Wednesday, 2 September 2020

இன்றைய சூழலில் கல்வி - 6



அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் பெற்றோர்கள் 

கொரோனா கால ஊரடங்கின் தொடர்ச்சியாக இதோ ஆகஸ்ட் முடிந்து செப்டம்பர் மாதம் ஆரம்பித்து விட்டது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதியிலிருந்து ஆரம்பமானது. முதல்  பத்து நாட்களிலேயே தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஆறு லட்சத்தை நெருங்கியுள்ளது. இதை நீங்கள் வாசிக்கும் நாட்களில் ஒரு வேளை இன்னும் ஐம்பதாயிரத்தைக் கூடுதலாகச் சேர்த்திருக்க வாய்ப்பு உண்டு. 

கோவிட் - 19 இன் பல இன்னல்களுக்கு மத்தியில் மக்களின் நம்பிக்கை தங்கள் ஊர் அரசுப் பள்ளிகளின் மீது திரும்பியுள்ளது என்பது சற்றே மகிழ்ச்சி கொள்ள வேண்டிய செய்தி தான். 

கடுமையான பொருளாதார நெருக்கடி மக்களை வாட்டிக் கொண்டு இருக்கும் வேளையில்,  மக்கள் வேலை வாய்ப்பு அற்று , கையில் வருமானமின்றி தவித்துக் கொண்டு இருக்கின்றனர். தொடர்ச்சியாக 6 மாதங்களாக மக்களுக்கு ஊதியம் இல்லை. அல்லது வெகுவாகக் குறைந்து போய்விட்டது. அன்றாட உணவு , இருப்பிட வாடகை இவற்றை சமாளிப்பதே பெரும் சவாலாக மாறிய தருணத்தில் தான் மற்றொரு பிரச்சனையும் தலை தூக்கியது. ஆம் தங்கள் குழந்தைகளின் கல்வி தான் அந்த முக்கியப் பிரச்சனை. 

ஓரளவு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று வழக்கமாக தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை  சேர்த்துப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அப்படியே இந்தக் கல்வியாண்டைத் தொடர்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வி என்ற முறையில் ஒரு புறம் வகுப்புகள் ஆரம்பமாகி, கடந்த 4 மாதங்களாகவே நடந்து வருகின்றன. கல்விக் கட்டணங்களைக் கட்டிய பிறகு தான் சம்மந்தப்பட்ட குழந்தைகள் இணைய வழிக் கற்றலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதே பள்ளிகளில் கல்விக் கட்டணங்கள் கட்ட இயலாத சூழலில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி குறித்து சற்றே குழப்பத்தில் இருந்தனர் . ஆனால் எப்போதும் எல்லா மக்களுக்காகவும் இயங்குபவை அரசுப் பள்ளிகளே என விரைவில் புரிந்து கொண்டனர். விளைவு நாம் மேற்சொன்ன ஆறு லட்சம் மாணவர்களில் கணிசமான எண்ணிக்கை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு வந்துள்ளனர் என்பது மகிழ்ச்சி தருகிறது.

 பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருந்தாலும் சமீப காலங்களில் அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது என்பதும் கண்கூடு. கூடுதலாக பல பெற்றோர்கள் தங்கள் ஊர் அரசுப் பள்ளியை மூடிவிடும் சூழலுக்கு அனுமதிக்கக் கூடாது என்கின்ற சமூக அக்கறையும் கொள்கின்றனர். இவற்றைக்  காண்கையில் மாற்றங்களை நோக்கி நமது சமூகம் நகர்கிறது என்ற எண்ணம் நமக்கு உருவாகிறது .

இந்தக் கல்வியாண்டில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இதில் அடங்குவர் .ஆகவே மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை பிறக்கிறது என்பது சமீப நாட்களில் நாம் கண்டு வருவது. 

திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர் குரு மூர்த்தி . இவரது  தன்னார்வமான ,தொடக்கப் பள்ளி வகுப்புகளுக்கான காணொளி தயாரிப்பு பணிக்காக சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தனது  டிவிட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். குருமூர்த்தி ஆசிரியர் தனது மகனை இந்த வருடம் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளார். அவரது மகள் தான் பணிபுரியும்  அரசுப் பள்ளியிலேயே மூன்றாம் வகுப்பில் படிப்பதாகக் கூறுகிறார். 

என்னுடைய பிள்ளைகள் மூவரையும் அரசு பள்ளியில்  தமிழ் வழி கல்வியில் சேர்த்துள்ளேன் என்கிறார் திருப்பத்தூர் மாவட்ட ஆண்டியப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர் .போளூரைச்சேர்ந்த ஆசிரியர் ஜெகநாதன்  தனது மகளை முதல் வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டதை மகிழ்ச்சியுடன் முகநூலில் பகிர்கிறார். அதே போல தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பள்ளி ஆசிரியர் காந்தி தனது இரு குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்து உள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார். கோவை மாவட்டத்தின் செம்மாண்டம்பாளையம்  அரசு பள்ளி ஆசிரியர் ஜாஸ்மின் விக்டோரியா தனது மகனை தனியார் பள்ளியிலிருந்து மாற்றி சூலூர் பகுதி அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்த்துள்ளதைக் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார். 

கோவை மாவட்டம் ஆலத்தி வச்சினம் பாளையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் கனகராஜ் தனது குழந்தையை அன்னூர் அருகே புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளார். தான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக இருப்பதால் இங்கு தான் குழந்தைகள் ஆடிப் பாடி  மகிழ்ச்சியாகக் கற்க முடியும் என்பதை உணர்ந்து அரசுப் பள்ளியில் சேர்த்ததாகக் கூறுகிறார் .

இராமநாதபுரம் மாவட்டம் இளமணூரில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் சுமதி என்பவர் தனது மகனை அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளதாக மகிழ்வுடன் பகிர்கிறார். 

கடலூர் மாவட்ட சேத்தியா தோப்பு பகுதியில் நல்லூர் கிராம தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நித்தியானந்தம் அவரது மனைவியும் அரசுப் பள்ளி ஆசிரியர் . இவர்கள் தங்கள் மகளை கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியப்  பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர். 

கரூர் மாவட்டப் பகுதி பொய்யாமணி அரசு நடுநிலைப் பள்ளியில்  பணியாற்றும் பூபதி ஆசிரியர் தனது மகனை தனது பள்ளியிலேயே முதல் வகுப்பில் சேர்த்துள்ளதைப் பதிவு செய்வதோடு தனது மற்றொரு குழந்தையும் அரசுப் பள்ளியில் படிப்பதை உறுதி செய்கிறார். 

தருமபுரி மாவட்ட தாமரைக் கோழியப் பட்டி பள்ளி  ஆசிரியர் இளவரசன் தனது மகளை தனது பள்ளியிலேயே முதல் வகுப்பில் சேர்த்துள்ளார். 

இப்படி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்தக் கல்வியாண்டில் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியிலிருந்து மாற்றி அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதும் , அரசுப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதும் தமிழகம் முழுவதிலும் பரவலாக நிகழ்ந்து வருவது பாராட்டுக்குரியது .

அதே போல பொது மக்களும் ஆர்வமாக அரசுப் பள்ளிகளை நாடுகின்றனர். 

வட சென்னைப் பகுதியில் குளத்தூர் பகுதி அரசியல் கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஹேமாவதி அவர்கள் தனது அண்டை வீட்டுக் குழந்தைகள் பலரை தனியார் பள்ளியிலிருந்து விடுவித்து அரசுப் பள்ளியில் சேர்க்கைக்கு வழிகாட்டி உதவி இருக்கிறார்.

ஏற்காடு அடிவாரம் பகுதியைச்  சேர்ந்த லால் என்பவர் தனது மனைவியும் தானும் கல்வியாளர்களை சந்தித்து  கல்வி குறித்த ஆலோசனைகளைப் பெற்று 

 கல்வி பற்றிய புரிதல் ஏற்பட்ட பிறகு ,.  

 அரசுப் பள்ளிகளில் தான் சிறந்த கற்பித்தல் பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார். அதனால் தனது இரு குழந்தைகளையும் அப்பகுதியில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில்  எங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளோம் என்கிறார். 

இவ்வாறு தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நல்ல மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது. பள்ளிகள் திறக்கப் பட வில்லை என்றாலும் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அரசுப் பள்ளியில் சேர்க்க பலவித பிரச்சாரங்களை செய்வதும் பெற்றோர் சந்திப்பு நிகழ்த்துவதும் நடக்கிறது. பள்ளி குறித்து விளம்பர அட்டைகள் தயாரித்து ஊர் மக்களிடம் வழங்குவது மாணவர் சேரும் போது பரிசுப் பொருட்கள் வழங்கி வரவேற்பது , மாலை அணிவித்து வரவேற்பது போன்ற முயற்சிகளும் எடுத்து வருகின்றனர். 

அதே போல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லை என்றாலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சேர்ந்த கையோடு பாடநூல்கள் , பாடக் குறிப்பேடுகள் , பத்தாம் வகுப்பு எனில் அறிவியல் சோதனை குறிப்பேடு உள்பட வழங்கப் படுகிறது. மற்ற வகுப்புகளுக்கு 

பாடத்திற்கு ஒரு நோட்டு , சிறு வகுப்புகளுக்கு கையெழுத்துப் பயிற்சி ஏடு என அனைத்தும் விலையின்றி வழங்கப்படுகிறது. புத்தகப் பையும் சேர்ந்து குழந்தைகள் பெற்றுச் செல்கின்றனர். பல ஆயிரங்களை செலுத்தி தனியார் பள்ளியில் இவற்றை வாங்கிச் செல்லும் குழந்தைகள் , கல்வியை காசு கொடுத்து வாங்கிய பெற்றோர்கள் கண்களில் இனம் புரியாத நிம்மதியைப் பார்க்க முடிகிறது.

 தனியார் பள்ளிகளில் இருந்து வரும் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெறுவதிலேயே சிக்கல் .கல்விக் கட்டண நிலுவை இருந்தால் நிர்வாகம் தர மறுப்பதும் ஆங்காங்கே போராட்டம் நடப்பதும் என ஊடகங்களில் பார்க்கிறோம். இந்த சிக்கல்கள் எதுவுமின்றி நல்ல முறையில் கல்வி தர அரசால் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இலவசக் கல்வியை அளிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மக்கள் வரவேண்டும். தங்கள் கல்வி பெறும் உரிமையை உணர வேண்டும் .கல்வி விற்பனைப்  பண்டம் அன்று. அதை காசு கொடுத்து வாங்காமல் சேவையாகப் பெற மக்களிடம் இன்னும் கூடுதல் விழிப்புணர்வு வேண்டும் .

தொடர்ந்து பேசுவோம்

No comments:

Post a Comment