Sunday, 26 October 2025

கற்பித்தல்-கற்றல் மாற்று சிந்தனைத்துளிகள்"

#பதிமூன்று_ஆண்டுகளுக்கு_முன்பு.... 

"கற்பித்தல்-கற்றல்  மாற்று சிந்தனைத்துளிகள்"

               ”கற்பித்தல்  கடலில் பயணம் செய்ய 
                கட்டகங்கள் மட்டுமே கப்பல்களாகாது !!!
                கட்டுமரங்களையும்  நாமே உருவாக்கும் 
                கற்பித்தல் உபகரணங்களாலாக்கினால்
                கரை  சேர்ந்து இனிதாக்கலாம்
                கற்பித்தல் கடல் பயணத்தை!!!!!!!

முன்னுரை:
              கற்றலும்  கற்பித்தலும் ஒன்றுடன்  ஒன்று பின்னப்பட்ட  நூலிழைகள். அவற்றின்  இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன்  இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம்  நிறைவேறும்   .
               மனிதன்  தோன்றிய  நாள்  முதலே கற்றுக்  கொண்டு  இருக்கின்றான் . தானே கற்றல்  வழியாகத்தான்   பல  நூற்றாண்டுகள்  வாழ்ந்திருக்கின்றான் என்று கூறினால்  மிகையாகாது . அங்கு  கற்பித்தல் என்பது  மறைமுகமாக  வாழ்ந்து வந்தது. இங்ஙனம்  வாழ்ந்த  கற்பித்தல்  இன்றைய  21 ஆம்  நூற்றாண்டில் பயிலும்  மாணவனுக்கு  ஒரு  சவாலாக  அமைந்துள்ளது  என்றால்  அது  சாலச் சிறந்தது.

கற்றல்-கற்பித்தல்:
             மாணவர்களைப்  பொறுத்து , வகுப்பறையில் நிகழும் மிக  இன்றியமையா  அனுபவங்களே கற்பித்தலும்  கற்றலும்  எனலாம் .ஆசிரியர்களின்  துணையின்றி இயல்பாகக்  கற்கும்  திறன்  பெற்றவன்தான்  மாணவன் . ஏனென்றால்  கற்றல்  மனிதனின்  அடிப்படைப் பண்பு . ஆனால்  வரையரைகளுக்குட்பட்ட கற்றல்களை   ஏற்படுத்திக்கொள்ள  மாணவன்  தன்னை இணைத்துக்  கொள்ளும்  தருணமும்  தளமும் தான்  வகுப்பறைக் கற்பித்தல் அனுபவமும்  வகுப்பறையும்…….
  
மாற்றுச்  சிந்தனை  
            
                       கட்டகங்களின்  பக்கங்களை  நிரப்பிவரும் பாடப் பொருளின்  துணைக்கருவியான  புத்தகங்களை  நாம்  தொட்டுக்  கொள்ளலாமே  தவிர ,சிந்தனைகளை  அவற்றுள்  தொலைத்துவிடக் கூடாது என்பது  எமது  கருத்து ,  கொடுக்கப்பட்டப் பாடங்களை  அவன்  புரிந்தும்  புரியாமலும்  மனனம் செய்யவோ,இயந்தரத் தனமாய்  ஒப்புவிப்பதோ  எந்த  நடத்தை மாற்றங்களையும் , அவனுள் எந்த  நிலையிலும் ஏற்படுத்தி , கற்றலை  நிகழ்த்திவிடாது  என்பதும்  எனது எண்ணம்..அது பெரும்பாலான  ஆசிரியரது  கருத்துக்களும் ஆகுமே.    
             ஆகையால் பாடங்களோடு  தொடர்புடைய உலக  அனுபவங்களைப் பெற  அவனுக்கு  உதவி  செய்வதும் ,வழிகாட்டுவதும் ,துணை  நிற்பதும் ஆசிரியர்களான  நமது  தர்மம்.
              வாழ்க்கையோடு  இணைந்த  கல்வியாக  வகுப்பறைக் கல்வியும்  மாற்றம்  பெற  வேண்டுமானால்  நம்  சிந்தனையிலும்  மாற்றம்  தேவை. ஏனெனில்  மிகச்  சிறந்த  சிந்தனை என்றாலும்  அது  ஒருவழிச்  சிந்தனையாக  இருந்தால் , மாணவரைப் புதுமைகளைப் படைக்கவோ , அவர்களது திறன்களை வெளிக்கொண்டு சாதனைகளைப் படைக்க  வாய்ப்புகளின்றியோ பயன்ற்றுப்  போய்விடும்…
             இதனடிப்படையில் ஆசிரியர்களான நாம்  மாற்றுச் சிந்தனைக்கு  வழிகோல வேண்டும் .இதனடிப்படையில்  தோன்றியதுதான் கீழ்வரும்  மாற்றுச் சிந்தனைத் துளிகள்….

ஹப்புல்ஸ் கான்செப்ட்(HUBBLE’S CONCEPT):
        
           ஒளியூட்டப்பட்டத் தொலைநோக்கி:
                    வான்பொருள்களைக் கண்டறிய,உற்று நோக்க முதன் முதலில் தொலைநோக்கித் தந்தவர் நமது  கலிலியோ.அறிவியலின் பரிணாம  வளர்ச்சியில் இன்று அவை  ஹப்புல்ஸ் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன .
                  ஹப்புல்ஸ் (HUBBLE’S)-இது வானவெளியில் சூரிய மண்டலத்திற்கு அப்பால் பறந்து தகவல்களைச் சேகரித்து அனுப்பும் ஒரு தொலைநோக்கி .இதன்  அடிப்படைத் தத்துவம் என்னவெனில் ,இருளில் இருக்கும் பொருள்களை ஒளியூட்டி படம் எடுப்பது ,அவற்றை  ஆராய்ச்சிக்காக பூமியின் ஆராய்ச்சி வல்லுனர்கள் சேகரிக்கின்றனர் .
                 இந்த அடிப்படைத் தத்துவம் விண்ணுலகு முதல் மண்ணுலகு வரை நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ளதை நாம்  கண்ணுறலாம் . ஆம்  இது ஒரு மிகப் பெரிய சிக்க்கலான கருத்து. ஆனால் இதை எளிமையாக  மாணவருக்கு  கற்பித்தலில் தருவதற்காக நான் வடிவமைத்த எளிய கற்றல் உபகரணமே ஒளியூட்டப்பட்ட இரட்டைக் குழல் உருப்பெருக்கி (Lighting Binocular) . 

ஒளியூட்டப்பட்ட இரட்டைக் குழல் உருப்பெருக்கி (Lighting Binocular) 

                தூரத்தில் உள்ள பொருட்களைத் தெளிவாக பெரிது படுத்தும் கருவி இது. இதற்கு எளிய முறையில்  “டார்ச்” இணைத்து ஒரு இருட் டறையில் உள்ள பொருளை மையமாக  வைத்து  நோக்கும் போது அது தெளிவாகத் தெரியும் . இதை எமது மாணவர்களுக்கு வகுப்பறையில் செய்து காண்பிக்கும் போது மிகவும் உற்சாகமாக்க் கண்டு புரிந்து கொண்டனர் .இதன் வழியாக நான்  தொடர்புபடுத்திய செய்திகள் பின்வருமாறு..இதையே  தொலை நோக்கிக்கும் பொருத்தலாம்..
 ஹப்புல்ஸ் தத்துவம்,
 இருட்டில் தெரியாத் பொருட்களைக் காணல்,
 அன்றாட வாழ்வில் நாம் காணும்-நேஷனல் ஜியோகிராஃபிக்கல் தொலைக்காட்சி சேனல்கள்,காவல் துறையினரின் ஒரு பிரிவான புலனாய்வுத் துறை,இங்கெல்லாம் இந்த தத்துவம் பயன்படுத்தப்படுகிறது.
 (Bank Robbery) வங்கித் திருட்டுகள்-தடுப்பு முறைகளிலும் இது போன்ற கேமராக்களில் பயன்படுத்தப்படுகிறது.
 அறிவியல் துறையில் பல வேர்களுக்கு இந்தத் தத்துவம் ஆதாரமாக உள்ளது.
 இதை ஆடிகள், பொருட்களின் பிம்பங்கள் பாட்த்திற்கும் பயன்படுத்தலாம் .
    
ஒளியூட்டப்பட்ட நுண்ணோக்கி (Lighting Microscope)
        சாதாரணமாக  அறிவியல்  ஆய்வுக்  கூடங்களில் பயன்படும் நுண்ணோக்கிகள் வழியாக, நம்மால் பாக்டீரியா,வைரஸ் இவற்றைப்  பார்க்க முடியாது. இவற்றைக்  காண அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  எலக்ட்ரான் நுண்ணோக்கிகளைப் பயன்படுத்துகின்றனர் . 
        அவற்றின் மதிப்போ பல கோடிகளில்.அவை பற்றிய தெளிவான அறிவை நம் மாணவருக்கு வழங்குதல் என்பது நம் நிலையில் சற்றுக் கடினமே .இதன் தத்துவமும் ஒளியூட்டலே .ஆகையால் ,நமது  அறிவியல் ஆய்வக நுண்ணோக்கிக்கு ”டார்ச்” கொண்டு ஒளியூட்டினோம்… ஒளியூட்டப்பட்ட  நுண்ணோக்கி வழியாகத் தொடர்புபடுத்தியவை…………
                                   சூரிய ஒளியில் இயங்கும் சாதாரண நுண்ணோக்கியை,இருளில் (அ) சூரிய ஒளி கிடைக்காத இடங்களிலும் இந்த ஒளியூட்டலின் மூலம் பயன்படுத்தலாம் .
                                    DNA-ஆராய்ச்சி என இன்று உலகில் அறிவியல் ஆய்வுகளில் மிக முக்கியமாகப் பயன்படுத்தும் எலக்ட்ரான் நுண்ணோக்கிகளின் தத்துவம் இதனடிப்படையில் அமைந்ததே.(இங்கு தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் .அவை மிகப் பெரும் செலவுகளில் வடிவமைக்கப் பட்டிருக்கும் Developed versions)
                                       ஜெனிடிக் என்ஜினியரிங் என்று  கூறப்படும் ஆய்வுப்  படிப்பில் இந்த எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் பயன்படுத்தப்படும்.
                                       சாதாரண  நுண்ணோக்கிகளில் ஆல்கே,பூஞ்சை இவற்றை Slide வழியாக்க் காணலாம்.ஆனால் வைரஸ்,பாக்டீரியா இவற்றைக் கண்டறிய எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் மட்டுமே உதவும்.
                                   இருளிலும்,மழைக்கால மாலை வேளைகளிலும் ,பள்ளிகளில் செயல்முறை(Practical Exams) தேர்வு/செயல்முறை வகுப்புகளிலும் இது போன்ற எளிய ஒளியூட்டப்பட்ட நுண்ணோக்கிகளைப் பயன்படுத்தலாம்.
   
 மாணவரிடையே கிடைத்த அனுபவங்கள்/விளைவுகள்
                 இவற்றைக் கண்ட மாணவர்கள் ஒவ்வொரு செயலையும் அறிவியல் மனப்பான்மையோடு நோக்குகின்றனர். சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி புதிய கோணங்களில் அறிவியல் படைப்புகளை உருவாக்க  முயலுகின்றனர். அன்றாட வாழ்க்கை  நிகழ்வுகளைத் தொடர்புபடுத்த  எத்தணிக்கின்றனர் .
                 இவைதான் கற்பித்தல்  வழியே நாம் எதிர்பார்க்கும் விளைவு .அது ஆரம்பமாயிருக்கின்றது. 
மற்றுமொரு விளைவு:
                  இந்தப் படைப்புகளை எங்கள் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம் பெற எனக்கு வாய்ப்பு கிடைத்தது.இந்த சிந்தனையை பல நூறு மாணவர்கள் ஆர்வத்தோடு கேட்டறிந்தனர் .அவர்களிடம்  ஏன்?எதற்கு? எப்படி? எனப்  பலவிதக் கேள்விகள். ஆர்வமிக்க  மாணவர்கள்  சிந்திக்க  இவை பயன்பட்டன .குழந்தைகளின் படைப்பாற்றல் திறன் வளர இந்தக் கற்பித்தல் உபகரணம் தூண்டுகோலாக  அமைந்தது . ஏராளமான மாணவர்கள் தொடர்பு படுத்துதலை வரவேற்று ,புரிந்து கொண்டு மகிழ்ந்தனர்.
                 ஏராளமான  ஆசிரியர்களும்  இதைக்  கண்டறிந்து கொண்டனர் .மாற்று  சிந்தனைகளைத் தமக்குள் கொண்டுவர இதை ஒரு வாய்ப்பாக எடுத்தவரும் உண்டு .இந்த கருத்துக்கு,ஆசிரியரது பிரிவில் மாவட்ட முதலிடம் பரிசும் எனக்குக் கிடைத்தது.இதற்கு என்னை ஊக்குவித்தவர்கள் மாணவர்களே…

முடிவுரை:
               எங்கோ ஒரு துளி ,எங்கோ ஒரு பொறி இவை  ஒவ்வொரு  மாணவரையும் கற்கவும் ,படைப்பாற்றல் திறனை  வெளிக்கொணரவும் அமைந்துவிடும் . அதற்கான களங்களை அமைத்துத் தருவதும் ,சூழலை உருவாக்குவதும் தான் மிகப்பெரும் சமுதாய மாற்றங்களை உருவாக்கும் ஆசிரியரின் முதல் கடமை . ஆகையால்  நமது  கற்பித்தலில் “ வாழ்க்கையோடு தொடர்பு படுத்துதலும் ,மாணவனை அவரது திறனை வெளிக்கொணர தயார் படுத்துதலும்” கண்டிப்பாக  இருக்க வேண்டும் .
            அறிவியல் ஆராய்ச்சியாளராக வருவதற்கும் நம் மாணவர்களை இவை போன்ற கற்பித்தல் உபகரணங்கள் தூண்டலாம்  என்று சொன்னால்  மிகையாகாது . இதே போன்று கணிதம் ,மொழிப்பாடங்கள் என எல்லாத் துறைகளிலும்  அவர்களை நாம்  ஆயத்தப்படுத்த ,இவை போன்ற தொடர்புபடுத்தும்  உபகரணங்களை அமைப்பது இன்றியமையாதது .
                ”கற்பித்தல்  கடலில் பயணம் செய்ய 
                கட்டகங்கள் மட்டுமே கப்பல்களாகாது !!!
                கட்டுமரங்களையும்  நாமே உருவாக்கும் 
                கற்பித்தல் உபகரணங்களாலாக்கினால்
                கரை  சேர்ந்து இனிதாக்கலாம்
                கற்பித்தல் கடல் பயணத்தை!!!!!!!

படைப்பு :(இது நிகழ்ந்தபோது பெருந்துறையில் பணிபுரிந்தேன்)
        ( 2011-12 ஆம் கல்வியாண்டு ஜூன் மாதம்)  
         
சு.உமாமகேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர்,(கணக்கு)  
           அரசு ஆண்கள்  மேல்நிலைப்  பள்ளி,
           பெருந்துறை,
           ஈரோடு  மாவட்டம்.

Monday, 30 May 2022

வசந்தி தேவி கட்டுரைக்கு எதிர்வினை

#வருந்துகிறோம் 

கல்வியாளரும்  முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் வசந்திதேவி அவர்கள் எழுதிய கட்டுரை  
தமிழ் இந்து திசை நாளிதழின் நடுப்பக்க கட்டுரையாக இன்று
வெளிவந்துள்ளது.

அந்த கட்டுரையின் அடிப்படை என்னவென்றால்  சமீபத்தில் வெளியான  அரசு பள்ளி மாணவர்களது வீடியோக்களை மையப்படுத்தி எழுதியுள்ளார் அதற்கு முழுவதுமாக ஆசிரியர்களையே  குற்றம்சாட்டியுள்ளார். இது மிகவும் வருந்தத்தக்கதும் கண்டனத்திற்குரியதுமாகும்.

 ஏனென்றால் இவர்களைப் போன்ற மூத்த கல்வியாளர்கள் தமிழகக் கல்வி தளத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளைப் பார்த்து வருகிறார்கள்.  ஏன் தனியார்மயக் கல்வி தலைவிரித்தாடுவது  கடந்த 20 ஆண்டு காலமாகத் தான் .அவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்து தானே வந்தீர்கள் ?

 ஆசிரியர்களை உருவாக்க கூடிய கல்வி நிறுவனங்கள் எப்படிப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி இருக்கின்றது என்று இவர்கள் அறியவில்லையா ?

கள எதார்த்தம் என்னவென்று தெரிந்துதான் பேசுகிறார்களா ?
கொரோனா  காலகட்டத்தில் ஒரு ஆசிரியரும் மாணவர்களை,
பெற்றோர்களை எப்படி இருக்கிறீர்கள் சாப்பிட்டீர்களா என்று   கேள்வி கேட்கவில்லை என்பதை  முன்னிலைப் படுத்தி உள்ளீர்கள். 

 எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மாணவர்கள் வாழும் பகுதிக்குச் சென்று தொடர்ந்து அவர்களுடன் பொருளாதார உதவியும் மன ரீதியான உளவியல் அணுகுமுறைகளும் செய்திருந்த செய்தனர் என்பது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

ஆசிரியர்களுக்கு கல்வித் துறை தரும் பல முனை அழுத்தங்களைக் காணவில்லையா நீங்கள் அல்லது காதால் கூட நீங்கள் கேட்கவில்லையா அம்மா ?

அதிகார மையங்களுடன் கைகோர்த்து நீண்ட காலமாக வாழும் நீங்கள் , 40 ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் ஓராசிரியர் பள்ளிகளுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் ?

ஆசிரியர்கள் கற்பித்தலைத் தாண்டி கணக்கராக , தூய்மைப் பணிகள் செய்வோராக , மக்களிடம் கையேந்தி காசு பெற்று பள்ளிகளின் கட்டமைப்பு இன்ன பிற  வசதிகள் செய்து வரும் வேலையாட்களாக மாறி வருவது உங்கள் காலத்திலே தானே ....

வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இல்லாத இடத்தில் தரமான கல்வியை , எப்படி உருவாக்க முடியும் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் உள்ளதா ?

ஆசிரியர்களை அல்லவா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளீர்கள் ?

உங்களைப் போல கல்வியாளர் என்ற இடத்தில் நின்று கல்வி சீரழிந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு பள்ளிக் கல்வி நாசமாகியதை காலத்தால் கண் கொண்டு  பார்த்து , தள்ளாமை வயதில் கள நிலவரமே தெரியாமல் ஆசிரியர்களைச் சுட்டிக் காட்டி ஒட்டு மொத்த கல்விச் சீரழிவிற்கும் அவர்களைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம் கூறுங்கள் ....

அரசுப் பள்ளிகள் குறித்து  அறிந்து கொள்ள களத்திற்கு சென்று நேராக கவனியுங்கள்  ஆசிரியர்களை மட்டும் குறிவைத்து தாக்க வேண்டாம் அம்மா .... 

வருந்துகிறோம் .

உமா

Thursday, 18 March 2021

தலைமையாசிரியர் சந்திரா


சந்திரா தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி , 


1995 இல் ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்

பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்த இவர் கற்பித்தல் முறையில் சில வேறுபட்ட மாணவர் கவரும் முறைகளைக் கையாண்டதோடு தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆசிரியராக இருக்கும் போது மாணவரது கற்றல் திறன் சார்ந்து மட்டுமே தனது செயல்பாடுகள் இருந்தது , தலைமை ஆசிரியராக மாறிய பின்புதான் ,

பள்ளியின் மொத்த மாணவர்களின் கற்றல் திறன் சார்ந்தும் பணி புரிய வேண்டியுள்ளது. அது தவிர   பல்வேறு சிக்கல்களை சந்திக்க வாய்ப்புகளையும் சூழல்களையும் உருவாக்கி விடுகிறது தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு என்று கூறியதோடு அதன் தாக்கங்களை நம்முடன் பகிர்கிறார்.



 10 வருடங்களுக்குப் பிறகு 2005 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் ஒன்றியத்தில் எஸ் குமாரபுரம் என்ற ஊருக்கு , தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். அந்த உளரோ சாலை வசதியோ பேருந்து வசதியோ இல்லாத  மிகவும் பின்தங்கிய குக்கிராமம். அங்கு பள்ளிக்கூடம் என்ற அமைப்பே கிடையாது, மரத்தடியில் தான் வகுப்பெடுக்கும்  பழக்கம் , ஊர்ப் பிரச்சனையைக் கேட்கவும் ஆள் இல்லை , பள்ளிப் பிரச்சனையைப் பார்க்கவும் யாருமில்லை. மரத்தடி வகுப்புகளை மாற்ற மக்களின் ஆதரவு, கிராமக் கல்விக் குழுவின் உதவி பெற்று , அரசிடம் மன்றாடி இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.


 20 வருடமாக கட்டிடமே இல்லாமல் இயங்கிய அந்தப்  பள்ளிக்கு புத்துயிர் தந்ததோடு குழந்தைகளிடம் கற்பித்தலையும் சரியாகக் கொண்டு சேர்த்துள்ளார் நமது தலைமை ஆசிரியர் சந்திரா . சீருடை இருந்தாலும் அவ்வூரின் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து வரும் வழக்கமின்றி இருக்க அதில் மாற்றம் ஏற்படுத்தி பள்ளிக்கு சீருடை அணிந்து வரும் பழக்கத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த பள்ளியிலிருந்து மாறுதல் அடைந்தாலும்  மக்கள் மனதில் இன்றளவும் பேசப்படும் தலைமையாசிரியராக வாழ்கிறார் ,இப்பள்ளியில் 4 வருடங்களே பணியாற்றிய இவர் நடுக்காட்டூர் என்ற பள்ளிக்கு மாறுதல் பெற்று செல்ல , அங்கும் வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்ட முயற்சி மேற்கொள்கிறார்  , நடுக்காட்டூர் பள்ளி விடுமுறை காலத்தில் இடிந்து விழ , கட்டிடம் இல்லாமல் கோவிலில் வைத்து பள்ளியை நடத்தியிருக்கிறார்  .மக்கள் சமயச் சடங்கு நடத்தும், நெற்களமாக பொது மக்கள் பயன்படுத்தும்  இடம் எனக் கூறி  கட்டிடம் கட்ட விடாமல்  செய்ய  , பெரிய போராட்டம் நடத்தியே கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார். அதோடு இந்தக் குழந்தைகளுக்கு சீருடை அணியும்  பழக்கம்  , ஷூ , ஷாக்ஸ் , அடையாள அட்டை என 2007-08 கல்வியாண்டிலேயே கொண்டு வந்ததோடு கற்பித்தலையும் சிறப்பாக்கியிருக்கிறார். தான் செல்லும் எல்லாப் பள்ளிகளிலும் வாசித்தலை முன்னெடுப்பதும் , பாடநூல்களை தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக வாசிக்கப் பழக்கப்படுத்துதலும் இவரது மற்றொரு சிறப்பு. கடந்த 2014 இல் ரெட்டியபட்டி என்ற பள்ளிக்கு மாற்றலாகிட எப்போதும் போல் கட்டிடப் பிரச்சனை , ஏற்கனவே அபாயத்தில் இருந்த பள்ளிக் கட்டிடம் ,புதியதாக சென்ற போது மாணவர்களின் தலைமேல் கட்டிடம் இடிந்து விழுந்திட , அவர்களைக் காக்க 108 உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வைத்து , மீண்டும் மக்களோடு இணைந்து போராட்டம் , கிராமக் கல்விக் குழுவின் உதவியுடன் இந்தப் பள்ளிக்கும் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்து வெற்றி பெற பெரிய பொறுமை தேவைப்பட்டிருக்கிறது. , சமீபத்தில் வேறொரு பிரச்சனை , 5 வகுப்புகளைக் கொண்ட ஆங்கில வழியான இவரது பள்ளியில் இவர் மட்டுமே ஒராசிரியராக இருக்க , கற்பித்தல் மட்டுமன்றி நிர்வாகப் பணிகளும் சுமையாக , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்தி அரசை நிர்ப்பந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றுப் பணியில் ஓராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படியான போராட்டங்களுடனேயே பல பள்ளிகளில் கிராமங்களில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது பதிவு செய்யப்பட வேண்டும். இப்படியான சூழலில் நம் தமிழக அரசின் சமீபத்திய அரசாணை 5 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு என்பது. தேர்வு குறித்த பல விதமான கருத்துகள் நிலவினாலும் தேர்வுக்கு குழந்தைகளை தயார் செய்ய ஒரே ஆசிரியர் உள்ள பள்ளிகள் என்ன செய்யும் ? சந்திரா போன்ற தலைமை ஆசிரியர்கள் பல வித போராட்டங்களுக்கிடையே தேர்வு குறித்த தேவைகளுக்கும் போராட வேண்டுமெனில் அரசுப் பள்ளிகள் மக்கள் பள்ளிகளாக மாற வேண்டும் .மக்களிடமிருந்து கேள்விகள் பிறக்க வேண்டும் .அரசுக்கு புரிய வைக்க வேண்டும். 


உமா

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்


ஆசிரியர் - மாணவர் உறவு முறை

குழந்தைகளுடன் உரையாடுவோம் - 5


மெல்ல நழுவுகின்ற கல்வி . 


உளவியல் கல்வி அவசியமாக அவசரமான தேவை 


ஆசிரியர் - மாணவர் உறவு முறை 


கட்டமைப்பு , பாடப்பொருள் தாண்டிய அணுகுமுறையே முதல் தேவை .. 


வீட்டை விட்டு வெளியில் வந்தறியாத கிரிகிஸ் குழந்தைகளுக்கு ஒரு குன்றின் மீதிருந்த குதிரைக் கொட்டடியை அவர்களுக்கான ஒரு  பள்ளிக் கூடமாக மாற்றுகிறார் தூய்ஷன். அப்பள்ளிக்குத்  தானே ஆசிரியராக மாறுகிறார். அவர் கல்வி அறிஞருமில்லை , ஆசிரியர் பயிற்சி பெற்றவருமில்லை , இலக்கணம் தெரிந்தவருமில்லை. ஆனால் அவர் அந்த கிராமத்துக் குழந்தைகளுக்கு ஆரம்ப எழுத்தறிவையும் கல்வியறிவையும் கற்றுத் தருகிறார். அவரிடம் குதிரைக் கொட்டகையில் பயின்ற அல்டினாய் என்ற மாணவி அந்த மாகாணத்தின் மிகப் பெரும் கல்வி அறிஞராக உருவெடுக்கிறார். சிங்கிஸ் ஐத் மாதவ் எழுதிய முதல் ஆசிரியன் என்ற குறு நாவலில் இடம் பெறும் காட்சிகள் இவை. அல்டினாய் மட்டுமல்ல அந்த கிராமத்தின் அத்தனைக் குழந்தைகளுக்கும் நடத்தை மாற்றத்தை நல்ல எழுத்தறிவை வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை தனது அணுகுமுறையால், மாணவருடனான நல்லுறவால்   தூய்ஷேன் வழங்குகிறார்.  .


நம்மில் பலரும் இந்நாட்களில் கூறுவது , நாங்கள் எல்லாம் அந்த நாட்களில் மரத்தடியில் தான் படித்தோம்..  அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிக்கூடங்களில் கூட ஆசிரியர்களின் அணுகுமுறையால்  வெற்றி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். 


இன்றுள்ள பள்ளிகள் அனைத்தும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஓரளவிற்கு முழுமையாகப்  பெற்றுள்ளன .இன்றைய நவீன வகுப்பறைகள் ஆங்காங்கே உருவாகி புத்தாக்கம்  பெறும் பள்ளிகளை எல்லா இடங்களிலும் காணலாம் . அதே போல அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். பயிற்சியும் பாடப் பொருள் அறிவும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கின்றனர்.  ஆனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உருவாகும்  உறவு முறை , பாடப் பொருள் தாண்டிய அணுகுமுறையை ஆய்வு செய்தால்  உவப்பானதாக இருக்கிறது என நம்மால் அறுதியிட்டுக் கூறிட முடியாது. 


நமது  வகுப்பறையில் அமர்ந்திருக்கும்  ஒவ்வொரு குழந்தையும் வேறு வேறு சூழலிருந்து வந்தவர்கள். குடும்ப சூழல் ,  தனியாள் வேறுபாடுகள் ,  மன உணர்வுகள், அடைவுத் திறன்கள்  என எல்லாவற்றிலும் வேறுபட்டு இருப்பவர்களே . அதோடு பொருளாதார சூழல் , சமூக சூழல் இவற்றிலும் வேறுபட்டே வந்திருப்பார்கள். ஒரு குழந்தையின் இத்தனை வேறுபாடுகளையும் மனதில் கொண்டு தான் ஒரு ஆசிரியர் அவர்களை அணுக வேண்டிய சூழல் உருவாகிறது. ஆகவே தான் ஆசிரியர் பணியும் சவாலான பணியாகிறது. 


இன்றைய நம் வகுப்பறை சூழலோ தேர்வுக்கு முக்கியத்துவம் தருவதாக இருப்பதால் ஆசிரியர்கள் அணுகுமுறைக்கு பதிலாக பாடத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவே முன் வருகின்றனர். பல்வேறு சூழல்களிலிருந்து சீரற்ற மனநிலையில் வகுப்பறையில் அமர்ந்துள்ள ஒரு குழந்தைக்கு பாடத்தின் மீது கவனம் குவிவதே இல்லை. ஆசிரியர்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பதும் அவர்களுக்கு கிடைப்பதும் ஒரே நேர்க்கோட்டில் அமையாததால் சிக்கல்கள் உருவாகின்றன. விளைவு மாணவர்கள் மனதில் பாடங்கள் பதிவதில்லை , கற்றல் என்பது  நல்ல அனுபவங்களாக மாறாமல் வடுக்களின் கீறல்களாக மாறி விடுகின்றன. 


வீட்டில் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் விருப்பங்கள் , மனச் சிக்கல்கள் எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் அவர்களைப் படிக்க மட்டுமே வற்புறுத்துகின்றனர். அதற்கு இன்றைய சமூகத்தில் கல்வி படிப்பு என மாறியதும் வேலைக்கான தயாரிப்புப் பணியாக பள்ளிக் கல்வி மாறி விட்டதும் தான் காரணம் .இதன் தொடர்ச்சியாக  பெற்றோர்களும் புரிந்து கொள்ளாமல் பள்ளிகளிலும் தங்கள் மன அழுத்தங்கள் புறக்கணிக்கப்படுவதால்   குழந்தைகள் தங்கள் இயல்பை மீறி உளவியல் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகின்றனர். 


கடந்த ஆண்டு பள்ளியில் 6 ஆம் வகுப்பில் புதியதாக சேர்ந்த மாணவி ரித்திகா , அழகான கையெழுத்தும் நன்கு படிக்கும் திறனும் பெற்றவராக இருக்கிறார் . வரைதல் , கதை சொல்லுதல் முதலிய படைப்பாற்றல்களில்   திறனும்  பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி போன்ற பள்ளியளவில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாகப் பங்காற்றும் ஆற்றலும் பெற்றவராக இருக்கிறார். ஆனால் 6 மாதங்களுக்குப் பிறகு  மாணவரது நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்படுவதை வகுப்பாசிரியர் கவனிக்கிறார். படிப்பதில் சுட்டியான ரித்திகாவின் ஆர்வம்   குறைகிறது , எப்போதும் சிரித்த முகத்துடன் வகுப்பில் வளைய வரும்  குழந்தையை முகவாட்டமும் சோகமும்  சூழ ஆரம்பிக்கின்றன  . ஆசிரியர் அவரை கவனிக்க ஆரம்பித்ததோடு அவரது இந்த நடத்தை மாற்றத்திற்கான காரணம் அறிய முற்படுகிறார் .காரணம் அவரது  வீட்டு சூழல் எனத் தெரிய வருகிறது.அவரது தந்தையின் நடத்தை மாறுதல் தாயை பாதிக்க , அதைப் பார்த்த ரித்திகாவின் மன நிலையில் பயம் , பதற்றம் சூழ்ந்திருக்கிறது. இதைப் புரிந்து கொண்ட ஆசிரியர் , அவரது பெற்றோரை அழைத்து குழந்தையின் மனநிலையைப் புரிய வைக்கிறார் .குழந்தையை இயல்பு நிலைக்கு வர வைக்க நான்கு மாதம் ஆனது. இதற்கு பெற்றோர் துணை தேவைப்பட்டது. இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் மீண்டும் பழைய நிலையை அடைகிறார் ரித்திகா . இங்கு ஆசிரியர் ரித்திகாவின் நடத்தை மாறுதலை அசட்டையாக விட்டிருந்தால் அந்தக் குழந்தையின் கற்றல் அனுபவம் என்றுமே  மகிழ்ச்சியாக அமைந்திருக்காது.  ஒரு ரித்திகா மட்டுமல்ல , ஓராயிரம் ரித்திகாக்களுக்கு ஆசிரியரது மனவியல் சார்ந்த ஆலோசனைகளும் கூடுதல் கவனிப்பும் உரிய அணுகுமுறையும் தேவைப்படுகிறது. சரியான அணுகுமுறை  இருக்க வேண்டுமெனில் ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு பலப்பட வேண்டும் .மாணவருக்கு ஆசிரியர் மீது நம்பிக்கை வர வேண்டும் .ஆசிரியர் மாணவர் உறவு பலப் பட்டிருந்ததால் தான் ஆசிரியர் மீது ரித்திகாவிற்கு நம்பிக்கை ஏற்படுகிறது .

நம்பிக்கை வந்ததால் தான் ரித்திகா மனம் திறக்கிறார். அதன் பிறகு ஆசிரியரது அணுகுமுறை மாணவியையும் பெற்றோரையும் சூழ்கிறது .உளவியல் கல்வி கொடுக்கப்படுகிறது. மாணவியின்  மன நலம் மீட்டெடுக்கப்படுகிறது. அவரது அறிவுசார் செயல்கள் மீண்டும் பழைய நிலையை அடைகின்றன. என்றால் ஆசிரியர் பணியின் பொறுப்பும் செயல்பாடுகளும் இந்த ஒரு உதாரணம் வழியே நமக்குப் புலனாகிறது .


இந்த அணுகுமுறை இருந்திருந்தால் சில வருடங்களுக்கு முன்பு சென்னை பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர் உமாமகேஸ்வரி அவரது வகுப்பு மாணவனாலேயே கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்க மாட்டார். 


மதிப்பெண்களைப் பெற்றும் மன அழுத்த நெருக்கடி தான் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஒரு ஆசிரியர் கூடவா அந்த மாணவியின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள இருந்திருக்க மாட்டார் என்ற கேள்வியே என்னை கடந்த 3 வருடங்களாகவே துளைத்தெடுத்து வருகிறது.

பாடம் தாண்டிய அணுகு முறையும் ஆசிரியர் மாணவர் நல்லுறவும்  வகுப்பறைகளில் முக்கியத்துவம் பெறும் பொழுது இது போன்ற இழப்புகள் நிச்சயம் நிகழ்ந்திருக்காது .


வெறும் தகவல்களை மாணவர்க்குக் கடத்தும் வகுப்பறைகள் அவர்களது வாழ்க்கையை செம்மைப்படுத்தவோ நெறிப்படுத்தவோ உதவுவதில்லை. பாடத்திட்டத்தை மட்டும்  மையமாக வைத்து நகரும் வகுப்பறைகளும் இயற்கையாக மலர்வதேயில்லை . தகவல்களைக் கொட்டித் தரும் வகுப்பறைகள் கூகுள் வகுப்பறைகளே . ஆகவே  உயிரோட்டமான வகுப்பறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு அடிப்படை தான் மாணவர் மைய வகுப்பறைகள். 


ஆகவே ,ஒரு பள்ளியில் புறக் கட்டமைப்பு தளவாடங்கள் கற்பித்தல் உபகரணங்கள் இன்ன பிற அனைத்து வசதிகள் தேவை தான். இவை அனைத்தும் இருந்தாலும்  ஆசிரியர் அணுகுமுறை குழந்தைகள் விரும்பும்படியாக இருக்க வேண்டும் .அப்போது தான்  குறைந்த பட்ச கற்றல் அடைவுகளுடன் ஒரு ஆசிரியரால் 

கற்பித்தலை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் .பள்ளிக்கல்வி என்பது நாம் எப்போதும் பேசுவது போல பாடம் , தேர்வு , மதிப்பெண்கள் தேர்ச்சி ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டதல்ல. அவற்றுடன்  உளவியல் அணுகுமுறைகள் தான்  அழுத்தமாகத் தேவைப்படும் உள்ளீடுகள் .


தொடர்ந்து பேசுவோம் 



பொதுத் தேர்வு ரத்து - மகிழ்ந்த தருணம்

பொதுத் தேர்வு ரத்து - மகிழ்ந்த தருணம் 


5 , 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழக அரசு பொதுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்துள்ளது. தமிழகமெங்கும் இது குறித்து மகிழ்ச்சி மனநிலை நிலவி பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இயல்பு மனநிலைக்குத் திரும்பியுள்ளது வரவேற்கத் தக்கது. கல்வித் துறையில் வெளியான பொதுத் தேர்வு  ஆணையை ரத்து செய்த நமது முதல்வர் கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு தமிழகக் குழந்தைகள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் அனைவரது சார்பாகவும்  நன்றியை உரித்தாக்குகிறேன்.


ஏன் இந்த சூழல் ?


கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு  2019 ஐத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதற்கான எதிர்ப்பலைகள் பரவலாக உருவானதை நாம் அறிவோம் . வேறெந்த மாநிலமும் முன்னெடுக்காத வரைவு தேசியக் கல்விக் கொள்கையின் உட்கூறுகளை நம் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தத் தொடங்கி விட்டதாக பல்வேறு தரப்பிலும்  குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த வரைவுக் கொள்கையின்

வரைவு விளக்கத்தில் பள்ளிக் கல்வி என்ற தலைப்பின் கீழ்  கொடுக்கப்பட்டிருந்தவற்றுள் 

 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற ஒரு முக்கியமான முடிவும் எதிர்ப்பலைகளுக்கு ஒரு காரணமாகப் பார்க்கலாம்.


சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்ட  5 , 8 வகுப்புக்கு பொதுத் தேர்வு என்ற ஒரு அறிவிப்பால் மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் பயம் நிலவி வந்ததும் சமூக செயல்பாட்டாளர்கள்  கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்ததும் நாம் அறிவோம் .அதே நேரம் ஆசிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பால் பலவித மன அழுத்தங்களும் குழப்பமான சூழலும் உருவானதும் உண்மையே இது குறித்து ஊடகங்களும் பொது மக்களும் அக்கறையுள்ள மனிதர்களும் அவரவர் நியாயத்தை முன் வைத்தனர் .


பொதுத் தேர்வு அறிவிப்புக்கான காரணமாக எவற்றை எடுத்துக் கொள்ளலாம்  ?


தமிழகப் பள்ளிகளில் ஏற்கனவே 10 , 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது 30 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. சமீப காலமாக 3 வருடங்களாக 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.பொதுத் தேர்வு அறிவிப்பால் அது தற்போது 5 , 8 வகுப்புகள் என நீண்டிருக்க வேண்டிய சூழலாக மாற இருந்தது. 


கல்வியின் தரத்தை உயர்த்த தேர்வு  மதிப்பீடு ஒரு முறையாகக் கொள்ளாமல் தேர்வு மதிப்பீட்டின் மதிப்பெண்கள் மட்டுமே ஒரே முறை என்ற சிந்தனை நம்மிடையே வேரூன்றிவிட்டதாகவே பார்க்கிறேன். 


பல புள்ளி விபரங்கள் , நம்  குழந்தைகளுக்கு அடிப்படை  வாசிப்பில் திறன் இல்லை என்பதாக அவ்வப்போது அச்சு , காட்சி ஊடகங்கள் வெளியிடுவதைக்  காண முடிகிறது. ஆனால் ஒரு குழந்தையால் முதல் இரண்டு வகுப்புகளிலேயே தடுமாற்றம் இல்லாமல் வாசிக்க முடியும் .இந்த வாசிப்பு உயர் வகுப்புகள் 

வரும் போது குழந்தைகளுக்கு எளிதில் கைவர வேண்டும். அப்படிக் கைவரவில்லை எனில் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அறிந்து களைய முற்பட வேண்டுமே தவிர எழுத்துத்  தேர்வையே ஒரே அளவீடாகக் கொள்ளக் கூடாது. 


சாதகமாகப் பார்ப்பவரின் நியாயங்கள் என்ன ?


இங்கு எல்லாவற்றுக்கும் தேர்வு , 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதும் போதும் மாணவன் பயப்படுகிறான் என்றால் அது 5 ஆம் வகுப்பிலேயே பயிற்சி தந்து விடலாமே என்கின்றனர் சிலர். 


10 , 11 , 12 வகுப்புகளில் பொதுத் தேர்வு . 12 ஆம் வகுப்பு முடித்ததும் மருத்துவத்துக்கு நீட் நுழைவுத் தேர்வு , மற்ற உயர் கல்வி எதுவாயினும் நுழைவுத் தேர்வு . ஆசிரியர் வேலைக்குச் செல்ல டெட் தேர்வு , மற்ற எல்லாப் பணிகளுக்கும் போட்டித் தேர்வு என்ற நிலை இருப்பதால் இந்த 5 , 8ஆம் வகுப்புகளுக்கான தேர்வையும் சாதகமாகப் பார்க்கின்றனர் பெற்றோர் தரப்பு உள்ளிட்ட சிலர் .


சில ஆசிரியர்களோ , 10 ஆம் வகுப்பில் வந்து 35 மதிப்பெண்களுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டியுள்ள அவலம் . எழுத்தே தெரியாமல் 9 ஆம் வகுப்பு வரை வந்து விடுவதால் எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதட்டும் என்கின்றனர். 5 ஆம் வகுப்பு குறித்து ஆசிரியர்கள் தரப்பில்  பொதுத் தேர்வு எதிர்பார்ப்புகள் காண முடியவில்லை. 


பாதகமாக எவற்றைப் பார்க்கலாம் ?


குழந்தைகளது மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க வேண்டும் . 10 வயதில் தேர்வு என்பது குழந்தை உளவியலுக்கு எதிரான வன்முறை எனலாம் .


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறான கல்வி உரிமைச் சட்டத்தில் 14 வயது  வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயத் தேர்ச்சி தர வேண்டும் என்ற கூறுக்கு முரணாக உள்ளது. 

அதே போல கல்வி உரிமைச் சட்டத்தின் 29 ஆம் விதியை ,தொடக்கக் கல்விக்கான பாடத் திட்டம்,  தேர்வு முறைகளை வகுக்கும் போது கல்வித் துறை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி , குழந்தைகளின் உடல் , மனத் திறன்களை வளர்ப்பது உள்ளிட்ட சில .இதன்படி பொதுத் தேர்வு என 10 வயது குழந்தையை நிர்ப்பந்திக்கும் போது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். 


நம் சமூகத்தில் முதல் தலைமுறை குழந்தைகள் கல்வி கற்பது என்பது ஏற்கனவே  சவாலாக உள்ளது. அவர்கள் தேர்வு குறித்து அச்சப்பட்டு வழிகாட்ட ஒருவரும் இல்லாமல் இடைநிற்றல் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் நிச்சயமாக பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டு வேலைக்கு அனுப்பும் அபாயமும், திருமணம் செய்து வைக்கும் கொடுமைகளும்  தொடரும். 


நமது ஊரில் தேர்வு என்றாலே பெற்றோர் முதலில் பயப்பட்டு குழந்தைகளை பயப்பட வைப்பர். அவர்களைப் பொறுத்த வரை தன் குழந்தை முதல் மதிப்பெண் பெற வேண்டும். அல்லது 100க்கு நூறு பெற்றுவிட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட அதிக  சதவிகித பெற்றோரின் மன நிலை . இவர்களது வீடுகளில் 5 ஆம் வகுப்பு தேர்வு என்றால் 3 ஆம் வகுப்பிலிருந்து படி படி , மார்க் வாங்கு என்ற அழுத்தங்கள் குழந்தைகளுக்கு உருவாகும் .


அதே போல மூன்று பருவ பாட நூல்களா ? மூன்றாம் பருவம் மட்டுமா என்பதில் ஆசிரியர்களுக்கும்  மாணவர்களுக்கும் பெரும் குழப்பம். நிர்வாக அளவில் நிறைய பாதகங்கள் மாணவரைப் பாதிக்கும் . ஏனெனில் தமிழகம் முழுவதிலும் தொடக்கப் பள்ளிகள்  பெரும்பாலும் ஓராசிரியர் , ஈராசிரியர்  பள்ளிகளே .எல்லாப் பள்ளிகளையும் தேர்வு மையங்களாக அறிவிக்க இயலாது. ஒரு பள்ளியை தேர்வு மையமாக அறிவித்து குறிப்பிட்ட தொலைவில் சுற்றிலும் அமைந்துள்ள பள்ளிகளில் குறைந்தது 5 பள்ளிகளில் உள்ள 5 ஆம் வகுப்பு குழந்தைகளை அழைத்து வந்து தேர்வு எழுத வைத்தால் கூட மையமாக அறிவிக்கப்பட்ட பள்ளியில் கட்டமைப்பு ,கழிப்பிட வசதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. மற்றொரு புறம் தேர்வு எழுதும் குழந்தைகளை ஒரு ஆசிரியரும்  அழைத்து வந்து விட்டால் அந்த ஈராசிரியர் / ஓராசிரியர் பள்ளியில் மற்ற குழந்தைகளின் கற்றல் பரிதாபமே .


குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்களாக இயல்பாக தேர்வு எழுதுவதில் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் பொதுத் தேர்வு என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகப்  பேசுவதை வீடுகளில் பெற்றோரும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வலியுறுத்துவதைக் கேட்டு  அச்சப் பட்டது அதிகம்.


பொதுவாக அரசுப் பள்ளிகளில் எல்லா வகையான குழந்தைகளும் படிக்கின்றனர் .சமூகப் பொருளாதாரப் பின்னணியில் நலிவுற்ற குடும்பக் குழந்தைகள் , தாய் தந்தையற்றவர்கள் , மாற்றுத் திறனாளி குழந்தைகள் , 3ஆம் வகுப்பு படிக்காமல் நேரடியாக 13 வயது என்றால் 8 ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்கும் குழந்தைகள் (கல்வி உரிமைச் சட்ட விதி ) என அனைவரையும் அரவணைத்து ஆசிரியர் கற்பிக்க வேண்டும். இந்த பொதுத் தேர்வு குறித்து குழப்பமான சூழலில் அனைவரையும் ஆசிரியர் தயார் படுத்த முடியுமா என்பதும் நாம் முன் வைக்கும் ஐய வினா .


என்ன செய்யலாம் 


எல்லாக் குழந்தைகளும் பாடநூலில் உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க முடியும் என்று கூற முடியாது .அதே போல படிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களது பல் திறன்களுக்கும் வாய்ப்பு தந்து தரமான கல்வியைக் கொண்டு வர வேண்டுமெனில் ,தொடக்கப் பள்ளிகளில்  வகுப்புக்கு  ஒரு ஆசிரியர் நியமித்து சரியான கற்பித்தல் - கற்றல் நிகழ்வுகளை உறுதிப்படுத்திட வேண்டும் .ஆசிரியர்கள் , கல்விஅலுவலர்களின் சரியான வழிகாட்டலும்  தங்களுக்கான கற்பித்தல் சாரா பணிகள் குறித்த நடைமுறை சிக்கல்களை உயர் அலுவலர்களிடம் உரையாடி தீர்வு கண்டாலே குழந்தைகள் காப்பாற்றப்படுவர் . சரியான வயதில் கற்றலுக்கான சூழலை ஒவ்வொரு குழந்தையும் பெறும் போது பொதுத்தேர்வுக்கான அவசியமே இருக்காது. 

கல்வி என்பது தேர்வை மையமாக வைத்து அளிக்கப்படும் போக்கு மாற வேண்டும். 


உமா

மாநில ஒருங்கிணைப்பாளர்

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (A3)










கொரோனா கற்றுத் தரும் பாடம் - தேர்வுகளுக்கு மாற்றைக் கண்டு பிடிப்போம் .



கடந்த மார்ச் மாத  இறுதியில் ஊரடங்கு போடப்பட்டு இன்று வரை தொடரும் கதைகளை நாம் அறிவோம் . 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடித்த கையோடு இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏற்கனவே பத்தாம் வகுப்புகளுக்குத் தேர்வு கால அட்டவணை அறிவித்து மாணவர்களும் தங்களைத் தயார் செய்து , பள்ளிகளில்  தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்வு பொறுப்புகளில் இருந்த  ஆசிரியர்கள் தயாராக செய்து வைத்தும் தேர்வு திட்டமிட்ட தேதிகளில் நடத்தப் படாத காரணத்தையும்  நாம் அறிவோம். 


தொற்று நோய் பரவல்: 


இந்தத் தொற்று நோய்ப் பரவல்  உலக அளவில் மனிதர்களை  அச்சுறுத்தி வருகிறது என்பதை ஒவ்வொரு நாளின் நோய்ப் பரவல் வரைபடங்களும் செய்திகளும் நமக்கு உறுதி செய்கின்றன. இந்த நோய் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனெனில் முதலில் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது.  இனிமேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் தான் நம் கண் முன்னே தெரிகிறது. 


பொதுத் தேர்வு :


இப்படியான  நோய் பாதிப்பு , பரவல் , இறப்பு அனைத்தும் குறையாமல் அதிகமாகிக் கொண்டே போகும் சூழலில் பொதுமக்களிடமும்  மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த கேள்விகளும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கின்றன. 


 தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என்று சமீபத்தில்  நமது முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் பேட்டியளித்ததை நாம் செய்திகளில் கவனிக்கிறோம். 


ஆசிரியர்களில் ஒரு பகுதி தேர்வு கால தாமதமானாலும் நடத்தி விடுதலே சிறந்தது என்றும் இன்னொரு பகுதி இந்த அபாய காலத்தில் தேர்வு எதற்கு ? இந்த வருடம் தேர்வு நடத்த வேண்டாம் என்றும் தங்கள் வாதத்தை முன் வைக்கின்றனர். 


9ஆம் வகுப்பு வரை தேர்ச்சி 


ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை  மாணவர்களை ஒரே வகுப்பில் தேக்கி வைக்கக் கூடாது என்ற விதி பத்தாண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் ஒரு முறையான தேர்வு நடக்கும். ஆனால் இந்த அபாய காலத்தில்  9 ஆம் வகுப்பு வரை தேர்வுகளின்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கதே. 


10 ஆம் வகுப்புத் தேர்வு 


நம் கல்வி முறையில் தேர்வுகளைத் தவிர வேறொன்றும் முறைப்படுத்தி மாணவர்களை வழி நடத்துதல் , மதிப்பீட்டு முறைகள் கிடையாது.10 ஆம் வகுப்பு தேர்வு  என்பது வாழ்வின் முக்கிய அடுத்த கட்ட  நகர்வாகத் தான் நமது  கல்வி முறையிலும் , எல்லோர் மனது அறிவு நிலை சார்ந்தும்  பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச அடிப்படைக் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியைத் தான் அரசுப் பணிகளுக்கும் விதிகளாக இருக்கும் பட்சத்திலும் உயர் கல்வி பயில அடிப்படைத் தகுதியாக இந்த பத்தாம் வகுப்புத் தேர்வு இருப்பதாலும் இதை நடத்த வேண்டிய கட்டாயத் தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 


தொற்று பரவாமல் தேர்வு நடத்துவது சாத்தியமா 


இயல்பு நிலைக்கு சமூகம் திரும்புவது எப்போது எனத் தெரியவில்லை , அப்படியே ஓரிரு மாதங்களில் திரும்பினாலும் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு. லட்சக்கணக்கான குழந்தைகளும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் இதில் ஈடுபடும் போது தோய்த் தொற்று பரவாது என 100% உத்தரவாதம் தர இயலாது. சமூகப் பரவல் அதிகமாகிக் கொண்டே போகின்ற இந்த சூழலில் முகக் கவசம் , போதுமான இடைவெளி எல்லாமும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. 


உளவியல் சிக்கல் 


அதோடு குழந்தைகள் அனைவருமே மிகுந்த பீதியில் தான் இருப்பார்கள். ஒரு புறம் பல மாதங்களாக ஊரடங்கில் இருக்கும் குடும்பங்கள் உணவுக்கே வழியின்றி துன்பப்படும் நிலையில் இருப்பதோடு, பொருளாதாரத்தில் மிகுந்த நலிவுற்ற சூழலில் இருக்கின்றன. அங்கிருந்து வரும் குழந்தைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். 


மன ரீதியாக தேர்வு எழுத அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை சிந்தித்தால் பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது. அது மட்டுமன்றி தேர்வுக்கு முன் சில  மாதங்களாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அவரவர் பாடங்களில்பயிற்சி தந்து தான் தயார் படுத்தியிருந்தனர்.  தற்போதைய நிலையில் இவ்வளவு சிக்கல்களுக்கிடையே திடீரென தேர்வு அறிவித்து எவ்வித பாடப் பயிற்சியும்  , உளவியல் அணுகுமுறைகளும் அற்ற நிலையில் மாணவர்கள் தேர்வை அணுகுவது அவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சவாலான பிரச்சனையே . ஆசிரியர்களும் கூட பலவாறு இந்த மனச்சிக்கலில் இருப்பதும் கண்கூடு . 


நீண்ட காலத் தேர்வு நடைமுறை :


தேர்வு என்றாலே வடிகட்டுதல் தான் , மாணவர்களது திறன்களை  கணக்கில் கொள்ளாமல் மனப்பாடம் செய்து எழுத்துத் தேர்வுக்கு அவர்களைத் தயாரித்து மதிப்பெண்கள் தந்து  தேர்ச்சி அட்டைகள் வழங்கும் நடைமுறை தான் நமது கல்வி அமைப்பில் நீண்ட காலமாக இருந்து வருகிறது . ஆனால் உலகம் முழுவதிற்குமே இந்த நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்காத சூழல் , லட்சக்கணக்கில் உயிரிழப்பு எனத் தொடர் வதை தேர்வு முறைகளுடன் இணைத்துப் பார்த்தால் ஒரு புள்ளியிலாவது தேர்வு முறைகளின் அபத்தம் புரியும். 


என்ன செய்யலாம் ?


(CCE -Continuous and Comprehensive Evaluation) 

இந்த நேரத்தில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை நாம் கவனத்தில் கொண்டு அதை மறுபரிசீலனை செய்யலாம் .ஆம் இந்த மதிப்பீட்டு முறையை பொதுத் தேர்வுகளுக்கு மாற்றாக 12 ஆம் வகுப்பு வரைக் கொண்டு வருவதற்கு திட்டமிடலாம். 


கொரோனா பாதிப்பு இது நமது மாநிலத்திற்கு  மட்டுமல்ல , உலகம் முழுவதும் இருக்கிறது.

இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை குறித்து புதிய தேசியக் கல்விக் கொள்கை கடந்த 10 மாத காலங்களாக மத்திய அரசால் திட்டமிடப்பட்டது. அதன் ஒரு கூறாக இந்த தேர்வுகளற்ற மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிடலாம். 


நமது மாநிலத்தில் கல்வித்துறை அமைச்சர், துறை  உயர் அலுவலர்கள் , துறை சார்ந்த இயக்குநர்கள் , மூத்த கல்வியாளர்கள் , தகுந்த  ஆசிரியர்கள் இவர்களைக் கொண்ட ஒரு குழுவை அரசு அவசரமாகக் கூட்டி இது குறித்து விவாதித்து தேர்வுகளுக்கான மாற்றைக் கண்டு பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 


இங்கு கல்வியாளர் ச .மாடசாமி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததை கவனத்தில் கொள்ளலாம். 


இந்தக் கொரோனா காலத்தில் - மரணங்களும் பசிக் கூக்குரல்களும் அதிகரித்திருக்கும் வேளையில்- தகுதி என்ற பெயரில் பிள்ளைகளைப் பலி கொடுப்பதா?

மேல்படிப்புக்கான மாணவரின் தகுதியைத் தீர்மானிக்க தேர்வு ஒன்றுதான் வழியா? 

தேர்வு ஒரு சௌகர்யம். அவ்வளவுதான். 

நுட்பம் ஏதுமற்ற சௌகர்யம்.

மிகவும் வித்தியாசமான தருணம் இது. இந்த நேரத்திலும் புதிய ரூபம் எடுக்காவிட்டால் கல்வித்துறை எதற்கு? கல்விக்கூடங்கள் எதற்கு?

. ச. மாடசாமி


இவ்வளவு காலம் தேர்வு அளவீடாக இருந்திருக்கலாம். ஆனால் இது பேரிடர் காலம் , ஆகவே பாதுகாப்பாக தேர்வு நடத்துவதில் உள்ள சிக்கலைப் புரிந்து கொண்டு , இதைத்  தகுந்த தருணமாகக் கொண்டு  பொதுத் தேர்வுகளுக்கு மாற்று வழிகள் கண்டுபிடிப்பதே சாலச் சிறந்தது. நமது கல்வி வரலாற்றில் புதிய பக்கத்தைத் தொடங்க கொரோனா நமக்குப்  பாடம் கற்பித்துள்ளது. 


சுற்றுச் சூழல் சார்ந்த , உள்ளுர் சார்ந்த, செயல்பாடுகள் நிறைந்த தற்சார்பு வாழ்க்கைக் கல்வியை புதியதாகத் துவங்க இந்த பேரிடர் காலத்தில் அனைவரும் சிந்தித்தால் பொருளுள்ள கல்வி முறை உருவாகும் .


உமா

( கல்வியாளர்)



பள்ளி திறக்கும் நாளில் …..



சென்ற கல்வியாண்டின் மறக்க முடியாத சம்பவமாக கொரோனா ஊரடங்கு காலம் அமைந்து விட்டது. கல்வியாண்டின் இறுதியில் சமூகத்திற்கு திடீரென வந்த அபாயம்  பள்ளி சூழல்களை அடியோடு மாற்றி விட்டது. மே மாதம் வரை ஊரடங்கு நீடித்த சூழலில்  ஜூன் மாதம் வழக்கமாக பள்ளி செயல்பட ஆரம்பிக்குமா என்பதில் பல்வேறு வேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. வரும் கல்வி ஆண்டை எவ்வாறு வரவேற்கலாம் என்றும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 


மாணவர் உளவியல் பேணுதல் அடிப்படை 


மார்ச் மாத இறுதியிலிருந்து பள்ளிக்கும் தங்களுக்குமான தொடர்பை விட்டுத் தவிக்கும் மாணவர்கள் இயல்பான நாட்கள் என்றால் விடுமுறைக் கொண்டாட்டமாக மகிழ்வுடன் விடுமுறை நாட்களைக் கழித்திருப்பர். ஆனால் கடந்த 3 மாத கால விடுமுறை நாட்களோ அபாயகரமான அச்சத்தை அவர்களுக்குள் உருவாக்கி வைத்துவிட்டது  என்பதில் ஐயமில்லை. 


தொலைக்காட்சி செய்திகளும் இணையங்களும் அன்றாடம் தரும் கொரோனா அப்டேட் செய்திகளைக் கண்டும் கேட்டும் பெரியவர்கள் மட்டுமல்ல , மாணவர்களும் உயிர் பயம் கொண்ட காலச் சூழல் . 


இது மட்டுமன்றி , பல்வேறுபட்ட சமூகப் பொருளாதார அமைப்பிலிருந்து பள்ளிக்கு வரும்  குழந்தைகள், இயல்பாகவே வறுமை நிலையிலிருந்து வரும் குழந்தைகள்  , ஊரடங்கால் வருமானமில்லா குடும்பங்களில் வாழும் குழந்தைகள், புலம் பெயர்ந்து வாழ்ந்த குடும்பங்களின் குழந்தைகள் ஆகியோர்  பள்ளி திறந்த பின்பும் மனஅழுத்தமான  சூழ்நிலையில் தான் இருப்பர். 


அரசுப் பள்ளிக்கு வரும் 90% குழந்தைகள் மேற்கூறிய குடும்ப சூழலின் பின்னணியிலிருந்து தான் வருகிறார்கள் . சாதாரண விடுமுறைக் காலங்களில்  உறவினர்களது  அரவணைப்பில் மகிழ்ந்து உற்சாகமாக,  விடுமுறைக் காலம் முடிந்து   பள்ளிக்கு வரும் குழந்தைகளாக இருப்பர். ஆனால்  இந்தக் கல்வியாண்டில் இவை எதுவுமின்றி வறண்ட மனநிலை , பயம் மிகுந்த மனநிலை , வீட்டில் வேலையில்லாத சூழலில் நலிவுற்ற பெற்றோரின் வருத்தங்களைப் பார்த்து பாதிக்கப்படும் குழந்தைகள் என 

உளவியல் சிக்கல்களால் நிறைந்த மணவர்களாகவே இவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பிப்பர். அதோடு பள்ளியில் தரும் சத்துணவை ஆதரமாகக் கொண்டு வாழும் லட்சக்கணக்கான குழந்தைகள் சரியான உணவின்றி இந்தக் கால கட்டத்தைக் கடந்து வந்ததால் உடல் ஆரோக்கியமும் அவ்வளவு சீராக இருக்க வாய்ப்பில்லை. 


இவர்களை அணுகுவதற்கு முதலில் ஆசிரியர்கள் தங்கள் மனநிலையை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.இந்த உளவியல் ரீதியான மாணவர் அணுகுமுறையை வலுவாக்க , பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி துறை வழியாக வழிகாட்டு நெறிமுறைகள்  தருவது வரவேற்கத்தக்கது. 


பாடங்களின் / தேர்வுகளின்   அழுத்தம் கூடாது 


2019 - 2020 , கடந்த கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  நடந்து முடிந்து இருந்தாலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்தான பல சந்தேகங்கள் மாணவர்களோடு , ஆசிரியர்களுக்கும் சேர்த்தே இருக்கின்றது. இந்தக் கல்வியாண்டுக்கான பாடங்கள் , புதிய பாடநூல்கள் , எப்போதும் போல நடத்தி முடித்திட , வேலைகளைத் திட்டமிட , தேர்வுகள் என  இருந்தாலும்  பாடங்கள் /தேர்வுகளுக்கான அழுத்தங்களை மாணவர்களிடையே ஏற்படுத்தி விடாமல் அவர்களை கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாக உள்ள நாட்களாக இந்நாட்களைப் பார்க்கலாம் .


பெற்றோர் சந்திப்பு முக்கியம் 


பேரிடர் தொற்று நோயின் எல்லா முகங்களையும் சந்தித்த நமது பள்ளிக் குழந்தைகள் இந்தக் கல்வியாண்டில் தொடர்ந்து தங்களை கற்றவில் ஈடுபடுத்த வேண்டுமானால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரையும் பள்ளிக்குள் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். வர இயலாத பெற்றோர்களை அவர் தம்  வீடுகளுக்கே  சென்று ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். அவர்களுக்கும்  குழந்தைகளுக்கு மான உறவு முறை , பெற்றோரின் தேவைகள் , பெற்றோர்களின் மன அழுத்தம் இவை குறித்து பேசி , வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை அவர்களிடம் விதைக்க வேண்டியதும் உறுதுணையாக இருப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமை. 


அதோடு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மாதமொரு முறை கட்டாயமாகக் கூட்டி எப்போதும் எடுக்கப்படும் பள்ளித் தேவைகளுக்கான முடிவுகளுடன் , சிறப்பு கவனமாக கொரோனா குறித்தான காலத்தின் பெற்றோர்கள் , குழந்தைகள் நலன் சார்ந்த 

மீட்பு வழிகள் குறித்தும் இந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில்  முடிவுகள் எடுக்கப்பட்டால்  மிகுந்த பயனளிக்கும்.


 மாற வேண்டிய வகுப்பறைகள் 


ஏட்டுக் கல்வியும் , தேர்வும் மதிப்பெண்ணும்  வெற்று பாட போதனைகளும் இன்றைய அபாய காலத்தை , பேரிடரை எந்த வகையிலும் மாற்றிவிடவோ , அதன் வீரியத்தைக் கூட சற்றேனும்  குறைத்து விடவோ இல்லை.  

நீட்டுக்குத் தயார் ஆனாலும் , பொதுத் தேர்வுக்கு தயார் ஆனாலும் எதுவுமே இந்த தொற்றை துரத்த வழி சொல்லித் தரவில்லை .

என்றால் ,  வகுப்பறைகள் தங்கள் முகத்தை மாற்றிக் கொள்ள நாம் திட்டமிட வேண்டும் . உரையாடலும் சிந்தனையுமான வகுப்பறைகள் மலர வேண்டும்.  மாணவர்களிடையே  

 பேரிடர் குறித்த உலகம் தழுவிய சூழலைக் குறித்து கட்டாயம் ஆசிரியர்கள் உரையாட வேண்டும். 


இந்த கொரோனாக்கால பாடங்களாக மனிதம் நிறைந்த மக்கள் , நகரவாசிகளாக மாறி வேலையை இழந்து சொந்த ஊரை நடந்தே சென்று சேர்ந்த குழந்தைகள் உட்பட அனைவரது உண்மைக் கதைகளையும் விவாதிக்கும் வகுப்பறைகளாக மாற வேண்டும். எதார்த்தத்திற்கும் ஏட்டுக் கல்விக் கல்விக்கு மான இடைவெளியிலிருந்து 

உள்ளூர் வளங்கள் சார்ந்த தற்சார்பு கல்வியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டங்கள் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும். உண்மையான சுற்றுச் சூழல் கல்வி , உடலுழைப்பு சார்ந்த கல்வி இவற்றை உருவாக்கும் விவாதங்கள் வெளிப்படையாக உருவாகும் வகுப்பறைகளை இனிமேலாவது ஆசிரியர்கள் கையிலெடுக்க வேண்டும். 


அனுபவக் கல்வி தருதல் 


அது மட்டுமன்றி அவரவர் இந்த தொற்றின் போது பணியாற்றிய மருத்துவர்கள் , காவலர்கள் , துப்புரவுத் தொழிலாளர்கள் , தன்னார்வலர்கள் ஆகியோரை அழைத்து வந்து மாணவர்களுடன் உரையாட வைத்து நம்பிக்கை தரலாம். பேரிடர்கள் இதற்கு முன் நடந்தவை குறித்தும் தற்போது வந்த பேரிடரான கொரோனா குறித்தும் மாணவர் மத்தியில் ஒரு ஆய்வு மனப்பான்மையை உருவாக்க வாய்ப்புகள் வழங்கலாம். 


மகிழ்ச்சியான கற்றலுக்கு வழிவகுத்தல் 


மாணவர்கள் தங்கள் கடந்த கால மன உளைச்சல் , பயம் இவற்றைத் தூர எறிந்து மகிழ்ச்சியான கற்றலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள என்னவெல்லாம் இயலுமோ அவற்றையெல்லாம் பள்ளி திட்டமிட வேண்டும். 

ஆசிரியர்களும்   மாணவர்களுக்கு சுதந்திரமான மகிழ்ச்சியான கற்பித்தலைத் தர திட்டமிட வேண்டும். ஆம் , வார இறுதியில் விழாக்கள் , மன்றங்களைத் திட்டமிட்டு நடத்தி இந்த குழப்பமான பயம் மிகுந்த மனநிலையிலிருந்து வெளிவர மாணவர்களுக்கு வழிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். திரும்பவும் அழுத்தமாக நான் கூற நினைப்பது நினைவு படுத்துவது என்னவென்றால் பாடங்களை சற்றே தூரமாக வைத்து மேற்சொன்ன செயல்பாடுகளுக்கு வகை செய்தால் கற்றல் - கற்பித்தல்  மகிழ்ச்சியாக அமையும். அதோடு எல்லாவற்றிலும் கொரோனா மீட்புக் கருத்துகள் மையமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  


பாதுகாப்பான சூழல்

பள்ளிகளில் மாணவர்களுக்கான மன உடல் நலப் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே பல தளங்களில் பேசி வருகிறோம். ஆனால் இன்றைய சூழலில் கொரோனா ஒப்பிட இயலாத மாற்றமான பாதுகாப்பை நமக்குக் கற்பித்துள்ளது. முகக் கவசமும், தனி நபர் இடைவெளியும் , கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க சோப்பு போட்டு கழுவுதலும் ஆகியன மிகவும் இன்றியமையாதவையாக பாதுகாப்பு சூழலில் பார்க்கப்படுவதால்  இவை அனைத்தும் பள்ளிக்குள் ஏற்படுத்துதல் அவசியம் . நடைமுறையில் வகுப்பறைக்குள் இவை எல்லாம் 100 சதவீதம்   சாத்தியமா என்ற வினா நம் முன் எழுத்தாலும் சாத்தியப்படுத்துதலின் அவசியம் உள்ளது. இதையும் பள்ளிகள் கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் .



தேர்வுகளுக்கான மாற்றைத் திட்டமிடலாம் 


நமது கல்வி வரலாற்றில் நெடிய பயணம் கல்வியின் இறுதி நிலை தேர்வுகளின் முடிவுகள் , தேர்ச்சி அட்டைகள் என்ற நிலையிலேயே இருக்கின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்தை எந்த நாட்டிலும் கண்டறியாத நிலையிலிருந்து தேர்வுகள் எத்தனை அபத்தமானவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆகவே இந்த நேரத்திலாவது தேர்வுக்கான மாற்று மதிப்பிட்டு  வழிகளை  அனைத்து தரப்பிலிருந்தும் அரசு , கல்வி அலுவலர்கள் , கல்வியாளர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் கூட்டுதவியுடன் முன்மொழிந்து இந்தக் கல்வியாண்டின் நாட்களுக்குப்  பொருத்தமாக இருக்கும் என எதிர் பார்க்கலாம்.


உமா

ஆசிரியர்