Saturday, 24 February 2018

வகுப்பறை உளவியல் 4

பாட்டும் கதையும் பேச்சும் செயலும் ....

வீடுகளிலேயே தன்னைச் சுற்றியுள்ள சூழலிருந்து குழந்தைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு தான் வருகின்றனர். இருப்பினும் அதனை முறைப்படுத்தி LSRW என்ற கேட்டல் , பேசுதல் , வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை அவர்களிடத்தில் வளர்த்தலே  ஆசிரியர்களின் தலையாய கடமையும் பொறுப்பும் எனலாம்.

இந்தத் திறன்கள் மொழிப் பாடத்திற்கே பொருந்தும் என நினைத்து மற்ற பாடங்களுக்கு அறிமுகப் படுத்தாமல் இருந்திடல் ஆபத்து, ஏனெனில் எல்லா பாடங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

ஆகவே தான் எனது கணக்கு மாணவர்கள் செயல்பாடுகளுக்கு , கணக்கு பற்றிய பாடல்கள் பாடுகின்றனர். கணக்குக்குக் கதை சொல்கின்றனர் .

எனது அறிவியல் மாணவர்கள் பட்டிமன்றம் நடுத்தி அசத்துகின்றனர். நாடகம் நடித்து அறிவியல் கருத்துகளை மற்றவர்களிடையே எடுத்துச் செல்ல முயல்கின்றனர் ,

இங்கு கணிதப் பாடம் மொழிப் பாடக் கூறுகளை தன்னகத்தே ஒருங்கிணைத்து மாணவரை சிந்திக்க வைக்கிறது.

அறிவியலிலும் மொழிப் பாடம் ஆதிக்கம் செலுத்துவதைப்  புரிந்து கொள்கின்றனர். அதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்குவது ஆசிரியர்களின் தலையாய பொறுப்பு .

7ஆம் வகுப்பு அறிவியல் பாட வேளை..

வகுப்பிற்குள் நுழைந்ததுமே ....
பல குரல்கள் , மிஸ் நான் படிச்சேன் , நான் ப்ராஜக்ட் செய்தேன் , நாங்க எல்லாரும்  வாய் விட்டுப் படிச்சோம் , நல்லா மனப்பாடம் ஆச்சு ,  ஜாலியா இருக்குங்க மிஸ் ... காலையிலேயே எவ்வளவு எனர்ஜி எனக்கு தொற்றிக் கொண்டது , மாணவர்களது உற்சாகத்தால் ....

பாடம் பற்றி அடுத்த உரையாடல் உள் நோக்கிச்  செல்ல , அறிவியல் வகுப்பு தமிழ் வகுப்பானது மீண்டும் ...

சரி ... இன்றைக்கு ஒரு கதை சொல்லலாமா ? என்றேன். ஓ.... எனக் கூச்சலிட ....

தாரே ஜமீன் பர் படத்தின் கதையை முழுவதுமாகக் கூற.. ஒருவரும் சற்றும் கவனம் விலகாமல் கேட்டனர். பல்வேறுபட்ட முக உணர்ச்சி , மகிழ்ச்சி , இறுதியில் இஷானின் திறமையைக் கண்டறிந்த ஆசிரியரைப் பாராட்டினர் ... டிஸ்லக்ஷியா பற்றி அவர்களுக்குக்  கூறவே  இப்படக் கதையைக் கூறினேன்.

இதில் வரும்  இஷான் என்ற மாணவனது புரிதலில் குறைபாடு பற்றி விவாதித்தோம். எழுத்து டான்ஸ் ஆடுமா மிஸ் ?.... இஷான் மாதிரியே  யாராவது இருக்காங்களா என்றேன் ... மிஸ் , திவ்யா அதே மாதிரி தான் மிஸ் யார் கூடவும் பேச மாட்டா , தனியாகவே இருக்கா ,யார் கூடவும் பேச மாட்டா ...

திவ்யா ..... இங்க வாம்மா ?

சில விசாரிப்புகள் பேசும் போதே பயந்தாள். பிறகு அவளை என் பக்கம் இழுத்து , கைகளைப் பிடித்தேன். அதற்கே சிலிர்த்தது அந்தக் குழந்தை , ஏதோ சில காரணங்களால் தனிமைப்படுத்துப் பட்டு தன்னை ஒதுக்குக் கொள்கிறாள் என்று மட்டும் புரிந்தது. அது எதுவாக வேண்டுமானாலும்  இருக்கலாம்  , ஆனால் தற்காலிகமாக  அந்த சூழலை மாற்ற நினைத்தேன்.

பத்மப்பிரியா ..... திவ்யாவ உன் பக்கத்தில் உட்கார வச்சுக்கறயா ம்மா ..? திவ்யா உடன் எல்லோரும் பேசுங்க , அவளுக்கு வேண்டிய அளவு சொல்லிக் கொடுத்து படிக்க வை பத்மா ....

சரிங்க மிஸ் , நான் பாத்துக்கறேன் ... இது பத்மா ...

அந்த திவ்யா தான் வகுப்பறை உளவியல் 3 இல் நான் குறிப்பிட்டு இருந்த நீரின் மூன்று நிலைகளை செல்பாடாக நொடியில் தந்த திவ்யா .... இந்த நிகழ்ச்சிகளுக்குப்  பின்னரே திவ்யா மீத்திறன் குழந்தையாக அடையாளம் காணப்பட்டாள் ... இப்போதெல்லாம் அனைவரிடமும் பழகுகிறாள் , என்னிடம் வந்து ,  "நான் வீட்டில் வாய் விட்டுப் படிக்கிறேன் மிஸ் ", என்கிறாள் ....

தொடரும்
உமா

Sunday, 11 February 2018

வகுப்பறை உளவியல் - 2


################
வாய் விட்டுப் படிங்க
*********************
நான் சின்ன வயசில் பள்ளியில் படிக்கும் போது வீட்ல அடிக்கடி எங்க பாட்டி குரல் வந்துகிட்டே இருக்கும். வாய் விட்டுப் படி , சத்தமாப் படி என ஒரு நாளில் பல முறை இது எதிரொலிக்கும் .

நானும் அதை அப்படியே கேட்பேன் , பள்ளியில் ஆசிரியர்கள் யாராவது எழுந்து படி என்று சொன்னால் போட்டி போட்டுக் கொண்டு படிப்பேன் .

இன்னாட்களில் , எனது வகுப்பறையில்   மாணவிகளிடம் படிப்பது என்பதே வழக்கமில்லாது ஓரிருவர் மட்டும் படிப்பதைக் காண வருத்தமாக இருந்தது. எங்களுக்கு இடையே ஏற்பட்ட உரையாடல் ...

ஏம்மா கட கடனு படிக்கணுமே , வீட்ல எல்லாரும் புத்தகம் எடுத்து படிப்பதில்லையா ?

சரி , இன்னைக்கு வீட்டுக்குப் போன உடன் எல்லாரும் Sciene Book எடுத்து குறைந்தது ஒரு மணி நேரம் வாய் விட்டுப் படிக்கனும் , அப்படிப் படிக்கும் போது உங்க கண் எழுத்துகளைப் பார்க்கும் , சத்தமாக உச்சரிக்கும் போது அந்த ஒலி திரும்பத் திரும்ப நம் காதுகளில் கேட்கும் , அப்போது விரைந்து மனதில் பதியும் , நல்லாப் புரியும் , அதனால இன்னைக்கு வீட்டுக்குப் போய் என்ன செய்யணும் ?

கோரஸாக ... சத்தம் போட்டு படிக்கணுங்க மிஸ் .....

அடுத்த நாள் காலை ...

மாணவிகளில் சிலர் .... மிஸ் நான் வீட்ல படிச்சேன் , மிஸ் நானும் , மிஸ் நானும் எனக் கூறி மகிழ ,
சரி ஒவ்வொருத்தரும் சொல்லுங்க என்ன செய்தீங்க ?

மிஸ் நான் படிச்சேன் சத்தமா எங்கம்மா அதிசயமா பார்த்தாங்க , ஒன்றரை மணி நேரம் படிச்சேன்.

மிஸ் எனக்கு நல்லா புரிஞ்சுது , நீங்க சொன்ன மாதிரியே படிக்கும் போது மைன்ட்ல எல்லாம் ஒடுச்சு ,

மிஸ் , புது Words எல்லாம் Dictionary பார்த்து கண்டு பிடிச்சு படிச்சேன் மிஸ் , நல்லாப் புரியுதுங்க மிஸ்

மிஸ் , நான் சத்தம் போட்டு படிச்சதால் பக்கத்துல பேசினது எல்லாம் காது கேட்காம, தெளிவாப் படிச்சேன் ,

இப்படியே ஒரு 22 பேர் மாறி மாறி சொல்ல , மற்ற 18 பேர் படிக்கலங்க மிஸ் எனக் கூறி எழுகின்றனர்.

படிக்கத் தெரியாதவங்க எழுத்தக் கூட்டி படிங்க என கரும்பலகையில் 2 வார்த்தைகளை எழுதிப் போட்டு உச்சரித்துக் காட்ட , ஓ... சரிங்க மிஸ் என்றனர்.

அன்று முகநூலில் Malathi Swaminathan அவர்களின் இது சம்மந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சிப் பதிவைப் பார்த்தேன் , அதை வகுப்பறையில் அவர்களிடம் படித்துக் காட்டினேன். இது மேலும் அவர்களை வலுவூட்டியது.

மேலும் அடுத்தடுத்த நாட்களில் வாய் விட்டுப் படித்தலே ஒரு ஆய்வாக அந்த வகுப்பறையில் கலந்துரையாடப்பட  ஒரே வாரத்தில் அனைவரும் தங்கள்  வாய் விட்டுப் படித்தலினால் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

நிவேதா என்ற மாணவி , மிஸ் இதுவரை நான் படிச்சதே இல்லங்க மிஸ் , ஆனா நேற்று முதல் முதலா வீட்ல புக் எடுத்துப் படிச்சேன் ,4 பக்கம் படிச்சேன் மிஸ் , ரொம்ப ஹேப்பியா இருந்தது.

எங்கள் வகுப்பறை மகிழ்ச்சியாலும் அனுபவத்தாலும் , ஆரவாரத்தாலும் நிறைந்தது
தொடரும்
அன்புடன்
உமா