தேர்வுக்குத் தயார் ஆவோமா ?
அரை நூற்றாண்டுக்கும் மேலாக நமது கல்வி முறையின் முக்கிய அங்கமாக
இருந்து வருவது தேர்வுகள் மட்டுமே . மாணவர்களுக்கு பல்வேறு திறன்கள் இருந்தாலும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே பள்ளியிலும் வீட்டிலும் கவனம் பெறுகின்றனர். ஏனெனில் ஒவ்வொருவரது எதிர்கால வாழ்க்கைக்கும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் தான் மிக இன்றியமையாததாக அமைகின்றது. நம் கல்வி முறையில் பெரும்பாலும் தேர்வுகள் தான் ஆதாரமாக உள்ளன. அப்படியான பொதுத் தேர்வு 10 ,11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் சென்ற ஆண்டு வரை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இந்த வருடம் 5 , 8 ஆம் வகுப்புகளுக்கும் சேர்ந்து நடத்தப்பட இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொருவரும் எவ்வாறு தங்களை அதற்கு பொருத்திக் கொள்ளலாம் என சிந்திப்போம்.
உடல், மன ஆரோக்கியம்
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது ஆன்றோர் வாக்கு. அது போல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வரக்கூடிய 3 மாதங்களும் உடலையும் மனதையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் .உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத உணவையே உண்ண வேண்டும். ஜங்க் ஃபுட் என அழைக்கப்படும் அனைத்தையும் தவிர்த்திடல் வேண்டும். சரியான நேரத்திற்கு உணவருந்திட வேண்டும் . உறக்கமும் அதே போல மிக அவசியம்.
மனதளவில் தேர்வு குறித்த அச்சத்தை விலக்க வேண்டும் . தேர்வின் போதும் தேர்வுக்காக தயாராகும் போதும் சில மாணவர்கள் தேவையற்ற பயத்தை சுமந்து மனதளவில் சிக்கலுக்கு ஆளாகுவர். ஆகவே பொதுத் தேர்வு குறித்த பய உணர்வை அவர்களிடமிருந்து அகற்ற வேண்டும். முதலில் பெற்றோர்கள் தேர்வு குறித்த அச்ச உணர்வை குழந்தைகளிடம் வீட்டில் விதைக்கக் கூடாது. அவர்கள் இயல்பாக அன்றாடம் பாடங்களைப் படிக்க மட்டும் தயார் படுத்த வேண்டும். அதே போல மாணவர்களது கவனத்தை சிதைக்கும் தொலைக்காட்சி நிகழ்வுகளை இந்த மாதங்களில் தவிர்க்கலாம். பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி நாடகங்கள் தாய்மார்களால் தொடர்ந்து பார்க்கப்படுவது குழந்தைகளின் தேர்வு காலங்களை சீரழிக்கும் என்பது கண்கூடு .
ஆகவே அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .
மாணவர்கள் இதுவரை படிக்கவில்லை என்றாலும் , இனி வரும் 2 மாத காலங்களில் தாங்களாக நேர அட்டவணை போட்டு படிக்க ஆரம்பித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். தினமும் அதிகாலை 5 மணிக்கு படிக்க ஆரம்பித்தால் விரைந்து பாடப்பகுதிகள் மூளை செல்களில் பதிய ஆரம்பிக்கும். படித்தல் , எழுதிப் பார்த்தல் , கணக்குகள் என்றால் போட்டுப் பார்த்தல், சூத்திரங்கள் எழுதிப் பார்த்தல் என இவற்றை நாள்தோறும் பயிற்சி செய்தி வந்தாலே சிறந்த மதிப்பெண்களைப் பெற முடியும். தொடர்ச்சியான ஈடுபாடு , புரிந்து படிக்கும் ஆர்வம் இவை இரண்டும் உங்களது பயத்தைப் போக்கும் . கடினமான பாடங்களைக் குறிப்பெடுத்து மன வரைபட முறையில் படித்து பயிற்சி பெற்றால் எளிதில் மனதில் பதியும். வீட்டில் தினந்தோறும் இந்த முறையில் பயிற்சி செய்யும் போது , புரியாத பாடக் கருத்துகளைக் குறித்து வைத்து மறவாமல் ஆசிரியர்களிடம் பள்ளியில் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். எந்த ஒரு பாடத்தையும் புரியாமல் மனப்பாடம் செய்யவே கூடாது. நேர மேலாண்மையைத் தேர்வுகளில் கடைபிடிக்க இந்த இரண்டு மாத காலங்களில் கடுமையான பயிற்சி பெறுவது உதவும்.
தேர்வுக்கு செல்லும் போது, தேர்வு மையத்தை அரை மணி நேரம் முன்னதாகச் சென்றடைய வேண்டும். அடையாள அட்டையுடன் , பேனா , பென்சில் , அழிப்பான் முதற்கொண்டு தேவையான அனைத்து எழுது பொருள்களையும் மறவாமல் எடுத்துச் செல்லுதல் வேண்டும் . தேர்வறைக்குள் ஒருவருக்கொருவர் பேசுதலைத் தவிர்க்க வேண்டும். வினாத் தாள் வழங்கப்பட்ட உடன் உரிய தேர்வு எண்ணை வினாத்தாளில் எழுத வேண்டும். அதோடு மிகக் கவனமாக வினாக்களை நிதானமாக வாசித்து உள்வாங்க வேண்டும் . வாசிப்பதற்கென்றே 15 நிமிடங்கள் தரும் முறை நடைமுறையில் உள்ளது. தேர்வு கண்காணிப்பாளர் விடைத் தாட்களை வழங்கி தேர்வு முடியும் வரை அறையில் நீங்கள் பின்பற்றிட வேண்டிய உங்களுக்கான குறிப்புகளைத் தருவார் .அவற்றை சரியாகப் பின்பற்ற வேண்டும் .
தெரிந்த வினாக்களுக்கு விடைத்தாளில் உரிய வினா எண்ணை எழுதி பதிலளிக்க வேண்டும் . பிரஷன்டேஷன் எனக் கூறப்படும் பதில் அளிக்கும் முறையை மிக நேர்த்தியாக செய்ய வேண்டும். அடித்தல் , திருத்தல் இல்லாமல் விடை அளிப்பதே சிறந்தது . சரியான காலத்தில் எழுதி முடித்து , திரும்ப விடைத்தாளை சரி பார்த்திடல் நல்லது. கடைசி மணி அடித்த பிறகே தேர்வறையை விட்டு வெளியேற வேண்டும்.
ஒரு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளை வைத்து சாதக பாதகங்களை அலசாமல் அடுத்த தேர்வுக்கு தயாராக வேண்டுமே தவிர முடிந்த தேர்வைப் பற்றியே சிந்திக்கக் கூடாது. இப்படி உங்கள் தேர்வு காலங்களை அணுகினால் எவ்வித மன உளைச்சலும் இல்லாமல் வெற்றி பெற இயலும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேர்மறையாக அணுக வேண்டும். அவர்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. எதிர்மறை வார்த்தைகளால் திட்டுதல் அவர்களது நம்பிக்கையை இழக்க வைக்கும் . ஆகவே மேற்கூறிய வழிகளில் குழந்தைகளை வழி நடத்தும் அவசியம் பெற்றோர்களுக்கு மிக இன்றியமையாதது. தேர்வு என்பது மதிப்பீட்டின் ஒரு பகுதி தான். அதை மனதில் கொண்டு குறைந்த மதிப்பெண் பெறும் குழந்தைகளையும் கவனமாகக் கையாள வேண்டும். ஆசிரியர்கள் மணவர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தாலும் கூடுதல் கவனம் எடுப்பது அவசியம் .இவ்வாறு மாணவர் , ஆசிரியர் , பெற்றோர் இணைந்து தேர்வுக்குத் தயாராவதே சிறந்த விளைவுகளைத் தரும்.
உமா
No comments:
Post a Comment