Monday, 9 June 2014

10. கணக்கு வகுப்புகள்

10.கணக்கு வகுப்புகள் .......

                        வடிவியல் உருவங்களுக்கு Geometry Box பயன்படுத்துவது போல,
  வரைபடங்களுக்கு   (Graph ) பள்ளிகளில் வாங்கி வைத்திருக்கும் கருப்பு நிற தொங்கு அட்டைகளை (Hanging  Graph Charts )கண்டிப்பாகப் பயன்படுத்தினால்,
6,7 வகுப்பு மாணவர்களுக்கு வரைபடங்கள் பாடப் பகுதி மிகத் தெளிவாகப் புரியும். ..இவற்றை எனது மாணவர்களின்  கற்றலில் இருந்து அறிந்தேன் ...
                         அப்படியும் கடினமாகத் தெரிந்ததால் ,அவர்களை வகுப்பறையின் உள்ளேயே சுற்றிலும் அமரவைத்து நடுவில் X  மற்றும் Y அச்சுகளாக சில மாணவர்களை நிற்க வைத்து 4 கால் பகுதிகளையும் புரிய வைத்தோம்.இங்கும் மாணவர்களே கற்பிப்பாளர்கள் ....ஆசிரியரான எனது வேலை வெறும் மேற்பார்வை மற்றும் சந்தேகம் தீர்த்தலே..........அந்த அனுபவங்கள் மிக நன்றாக இருந்தது  எனக்கும் எனது மாணவர்களுக்கும்...அடுத்தடுத்து அந்த விளக்கங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது..... அது பள்ளியின் எல்லா மாணவர்களுக்கும் பரவியது.......
                         அது 7 ஆம் வகுப்பு X ,Y  அச்சு ,முதல் கால் பகுதி, இரண்டாம் கால்  பகுதி, மூன்றாம் கால் பகுதி,நான்காம் கால் பகுதி எண்களைக் குறித்தல் இவைதான் அன்றைய வரைபடப் பகுதியின் முதல் பாடம்...இதுபோல் வகுப்பறை செயல்பாடுகள்  அமைந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது .......மேலும் நமது மாணவர்களுக்கு எந்தப் பாடமும் ஆரம்பத்தில் புரிவதில் தான் கடினமாக இருக்கும்.அது கணக்குப் பாடத்திற்கும் பொருந்தும் .ஆகவே அந்தக் கடினத்தை எளிமையாக்குவதற்கு   தான் நாம் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகளும், கற்பித்தல் துணைக்கருவிகளும்  பயன்படும்.
                           அந்தப் பாடப் பகுதியை கற்பித்த பிறகு தொடர் நடவடிக்கையாக, அவர்களுக்கு திரும்பத் திரும்ப நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.ஒரு Chapter முடித்துவிட்டோம் என்றெண்ணி அடுத்தடுத்து வேகமாகப்  பாடங்களைக்  கற்பித்தால், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதை நான் நன்றாக அறிந்தேன்.அதைத் தவிர்க்கும் பொருட்டு எவ்வளவு பணிச்சுமையாக இருந்தாலும் ,முதல் நாளின் பாடப் பகுதியை நினைவு படுத்தும் சில வினாக்களையாவது அவர்களிடம் கேட்கும் முறைகளைப் பின்பற்றினேன்.ஒரு நாளின் பாடப் பகுதி, சில நாட்களில் ஒரு வாரத்தின் பாடப்பகுதியாகவும் திரும்ப நினைவு கூறப்படும் .அந்த நாளின் கணக்கு வகுப்பில் புதிய பாடம் கற்பிக்கப்படாமலும் போகலாம்.
                          இங்கே நான் சொல்ல நினைப்பது என்னவென்றால் ,கணக்குப் பாடத்தைப் பொருத்தவரை, புதிய  புதிய கணக்குகளில் அறிமுகம் அடிக்கடித் தேவையில்லை.பதிலாக கற்பித்த பகுதிகளில் அதிகப் பயிற்சிகள் தந்தால் மாணவருக்கு நல்ல நினைவாற்றல் வரும்,அவர்களிடம் தன்னம்பிக்கை வலுப்படும் ,அவர்களே தங்கள் கணக்குத்  திறனையும் அளவிட்டு ஒரு படி மேம்படுவர்.அப்போது புதிய பாடம் அறிமுகம் செய்வதில் நமக்கு கடினம் இருக்காது.இதற்கெல்லாம் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ நடந்து விடாது,குறைந்தது 3 முழு மாதங்கள் தேவைப்படும்.
                      பிறகு நீங்கள் வேண்டாம் எனச்சொன்னாலும் கேட்காமல் கணக்கு கணக்கு என உங்களைச் சுற்றி சுற்றி வருவார்கள்.மற்றுமொரு மிக மிக அவசியமான ஒன்று ,REMEDIAL TEACHING இது அடிக்கடித்  தேவை .ஒவ்வொரு மாணவருக்கும்,ஒவ்வொரு பாடப் பகுதிக்கும் தேவையாக இருந்தது.....
                       இவற்றைத் தாண்டி மாணவரிடம் FEED back ஒவ்வொரு 3 மாத இடைவெளிகளில் வாங்கினேன்.முதலில் தயங்கினவர்கள் ,பிறகு தொடர்ந்து தர ஆரம்பித்தனர்.என்னிடம் நிறைய கோபம் இருந்தது,பல நேரங்களில் அடித்து விடுவேன்.....இதையெல்லாம் அவர்களே குறிப்பிட்டு மாற்றிகொள்ளுங்கள் TEACHER ,நல்லாப் புரியுது ஆனா,நீங்க கோபப்படுவது பயமாஇருக்குங்க Teacher என எழுதினார்கள்.........................இப்படி நமது கற்றலை செழுமைப் படுத்துவதோடு ,நமது  மனிதத்தையும் செழுமை படுத்தும் வழிகாட்டிகளாகத்தான் நமது  மாணவர்கள் நம்மோடு கைகோர்க்கின்றனர் ......

                                                                                                         (மீண்டும் பேசலாம்)

No comments:

Post a Comment