கல்வி மறுக்கப்படுகிறதா ?? ( பாகம் - 2)
சமீபத்தில் ஜேக்டோ ஜியோ போராட்ட எதிரொலி சில மாவட்ட ஆசிரியர்கள் பயங்கரமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களிடமிருந்து கீழ் வரும் கேள்விகள் .. நாமும் இதையே பொது சமூகத்திடம் , கல்வியாளர்களிடம் , அரசுத் துறை கல்வி அதிகாரிகளிடம் முன் வைக்கிறோம்.
1.தமிழ் வழிக் கல்வி ஆசிரியரால் இரண்டு மாதத்தில் ஆங்கில வழி 6,7,8 மாணவர்களுக்கு திறம்பட பாடம் கற்பிக்க முடியுமா ?
2 . Primary school teachers ஐ Upper Primary ல் மாற்றியதனால் non SSA school ல் ALM ஐ தெரியாமல் ஆசிரியர் களால் கற்றல் விளைவு களை எதிர் பார்க்க முடியுமா ?
3. மன உளைச்சலினாலும் உடல் உபாதைகளாலும் பள்ளிக்கு செல்ல முடியாமல் ஆசிரியர்கள் இருக்கின்ற நிலையில் தேர்தலை முன்னிட்டு அவசரமாக தேர்வு களை நடத்தினால் பாதிக்கப் படுவது யார்?
போராட்ட காலங்களில் பேசப்பட்ட பேசு பொருள் குழந்தைகள் கற்பித்தல் இல்லாமல் கல்வி வீணாகிறது என்று, 10 நாட்கள் போராட்டக் களத்தில் இருந்த போது பேசிய அனைவரும் , அதனைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப் பட்ட பிறகு பள்ளிகள் இயங்க ஆரம்பித்த போது அதை மறந்தே போய் விட்டனர்.
நிஜமாகவே கல்வியின் நிலை பற்றி தொடர்ந்து கவனிக்க வேண்டும் அல்லவா ?
இப்போது இப்படியான பிரச்சனைகள் இயல்பான கற்றலுக்கு வழி வகுக்காமல் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதாகத் தானே அர்த்தம்.
1938 இலேயே பிரிட்டிஷ் ஆட்சியில் கூட தாய் மொழி வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டச் சட்டம் வந்திருக்கு ஏனோ 1978 களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில வழியில் மக்களின் மோகம் திரும்ப , 2018 - 19 என இந்த காலகட்டங்களில் 90% தமிழக அரசுப் பள்ளிகளில் தாய் மொழி வழிக் கல்வி அறவே மற(று) க்கப்பட்டு விட்டது.
ஆங்கிலேயனுக்குத் தெரிந்திருக்கிறது, தாய் மொழிவழிக் கல்வி தான் ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வி என்று. ஆனால் தமிழ் மகன்களுக்குப் புரியவில்லையோ தாய் மொழி அல்லாத கல்வி முறையின் பின்னடைவுகளும் அதன் அறிவியல் விளக்கமும்...
விளைவு ஆங்கில வழி வகுப்புகள் இருந்த பள்ளிகள் இன்று ஆங்கில வழிப் பள்ளிகளாகவே மாற்றம் பெற்று தமிழ் மொழி முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது 95% இடங்களில் தமிழக ஊர்களில் .
பாடம் நடத்தும் ஆசிரியர் லண்டனிலிருந்தா நேரா வருகிறார் ?அவரும் நம்ம ஊரில் பெரும்பாலும் அரசுப் பள்ளியில் தமிழ் வழியல் படித்தவராகவே இருப்பார்கள். அல்லது ஆங்கில வழியில் படித்த ஒரு 2% ஆசிரியர்களே இருப்பார்கள் , சரி அரசுதான் இவர்களை எல்லாம் ஆங்கில வழியில் கற்பிக்க பிரத்யேகப் பயிற்சி தருகிறதா ?இல்லையே ... ஏதோ பஞ்சத்துக்கு இங்கிலீஷ் படிச்சவங்க தான் பெரும்பாலான ஆசிரியர்கள் (என்னையே உதாரணமாகக் கூறிக் கொள்கிறேன். )
அப்படி இருக்க வேறொரு அந்நிய
மொழியில் எப்படிங்க அறிவியலையும் கணக்கையும் சமூக அறிவியலையும் சிந்திக்கிற முறையில் போதிக்க முடியும் ? இந்த கேள்வி ஏன் பெற்றோருக்கும் மற்ற கற்றோருக்கும் குறைந்த பட்சம் சமூக அக்கறை கொண்டு இயங்குபவர்களுக்கும் கூட வரவே மாட்டேங்குது ? யாரையும் கேள்விக்கு உட்படுத்தவே மாட்டேன்றீங்களே ...
அது பரவாயில்லை , ஊடகங்களாவது இதை மக்கள் கவனத்துக்கு எடுத்துட்டு போகுதா என்றால் இல்லை. அப்போ , ஒரு பக்கம் மக்களின் வரிப்பணம் சுரண்டப்பட்டு அர்த்தமில்லாத கல்விக்கு ஊதியமா போயிட்டு இருக்கு, அதே சமயம் அந்தக் கல்வி வெறும் 35க்கும் 70க்கும் இடையில் ஆசிரியர்களை நெருக்கிக் கிட்டே இருக்கு .இன்னொரு பக்கம் எல்லாத் திறன்களும் இருக்கும் ஒரு மாணவன் / மாணவி எதற்குமே லாயக்கில்லை என்பதாக உருவாக்கப்பட்டுக் கொண்டு உள்ளனர் .
அரசுப் பள்ளிகளில் படிக்கும் இவர்களெல்லாம் யார் ? கேள்வி கேட்க குரலில்லாத , குரல் இருந்தாலும் சத்தமே வராத அடிக் தட்டு வர்க்க மக்கள் அல்லவா ? இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா இது....
எனில் கல்வி மறுக்கப்படுவதாகத்தானே அர்த்தம் ??
தொடரும்
உமா
No comments:
Post a Comment