Thursday, 5 July 2018

வகுப்பறை உளவியல் 12

வகுப்பறை உளவியல் - 12
___________________________

வாய்ப்புகளைப் பரவலாக்குவோம்

எல்லா மனிதர்களுமே வாய்ப்புகளுக்காக ஏங்கும் மனநிலையை அல்லது வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் மனநிலையை அல்லது வாய்ப்புகளை எதிர்நோக்கியிருக்கும் மனநிலையை என ஏதேனும் ஒரு நிலையில் தன்னைப் பொருத்தி வாழும் சமுதாயமே இது.
யாருமே வாய்ப்புகளை முற்றிலுமாக வெறுப்பதோ  வேண்டாமென ஒதுக்குவதோ இல்லை. பெரியவர்களே அப்படி எனில் குழந்தைகளது மனநிலையும் அதே போலத் தான் இருக்கும் என்பதில்  யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது.

ஜூன் 29 - மாத இறுதி நாள் வகுப்பில் சலசலப்பு
என்னம்மா ?

மிஸ் ... நீங்க ஏற்கனவே சொன்னது போல அடுத்த மாசம்  திங்கள் கிழமைங்க மிஸ் ... அப்போ புது லீடர் ( வகுப்புத் தலைவி ) மாத்தணும் மிஸ்.

ஓ.. ஆமால்ல....

அப்புறம் எங்கேயிருந்து க்ளாஸ் எடுக்க ...!!!!

சரி யாரைப் போடலாம் ?கேட்க ஆரம்பிக்கும் போதே .... நான் நான் நான் என .... பல குரல்கள் ...

எப்படி இவர்களது உற்சாகத்தைச் சிதைப்பது ? என யோசித்துப் பார்த்தால் ...
ஒரே வழி ஓட்டெடுப்பு ..

சரி யாரெல்லாம் லீடராக ஆசை ....? அவர்கள் முன்னால் வாங்க ...48 மாணவிகளில் 13 பேருக்கு ஆசை. அவர்களை வகுப்பின் முன் நிற்க வைத்து

ஒவ்வொருவருடைய பெயரும் சொல்லி எழுத்து நிற்க வைத்து இவருக்கு ஓட்டுப் போடுபவர் கை தூக்கலாம் என அறிவித்து , கரும்பலகையில்  அவர்களது பெயரை எழுதி , ஒட்டின் எண்ணிக்கை எழுதப்பட்டது.

அதிகபட்சமாக ரக்க்ஷனா 28 ஓட்டுகள் பெற்று முதலிடத்திலும் அடுத்த இடத்தில் மகேஸ்வரி 23 பெற்று இரண்டாமிடத்திலும் இருக்க , ஜூலை மாதம் ரக்க்ஷனா வகுப்புத் தலைவியாகவும் , மகேஸ்வரி உதவித் தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதோடு  அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் மாதங்களுக்கு நியமனம் (டிசம்பர் வரை) செய்யப்பட்டனர். இதில் ஜூலை மாதம் வகுப்பின்  உதவித் தலைவியாக இருப்பவர் ஆகஸ்டு மாதம் வகுப்புத் தலைவியாக இருக்க வேண்டும். மாதத்திற்கு இருவர் என்றாலும் , அதில் முதல் மாதத்தின் வகுப்பு உபதலைவி அடுத்த மாதத்தின் வகுப்புத் தலைவியாக மாற்றம் .... என்று அனைத்து மாணவிகளின் ஒப்புதலோடு 6 மாதங்களுக்கான வகுப்புத் தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு எல்லோருடைய முகங்களிலும் பரவசம் தொற்றிக் கொண்டது.

ஆனால் ஜூன் மாத வகுப்புத் தலைவிகளது முகங்கள் சற்றே வெளிறித் துவண்டு இருக்க , ஏன் என விசாரித்தால் ... ஒரு மாதத்தோடு லீடர் பதவி இழப்பதே அதற்குக் காரணமாக அமைய .... மீண்டும் அனைவரிடமும் நிறைய பேசப்பட்டது. எல்லோருக்குமே வாய்ப்பு தர வேண்டும் என்று இறுதியில் புரிந்து கொண்டனர் .

ஜூலை 2 :

காலை முதல் பிரிவேளை , புதிய வகுப்புத் தலைவிகளைப் பதவியேற்க அறிமுகம் செய்து வாழ்த்துதல் நடந்தது. அதோடு ....

ஜூன் மாத லீடர்களுக்கு , (பத்மப்பிரியா , மதுமிதா , சுபஸ்ரீ) ஆகியோரை வகுப்பில் முன் வர வைத்து , அவர்களுடைய ஒரு மாத அனுபவம் எப்படி இருந்தது எனக் கேட்க ,

பத்மப்பிரியா , ....மிஸ் எல்லோரும் நான் சொன்னதைக் கேட்டு நடந்தார்கள் , நன்றி எனக் கூற ,சுபஸ்ரீயும் நேர்மறையாகத் தனது வகுப்புத் தலைவி அனுபவத்தைப்  பகிர்ந்தார்.

மற்ற மாணவிகள் இவர்களுக்கான நன்றியுரை வழங்கினர்.

அதில் ஒருவர் அனுப்பிரியா பகிர்ந்தது .. எனக்கு அடிக்கடி தலைவலி வரும் , அப்போதெல்லாம் சலைக்காமல் கோபப்படாமல் என்னை பத்மப்பிரியா மிஸ் கிட்ட கூட்டிட்டுப் போவாள் , பொறுமையாக இருப்பாள் என்றாள் .

இன்னும் சிலரும் வந்து தங்களை இந்த லீடர்ஸ் மிக நல்ல முறையில் தங்களை வழி நடத்தியதாகக் கூறி நன்றி உரைக்க .. நான் ஆச்சர்யப்பட்டேன். சின்னக் குழந்தை களிடம் எவ்வளவு பக்குவம் என .....

இதற்கெல்லாம் கால அட்டவணையிலும் சரி பாடத்திட்டத்திலும்  சரி ... எங்குமே ஒதுக்கீடு இல்லை.

வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்ற அரசியல் உண்மையை எனது குழந்தைகள் புரிந்து கொண்டதே இங்கு நான் பதிவு செய்ய விரும்புவது .

தொடரும் உளவியல்
அன்புடன்
உமா

No comments:

Post a Comment