Saturday, 29 February 2020

தேர்வுக்கு தயார் ஆவோமா ?


தேர்வுக்குத் தயார் ஆவோமா ?

அரை நூற்றாண்டுக்கும்  மேலாக நமது கல்வி முறையின் முக்கிய அங்கமாக

 இருந்து வருவது தேர்வுகள்  மட்டுமே . மாணவர்களுக்கு பல்வேறு திறன்கள் இருந்தாலும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களைப்  பொறுத்தே பள்ளியிலும் வீட்டிலும் கவனம் பெறுகின்றனர். ஏனெனில் ஒவ்வொருவரது எதிர்கால வாழ்க்கைக்கும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் தான் மிக இன்றியமையாததாக அமைகின்றது. நம் கல்வி முறையில்  பெரும்பாலும் தேர்வுகள் தான் ஆதாரமாக உள்ளன. அப்படியான பொதுத் தேர்வு 10 ,11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் சென்ற ஆண்டு வரை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இந்த வருடம் 5 , 8 ஆம் வகுப்புகளுக்கும் சேர்ந்து நடத்தப்பட இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொருவரும் எவ்வாறு தங்களை அதற்கு பொருத்திக் கொள்ளலாம் என சிந்திப்போம். 

உடல், மன  ஆரோக்கியம் 

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது ஆன்றோர் வாக்கு. அது போல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வரக்கூடிய 3 மாதங்களும் உடலையும் மனதையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் .உடல் ஆரோக்கியத்துக்கு  கேடு விளைவிக்காத உணவையே உண்ண வேண்டும். ஜங்க் ஃபுட் என அழைக்கப்படும் அனைத்தையும் தவிர்த்திடல் வேண்டும். சரியான நேரத்திற்கு உணவருந்திட வேண்டும் . உறக்கமும் அதே போல மிக அவசியம். 

மனதளவில் தேர்வு குறித்த அச்சத்தை விலக்க வேண்டும் . தேர்வின் போதும் தேர்வுக்காக தயாராகும் போதும் சில மாணவர்கள் தேவையற்ற பயத்தை சுமந்து மனதளவில் சிக்கலுக்கு ஆளாகுவர். ஆகவே பொதுத் தேர்வு குறித்த பய உணர்வை அவர்களிடமிருந்து அகற்ற வேண்டும். முதலில்  பெற்றோர்கள் தேர்வு குறித்த அச்ச உணர்வை குழந்தைகளிடம் வீட்டில் விதைக்கக் கூடாது. அவர்கள் இயல்பாக அன்றாடம் பாடங்களைப் படிக்க மட்டும் தயார் படுத்த வேண்டும். அதே போல மாணவர்களது கவனத்தை சிதைக்கும் தொலைக்காட்சி நிகழ்வுகளை இந்த மாதங்களில் தவிர்க்கலாம். பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி நாடகங்கள் தாய்மார்களால் தொடர்ந்து பார்க்கப்படுவது குழந்தைகளின் தேர்வு காலங்களை சீரழிக்கும் என்பது கண்கூடு .

ஆகவே அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .

மாணவர்கள் இதுவரை படிக்கவில்லை என்றாலும் , இனி வரும் 2 மாத காலங்களில் தாங்களாக நேர அட்டவணை போட்டு படிக்க ஆரம்பித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். தினமும் அதிகாலை 5 மணிக்கு படிக்க ஆரம்பித்தால் விரைந்து பாடப்பகுதிகள் மூளை செல்களில் பதிய ஆரம்பிக்கும். படித்தல் , எழுதிப் பார்த்தல் , கணக்குகள் என்றால் போட்டுப் பார்த்தல், சூத்திரங்கள் எழுதிப் பார்த்தல் என  இவற்றை நாள்தோறும் பயிற்சி செய்தி வந்தாலே சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியும். தொடர்ச்சியான ஈடுபாடு , புரிந்து படிக்கும் ஆர்வம் இவை இரண்டும் உங்களது பயத்தைப் போக்கும் . கடினமான பாடங்களைக் குறிப்பெடுத்து மன வரைபட முறையில் படித்து பயிற்சி பெற்றால் எளிதில் மனதில் பதியும். வீட்டில் தினந்தோறும் இந்த முறையில் பயிற்சி செய்யும் போது , புரியாத பாடக் கருத்துகளைக் குறித்து வைத்து மறவாமல் ஆசிரியர்களிடம் பள்ளியில் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். எந்த ஒரு பாடத்தையும் புரியாமல் மனப்பாடம் செய்யவே கூடாது.  நேர மேலாண்மையைத் தேர்வுகளில் கடைபிடிக்க இந்த இரண்டு மாத காலங்களில் கடுமையான பயிற்சி பெறுவது உதவும். 

தேர்வுக்கு செல்லும் போது, தேர்வு மையத்தை அரை மணி நேரம் முன்னதாகச் சென்றடைய வேண்டும். அடையாள அட்டையுடன் , பேனா , பென்சில் , அழிப்பான் முதற்கொண்டு தேவையான அனைத்து எழுது பொருள்களையும் மறவாமல் எடுத்துச் செல்லுதல் வேண்டும் . தேர்வறைக்குள் ஒருவருக்கொருவர் பேசுதலைத் தவிர்க்க வேண்டும். வினாத் தாள் வழங்கப்பட்ட உடன் உரிய தேர்வு எண்ணை வினாத்தாளில் எழுத வேண்டும். அதோடு மிகக் கவனமாக வினாக்களை நிதானமாக வாசித்து உள்வாங்க வேண்டும் . வாசிப்பதற்கென்றே 15 நிமிடங்கள் தரும் முறை நடைமுறையில் உள்ளது. தேர்வு கண்காணிப்பாளர் விடைத் தாட்களை வழங்கி தேர்வு முடியும் வரை அறையில் நீங்கள் பின்பற்றிட வேண்டிய உங்களுக்கான குறிப்புகளைத் தருவார் .அவற்றை சரியாகப் பின்பற்ற வேண்டும் .

தெரிந்த வினாக்களுக்கு விடைத்தாளில் உரிய வினா எண்ணை எழுதி பதிலளிக்க வேண்டும் . பிரஷன்டேஷன் எனக் கூறப்படும் பதில் அளிக்கும் முறையை மிக நேர்த்தியாக செய்ய வேண்டும். அடித்தல் , திருத்தல் இல்லாமல் விடை அளிப்பதே சிறந்தது . சரியான காலத்தில் எழுதி  முடித்து , திரும்ப விடைத்தாளை சரி பார்த்திடல் நல்லது. கடைசி மணி அடித்த பிறகே தேர்வறையை விட்டு வெளியேற வேண்டும். 

ஒரு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளை வைத்து சாதக பாதகங்களை அலசாமல் அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டுமே தவிர முடிந்த தேர்வைப் பற்றியே சிந்திக்கக் கூடாது. இப்படி உங்கள் தேர்வு காலங்களை அணுகினால் எவ்வித மன உளைச்சலும் இல்லாமல் வெற்றி பெற இயலும். 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேர்மறையாக அணுக வேண்டும்.  அவர்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. எதிர்மறை வார்த்தைகளால் திட்டுதல் அவர்களது நம்பிக்கையை இழக்க வைக்கும் . ஆகவே மேற்கூறிய வழிகளில் குழந்தைகளை வழி நடத்தும் அவசியம் பெற்றோர்களுக்கு  மிக இன்றியமையாதது. தேர்வு என்பது மதிப்பீட்டின் ஒரு பகுதி தான். அதை மனதில் கொண்டு குறைந்த மதிப்பெண் பெறும் குழந்தைகளையும் கவனமாகக் கையாள வேண்டும். ஆசிரியர்கள் மணவர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தாலும் கூடுதல் கவனம் எடுப்பது அவசியம் .இவ்வாறு மாணவர் , ஆசிரியர் , பெற்றோர் இணைந்து தேர்வுக்குத் தயாராவதே சிறந்த விளைவுகளைத் தரும். 

உமா 

Tuesday, 25 February 2020

இடைநிற்றல் ஏன் ?



தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 9,10 ஆம் வகுப்புகளில் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100% அதிகரிப்பு என்று  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, கல்வியாளர்கள் , ஊடகங்கள், அரசியல் தலைவர்கள்  என்று பல்வேறு தரப்பினரிடையேயும் பல வித கருத்துகள் தோன்றி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விமர்சனங்கள் , ஆதங்கம் , கோபம் இவற்றைக் கடந்து கள எதார்த்தம் என்ன ? ஏன் இந்த இடைநிற்றல் என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். 

இடைநிற்றல் திடீரென ஒரே நாளில் நிகழ்ந்து விடவில்லை , பல வருடங்களின் பல காரணங்களின் உச்சகட்ட நகர்வுதான்  இந்த இடைநிற்றல் . அரசுப் பள்ளியில் பயிலும் ஒரு குழந்தை தனது பள்ளிக் கல்வியை முடிப்பதற்குள் பள்ளியை விட்டு வெளியேறுகிறார் எனில் அதற்கு பல்வேறு புறக் காரணங்கள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இடைநிற்றல் என்பது   பள்ளியுடன் மட்டும் தொடர்புடையது அல்ல , அந்தக் குழந்தை வாழும் சமூகம் , பெற்றோர் , குடும்ப சூழல் ஆகியவற்றுடன் தொடர்பு உடையது. இவற்றுடன் இணைந்து பள்ளி சூழல் , வகுப்பெடுக்கும் ஆசிரியர் , கற்பித்தல் முறைகள் , பள்ளிகளின் கட்டமைப்பு , பாடநூல்களின் கனம் , குழந்தையின் கற்றல் திறன், தேர்வுகளின் இறுக்கம் , மேற்கூறிய எல்லாவற்றாலும் ஏற்படும் மன அழுத்தம்   இவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் . 

நம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கற்றல் சூழலை வெகுவாக பாதிப்பது குடும்ப சூழலோடு இணைந்த பள்ளி சூழல்களே. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நம் கல்வித்துறை  தேர்வு முறையில் கொண்டு வந்த மாற்றம் 11ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு . பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பிறகு இடைநிற்றல் நிகழ்ந்ததை அனைவருமே அறிவோம் .

இங்கு 9 , 10 வகுப்புகளில்  மாணவர்கள் 2017-18ல் “ மட்டும் 16 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியிருக்கிறார்கள் என்றும் - அதிலும் குறிப்பாக 2015-16ல் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்  .

நமது கல்வி உரிமைச் சட்டத்தின்  (RTE ACT) பல்வேறு கூறுகளில் ஒன்று 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி என்பது தான்.  சமமற்ற சமூகப் பொருளாதார சூழலில் வாழும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்று தான், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டே இந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010 இலிருந்து கடந்த 10 வருடங்களாக நம் தமிழகத்தில் நடைமுறையிலிருந்து வருகிறது. 

அதன்படி எந்த ஒரு மாணவனும் ஒரே வகுப்பில் ஒரு வருடத்திற்கு மேல் தேங்கிவிடக் கூடாது என்பதில் சட்டம் கறாராக இருந்தது. அதன் விளைவாக 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு இடம் பெயர்ந்து தேர்ச்சி என்று பதிவேடுகளில் காட்டப்பட்டது. குறிப்பிட்ட வயதுக்குரிய, குறிப்பிட்ட வகுப்புக்குரிய திறன்களில் தேர்ச்சி பெறத் தகுதியுடையவர்களாக மாணவர்களை  மாற்றும் பொறுப்பு கல்வித் துறைக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்குமான கடமை என்பதை நினைவில் கொள்ளாமலேயே இந்த தேர்வு - தேர்ச்சிக்கான பயணம் தொடர்ந்தது. 

தேசிய வரைவுக்  கலைத்திட்டம் ( NCF) 2005  இன் படி குழந்தைகளின் பாடச் சுமையைக் குறைக்க வேண்டும் . யஷ்பால் கமிட்டியின் பரிந்துரையும் அது தான் .அதனைத் தொடர்ந்து நமக்கு எடுத்துவரப்பட்ட  முப்பருவக் கல்வி முறையை கல்வித் துறை மேலோட்டமாகக் கையாண்டதன் விளைவு குழந்தைகளின் பல திறன்களையும் குறைத்து மந்தமாக்கியது . ஆழ உழுவு செய்யாத நிலம் நல்ல விளைச்சலைத் தராது என்பது நமக்குத் தெரியும். அதற்கு உதாரணமாக , கற்பித்தல் முறைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு தேர்வுக்கு மட்டுமே மாணவர்களைப் பயிற்றுவித்து பாடங்களைப் படிக்கத் தயார் செய்யும் முறை கடந்த 10 ஆண்டுகளாக நம் கல்வி முறைக்குள் வேர் பிடித்தது. மதிப்பெண்களின் பின்னால் ஓடும் பயிற்சியை பள்ளிகள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கற்பித்தலை நீர்த்துப் போக வைத்தன .

 மதிப்பீட்டு முறையில் சிறந்த முறையான   தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (CCE Continuous and Comprehensive Evaluation ) என்பது நம் கல்வி முறையில் வேறு மாதிரியாகப் புரிந்து கொள்ளப்பட்டது. அதாவது இந்த மதிப்பீட்டு முறையில் வழங்கப்படும் 40 மதிப்பெண்களை மாணவர்களுக்குத் தரவே  இலவச நுழைவாயிலாகப் புரிந்து கொள்ளப்பட்டு , மதிப்பீட்டு முறையால் பிராஜக்ட் செய்யும் போக்கு வளர்ந்தது. இந்த சுழற்சியில் பதிவேடுகள் மட்டுமே பொலிவு பெற்றன .மாணவர்களின் உண்மையான திறன்களும் சிந்திக்கும் திறன்களும்  பொலிவிழந்தன. அதோடு பல்வேறு புள்ளி விபரங்களும் தமிழகப் பள்ளிக் குழந்தைகள் வாசிப்பில் பின் தங்கியுள்ளதாகவும் அடிப்படைக் கற்றல் திறன்களில் மிகவும் பின் தங்கியிருப்பதாகவும் செய்திகளில் வர ஆரம்பித்தன. அவற்றை சரி செய்யும் பொருட்டு கல்வித் துறையில் புதிய புதிய திட்டங்கள் முளைத்தன . திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டதாக பதிவேடுகள் தொடர்ந்து கையெழுத்திடப்பட்டு கோப்புகளாகின்றன. உண்மையான மாற்றங்கள் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாட்டில் நிகழ்ந்துள்ளனவா என்பதை ஆராய எந்த வழி முறைகளும் கையாளப்படுவதில்லை .

இப்படியான சூழலில் 8 ஆம் வகுப்பு வரை சரியான கவனத்துடனும் அக்கறையுடனும் கற்றலை அணுகாத குழந்தைகள் 9 ஆம் வகுப்பில் பாடச் சுமைகளால் திணற ஆரம்பித்து விடுகின்றனர்.  ஒரு புறம் அவர்களது வளரிளம் பருவ வயதின் உடலியல் மாற்றங்களால் எதிர் பாலின ஈர்ப்பு மேலும் கற்றலை சிக்கலாக்குகிறது .ஒரு கட்டத்தில் தங்களுக்கு படிப்பு வரவில்லை என்று பள்ளியை விட்டு இடைநிற்றலை உறுதிப் படுத்துகின்றனர். கற்றலில் ஆர்வமின்மையும், வறிய  வீட்டுச் சூழலும் அவர்களை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றிவிடும் போது இடைநிற்றல் தொடர்கிறது . 

இடைநிற்றலுக்கான அடுத்த முக்கியமான காரணம், அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படும்  ஆசிரியர் - மாணவர் விகிதம் .

1 - 5 வகுப்புகளுக்கு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். 6-8 வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை 100 க்குள் இருப்பின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் நியமிக்கப்படுவார்கள்.  100 க்கு மேல் மாணவர் இருந்தால் 35 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் நியமிக்கப் படுகிறார்கள். கல்வி உரிமைச் சட்ட விதியின் படி இந்த நியமனம் .. இவற்றின் அடிப்படையில் இன்று தமிழகத்தின் பெரும்பான்மையான தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவோ ஈராசிரியர் பள்ளிகளாகவோ தான் இயங்குகின்றன. அந்த சூழலில் அரசின் தகவல் சேகரிப்பு கடிதப் போக்குவரத்தும் மற்ற பதிவேடுகள் பராமரிப்பு , அலுவலக வேலை , இதர பணிகளுக்கும் ஆசிரியர்கள் தங்கள் நேரங்களைக் கொடுத்து வருவதால் குழந்தைகளுடனான கற்பித்தல் நேரம் என்பது வெகுவாகக் குறைந்து விடுகிறது. குழந்தைகள் அந்த வயதுக்குரிய கற்றல் திறனை அடைவதில் சிக்கல். 5 ஆம் வகுப்பை முடித்து நடுநிலைப் பள்ளிக்கு அல்லது உயர்நிலை / மேல்நிலைப்  பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு சேரும் குழந்தைகள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்த இயலாமையும் புதிய சூழலில் கல்வி கற்க தயக்கம் , ஆசிரியர் - மாணவர் உறவு இடைவெளி , அதிக பாடங்கள் என அத்தனையாலும் மனதளவில் சிக்கலுக்குள்ளாகி விடுகின்றனர் . இப்படியான அடுத்தடுத்த பிரச்சனைகள் , தேர்வுகள் , புரியாமல் மனப்பாடம் இவை அனைத்தும் தான் 9 , 10 ஆம் வகுப்பில் அவர்களை இடைநிற்றலுக்குத் தள்ளுகின்றன. 

அரசுப் பள்ளிக் குழந்தைகளை அணுகி ஏன் படிக்கவில்லை என்று வினவினால் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் வீட்டில் குடிகாரத் தந்தை அம்மாவை அடிப்பதும் , இவர்கள் வீட்டில் சண்டை போடுவதும் இவையே காரணமாகக் கூறுவர். இவ்விடத்தில் நமது குழந்தைகளின் கல்வி பாதிப்பு சமூகப் பிரச்சனையால் , அரசாங்கத்தால் நடத்தப்படும் மதுக்கடைகளால் என்றே கூறலாம் .இது போன்ற தமிழக சமூக அரசியல் சூழலும் பள்ளிக் குழந்தைகளின் இடை நிற்றலுக்கு மிக முக்கியக் காரணமாகின்றன. 

அதே போல குடிகாரத் தந்தை வேலைக்குச் செல்லாமல் அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு குழந்தைகள் வேலைக்குச் செல்ல வேண்டி இடைநிற்றலாகின்றனர். பெண் குழந்தைகள் திருமணம் இன்னமும் கிராமங்களில் நடக்கிறது . வேலை தேடி இடம் பெயரும் மக்கள் வட மாநிலங்களிலிருந்து  தமிழகம் வருபவர்கள் , தமிழகத்திலேயே வேறு வேறு மாவட்டங்களுக்கு பல காரணங்களால் இடம் பெயரும் குடும்பக் குழந்தைகள் , நரிக்குறவர் இன மக்களின் வாழ்க்கை இயல்பு என்பனவும் இடைநிற்றலுக்கான சில முக்கியக் காரணங்களாக அறியப்படுகின்றன.

தொடர்ந்து பல நாட்களாக பள்ளிக்கு வராமல் வீட்டில் முடங்கி இருக்கும் ஒரு பெண் குழந்தையின் தாய் அந்த  

ஆசிரியரை சந்திக்க வருகிறார் .தனது குழந்தை பள்ளிக் கழிப்பறையைப் பயன்படுத்த இயலாமல்  இருப்பது மன அழுத்தத்திற்கு ஆளாக்கி ஆரோக்கியமற்ற உடல் பாதிப்பால் பள்ளிக்கே வர மறுக்கிறாள் எனக் கூறி வருந்துகிறார். ஆகவே தமிழகக் குழந்தைகளின் இடைநிற்றலுக்கு கட்டமைப்பு வசதி கழிப்பறை வசதிகளற்ற சூழலும் காரணமாகின்றன. கழிப்பறைகளுக்கான நீரில்லாத , குடி தண்ணீர் இல்லாத பள்ளிச் சூழல் இடைநிற்றலுக்கு காரணமாகின்றன. கல்விக்கான நிதியாக நாட்டின் உற்பத்தி வருவாயில் 6% ஒதுக்க 1964 இலேயே கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரை கூறியது. இன்றும் நம் நாட்டில் இந்த முறை நடைமுறையில் இல்லை. கல்வி வரியும் வசூலிக்கப்படுகிறது. இவையெல்லாம் முறையாகப் பயன்படுத்தினாலேயே கழிப்பறைப் பிரச்சனைகள் தீரும் . கட்டமைப்பு , ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அனைத்து Uள்ளித் தேவைகளும் நிறைவடையக் கூடும் .

வாழ்க்கைக்கு உகந்த கல்வியைத் தராத மதிப்பெண் சார்ந்து தரப்படும் கல்வி தான் இடைநிற்றலுக்கான மற்றொரு அடிப்படைக் காரணமாகப் பார்க்கலாம். 

ஆகவே மாணவர் விரும்பும் கல்வியைத் தர அவர்கள் மீது அக்கறையும் கவனிப்பும் உள்ள வகுப்பறைகளும் சுதந்திரமான மகிழ்ச்சியான கற்றல் சூழலும் அழுத்தமில்லாத பாடத் திட்டங்களுமே தேவை .இவை எல்லாம் இருந்தால் இடைநிற்றல் இல்லாமல் போகும். பெற்றோரும் அக்கறை கொள்ள வேண்டும் . பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இயங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMC - School Management Committee) முறையாக நடத்தப்பட்டால் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகள் களைய மக்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இடைநிற்றலுக்கான காரணங்கள் அறியப்பட்டு களையப்படலாம். 

சமூகத்தின் அங்கங்களாக இயங்கும் மாணவர் அமைப்புகள் , பொது நல இயக்கங்கள் , மகளிர் அமைப்புகள் , அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து அவரவர் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று கள எதார்த்தங்களை அறிந்து பிரச்சனைகளைக்  களைய முற்பட்டால் இடைநிற்றல் பிரச்சனை மட்டுமல்ல , தமிழகத்தின் கல்விப் பாதையே சீராகும் என்பதில் ஐயமில்லை .

சு.உமாமகேஸ்வரி 

அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் குழு (A3)