஏன் NEP ஐ வேண்டாம் என்கிறேன் .. பாகம் - 1

தேசியக் கல்விக் கொள்கை 2019

இதன் உள்ளடக்கம் 4 பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது , முதல் பகுதி #பள்ளிக்_கல்வி , அதில் 8 பிரிவுகள் உள்ளன. அதில் #முதல்_பிரிவு  பற்றி இந்தப் பதிவில் எழுதுகிறேன். 

i)#ஆரம்ப_காலக்_குழந்தை_பராமரிப்பும்_கல்வியும் : கற்றலுக்கான அடித்தளம்

இரண்டாவது பக்கத்திலேயே ஆரம்பித்து விடுகிறது ,ECCE இன் முதலீடு என்பது நல்ல , ஒழுக்கமான , சிந்தனை மிக்க , ஆக்கப்பூர்வமான மனிதராக குழந்தைகள் வளர சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கே என ...

இந்தியாவில் கடுமையான கற்றல்
நெருக்கடி நிலவுவதாகவும் தொடக்கப் பள்ளியில் சேரும் குழந்தைகள் அடிப்படைத் திறன்களான எண் , எழுத்து கற்பதில் தவறிவிடுகின்றனர்  எனவும் கூறியுள்ளது ,

மேம்பட்ட கற்றல் விளைவு சமத்துவம் ,நீதி , வேலை வாய்ப்பு போன்றவற்றிற்காக ECCE இருக்க வேண்டுமாம் .

ஒரு குழந்தை வளர்ச்சி குறித்த அடிப்படைக் கல்வி மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் அதற்கான ஆசிரியர் தயார்படுத்துதல் குறித்தும் பேசுகிறது.

NCERT இப்பருவக் குழந்தைகளுக்கு பாடத்திட்டம் உருவாக்கும் என்பதுடன் பலப்படுத்தப்பட்ட , விரிவுபடுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் இக்குழந்தைப் பருவக் கல்வி  வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது எனில் , அந்த பலப்படுத்தப்  பட்ட கல்வி நிறுவனங்கள் என்பவர்கள் யார் ?என்ற கேள்வி நம்முள் எழுகிறது .

இந்தியாவில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள எண்ணற்ற சிறப்பு மிக்க மரபுகள் ECCE இன் பாடத்திட்டத்திலும் கற்பித்தலிலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் ....? என்ன மரபுகள் என்பது புரியவில்லை. மரபு என்றாலே அறிவியல் அடிபட்டுப் போகிறதே.

அதை விட முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது , கலாச்சாரம் , குடும்பங்களின் பாரம்பரியப் பங்கு , முன்னோடிகள் தந்த பாரம்பரியப் பண்புகளைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறியக் கடமையை நிறைவேற்றத் தேவையான வகையில் கொள்கைகள் வகுக்க வேண்டுமாம் ,

இங்கு ஒரு புறம் நம் சமுதாயம், குடும்பக் கட்டமைப்புகளில் உள்ள பிற்போக்குத்தனங்களை மாற்ற வேண்டும் என முற்போக்கு சிந்தனைகளுக்காகப் போராடி வரும் நிலையில் , இந்தக் கல்விக் கொள்கை 3 வயதிலிருந்தே குழந்தைகளை மரபிற்குள் அழுத்தி விடத் துடிக்கிறது.

அதே போல , எண்கள் , எழுத்துகளைக் கூட,  3 வயது சிறு குழந்தைகளுக்குக் கற்பித்தலில் 
தாய் மொழியிலோ அல்லது மற்ற எந்த மொழியிலோ எப்படித் தொடர்பு கொள்வது என்பதைச் சொல்வதிலிருந்து, நாம் புரிந்து கொள்ள வேண்டும் , தாய் மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை என ..

திரும்பத் திரும்ப பல இடங்களில் பாரம்பரியம் பற்றி வருகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த எண்ணற்றப் பாரம்பரியங்களை
ECCE இல் விரிவாக ஒருங்கிணைப்பட்டுள்ளது என்றால் ....

பாரம்பரியத்திற்கு கல்வியில் இவ்வளவு அழுத்தம் தேவையா எனவும் நாம் சிந்திக்க வேண்டும் .

அதே  போல அங்கன் வாடிகளும் தொடக்கப் பள்ளிகளும் ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது , இது இனிமேல் வருவது போலத் தோன்றவில்லை ,

தமிழக அரசு ஏற்கனவே இதை இந்தக் கல்வியாண்டில் கொண்டு வந்து விட்டது என்பதை நாம் இதோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

தரமிக்க தொடக்க நிலைக் குழந்தமைக்கல்வியில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு அனைவருக்கும் சாத்தியமாக்குவது என்பதைக் கூர்ந்து பார்த்தால் , குழந்தைப் பருவத்தையே தேர்விற்குள் கொண்டு வர இக்கொள்கை முயலுகிறதே எனக் கோபம் வருகிறது .

இந்த மழலையர் கல்வி MHRD யின் கீழ் வரும் என்றும் , மழலையர் கல்வியும் தொடக்கப் பள்ளியும் ஒன்றிணைக்கும்  திட்ட அறிக்கை தயாரித்து , நடைமுறைப்படுத்த நிதி ஒதிக்கீடு செய்யவும் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் , மகளிர் குழந்தைகள் நல அமைச்சகம் , நலவாழ்வு ,குடும்ப நல அமைச்சகம் , மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய துறைகள் இணைந்து ஒரு சிறப்புக் குழு அமைத்து (1.3)  .... எனக் குறிப்பிட்டிருப்பது , ஏற்கனவே எல்லாம் தயார் , யாருடைய கருத்துக்கும் இடமின்றி இவை நடக்கப் போகின்றது, 6 மாதங்கள் 2019 இல் முடிவடைந்த நிலையில் இதைத் தாமதப் படுத்த மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

கற்றல் கருவிகள் செலவு குறித்து பேசப்படுகிறது. எந்தெந்த விதமான கற்றல் கருவிகள் என இதில் ஒரு பட்டியல் தரப்பட்டிருக்கு , நாடு தழுவி ஒரே பாடத்திட்ட , புத்தக கற்பித்தல் வரும் போது இவற்றின் தயாரிப்பு சில நிறுவனங்களின் வளர்ச்சிக்கானதாக இருந்து குழந்தைகளின் படைப்பாற்ற லுக்கு  இடமில்லா சூழலை   உருவாக்கி , கல்வியில்
மீண்டுமொரு வணிகமய சூழலை நம் கண் முன்னே நிறுத்தும் அபாயம் உள்ளது.

முன்பருவ மழலையர் பள்ளி ஆசிரியர்கள் தயாரிப்பு பற்றிக் கூறியுள்ளதைப் பார்க்கையில் , நிச்சயமாக புற்றீசல் போல தனியார் துறையில் பயிற்சி நிறுவனங்கள் உருவாகி , ஆசிரியரை உருவாக்கும் முயற்சியில் அசுர வேகத்தில்  இயங்க ஆரம்பிக்கும்.

ஒரு புறம் மக்கள் வேலை வாய்ப்பை மனதில் கொண்டு எவ்வளவு பணம் செலவழித்தும் இப்படிப்பைத் தேர்வு செய்து  , அரசுப் பள்ளி வேலைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் சூழல் உருவாகும்.

இந்த இலவச மற்றும் கட்டாய முன் மழலையர் கல்வியை கல்வி உரிமைச் சட்டத்துடன் இணைப்பது குறித்தும் பேசுவதோடு , இந்த ECCE ஐ  வைக்குள் கொண்டு வருவது பற்றிப் பேசியுள்ளது ,

சேவை என்றால் புரியவில்லை .. மேலும் உலக நாடுகளில் பெரும்பாலான முன்னேறிய நாடுகளிலும் குழந்தையின் கற்றல் வயது இந்த 3 வயதில் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை நாமறிவோம் , குழந்தை உளவியலுக்கு எதிரானதாகவும், பாடத்திட்டம் , கற்பித்தல் கட்டமைப்பு தேர்ச்சி முதலிய சொற்கள் குழந்தைப் பருவத்தையே கேள்விக் குறியாக்கும் வன்முறையாகவும் தோன்றுகிறது.

அதோடு , மேலும் ஒரு ஏற்றத்தாழ்வு  மிக்கக் கல்வியைத் தர பலமான அடித்தளம் போடுவதை மழலைக் கல்வியிலேயே உறுதி செய்வ தாகவும் தோன்றுகிறது.

இதைத் தயாரித்தக் குழுவில் யாரும் குழந்தைப் பருவத்தை அனுபவித்து வந்ததில்லையா எனவும் கேட்கத் தோன்றுகிறது.  , எங்குமே விளையாட்டு முறைக் கல்வி என்று கூட அழுத்தம் தரப்படவில்லை.

(ECCE - Early Childhood Care and Education
NCERT- National Council of Educational Research and Training)

தொடரும்
உமா

தேசியக் கல்விக் கொள்கை - 2

நான் ஏன் NEP ஐ வேண்டாம் என்கிறேன் ...

பாகம் 2

தேசியக் கல்விக் கொள்கை 2019

ii) அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு

தற்போதைய இந்தியாவில் 5 கோடிக் குழந்தைகளுக்கும்  மேல் அடிப்படை எழுத்தறிவு , எண்ணறிவு , வாசிப்புத் திறன்களைப் பெற்றிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இக்கல்விக் கொள்கை முன்வைக்கிறது .

எனில் அனைவருக்கும் கல்வி இயக்கம் ( SSA) என்ற ஒரு திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறதே , நாடு  முழுவதும் வருடம் தோறும்  பல்லாயிரம் கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்து செய்யும் அதன் செயல் திட்டங்களுக்கு என்ன பொருள் ?

இந்த அனைவகுக்கும் கல்வி இயக்கத்தின் அடிப்படை வேலையே , அடிப்படைத் திறன்களை மாணவரிடையே மதிப்பீடு செய்ய வருடா வருடம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தி வரும் அடைவுச் சோதனை ,மதிப்பீடு  போன்றன எனில் , இது குறித்து நாம் எவ்வகையான புரிதலை ஏற்படுத்திக் கொள்வது ?

அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை அடைவதற்குத் தடையே... மாணவர்கள் இந்த அடிப்படை எழுத்தறிவு , எண்ணறிவு , வாசித்தல் திறன் போன்றவற்றைப் பெறாத நெருக்கடி எனக் குறிப்பிட்டு இருக்கும் இடம் இந்தக் கல்விக் கொள்கையின் முரண்பாடாக இருக்கிறதே.

தரமான கல்வியை ஏன் இவ்வளவு வருடம் வழங்க அரசு முற்படவில்லை ? அதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் , அதிகாரிகள் ,ஆசிரியப் பயிற்றுநர்கள் இவர்கள் அனைவரும் இப்பிரச்சனை குறித்து என்ன விளக்கம் வைத்துள்ளனர் .. என்று நாம் சிந்திக்க வேண்டும் .

இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் 10 கோடிக்கும் மேலான மாணவர்கள் எழுத்தறிவின்மை இழந்து விடுவர் என்று இக் கொள்கையில் குறிப்பிடுவது ..எவ்வளவு அபத்தமானதாக இருக்கிறது பாருங்கள். அப்போ .... கல்விக்கான திட்டங்கள் இப்படியே தான் வெற்று முயற்சிகளா ? இவ்வளவு வருடங்களின் கானல் நீர் செயல்பாடுகள் தான் இனி வரும் காலங்களிலும் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன இவ்வரிகள் .

கற்றல் நெருக்கடிக்கான முக்கியக் காரணம் முதல் வகுப்பின் முதல் சில வாரங்களிலேயே பின்தங்கி விடுதல் என்கின்றது இக்கொள்கை , தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது 80% ஏற்புடையது அல்ல , பெற்றோரும் சரி , ஆசிரியர்களும் சரி இவ்விஷயத்தில்  விழிப்புடையவர்களாகவே இருக்கின்றனர்.

அதோடு அப்படியே இவ்வாறான பின்தங்கும் நிலை ஏற்பட்டால், நமது அரசுப் பள்ளிகளில்  #வகுப்புக்கு_ஒரு_ஆசிரியர்
நியமிக்காத அரசே அந்தப் பின் தங்குவதற்கு காரணம் என்பதை நாம்  இங்கு பதிவு செய்ய வேண்டும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகப் பொருளாதாரப் பின்னணி கொண்ட குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள இவ்வரைவின் வரிகள் மிக ஆழமானவை. ஆய்வு முடிவுகளும் , காரணங்களும் அறிந்தே இவ்வளவு வருடங்கள் அரசு அமைதி காப்பது ஏனோ ?

இவற்றை எல்லாம் தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வந்து மாற்ற வேண்டும் என்பதில்லை , ஒரு நல்லரசு மக்களின் நலன் விரும்பும் அரசு , மாநிலங்களின் ஒவ்வொரு வருட பணிகளில்  கல்விக் கொள்கைகளைத் தயாரிக்கும் போது இவற்றை சரிப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தால் மிகவும் வரவேற்கத் தக்கது.

ஆசிரியர் நிரவல் குறித்தும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது , இதுவும் இந்த அடிப்படை எழுத்தறிவு & எண்ணறிவு பெறாத நெருக்கடிக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது , ஆகவே ஆசிரியர் நிரவலைத் தவிர்த்து விடுதலே இதற்கு சிறந்த தீர்வுக்கான வழியாக நாம் முன் மொழியலாம்.

கற்றல் நெருக்கடிக்கு மற்றொரு காரணியாக குழந்தைகள் ஊட்டச்சத்து பெறாமல் மதிய உணவு மட்டும் அவர்களுக்குக் கிடைப்பதாகக் கூறுவது முற்றிலும் உண்மை , அது குறித்து அரசே காலை உணவையும் வழங்குவதே எதிர்பார்க்கப்படும் செயல் திட்டம் , இவை நம் சிந்தனையாகக் கொள்ளலாம்.

கல்விக் கொள்கையில், இந்த நெருக்கடியை சரி செய்ய உடனடியாகச் செய்ய என்ன கூறுகின்றனர் என்பதே நமக்கு விவாதப் பொருள்.

நம்மை இடியாகத் தாக்குகிறது முதல் யோசனையே , ஆமாம் ... பண்டைய குருகுலப்படி , சக மாணவர் கற்பித்தல் , கற்பித்தலில் ஆர்வமுள்ள உள்ளுரில் உள்ள படித்தவர்கள் பள்ளி நேரத்திலோ பள்ளி முடிந்தோ சிறப்பு வகுப்பு எடுக்கும் முடிவு . அதிலும் பெண்களை அதிகமாக ஈடுபடுத்துவதாம்.

குறைதீர் கற்பித்தலும் இவர்களைப் பயன்படுத்தவும் , இந்தத் தன்னார்வலர் கொண்ட அமைப்பை முனைப்பு இயக்கமாக செயல்படவும் , இவர்களை சேவை செய்யவும் அழைக்க அரசு முடிவு செய்வதும் ,இவர்களுக்கு ஆதரவு தருவது குறித்தும் பேசுகிறது.

எனக்கு ஒன்று புரியவில்லை , கற்பித்தலுக்கு  ஆசிரியர்களை பணியமர்த்தாமல் தன்னார்வலரை ஏன் வரவேற்கின்றனர் ? அவர்கள் எங்கிருந்து வருவார்கள் ? சம்பளம் பெறாது சேவை செய்ய எத்தனை நாளைக்கு வருவார்கள் ? ஏன் வர வேண்டும் ? அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் ஆசிரியர்களை ஏன் நியமிக்கக் கூடாது ? பிரத்யேக கற்பித்தல் திறன் பெறாத தன்னார்வலர்களை எப்படிப் பள்ளிகளில் குறை தீர் கற்பித்தல் பணிக்கு அமர்த்த முடியும் ?

சுகாதாரம் , உணவு வழங்குதலில் சமூக சேவையாளர்களைப் பள்ளிக் கல்வியில் ஈடுபடுத்தி வறுமையை நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளது மிக அபாயகரமானது. அப்போ கல்வியை சேவையாகத் தான் செய்யுமா ? கல்விக்கு வரி வசூலிக்கப்படாதா ? நாட்டின் மொத்த வருமானத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டிய  நிதி வருங்காலத்தில் அரசால் ஒதுக்கப்படாதா ???இப்படி பல கேள்விகள் நம்மிடையே உருவாகின்றன.

அதோடு ,4 , 5 ஆம் வகுப்புகளுக்கே கூடுதல் நேரம் எழுதுவதற்கு ஒதுக்கப் போவதாகக் குறிப்பிடுவது .... அய்யோ குழந்தைகள் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆண்டு முழுவதும் மொழி வாரம் , கணித வாரம் , மொழி விழா , கணித விழா , மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளிக்கூடங்களை நடத்துதல் ....
1 - 5 வகுப்புகளுக்கே மொழி , கணிதத்திற்கு பயிற்சி நூல் ..

இப்படியான சில தீர்வுகள் ....
ஏன் மொழிக்கு இவ்வளவு அழுத்தம் என்று தெரியவில்லை .

மொழி & கணித வள ஆதாரங்கள் தேசிய அளவில் வலைத்தளம் திக்க்ஷா (DIKSHA) ....இல் வள ஆதாரங்கள் (Resources) சேகரிப்பது குறித்தும் சொல்கிறது ,இது அரசு உடன்படிக்கை எடுத்துக் கொண்ட நிறுவனமோ ? ஏனெனில் கடந்த  சில ஆண்டுகளாக தமிழகத்திலும் கல்வித் துறை இந்த வலைத் தளத்தைப்  பரிந்துரைத்து வருகிறது.

அடுத்து ... தேசிய போதகர்கள் திட்டம் , அதில் சேவை , மாநில அரசு சான்று என எல்லாவற்றையும் நாம் எதிர்க்கும் வகையிலேயே தருகிறது.

திரும்பத் திரும்ப , பள்ளி நேரத்திற்குப் பிறகும் , கோடை  விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் , அதுவும் தன்னார்வலர்கள்  கொண்டு எடுப்பது , ஓய்வு பெற்ற ஆசிரியர் , இராணுவ அதிகாரி , இவர்களுக்கு NTP & RIAP திட்டங்களில் இணைத்து , உள்ளுர் சமூகம் சம்பளம் வழங்குவது என ஒரு பயங்கரத் திட்டம்.

இங்கு போதகர் தான் பிரதானம் ,

மேலும் , மாணவர் கற்றலில் வலுவான தகவமைப்பு மதிப்பீட்டு முறை உருவாக்கம் பற்றி குறிப்பிடுகிறது. இது 2023 க்குள் கணினி ,கைக்கணினி மூலம் மேல்நிலைப் பள்ளிக்கு அறிமுகம் செய்து பிறகு ஒவ்வொரு குழந்தைக்கும் விரிவாக்கும் என்று கூறுகிறது .

இது ஆசிரியருக்கே தொடர்ந்து அழுத்தம் தரும் செயல் .

முதல் வகுப்பு குழந்தைகளுக்குக் கட்டகம் தயாரிப்பு பற்றி குறிப்பிட்டு , NCERT கலைத்திட்டம் , பாடத்திட்டம் இதுவெல்லாம்  வருவதோடு குழந்தைகளின் பள்ளி வேலைகள் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பப்பட்டு பெற்றோரை ஈடுபடுத்துவது பற்றி குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தாத நடைமுறை. அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தையின் பெற்றோருக்கு , அன்பாக அவர்களிடம் 2 வார்த்தை பேசவே நேரமில்லாம , தங்கள் வாழ்வாதாரம் தேடும் சூழல் .... எங்கே project செய்வார்கள் ?

மாணவர் அதிக மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல் பற்றி பேசுகிறது .... முதலில் தாய் மொழி வழிக் கல்வி பற்றி பேசுங்கள் , இரு மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர் நியமனம் பற்றிப் பேசுங்கள் ... இதை விடுத்து பல மொழி பற்றி பேசுவது பயனற்றது.

இந்த 2 ஆம் தலைப்பு முழுக்க சமூக ஆர்வலர் , போதகர் , சேவை குறித்தே பேசப்பட்டுள்ளது  , மருந்துக்குக் கூட .....பாடல் வழிக் கற்பித்தல் , விளையாட்டு முறை கல்வி , விளையாட்டுத் துறை  ,வேறு இயல்பான இயற்கையான கற்றல் கற்பித்தல் பற்றி எதுவும் கருத்துகள் இல்லை. வாழ்வியல் கல்வி குறித்த எந்த சிந்தனையும் இல்லை. நம்மையும் குழந்தைகளையும் கவலை கொள்ளச் செய்யும் அத்யாயம் இது.

(NCERT- National Council of Educational Research and Training,
NTP - National Tutor's Program
RIAP- Remidial Instructional Aides Program)

தொடரும் வலிகள்
உமா

தே.க. கொள்கை - 3

நான் ஏன் தேசியக் கல்விக் கொள்கையை வேண்டாம் என்கிறேன் ...

பகுதி : 3

இடைநின்ற மாணாக்கரை மீள் ஒருங்கிணைத்தல்  - கல்வியை  அனைவரும் அணுகுவதை உறுதிப்படுத்துதல்  ....

2030 க்குள் 3 வயது முதல் 18 வயது குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி என்று தான் ஆரம்பிக்கின்றது இந்த மூன்றாம் பகுதி.

பள்ளிக் கல்வித்தரவுகளின் அடிப்படையில் 5 ஆம் வகுப்பிற்குப் பிறகு அதிகமான இடை நிற்றல் குறித்தும் ,கடந்த 2015 இல் தேசிய அளவில் 6.2 கோடி குழந்தைகள் ( 6 - 18வயது ) பள்ளியை விட்டு விலகியதாகவும் கூறுவது ...
ஏன் ? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது .

அதற்குக் காரணங்களும் அவர்களே சொல்கின்றனர் , 5 ஆம் வகுப்புக்குரிய மொழியறிவும் கணித அறிவும் பெறாததால் என்றும் , பள்ளி வீடு இரண்டிற்கும் தொலைவு அதிகம் எனவும் கூறும் இந்த வரைவுக்கு....

நமது பதில் , மாற்று யோசனையாக..... ஏன்  போக்குவரத்து வசதி செய்து தரக் கூடாது ? என்பது , ஆனால் இலவச பஸ் பாஸ் திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டு தானே இருக்கின்றன எனவும் கேட்கலாம் ...

திரும்பத் திரும்ப உண்மையான பிரச்சனைகளைக் குறிப்பிடுகிறது இந்த வரைவு  , பெண் குழந்தைகள் ஏன் இடைநிற்றலுக்கு ஆளாகின்றனர் என்றும் குறிப்பிடப்படுகிறது , பாதுகாப்பு இல்லை , கழிவறை வசதி இல்லை என்று கூறும் வரைவை நோக்கி,  ஏன் அரசுப் பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள்  சரியாகத் தந்து , முழுமையாக செயல்படும் பள்ளிகளாக மாற்றவில்லை என்ற கேள்வி நமக்குள் எழ வேண்டும் .

கல்வி ஒத்திசைவு (Concurrent) பட்டியலில் இருக்கும் போதே இந்த நிலை எனில் மைய அதிகாரத்திற்குச் சென்றால் நாம் எங்கிருந்து நமது உரிமைகளைப் பெறுவது ? கழிப்பறை வசதிகள் உட்பட ..

இடைநிற்றல் விகிதத்தை உயர்த்த பள்ளிகளில் சமூக செயல்பாட்டாளர்கள் , ஆலோசகர்களைப் பணி அமர்த்த வேண்டும் எனக் குறிப்பிடும் வரைவு , இவர்கள் எல்லாம் யார் ? என்று தெளிவாகக் குறிப்பிடாத இடத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இது சாத்தியமா ? அல்லது தேவையா என்பதனையும் நாம்   சிந்திக்க வேண்டும் .

3.1 இல் குறிப்பிட்டுள்ளபடி , மாணாவர் வருகை சதவீதம் குறைவாக இருப்பின் ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றுதல் மிகப் பெரிய வன்முறை. வேறு வேறு வாழிடத்தில் இருந்து வரும் குழந்தைகள் நெடுந்தூரம் பிரயாணம்  செய்து ஒரு பள்ளிக்கு வர வேண்டும். உதாரணமாக 4 பள்ளிகளை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றினால் , அங்குள்ள தலைமை ஆசிரியர்களில் 3 பேர் வெளியேற நேரிடும் , பாட ஆசிரியர்களுக்கும் இதே நிலை , எனில் எதிர்காலத்தில் அப்பணியிடங்கள் அரசுக்கு திரும்ப ஒப்படைக்கப்படும்  , ஆசிரியர் பயிற்சி படித்த இளைய சமுதாயத்துக்கு  வேலை வாய்ப்பே இல்லாத ஒரு சூழலை இயல்பாகவே இது உருவாக்கும் .இதை பின்வரும் செய்தியோடு இணைத்துப் பாருங்கள் ..

இந்த வாரம் நமது கல்வி அமைச்சரது உரையாக வெளிவந்து கொண்டிருக்கும்  மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு நூலகமாக மாற்றப்படும் என்பதை இதோடு தொடர்பு படுத்திப் பாருங்க ... எனில் ஏற்கனவே தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் திட்டவட்டமாகக் கொண்டு வரப்பட முன் தயாரிப்பு செய்து வரப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

  பள்ளி மேலாண்மைக் குழு(SMC) பற்றி ஒரு வரியில் மாணவர் வருகையைக் கண்காணிக்க என்று மட்டும் வருகிறது. ஆனால் நடைமுறையில் இக்குழுக்களின் பலமே வேறு , அது பற்றி எந்த விபரங்களும் இல்லை.

பின்தங்கிய மாணவரைக் கண்காணிக்க , NTP  (National Teacher Platform ,  RIAP ஆகிய அமைப்புகளை குறை தீர் கற்பித்தலுக்காக தொடர்புபடுத்தியுள்ள வரைவுக் குழுவிடம் கேட்கத் தோன்றுவது ....

ஒரு ஆசிரியர் 8 மணி நேரம் குழந்தைகளிடம் இருப்பது தாண்டி புதியதாக ஒருவர் வந்து அவர்கள் எந்த இடத்தில் கற்றலில் பின்னடைவர் , ஏன் அந்தப் பின்னடைவு என்பதைஎவ்வாறு
கண்டறிய முடியும் ?

ஆசிரியரால் மட்டுமே சரி செய்து குறை தீர் கற்பித்தலைக் கையில் எடுக்க முடியும் ... அதை விடுத்து , இவர்கள் கூறும் தன்னார்வலர்களால் அப்படியான கற்றலைக் குழந்தைகளுக்குள்  ஏற்படுத்த இயலவே இயலாது .

திரும்ப 3.7 இல் இந்த வரைவு குறிப்பிடுவது , பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களைக் கண்காணிக்க சமூக செயல்பாட்டாளரை நியமித்து அவர்கள் வழியாக திரும்ப இடை நிற்பவரை பள்ளிக்குள் வர வைப்பதாக ... எனில் , இந்த சமூக செயல்பாட்டாளர்கள் யார் ? இவர்களுக்கு யார் ஊதியம் தருவது ?

அதே போல 3.8 முழுப் பத்தியும் , சமூக செயற்பாட்டாளர்  மற்றும் ஆலோசகரின் பங்கு என்றே குறிப்பிட்டு NTP & RIAP பற்றியே பேசுகின்றது வரைவு , சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை  (CWSN ) யும் இவர்களே கல்வி அமைப்பில் ஈடுபடுத்துவர் எனில் , அரசின் பங்கு என்ன ?  ஏற்கனவே நடைமுறையில் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் 9-12 வகுப்பில் உள்ள CWSN குழந்தைகளுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை ,ஏறக்குறைய 15000 குழந்தைகளுக்கு  வெறும் 150க்கும் குறைவான ஆசிரியர்களே இருக்கின்றனர்.

எத்தனையோ பெற்றோர்கள் , அரசுப் பள்ளியில் இப்படியான குழந்தைகளுக்கு அனுசரணை இருக்கு எனவும் , தனியார் பள்ளிகளில் மாதத்திற்கு பல பல ஆயிரங்கள் செலவாகின்றது எனவும் , அங்கே செலவு செய்தாலும் மகிழ்வான கற்றல் சூழல் குழந்தைகளுக்கு இல்லை எனவும் என்னிடம்  பகிர்ந்துள்ளனர்.
இப்படியான சூழலில்  CWSN என்ற ஒரு பிரிவினையை புறக்கணிக்கின்ற  போக்கு இவ்வரைவில் உள்ளது கவனிக்க வேண்டியது .

பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தும் பேசும் வரைவு அங்கும் சமூக செயல்பாட்டாளர்களையே முன்னிறுத்துகிறது.

மாணவர்களை 14 வயதிலேயே திறந்த வெளி கல்விக்கு அனுப்ப வியூகம் வகுக்கிறது வரைவு . முறை சார் கல்வி வகுப்பு 3 , 5 , 8 க்கு இணையாக என்பதும் புரிபடவில்லை.

3.12 இல் கல்வி உரிமைச் சட்டத்தைத் தளர்த்தல் என்றும் பல முன்மாதிரி பள்ளிகளை அனுமதித்தலும் குறிப்பிடுவதில் .. பல பிரச்சனைகள் , அரசு சாரா அமைப்புகள் பள்ளிகளைக் கட்ட அனுமதி பற்றி பேசுவதில் தனியார் ப் பள்ளிகள் உருவாக்கம்  குறித்த அப்பட்டமான நிலை புரிகிறது.

குருகுலம் , பாடசாலை , வீட்டுப் பள்ளி , மதரசாக்கள் ... உருவாக்க கல்வி உரிமைச் சட்டத்தைத் தளர்த்துவதாகக் கூறப்படுவது அரசியல் சாசனத்தையே புறம் தள்ளுவதாக இருக்கிறது. கொடையாளர்கள் , அரசின் கூட்டு நடவடிக்கையில் முன் மாதிரி பள்ளிகள் உருவாக்குதல் குறித்து பேசுகிறது.

எனவே .. இது முழுக்க முழுக்க தனியாருக்கு கல்வியை வியாபாரம் செய்யும் 100% நோக்கம் என்பதனை நாம் மனதில் இருத்த வேண்டும். வாழ்வாதாரத்திற்கே போராடும் , பொருள் தேடும்  நிலையில் உள்ள பெற்றோரை , வறிய அடித்தட்டு மக்களை , தங்கள் குழந்தைகளுக்கு,  கல்வியே தேவையில்லை என்பதான முடிவுக்கும் வரலாம்.

இதுவரை குறிப்பிட்டுள்ள 3 பகுதிகளிலுமே எதற்குமே நிதி ஒதுக்கீடு குறித்தான எந்தப் பார்வையும் இல்லை .

முழுக்க முழுக்க கல்வி மறுக்கப்படுவதற்கான அத்தனைக் கூறுகளும் இந்த வரைவரைக்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தெளிவாக இருப்பதால் இக் கல்விக் கொள்கையை நிரந்தரமாக நிராகரித்து வேண்டாம் என்கிறேன்.

தொடர்ந்து நிராகரிப்பதற்கான காரணங்களை பகுதி பகுதியாக இங்குப் பதிவிடுகிறேன். இதற்கு முன் உள்ள எனது 2 பகுதிகள் குறித்து படிக்க, கீழே  லிங்க் தருகிறேன் .

https://m.facebook.com/story.php?story_fbid=1174468889402829&id=100005191869415

https://m.facebook.com/story.php?story_fbid=1175159916000393&id=100005191869415

உமா