கேள்விகளை /சந்தேகங்களை வரவேற்போம்
*******************************************
எப்போதும் நமது வகுப்பறை சந்தேகங்களால் நிரம்பியது என்பதை ஆசிரியர் எல்லோருமே நன்கறிவோம். இருப்பினும் அவற்றை சரி செய்யாமலேயே கடந்து விட நன்கு பயிற்சி பெற்றவராகவே இருக்கிறோம். மாணவர்களின் சந்தேகங்களும் விடை தெரியா வினாக்களும் தான் ஆசிரியர்களை செம்மைப்படுத்தி கற்பித்தல் - கற்றல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக்கும் என்பதற்கு இதோ ஒரு உதாரணம் .
அது ஆறாம் வகுப்பு A2 பிரிவு , அறிவியல் வகுப்பு , முதல் நாள் வகுப்பறையில் நுழைந்த உடன் ஒரே உற்சாகம் , காரணம் அவர்கள் குழந்தைகள் எப்போதுமே உற்சாகத்துடன் தான் இருப்பார்கள் நாம் தடை போடாத வரை ..
எப்படியிருக்கீங்க குட்டீஸ் ?
ரொம்ப நல்லா இருக்கோம் மிஸ் ... நீங்க ?
நானும் ரொம்ப சூப்பரா இருக்கேன்.
நீங்கதான் எங்க புது மிஸ்ஸா சைன்ஸ்க்கு ?
ஆமா ..... இன்னைக்கு புத்தகம் யாரும் எடுக்க வேண்டாம் ... அதுக்கு முன்னாலே கொஞ்சம் பேசிப் பழகுவோம் ... சரியா ? ? - இது நான்
ஓ.... ஜாலிங்க மிஸ் ....(கோரஸ் )
அந்த வகுப்பு 53 பேரை உள்ளடக்கியது. கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் முண்டியடித்து முன்னே வர,
உங்க கிட்ட எது வேணா பேசலாமா மிஸ் ? ஒரு குரல் ....
திரும்பிப் பார்க்க , எனது பின்புறம் மிக அருகில் ஒரு ஏக்கமான முகம் ...
உன் பேர் என்ன கண்ணு ?
தர்ஷினி .......
ஓ... அருமை ... என்ன பேசணும் ? இது நான்
எனக்கு நிறைய சந்தேகமா இருக்கு மிஸ் ... சரி உன் சந்தேகம் என்ன ?
அதற்குள் நிறைய குரல்கள் ... மிஸ் எனக்கும் டவுட் மிஸ் , எனக்கும் டவுட் மிஸ் ......
இதென்னடா இது ? இன்னும் பாடமே நடத்தல ... அதற்குள் எவ்ளோ பேருக்கு டவுட் !!!!!!
சரி ஒவ்வொருத்தரா கேளுங்க ... பேசலாம் சரியா ?
மிஸ் பைபிள்ல சாத்தான்கள் தான் நமக்குக் கஷ்டம் தருதுன்னு சொல்லி வருதுங்க மிஸ் , உண்மையா ?, ஏசு தான் உலகைப் ப டச் சாருன்னு சொல்றாங்க , அப்புறம் மனுஷங்கள யாரு படச்சாங்க ? எனத் தொடர்ந்து மதம் சார்ந்த வினாக்கள்.
சட்டென சுதாரித்துக் கொண்டேன் , பைபிள் படிக்கலாம் கண்ணு , ஆனா எல்லாத்தையும் அறிவியல் ரீதியா நாம் யோசிக்கணும் , பரிணாம வளர்ச்சி பற்றியும் டார்வினைப் பற்றியும் கொஞ்சம் பேசினேன்.
வரிசையாக.... மிஸ் எனக்கு ஒரே ஒரு டவுட் , பனி எப்படிங்க மிஸ் வருது ? மிஸ் கோழியிலிருந்து முட்டை வந்துச்சா மிஸ் ? நமக்கு மனிதன் னு பேர் வச்சது யாரு மிஸ் ? நம்ம தாத்தா பாட்டி , அவங்க தாத்தா பாட்டி அப்படியே போனா யாரு மிஸ் முதலில் பொறந்தாங்க ????????????????????
அதற்குள் அந்த பிரிவேளை முடிந்து அடுத்த ஆசிரியர் வகுப்பு முன் நிற்க , அவரைக் கெஞ்சும் பார்வையில் ஒரு நிமிடம் என்றேன்.
யார் யாருக்கெல்லாம் சந்தேகம் தோணுதோ ஒரு பேப்பர்ல நாளைக்கு எழுதிட்டு வந்து எங்கிட்ட குடுங்க , நாம நிறைய பேசலாம் என்று கூற ... ஹை .... சரிங்க மிஸ் (கோரஸ்)... முதல் நாளின் அந்தக் குழந்தைகளுடனான உரையாடல் என்னை இன்னும் செழுமைப்படுத்தியதை எண்ணிக் கொண்டே நகர்ந்தேன்.
இவையெல்லாம் வளர்ந்து விட்ட நமக்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால் குழந்தைகளில் மூளையின் மூலையில் இவை போன்ற எண்ணற்ற வினாக்கள் முட்டி மோதி பதில் தெரியாமல் தான் இருக்கின்றன. முடிந்த வரை அவர்களின் இந்த சந்தேக வினாக்களுக்கு பதில் சொல்லி திருப்திபடுத்தி புரிய வைத்தால் தான் பாடம் சார்ந்து நகர முடியும் , இல்லையென்றால் பாடம் மட்டுமே கற்றுத் தரும் எந்திரங்களாக அவர்களது மனதில் நாம் பதிந்து விட .... இடைவெளி நீள்கிறது.
ஏற்கனவே எழுதப்பட்ட கரும்பலகையில் அதை சுத்தம் செய்யாமல் மேலும் மேலும் எழுதுவது எவ்வாறு குழப்பத்தை உண்டு பண்ணுமோ அதைப் போல அவர்களது சந்தேகங்களைத் தீர்க்காத சூழலில் பாடம் என்பதும் வீண். ஆகவே வினாக்களை அது எதுவாக இருந்தாலும் வரவேற்போம்.
(இது முன்பே எழுதப்பட்டது. இன்று அந்த முதல் சந்தேகம் கேட்ட மாணவியை மாலை பள்ளி முடிந்ததும் பார்க்க ... சந்தேகமெல்லாம் இப்போ தீர்ந்து விட்டதா தர்ஷினி ... கொஞ்சம் பேசு ஒரு வீடியோ எடுக்கறேன் எனக் கேட்க , கூச்சப் பட்டார் , பரவாயில்லை தோணுவதைப் பேசு எனக் கேட்ட , பேசுகிறார் ... நானே எதிர்பார்க்கவில்லை ... ஆம் இந்த மாணவியும் என்னை செழுமைப்படுத்தியுள்ளார்.)
அன்புடன்
உமா
ஆந்திரப்பிரதேசத் தொடக்கக் கல்வி மேம்பாட்டு இயக்கத்தில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் ஐந்து வினாக்களாவது எழுப்ப வேண்டும். பல சமயங்களில் ஆசிரியர்கள் திணறிப்போவார்கள். அத்திட்டத்தை மதிப்பிடும் வாய்ப்பு பெற்று நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்றுள்ளேன். உதாரணத்திற்கு ஒன்று. சென்ற வாரம் எச்சில் ஜீரணத்திற்கு உதவும். எச்சிலைத் துப்பக்கூடாது, முழுங்க வேண்டும் என்று சொன்னீர்கள். இன்று எச்சில் நோயைப் பரப்பும் என்கின்றீர்கள். எச்சிலை முழுங்கினால் நான் நோய்வாய்ப்படமாட்டேனா?.
அனுப்புநர்: Uma Scert <uma2015scert@gmail.com>
அனுப்பப்பட்டது: 20 மார்ச் 2018 08:27
பெறுநர்: rajagopalan ss
பொருள்: வகுப்பறை உளவியல் - 6
Show quoted text
No comments:
Post a Comment