Friday, 15 June 2018

வகுப்பறை உளவியல் - 10

வகுப்பறை உளவியல் : 10
------------------------------------------
அன்பெனப்படுவது ...

ஜூன் 1 முதல் 15 வரையிலும் ... பள்ளி வளாகத்தைச் சுற்றி சுற்றி என்னையும் சுற்றி வரும் குழந்தைகள் ...

மிஸ் நீங்க ஏன் எங்களுக்கு வரல ? போன வருஷம் மட்டும் 7 A1 க்கு சயின்ஸ்க்கு போனிங்க தானே .. இந்த வருஷம் எங்களுக்கு ஏன் வரல ?
(இது 6ஆம் வகுப்பு சென்ற கல்வியாண்டு குழந்தைகள் )

ஜூன் 4 அன்று மாலை பள்ளி முடிந்தது விட்டிற்குச் செல்லும் தருவாயில் , ஒரு மாணவி அம்மாவுடன் மைதானப் பகுதியில் நின்றிருக்க , முகம் மிக வாடியிருக்க , அருகில் சென்று .. என்ன கார்த்திகா .. எப்படியிருக்க .. நான் கேட்ட மாத்திரத்தில் கண்களிரண்டும் நீர் சொறிய .. அச்சோ என்ன ஆச்சுங்க .. அவங்க அம்மா மிக வருத்தத்துடன் .. நீங்க தான் இந்த வருஷமும் இவள்  க்ளாஸ்க்கு போவீங்கன்னு நம்பி தான் இந்த ஸ்கூலுக்கே வந்தா .. நீங்க வரலயாம் ..வீட்லயும் ஒரே அழுகை. .. எனக் கூற , அவளை அணைத்துக் கொண்டு , கண் துடைத்து ... இங்க பாரு குட்டி , மிஸ் கடைசி வரை உன் கூடவே வரமாட்டேன். வளர வளர எல்லாருமே மாறுவாங்க , புது டீச்சர்ஸ் உம் நல்லா க்ளாஸ் எடுப்பாங்க .. நான் இந்த கேம்பஸ்ல தான் இருப்பேன் ,தினம் காலைல வந்த உடன் பார்க்கலாம். எப்போல்லாம் உனக்குக் கஷ்டமா இருக்குதோ அப்பெல்லாம் என்ன வந்து பாரு , பேசலாம் , உனக்கு ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்லு, எந்தப் பாடம் என்றாலும் புரியலன்னா வந்து கேளு .. என்னைக்கும் மிஸ் உங்கூட இருப்பேன் ... என்று கூறி ஒரு வழியா சமாதானம் செய்த பிறகு ....சரி நான் இங்கேயே படிக்கிறேன் என்றாள்.

கடந்த 10 நாட்களாகவே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஓடி வந்து எனக்கு விஷ் பண்றதும் ,ஏக்கத்துடன் என்னைப் பார்ப்பதும் எனக்கு மனதைப் பிசைகிறது. இடையில் தனியே வந்து .. என்ன இருந்தாலும் உங்களத் தவிர சயின்ஸ் க்ளாஸ் வேற வங்க எடுப்பது பிடிக்கல மிஸ் .. என்று கூற .. போகப் போக சரியாகிவிடும் கண்ணு என்றேன். என்னவோ மிஸ் எங்க க்ளாஸ் ல நீங்க இல்லாதத நினைச்சுப் பார்க்க வே முடியல என்று கூறிச் சென்றாள். அவளது விழிகளின் பொலிவு என்னவோ குறைந்து போனது மீள வேயில்லை ...

இன்னும் இரு குழந்தைகள் காவ்யாவும் ஷாலினியும் .. மிஸ் நீங்க ஏன் மிஸ் வரல ?நான் 8-B க்கு கணக்குக்குப் போறேன் டா ... HM என்ன சொன்னாங்களோ அத தான் கேட்க முடியும் ? என்றேன்.
நோ .. மிஸ். நீங்க எங்களுக்கு தான் வருவேன்னு சொல்லி வந்துடுங்க மிஸ்.
அப்படி எல்லாம் கேட்கக் கூடாது மா ..
நீங்க தான் மிஸ் வரணும் ,HM இட்ட போய்க் கேட்க பயமா இருக்கு , ஆனா தைரியத்த வரவச்சுக்கிட்டு கேட்கப் போறேன் மிஸ். சரி சும்மாவாச்சும் எங்க க்ளாஸ் க்கு வாங்க ப்ளீஸ். நீங்க இல்லாம க்ளாஸ் பிடிக்கல ...

சென்ற வருடம் 6ஆம் வகுப்புக் குட்டிகள் இப்போ ... மிஸ் கணக்குக்கு நீங்க வாங்க மிஸ். எங்களுக்கு அப்போதான் மிஸ் நல்லாப் புரியும் , ஒரு குழந்தை  .. ஏன் மிஸ் ? நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டமா ? ஏன் எங்க கிளாஸ் க்கு வர மாட்டேன் றிங்க ? எப்படிப் புரிய வைப்பது இவளுக்கு ...

நேற்று மதிய உணவு இடைவேளையில் இரு குழந்தைகள் ... தயங்கி நிற்க வாங்கம்மா என்றேன். மிஸ் மனசு கஷ்டமா இருக்கு .. ஏன் ?என்றதற்கு .. மிஸ் சயின்ஸ்க்கு நீங்க போன வருடம் சொன்ன மாதிரி ஆக்டிவிட்டீஸ் பாட்டும் கதையும் ரெடி பண்ணோம்... ஆனா ...மிஸ்  கம்யூட்டர் ல போய் பிரிண்ட் அவுட் எடுத்து வரச் சொல்லிட்டாங்க ... செலவாகுமே மிஸ். அதான் உங்க கிட்ட சொல்லிட்டுப் போக வந்தோம்.

மிஸ் ... நீங்க இல்லாம க்ளாஸ் போரடிக்குது. மிஸ் ... இந்த சயின்ஸ் மிஸ் வேகமா க்ளாஸ் எடுக்கறாங்க , வந்த உடனே புக் எடு ..இந்த பேஜ் எடுன்னு பட படன்னு நடத்தறாங்க , ஜாலியாவே இல்ல மிஸ் ... பிடிக்கல ...

நேற்று 10 ஆம் வகுப்பில் கணக்கு நடத்திக் கொண்டு இருந்தேன். இடைவேளை மணி அடித்து 3 நிமிடம் வரையிலும் கணக்கை நடத்திவிட்டு வெளியே வர ..... கடந்த வருடம் 7 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்திற்கு நான் சென்ற மாணவிகள் வெளியில் நின்று கொண்டு , மிஸ் ... எவ்ளோ நேரமா உங்களுக்காக வெயிட் பண்றோம் தெரியுமா ? ஒருவள் எனது கையைப் பிடித்துக் கொண்டாள். இன்னொரு வள் கண்களில்  நீர் எட்டிப் பார்க்கிறது. மிஸ், எங்களால் உங்கள விட்டு இருக்க முடியல மிஸ்.... அவர்கள் முன் எனது ஏக்கத்தையும் காட்டிக் கொள்ள முடியவில்லை.

காயத்ரி ஓடி வந்தாள் , றெக்கை புத்தகம் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தேன். மிஸ் , நீங்க புக் குடுத்து குடுத்து எங்க வீட்டு  ஷெல்ப் நம்பிடுச்சு எனக் கூறி மறவாமல் , மிஸ் நீங்களே மேத்ஸ்க்கு வாங்களேன் ப்ளீஸ்.

ப்ரியா .... 6 ஆம் வகுப்பில் கணக்குப் பிடிக்காது என்று கூறி மூன்றாம் நாள் கரும்பலகையில் கணக்கு போட்டு மற்றவருக்கு நடத்திய மாணவி , ஒடி வந்து .... மிஸ் உங்கள ஸ்கூல் முழுக்கத் தேடினேன் தெரியுமா ? நீங்க ஏன் எங்க க்ளாஸ் க்கு வரல ?

நான் சொன்னது 10% மட்டுமே ....90% பேச இங்கு இடமில்லை ..... சென்ற வருடம் வெறும் 3 மாதங்கள் அவர்களோடு இருந்த நேரங்கள் இவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்துமா ? என்றால் ஏற்படுத்தி உள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் நடுநிலைப் பள்ளிகளைப் போலன்றி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புதிய ஆசிரியர்கள் தங்களுக்கு வருவதை குழந்தை மனங்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

தினமும் அவர்களின் உலகத்தில் இவர்தான் இருக்க வேண்டும்  என உறுதியாக எதிர்பார்க்கின்றனர். அதனடிப்படையில் ஆசிரியர்களை go with class முறையில் பாடங்களுக்காக அமர்த்தினால் இந்த உளவியல் சரியாகி கற்றலும் மேம்படும்.

தொடரும்
அன்புடன்
உமா

No comments:

Post a Comment