Wednesday, 10 October 2018

சர்வதேச ஆசிரியர் தினம்

சர்வதேச ஆசிரியர் தின வாழ்த்துகள் 05.10.18

தற்போதெல்லாம் நாளுக்கு நாள் விழிப்புணர்வு எல்லாவற்றிலும்  அதிகமாகி  வருகிறது.  ஒவ்வொரு நாளும் கொண்டாட்ட தினமாக , பிறந்த தினம் ,நினைவு தினம் என நம்மை தொடர்ந்து இருப்பில் வைத்துள்ளது.

இந்தியாவின் ஆசிரியர் தினத்தை (செப்டம்பர் 5) நாம் கொண்டாடுவதிலேயே, மிகப் பெரிய பொறுப்புகளும் நம்முடன் இணைந்தே உடன் பயணிக்கின்ற சூழலில் ,

சர்வதேச ஆசிரியர் தினத்தில் (அக்டோபர் 05) கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளோம்.

ஏதோ ஒரு நாள் வாழ்த்துச் சொல்வதில் இல்லை இந்த தினம் என்பதை மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு எனக்கு அதிகமாக உணர்த்துகிறது.

வகுப்பறை மாற்றங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருந்தாலும் சமூக மாற்றத்தின் தேவையை வலிமையுடன் எடுத்துச் செல்லாத சூழலே இங்கு நிலவி வரும் கல்விச் சூழல் என்பதை நம்மைச் சுற்றி நிகழும் அன்றாட சம்பவங்கள் நமக்கு இடித்துரைக்கின்றன என்பது கண்கூடு .

யுனெஸ்கோவின் அறிவிப்புப் படி 1994 இல் இருந்து சர்வதேச ஆசிரியர் தினத்தை இந்த நாளில் கொண்டாடி வந்தாலும் , ஏன் நம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கல்வியில் இவ்வளவு பின்னடைவு ?ஆசிரியர்களது சமூக மாற்றம் நோக்கிய பார்வையில் இவ்வளவு இடைவெளி எனப் புரியவில்லை ..

பின்னடைவு என்றவுடன் ஒரு சாரார் மனதில் தோன்றுவது , ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் எல்லாம் இருக்கே , க்ரேடு சிஸ்டம் எல்லாம் இருக்கே என்பது.

அதுவல்ல ,  தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும்  வாசிப்பு திறனில்  மாணவரிடையே பெருமளவு சருக்கல் , அரசுப் பள்ளிகள் ஆண்டுக்கு ஆண்டு இழுத்து மூடப்படும் நிலை இவற்றையே நான் குறிப்பிடுகிறேன்.

இந்த ஆண்டின் சர்வதேச ஆசிரியர் தினத்
மையக் கருத்து ஆசிரியர்களின் உரிமைகளும் கடமைகளும் என்று குறிப்பிடப்படுகிறது,  எனில் நமது உரிமைகள் பொருளாதாரம் சார்ந்து போராடுவதில் மட்டும் இல்லை , தரமான கல்வியை பள்ளிகளில் தருவதற்கு குரல் கொடுப்பதிலும் அல்லவா இருக்கிறது ?

இரு தினம் முன்பு சக ஆசிரியருடன் நடந்த உரையாடலில் தமிழகத்தில் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தும் சங்கங்களின்  நிகழ்விற்கு என்னை அழைக்க , எனக்கு சொல்லத் தோன்றியது என்னவோ ,

அவர்களின் கோரிக்கைகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் , கழிவறை பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி , பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உண்மையான நடைமுறை, கல்வி உரிமைச் சட்டம் பள்ளிகளில்
நிறைவேற்றுதல் என இவற்றை முன்னிலைப்படுத்தினால் நான் போராட்டத்தில் முன் வரிசையில் நிற்பேன் எனக் கூற .... இப்படி உரையாடல் போனது .

எனில் ஆசிரியர்கள் எவ்வளவு பொறுப்புகளுக்கு துணை நிற்க வேண்டும் என்பதை ஆழமாக உணர வேண்டும் .

பள்ளிகளில் நாம் உயிரைக் கொடுத்து மாற்றங்களைக்  கொண்டு வந்து , அடுத்த பள்ளிக்கு சென்று விட்டால் மீண்டும் பழைய நிலையே வருவதற்கு ,அந்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகி விடுவதற்கு  வழி கோலக் கூடாது.

அதற்கான தீர்வுகள் கல்வி உரிமைச் சட்டத்தின் வழியே ஊர் மக்களை , பெற்றோரை இணைத்து நிரந்தரமாக ஏற்படுத்த சிந்திக்கத் தயாராக வேண்டும்  .

தாய் மொழி வழிக் கல்வியின் அவசியத்தை இந்த சமூகத்துக்கு தருவதில் , சமூகத்தில் நிலவும் ஆண் - பெண் பாகுபாடு , இனம் , மதம் இவற்றின் சிக்கல்களால் மாணவர் அடையும் சிக்கல்கள் , நிலவும் அரசியல் பொருளாதார குழப்பங்கள் இவற்றைக் களைய அல்லது களை பிடுங்க,

ஆசிரியர்களது பங்கு  மற்றெல்லோரையும் விட அதிகம் என்பதை உணர வேண்டிய நாளாக  அவற்றுக்கான  செயல்களை வகுப்பறை பள்ளி நம்மைச் சுற்றியுள்ள சமூகம் இங்கெல்லாம் விதைக்க சிந்திக்கும் ஒரு நாளாக அமைய சக ஆசிரியத் தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
உமா💐💐