################
வாய் விட்டுப் படிங்க
*********************
நான் சின்ன வயசில் பள்ளியில் படிக்கும் போது வீட்ல அடிக்கடி எங்க பாட்டி குரல் வந்துகிட்டே இருக்கும். வாய் விட்டுப் படி , சத்தமாப் படி என ஒரு நாளில் பல முறை இது எதிரொலிக்கும் .
நானும் அதை அப்படியே கேட்பேன் , பள்ளியில் ஆசிரியர்கள் யாராவது எழுந்து படி என்று சொன்னால் போட்டி போட்டுக் கொண்டு படிப்பேன் .
இன்னாட்களில் , எனது வகுப்பறையில் மாணவிகளிடம் படிப்பது என்பதே வழக்கமில்லாது ஓரிருவர் மட்டும் படிப்பதைக் காண வருத்தமாக இருந்தது. எங்களுக்கு இடையே ஏற்பட்ட உரையாடல் ...
ஏம்மா கட கடனு படிக்கணுமே , வீட்ல எல்லாரும் புத்தகம் எடுத்து படிப்பதில்லையா ?
சரி , இன்னைக்கு வீட்டுக்குப் போன உடன் எல்லாரும் Sciene Book எடுத்து குறைந்தது ஒரு மணி நேரம் வாய் விட்டுப் படிக்கனும் , அப்படிப் படிக்கும் போது உங்க கண் எழுத்துகளைப் பார்க்கும் , சத்தமாக உச்சரிக்கும் போது அந்த ஒலி திரும்பத் திரும்ப நம் காதுகளில் கேட்கும் , அப்போது விரைந்து மனதில் பதியும் , நல்லாப் புரியும் , அதனால இன்னைக்கு வீட்டுக்குப் போய் என்ன செய்யணும் ?
கோரஸாக ... சத்தம் போட்டு படிக்கணுங்க மிஸ் .....
அடுத்த நாள் காலை ...
மாணவிகளில் சிலர் .... மிஸ் நான் வீட்ல படிச்சேன் , மிஸ் நானும் , மிஸ் நானும் எனக் கூறி மகிழ ,
சரி ஒவ்வொருத்தரும் சொல்லுங்க என்ன செய்தீங்க ?
மிஸ் நான் படிச்சேன் சத்தமா எங்கம்மா அதிசயமா பார்த்தாங்க , ஒன்றரை மணி நேரம் படிச்சேன்.
மிஸ் எனக்கு நல்லா புரிஞ்சுது , நீங்க சொன்ன மாதிரியே படிக்கும் போது மைன்ட்ல எல்லாம் ஒடுச்சு ,
மிஸ் , புது Words எல்லாம் Dictionary பார்த்து கண்டு பிடிச்சு படிச்சேன் மிஸ் , நல்லாப் புரியுதுங்க மிஸ்
மிஸ் , நான் சத்தம் போட்டு படிச்சதால் பக்கத்துல பேசினது எல்லாம் காது கேட்காம, தெளிவாப் படிச்சேன் ,
இப்படியே ஒரு 22 பேர் மாறி மாறி சொல்ல , மற்ற 18 பேர் படிக்கலங்க மிஸ் எனக் கூறி எழுகின்றனர்.
படிக்கத் தெரியாதவங்க எழுத்தக் கூட்டி படிங்க என கரும்பலகையில் 2 வார்த்தைகளை எழுதிப் போட்டு உச்சரித்துக் காட்ட , ஓ... சரிங்க மிஸ் என்றனர்.
அன்று முகநூலில் Malathi Swaminathan அவர்களின் இது சம்மந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சிப் பதிவைப் பார்த்தேன் , அதை வகுப்பறையில் அவர்களிடம் படித்துக் காட்டினேன். இது மேலும் அவர்களை வலுவூட்டியது.
மேலும் அடுத்தடுத்த நாட்களில் வாய் விட்டுப் படித்தலே ஒரு ஆய்வாக அந்த வகுப்பறையில் கலந்துரையாடப்பட ஒரே வாரத்தில் அனைவரும் தங்கள் வாய் விட்டுப் படித்தலினால் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .
நிவேதா என்ற மாணவி , மிஸ் இதுவரை நான் படிச்சதே இல்லங்க மிஸ் , ஆனா நேற்று முதல் முதலா வீட்ல புக் எடுத்துப் படிச்சேன் ,4 பக்கம் படிச்சேன் மிஸ் , ரொம்ப ஹேப்பியா இருந்தது.
எங்கள் வகுப்பறை மகிழ்ச்சியாலும் அனுபவத்தாலும் , ஆரவாரத்தாலும் நிறைந்தது
தொடரும்
அன்புடன்
உமா
No comments:
Post a Comment