Wednesday, 5 August 2015

பள்ளி வளாகம் - 4



மொரட்டுப்பாளையத்தின்                                       மாணவர்கள்………………….(3)





எனக்கும் ஒரு 10ஆம் வகுப்பு வேண்டும் எனக் கேட்டவுடன், தலைமையாசிரியர் சரி என்று கூறி, எந்த வகுப்பு வேண்டுமோ அதை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என பாமா டீச்சரிடம் சொல்லிவிட்டார். அவர்களும் என்னைக் கூட்டிக் கொண்டு வகுப்பறைக்கு சென்றார்.. மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்..பச்சை நிற வண்ண சீருடையில் மாணவிகளும்,வெள்ளை,காக்கி நிற சீருடையில் மாணவர்களும் ஒரே வகுப்பறையில் அமர்ந்திருக்க,இவர்கள் நமது புதிய கணக்கு ஆசிரியர் என்று பாமா டீச்சர் என்னை அறிமுகப்படுத்த,அவர்களது முகங்களின் உணர்ச்சி அப்படியே மாறிப்போனது...ஆம் 10ஆம் வகுப்பு என்றாலும் புதியவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு அவர்களிடம் இல்லை என்று, எனக்குப் பார்த்தவுடன் புரிந்துவிட்டது...என்ன செய்வது????(யோசிக்கலாம்.)

மொரட்டுப்பாளைய மாணவர்

                                                 மொரட்டுப்பாளையத்தின் மாணவர்கள்…………………..




                   ஊர் பெயர்தான் மொரட்டுப்பாளையம்,ஆனால் மாணவர்கள் அனைவரும் மிக மிக மென்மையானவர்கள்………அங்கே படிப்பிலும்,மற்ற திறன்களிலும் எந்த மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்.முதல் நாள் என்னை அனைவரும் ஆசையோடு வந்து விசாரித்தனர்.”டீச்சர்…நீங்க அடிப்பீங்களா?...இதுதான் ஆறாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து வந்த முதல் கேள்வி…..ஒரு சின்னச் சிரிப்பில் நான் அவர்களை சமாதானப் படுத்த முயற்சி செய்தேன்..
10 ஆம் வகுப்பில் இரண்டுடு பிரிவுகள்…நான் சென்றது ஜூலை மாதம் அல்லவா ! பத்தாம் வகுப்பு என்பதால் ஏற்கனவே பாமா என்ற ஆசிரியர் இரண்டு பிரிவுகளுக்கும் கணக்கு வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்க,தலைமை ஆசிரியர் எனக்கும் ஒரு வகுப்பைப் பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டார்,அவர் வற்புறுத்தவில்லை, ஆனால் நான் ஆர்வமாக இருந்தேன்..ஏனெனில் இடைநிலை ஆசிரியராக இருந்த ஒவ்வொருவருக்கும் தெரியும்….பட்டதாரி ஆசிரியராகப் பதவிஉயர்வு என்பதே நெடுநாளையக் கனவாக இருக்கும்..அப்படிக் கிடைத்தவுடன்,எப்படி நம் பணியைச் செய்யாமல் இருப்பது?..ஆகையால்..நானாகக் கேட்டேன், எனக்கும் ஒரு 10 ஆம் வகுப்பு வேண்டும் என்று…..ஆனால் ……………..(நாளை சொல்கிறேன்)

பட்டதாரியாய் 6 வருடங்கள்



                                             07.07.2015


- 07.07.2009

இன்றுடன் 6 வருடங்கள் முடிந்து ஏழாம் வருடம் தொடங்குகிறது,எனது கணிதப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்து பணியில் சேர்ந்த நாள்…இந்நாள்.

……2001 ஆகஸ்ட் மாதம் 20ஆம் நாள், இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்த பொழுது இருந்த மனநிலையை விட சற்று பக்குவம் அடைந்து,கல்வியின் பொருள்-கற்பித்தல்-மாணவர்கள்-அவர்களது திறனின் உறுதி-நமது கடமை, ஒரு மாணவனுக்கு பாடத்திட்டத்தை விட முக்கியமாகக் கற்றுத் தர எவ்வாறு வழிநடத்துவது …...என ஒரு ஆரோக்கிய சிந்தனைப் போக்கு மனதின் ஊடே பிரயாணப் பட்டுவந்த நாட்கள்….
2009 இன் இதே நாள் ஜுலை 7-இல் தற்போதைய திருப்பூர் மாவட்டம்..(அன்று ஈரோடு மாவட்டம்) ஊத்துக்குளி என்ற வெண்ணைக்குப் பெயர்போன ஊரின் அருகே….மொரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணியேற்கச் சென்றேன். அவ்வூருக்கு பேருந்து வசதி எப்போதாவதுதான்.11 என்ற எண்ணுள்ள அரசுப் பேருந்து மட்டுமே இருக்கும்.ஒரு வழியாக முதல் நாள் பள்ளியை சரியான நேரத்தில் அடைந்தேன்…அங்கு நான் கண்ட மாணவர் வெள்ளம்,அவர்களின் வெள்ளை உள்ளம்,சிரிப்பு, தெளிவு,தைரியம்,ஆவல்,குறும்பு….எதற்கும் எல்லையில்லை……….அவர்களோடு நானிருந்த நாட்கள் அற்புதமான தருணங்கள்..10ஆம் வகுப்பு கணக்குப் பாடம் கற்பிக்க என்னைத் தயார் படுத்தினேன்….
நிறைய அனுபவங்கள்..உங்களோடு பகிர்ந்து கொள்ள கடலளவு இருக்கின்றது….