Saturday, 6 April 2019

வகுப்பறை உளவியல் - 20

#கல்வி_அரசியலை_மாற்றுவோம்

#வகுப்பறை_உளவியல் 20

எனது மாணவர்களின் அன்றாட வகுப்பறை அணுகுமுறை உளவியல் பற்றி தொடர்ந்து பதிவிட்டதைப் படித்திருப்பீர்கள். எல்லாப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுமே ஒன்னு தானுங்க, அவர்கள் பாடங்களை விட பரிவும் , அன்பும் , சிரிப்பும் , சிந்தனையும் நிறைய எதிர்பார்ப்பவர்கள்  , இவற்றை எல்லாம் கொடுத்து விட்டாலே பாட நூலை அவர்களே கையில் எடுத்துக் கொள்வார்கள்.

இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் ஜூன் முதல் வாரமே எழுதியிருந்தேன். அதில் 45 குழந்தைகள் 23 பலதரப்பட்ட பள்ளிகளிலிருந்தும் வந்து ஒரே வகுப்பறையில் எனக்கு மாணவிகளாக வந்தனர்.

அரசுப் பள்ளி இல்லையா ? அக்டோபர் வரை சேர்க்கை வந்தது அவர்கள் 49 பேர் ஆனார்கள் , முதல் ஒன்றரை மாதம் அறிவியல் பாடம் எடுத்தேன் அவர்களுக்கு , அதன் பிறகு கணினி வழி கணித வகுப்பறைகள் வந்ததால் கணக்குப் பாடம் எடுக்கப் பணிக்கப்பட்டேன். (அறிவியல் பாட வகுப்பை நானும் குழந்தைகளும் நிறைய மிஸ் பன்றோம்ங்கறத தனிக் கதை )

அதனால் ஆகஸ்ட்டிலிருந்து தான் என் குழந்தைகளுக்கு கணக்கு ஆசிரியராக மாறிய பிறகு , Lab பற்றிய விபரங்கள் கூட இங்கு கூறியிருந்தேன். இப்போ சொல்ல வருவது என்னன்னா ,

இறுதிப் பருவ விடைத்தாள்கள் திருத்திய பிறகு மனதின் சிறகுகள் விரிந்தன. 8 மாதமாக கணிதப் பாடம் கணினி வழி கற்றனர். இந்த குறிப்பிட்ட மூன்றாம் பருவ பாட நூல் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2 மாதங்கள் மட்டுமே பயிற்சி , அதுவும் வகுப்பறை கற்பித்தல் கிடையாது. Lab ல தான் ..

ஆரம்பத்தில் 49 குழந்தைகளில் 25 மாணவிகள் கணக்கில் அடிப்படை செயல்களான கூட்டல் , கழித்தல் ,பெருக்கல் , வகுத்தல் இவற்றில் பயங்கர குளறுபடி , முழுவதும் தெரியாமல் , பாதித் தெரிந்து தெரியாமல் இருந்தனர். அத்தனைக்கும் அந்த 20க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளே காரணம் , இலட்சக்கணக்கில் 8 வருடங்கள் (Pre_kg , LKG , UKG , 1, 2 , 3 , 4 , 5  ) பணத்தை வாங்கிட்டு ஒரு திறனும் வெளிக் கொணராம குழந்தைகளையும் பெற்றோர்களையும்  ஏமாற்றிய கூட்டங்கள்.

அவர்களை சபித்துத் தான் இவர்களுக்கான விமோச்சன்ததை ஆரம்பிக்க வேண்டியிருக்கு , அப்படி அடிப்படைச் செயல்பாடுகளில் இருந்து ஆரம்பித்த கணினி வகுப்புப் பயிற்சி  தான் இன்றைய இறுதித் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் போது நிறைவாக இருந்தது.

10 ஆம் வகுப்பு மாணவிகளை  எண்ணி ஒரு புறம் மிக வருத்தமாக இருந்தாலும் 6 ஆம் வகுப்பு மாணவிகள் தேர்ந்த திறன் படைத்த குழந்தைகளாக என் பார்வையில் மகிழ்ச்சியைத் தருகின்றனர் ,

இவர்களும் அதே சூழலில் இருந்து வரும் பலதரப்பட்ட குழந்தைகளே.  ஆனால் அணுகுமுறையும் பயிற்சியும் இவர்களுக்கான இடத்தை  தக்க வைத்த மிக முக்கிய உளவியல்  என்பதை  இங்கு பதிவு செய்கிறேன். அதே போல புதிய தொழில் நுட்பமும் சிறு பங்களிப்பைச் செய்தது என்றால் மிகையாகாது.

கணக்கு என்றால் எங்கள் வகுப்பறை ரொம்ப ரிஜிட் ஆக எல்லாம் இருக்காது. வீட்டுக்
கதை பேசுவோம் , உரையாடுவோம் , வாசிப்போம் , விளையாடுவோம் , அன்பைப் பரிமாறிக் கொள்ளுவோம் , நாட்டு நடப்பு பேசுவோம் , கதை எழுதுவோம் , நிறைய கலாட்டாக்கள் நடக்கும் ...

என்றுமே  சிலபஸ் பற்றிய பயத்தைக் குழந்தைகளிடம் காண்பித்ததே இல்லை. ஆனால் மீத்திறன் குழந்தைகளது ஆர்வத்திற்கும் தீனி போடாமல் இல்லை ...

இதன் விளைவு அவர்கள் சுதந்திரமாகக் கற்றனர். மார்ச் மாதம் முழுவதும் நிறைய விடுமுறை நாட்கள்  பொதுத் தேர்வு காரணமாக இருந்தாலும் 6 ஆம் வகுப்புக் குழந்தைகள் அவர்களது தேர்வு  விடைத் தாள்களில்   தங்கள் உழைப்பையும் சிரத்தையையும்  காட்டியிருந்தனர். அதற்கு சாட்சி நான் தான். அது பற்றிய ஒரு சிறிய ஆய்வை இங்குத் தருகிறேன் ,

வினாத்தாள் கிரியேட்டிவிட்டி கலந்து தான் இருந்தது. கணினி வழிக் கணிதத்தில் பாட நூலைப் பின்பற்ற மாட்டோம். ஆனால் பாடத்திட்டம் அவர்களுக்கானது.  அதே கலைத் திட்டத்தின்  (Curriculam) பிரிவின் பாடத்திட்டக் (syllabus) குறிப்புகள் அவர்களுக்கானதே .

விடைத்தாள்களில் 90 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 7 பேர் (12% மாணவிகள் ) , 80 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 10 பேர் (20% மாணவிகள் ) , 65 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 10 பேர் (20% மாணவிகள் ) , 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 15 பேர் (31% மாணவிகள் ) , 30 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 4 பேர் (8% மாணவிகள் ) , 16% சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 3 பேர் (6% மாணவிகள் ) ,  எனில் ......

சராசரியாக  50% மதிப்பெண்களும் அவற்றிற்கு அதிகமான மதிப்பெண்களும் பெற்றவர் 42 பேர் அதாவது 80% , எனில் கற்றலில் குறைபாடு உள்ளவர்கள் வெறும் 7 பேர் தான் , இவர்களையும் வரும் காலங்களில் இன்னும் சற்றே அடுத்த நிலைக்கு நிச்சயமாக அழைத்துச் செல்ல இயலும்  , இப்படியான  திறனுள்ள
குழந்தைகள் தான் எல்லாப் பள்ளிகளிலும் அது அரசுப் பள்ளி என்றாலும் சரி , தனியார் பள்ளி என்றாலும் சரி .

தேர்வு வினாத்தாள் வினாக்கள் பாடநூலை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்க , அதனையும் அழகாக எதிர்கொண்டனர் எனது அசாத்தியத் திறமை கொண்ட குழந்தைகள் .

ஆனால் 6 ஆம் வகுப்பில் இப்படி வரும் குழந்தைகள் தங்களது பள்ளி வாழ்க்கை முடியும் போது எதற்குமே லாயக்கற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டு தேர்ச்சி  மதிப்பெண் அட்டைகள் வழியே அடையாளப்படுத்துவது ஏனோ ?

கல்வித்துறையும்  ஆசிரியர்களுமே இதற்கான பொறுப்பாளர்கள் . கற்பித்தல் முறைகளை குதிரைக்கடி வாளமாகப் பின்பற்றாமல் சுதந்திரமான ஜனநாயக
வகுப்பறைகளை அமைத்துக் கொள்ள ஆசிரியர்கள்  முன் வர வேண்டும்.
#கல்வி_அரசியலை_மாற்றுவோம் வாரீர்

தொடரும்
உமா

Friday, 5 April 2019

கல்வி மறுப்பு - 3

கல்வி மறுக்கப்படுகிறதா ? ?? ( பாகம் - 3)

(இன்று தமிழ் இந்து நாளிதழ்  திசை இணைப்பில்  வெற்றிக் கொடி பகுதியில் ஒரு கட்டுரை கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் பற்றி வந்துள்ளது. இது சார்ந்து தேர்வு பற்றிய  களப்பிரச்சனை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்கிறேன் )

மிஸ் ..உங்களுக்கு எங்கே எக்ஸாம் டியூட்டி ?

எனக்கு Scribe டியூட்டிங்க மிஸ் , பயமா இருக்கு  ..... நானோ இடைநிலை ஆசிரியர் , எனக்கு 10 ஆம் வகுப்பு பாடம் எதுவுமே தெரியாது. அந்தக் குழந்தை சொல்லுமா ? என்ன எதுக்கு போட்டாங்க என ஒரு புலம்பல்.

பட்டதாரி ஆசிரியர்களுக்குள்ளான ஒரு உரையாடல் ...

நான் தமிழ் டீச்சர் , என்னை +2 கணக்கு குரூப்க்கு  ஸ்க்ரைப் பா போட்டா நான் எப்படிப் பா பரீட்சை எழுதுவது ? நானே சைன்ஸ் , என்னப் போய் காமர்ஸ் எக்ஸாம் எழுதச் சொல்றாங்களே ...

இப்படியான தொடர் புலம்பல்கள்  பொதுத் தேர்வு சமயங்களில் பள்ளி வளாகங்களில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

சரி , இந்த Scribe எழுதும் ஆசிரியர்கள் எதற்கு ?

நமது கல்வி முறையில் உள்ளடங்கிய கல்வி (Inclusive Education ) என்ற முறைதான் பள்ளிக் கல்வியில் பின்பற்றப்படுகிறது. இதில் மாற்றுத் திறன் படைத்த மாணவர்களும் இணைந்து சாதாரண குழந்தைகளுடன் கல்வி கற்பது.

முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உடல் ஊனமுற்ற குழந்தைகள் ,பார்வைத் திறன் அற்ற குழந்தைகள் , காது  கேட்கும் திறன் இல்லாதவர் இப்படி 21  ( As per rights of disability act 2016) வகையான  குறைபாடுள்ள  குழந்தைகள்  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏறத்தாழ 20,000 பேர் நடப்புக் கல்வியாண்டில்  படிப்பதாகத் தகவல் ,

இவர்களுள் கண் பார்வையற்றவர் , மன நலம் குன்றியவர்கள் , டிஸலக்ஷியா ஆகிய மூன்று பிரிவுக் குழந்தைகளுக்கு அரசு தேர்வுகள் துறை வழியே Scribe ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. கல்லூரி மாணவர்களுக்கும்  இந்த நடைமுறைகள் உண்டு. ஆனால் நாம்  இங்கு பள்ளிக் குழந்தைகளை மட்டும் மையப்படுத்துகிறோம்.

இக்குழந்தைகள் சொல்வதை எழுதுவதற்கு நியமிக்கப் படும் ஆசிரியர்கள் எழுத வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு  சொல்லப்படும் வாய் வழி கட்டளைகள்.

ஆனால் , குழந்தைகள் சொல்வார்களா என்றால் , 90% சொல்ல மாட்டார்கள் , ஏனெனில் நாம் நன்கறிவோம். இது போன்ற குழந்தைகள் பள்ளிக்கு வருவது மிக உளவியல் சார்ந்த சிக்கல் , அதன் பிறகு அவர்களுக்குத் தனிக் கவனம் செலுத்துவது என்பது ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய சவால். அதையும் தாண்டி ஓரளவிற்கு 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் உண்டு. ஆனால் தேர்வறைக்கு வந்த உடன் மனப்பிறழ்வால் அவற்றை மறந்து போகும் குழந்தைகள். விளைவு , அவர்கள் மீது அனுதாபம் கொண்டு தங்களுக்குத் தெரிந்ததை எழுதி வரும் ஆசிரியர்களால் எப்படியாச்சும் அந் கக்குழந்தைகளை தேர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று  சம்மந்தமே இல்லாத பாடங்களை ஒரே நாளில் படித்துச் செல்லும் ஆசிரியர்கள் உண்டு. ( உதாரணம் என்னையே கூறுகிறேன் )

நான் ஒரு கணக்கு ஆசிரியர் , தேர்வுப் பணிக்கு என்னை நியமனம் செய்த பள்ளியில்  கண்காணிப்புப் பணி தான் போட்டிருந்தனர். அதற்காக 10 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு கண்காணிப்பு பணிக்கான அறை எண்ணும் தரப்பட்டது . தயாராகிக் கொண்டு இருக்கிறேன். Chief officer ஒரு ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு இருக்க , அவர் மறுக்க சற்றே வருத்தமான சூழல் , உடனே நான் யோசிக்காது நான் எழுதறேன் (scribe Duty) மேடம் என்றதற்கு அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி , ரொம்ப தேங்க்ஸ் மா என்று கூறி , பிறகு என் தேர்வறைக் கண்காணிப்பு  பணி மாற்றப்பட்டு தேர்வு எழுதினேன். இந்த இடத்தில்  அந்த மாணவன் வாழ்வு குறித்து தான் இப்பணியை ஏற்றுக் கொண்டேன்.

இது ஓர் உதாரணம் தான். எனக்கான கேள்விகள் நிறைய உள்ளன. இப்படியா திட்ட மிடா பணி , பாடம் தெரியாத ஆசிரியர்களை இப்பணிக்கு நியமிப்பது ? இது பற்றி எந்தக் கேள்வியும் முன்வைக்காமல் சொன்னதைச் செய்யுமாம் கிளிப்பிள்ளை என பணியை ஏற்றுக் கொள்ளும் ஆசிரியர்கள்  எதை மாணவரிடம் பயிற்றுவிப்பர் ?

இது போன்ற 9 , 10 வகுப்பு குழந்தைகள் மட்டும்  தமிழகம் முழுக்க 8000 இருப்பதாகத் தகவல் (நடப்பு ஆண்டில் ) , அவர்களுக்கு 146 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் , அப்படியே இருந்தாலும் எல்லாக் குழந்தைகளுக்கும் முழுமையான கற்றல் நடைபெறுகிறதா  ?

சில ஆசிரியர்களிடம் பேசினால் மிக வருத்தப் படுகின்றனர். எங்கிங்க டீச்சிங் பண்றோம் , சர்வே எடுத்து அவங்களுக்கு ஐடி வாங்கித் தந்து வெளி வேலைகள் மட்டும் தான் செய்கிறோம் . கற்பித்தல் எதுவும் நடைபெறுவதில்லை என்கிறார்கள்.

மேலும் இது போன்ற Scribe க்காக குழந்தைகளுக்கு அனுமதி வாங்கி முழுமை அடைய வைக்கும் நடைமுறையில் கூலிக்கு வேலை செல்லும் பெற்றோர் அவதிப்படுவர். துறை என்னவோ அதை எளிமைப் படுத்தி இருந்தாலும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் , வகுப்பு ஆசிரியர் , பெற்றோர் இவர்களின் கூட்டு முயற்சி தேவைப்படும்.

தனியார் பள்ளிகளில் வேண்டுமென்றே Scribe வாங்கி தேர்ச்சி சதவீதம் பெறுபவர் தனிக்கதை .

இந்தக் குழந்தைகளது கல்வி எங்கே ? சாதாரணக் குழந்தைகளே பல வித ஏற்றுத் தாழ்வு மிக்க கல்வி நிலை இருக்கும் போது , மிகக் குறைந்த சதவீதம் உள்ள இவர்களுக்கான கல்வியை எங்கு தேடுவது ?

இவர்களுக்கெல்லாம்  கனவுகள் இருக்காதா ? இவர்களது பெற்றோருக்கும் இவர்களது கல்வி குறித்த கனவு இருக்கும் தானே ...

இது பற்றிய புரிதல் , சிந்தனைகளை  ஊடகங்கள் எப்போதாவது  கையில் எடுத்துள்ளதா ?

ஆசிரியர் போராட்டங்கள் இவர்களுக்கான பரிந்துரைகள் வைத்துள்ளனவா ?

கல்வியாளர்கள் இவர்களுக்காக துறையை நிர்ப்பந்தம் செய்கிறன்றனரா ?

இவர்களது பெற்றோரும் தானே வரி செலுத்துகின்றனர்?

இவர்களுக்கான கேள்வி எங்குமே எழுப்பப்படாத சூழலே நிலவுகிறது.

அரசு சாராத தனியார் அமைப்புகளில் தங்களது குழந்தைகளை அனுப்பி கல்வி தரும் குடும்பங்கள் கதை தனி.

இப்படியான குழந்தைகளுக்கு தேர்வுகள் ஏன் கட்டாயப்படுத்தப்படுகின்றன  ? மாற்று வழி ஏதாவது அரசு யோசித்தால் என்ன ?

எனில் ஏற்கனவே குரலற்ற ஏழை மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில்
இவர்களும் சேர்ந்து ஊமையாகிப் போகும்  சூழல் எனில் கல்வி மறுக்கப்படுகிறது தானே ?

தொடரும்
உமா

கல்வி மறுப்பு - 4

கல்வி மறுக்கப்படுகிறதா ...? (பாகம் - 4 )

திருவாளர் பிரகஸ்பதிகளே அதிமேதாவிகளே  😢😢😢

... 10 ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கான கணக்குப் பாடத் தேர்வு வினாத்தாள் தயாரித்த உயர்ந்த மனிதர்கள் கவனத்திற்கு ...

தமிழகக் கல்வி முறையில் ஏற்கனவே பல குளறுபடிகள் ...

இது 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வின் காலம் , பல்வேறு ஏற்றத் தாழ்வுகளடங்கிய கல்வி முறையில் இன்றைய குழந்தைகள் கணக்குப் பாடத் தேர்வு வினாத்தாளை கையில் வாங்கிய உடனே பதறிப் போய் முகம் வெளிறியதைக் காண முடிந்தது.

100 மதிப்பெண் வாங்குவதைத்தான் தடுக்கும் டிவிஸ்டுகள் வழக்கமாக வைத்திருப்பார்கள் , தேர்வுத்துறை வினாத்தாள் தயாரிப்பில் ....

ஆனால் இன்றோ குழந்தை 35 வாங்குவதற்கும் டிவிஸ்ட் ..

தலைமையாசிரியர்கள் கூட்டம் போடும் பள்ளிக்கல்வித் துறை  அதிகாரிகள் ரிசல்ட் குறித்து நிறைய  எதிர்பார்ப்பதும் அதே கட்டளைகளை ஆசிரியர்களிடம் கடத்தும் தலைமை ஆசிரியர்களும் செய்தியாக , பீதியை கிளப்பி விடும் சூழலாக மாறுவதை அறிய மாட்டார்கள்.

குழந்தைகளிடம் இந்த அழுத்தத்தைக் கடத்த முடியாமல் தங்கள் மனதளவில் அழுத்தம் பெற்று இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. ஏற்கனவே காலம் காலமாக கணக்குப் பாடத்தை வேப்பங்காயாகப்  பார்க்கும்  மனநிலையே அடையாள ப்படுத்தப்பட்டிருக்கும் சமூகத்தில் இன்றைய கணக்குத் தேர்வு அடுத்து வரும் காலங்களில் கணிதப் பிரிவு பாடத்தைத் தேர்வு செய்யும் குழந்தைகளது எண்ணிக்கை வெகுவாகக் குறைய வழி செய்துள்ளது.

அப்படி என்ன நல்ல Educational System தந்துட்டீங்க குழந்தைகளுக்கு? 9 ஆம் வகுப்பு வரை முப்பருவக் கல்வியில் பாதி படித்தும் படிக்காமையும்  வரும் குழந்தைகள் , சரி வழக்கம் போல் ஆசிரியர்களைக் குற்றவாளிகளாகவேக் கூறினாலும் , ஏதோ ஒரு வகையில் அடிப்படை தெரியாமல் வந்த 10ஆம் வகுப்புக் குழந்தைகளை 35 மதிப்பெண் வாங்க வைக்கவே பிரசவ வேதனையை வருடம் முழுக்க அனுபவிக்கும் ஆசிரியர்கள் பாடாய்ப் பட ,

எல்லா கேள்விகளிலும் டிவிஸ்ட் , ஒரு மதிப்பெண் வினாக்களில்  கடினம் ,2 மதிப்பெண் கேள்விக்கான கணக்குகளிலும் கடினம் , 5 மதிப்பெண் பகுதி என எல்லாவற்றிலும் தன் அறிவு மேதாவித் தனத்தைக் காட்டி புத்திசாலிக் குழந்தைகளை மட்டும் மனதில் வைத்து கேள்வித் தாள் எடுக்கப்பட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது.

அப்போ , பின்தங்கிய மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாகவே இருக்கக் கூடாதா ???

ஏன் இவ்வளவு வன்மம் உங்களுக்கு ?
கணக்கு ஆசிரியர்களே மருகிப் போகின்றனர் , ஏன் எங்கள் குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றீர் ?

எங்களிடம் படிக்கும் குழந்தைகள் யார் தெரியுமா ? கேள்வியே எதிர்காலத்தில் கேட் கக் கூடாது என்று திட்டமிட்டு , அவர்களது கற்றல் சிறகுகளை ஒடித்து , வெறும் 35க்கும் தயார் செய்யும் குரலற்ற குழந்தைகள். ஏன் படிக்கல ? என்ன படிக்கற ? எந்தக் கணக்குப் புரியல , வா ... நான் உனக்கு சொல்லித் தரேன் என சொல்ல ஆளில்லாத வீடுகளில் வளரும் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள்.

அவர்களது நம்பிக்கைச் சிறகுகளையும்  பிய்த்துப்  போட உங்களுக்கு எப்படி மனம் வந்தது ... இதுவும் ஒரு வன் கொடுமை தான்.

மனம் வெதும்புகிறது.

தொடரும்
உமா

தினம்_ஒரு_மாணவர்_மதிப்பீடு: 3

#தினம்_ஒரு_மாணவர்_மதிப்பீடு : 3

#மீள்

நம்முள்  சில ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் மட்டுமே நடத்தி பழக்கப்பட்டு விட்டது, சில மாணவர்கள் புரிதலில் பாடம் தாண்டி வகுப்பறை உரையாடல்கள் கூட தவறு என புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.  அதற்கு உதாரணம் இதோ ....

எனது வகுப்பறையில் பிடிக்காததைச் சுட்டிக் காட்டியுள்ள இக்கடிதத்தில் நீங்கள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என மனம் திறந்த இக்குழந்தையின் கடிதம் இதோ ... (பிழையைத் திருத்தாமலேயே  இங்கு தருகிறேன் )

- அன்பும் நிறைந்த பாசம் நெகிழ்ந்தா உமா மகேஸ்வாரி  ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய பாசமிக்கா வணக்கம்

மிஸ் நீங்க நல்ல Lesson எடுக்கறிங்கா டைம் ஆதிகமாக இருக்குது அன நிங்க பேசும் போது பாதி டைம் முடிச்சு, நிங்க நாடத்தும் போது நடுவிலே ரெம்ப பேசறிங்க , அதை விட்டு நீங்க பாடத்தில் கவணிக்க வேண்டும் நிங்க கவணிக்காவன எங்களுக்கு தூக்கம் தான் வருது. நீங்க அதை மட்டுமே மாத்திடுங்க நிங்க நல்ல ஆசிரியர் நிங்க எனக்கு மட்டும் அல்ல இந்த பள்ளிக்கே அசிரியார் ரக வர வேண்டும் என்று அசை உங்கள் போல் ஒரு ஆசிரியார் கிடைப்பதற்கு எங்கள் வகுப்பறை கொடுத்து வென திருக்க வேண்டும்
நன்றி  இப்படிக்கு பாசம் மிக்க
அன்புள்ள மாணவி
வி.ஜனனி 6 ஆ 2 பிரிவு

தொடரும்
அன்புடன்
உமா

கல்வி மறுப்பு - 5

#கல்வி_மறுக்கப்படுகிறதா_??? ( பாகம் - 5)

#டிஜிட்டல்_இந்தியாவா ?
#கற்கால_இந்தியாவா ?

தேர்வு விடைத் தாள் திருத்தும் பணியில் ஆரம்பமே அபத்தங்கள் ..

நேற்றிலிருந்து  6-9 வகுப்பு மாணவர்களுக்கான  ஆண்டுத்  தேர்வுகள் பள்ளிகளில் நடந்து வருகின்றன .

இன்று 10 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியும் ஆரம்பம். பள்ளியில் உள்ள மொத்த பட்டதாரி ஆசிரியர்களும் நேற்று மாலை பணி விடுவிப்பு செய்யப்பட்டு விட்டனர் , ( துறையின் ஆணை)

அப்போ அத்தனைக் குழந்தைகளுக்கும்  தேர்வு நடத்த ஆசிரியர்கள் இருக்கின்றனரா ? கேள்விக் குறி தான் , அது தலைமை ஆசிரியரின் தலைவலி .

சரி , காலை 8.15க்கே AE க்கள்( திருத்தும் ஆசிரியர்களுக்கான பெயர் - Assistant Evaluators) சம்மந்தப்பட்ட மையத்திற்கு சென்று விட வேண்டும் என்பது தலைமையாசிரியர்களின் உத்தரவு .

இதில் பயப்பட்டு 8 மணிக்கு மையத்தை அடைபவரும் , அடித்து பிடித்து சென்னையின் போக்குவரத்து நெரிசலில் ஷேர் ஆட்டோ , பேருந்து , ரயில் என பலவாறு பிரயாணம் செய்து ஓடி வந்து அட்டென்டன்ஸ் போடுபவரும் உண்டு. எந்த ராஜா ஆட்சி செய்தா நமக்கென்ன ? நமக்கு அங்கு சிபாரிசு செய்ய ஆட்கள் இருக்காங்க என்று மெத்தனமாக 11 மணிக்கு வரும் புத்திசாலி ஆசிரியர்களும் அடங்குவர். அது ஒரு புறம் ..

சரி ... இதில் வீட்டு வேலையெல்லாம்  முடிச்சு , சர்க்கரை , பிரஷர் , இத்யாதி உடல் நலக் குறைபாடுடன் பயந்து ஒடி வரும் பெண்ணாசிரியர்கள் தான் 80% க்கு மேலே.

8.15  (மு.ப )அவங்க கணக்கிலேயே வருவோம் , இப்போ நான் எழுதறப்போ 11.15 ( மு.ப ) வரை இன்னும் அவர்களுக்கு சரியான அறை ஒதுக்கப்படவில்லை  , வெய்யில்ல தான் அலைந்து கொண்டு உள்ளனர். இதுவல்ல இப்போ பிரச்சனை ,

டிஜிட்டல் இந்தியா ன்னு பெருமை பேசும் நாம் , கல்வித் துறையில் பெயருக்காக மட்டுமே ... ஏன் பள்ளிகள் பெயர் , ஆசிரியர் பெயர் , பாடங்களின் பெயர் என எல்லாமே அப்டேட் இருக்கும் தானே. இதற்கான குழுவும் போடறீங்க , முன்னாடியே குறிப்பிட்ட பள்ளியில் இருந்து சம்மந்தப்பட்ட பாட ஆசிரியருக்கு இந்த மையத்தில் இந்த CE (Chief Evaluator) க்கு கீழ் பணி என்று குறிப்பிட்டு பள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டியது தானே ?

ஏன் ஆட்டு மந்தைகள்  போல ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள்  இருந்தாலும் அத்துனை பேரையும் மொத்தமாக பணி விடுப்பு செய்து , மையம் வந்து சந்தைக் கூட்டமாக அலைய வைக்கும் நிலை ஏன் ?

ஒரு மாவட்டத்திற்கு அல்லது மையத்திற்கு இத்தனை விடைத்தாள்கள் கட்டுகள்  வந்துள்ளன என உரிய அதிகாரிகளுக்குத் தெரியும் , அப்போ அதற்கு தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கையை பணிக் கால அனுபவப் படி தேர்வு செய்து பட்டியல் அனுப்புவதில் என்ன குழப்பம் ?

ரேஷன் கடைகளில் கூட வரிசைக் கிரமம் இருக்க , இந்த மையங்களில் மட்டும் ஏன் தள்ளு முள்ளு ?  உ. ம்  கணிதப் பாடத்திற்கு 15 CE தேவை என இருந்தால்  150  AEs போதுமே , 150 ஆசிரியர்களை மட்டும் தேர்வு செய்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டியது தானே , அதை விடுத்து 500க்கும் மேற்பட்ட  ஆசிரியர்களை ஏன் மொத்தமாகப் பள்ளிகளிலிருந்து அனுப்பி , திருப்பி அனுப்புவதோ , தள்ளு முள்ளுவில் சிக்க வைப்பதோ எதற்கு ?

திட்டமிடாத பணியால் பாதிப்படைவது பள்ளிக் குழந்தைகளே , ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்தாலும் தேர்வு நடத்துவார்களே ,

ஒவ்வொரு ஆசிரியரும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள்  புலம்புவது எங்கு திரும்பினாலும் காதில் விழுகிறது. பலரும் பேசும் போது  இது போல  மிகக் கேவலமான நாட்களை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை என்றனர்.

மற்றும் சிலர்  எதுக்கு இவ்வளவு குளறுபடிகள் .... வருத்தமாக இருக்கிறது  என்று வேதனைப்படுகின்றனர் .இவ்வளவு வேகாத வெயிலில் நிற்க வைத்து அலைய வைத்து , பேப்பர் வேறு திருத்த வேண்டுமே என்று அமைதியான முறையில் புலம்புகின்றனர்.

இது பற்றி சங்கப் பொறுப்பாளர்களிடம் நான் கேட்டபோது , இந்த நவீன டிஜிட்டல் காலத்தில் இவற்றை எல்லாம் முறைப்படுத்தக் கூடாத என்றதற்கு , தலைமை ஆசிரியர்கள் தரப்பிலிருந்து நேர்மையான முறையில் பணி விடுப்பு செய்ய மாட்டார்கள் என்றும் , DE0 அலுவலகத்தில்  தங்களுக்குத் தேவையான நபர்களுக்கு மட்டும் டியூட்டி போட்டு வாங்கிக் கொள்வார்கள் , நியாயம் , நேர்மை கடைபிடிக்கப்பட  மாட்டாது என்கிறதோடு ,

இது திறந்த வெளி சாளர முறை , என்றும் கூறுகிறார். தகுதியானவர்களை தரம் பிரித்து எடுப்போம் என்பவரிடம் அதை பள்ளியிலேயே செயல்படுத்த முடியாதா என்றேன். மற்றொரு அடுத்த நிலை சங்கப் பொறுப்பாளர் என்னைப் பார்த்து , அய்யோ இவர் மிக அட்வான்ஸாக இருக்கிறார் , நம்ம சிஸ்டம் அப்படியில்லை என்பவருக்கு எனது கேள்வி , அப்படித்தான் சிஸ்டத்த மாத்துங்களே என்பது.

பொது மக்களே , பெற்றோரே , சமூக செயல்பாட்டாளர்களே ... இங்கும் மக்களது வரிப்பணம் கல்விக்காகத் தான் செலவழிக்கப்படுகிறது.

பிரயோஜனமாக அதை செலவழிக்காமல்  போவதும்  கல்வி மறுக்கப்படுவதாகவே அர்த்தம் .

கவனமாக இருங்கள்

தொடரும்
உமா