பொதுத் தேர்வு ரத்து - மகிழ்ந்த தருணம்
5 , 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழக அரசு பொதுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்துள்ளது. தமிழகமெங்கும் இது குறித்து மகிழ்ச்சி மனநிலை நிலவி பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இயல்பு மனநிலைக்குத் திரும்பியுள்ளது வரவேற்கத் தக்கது. கல்வித் துறையில் வெளியான பொதுத் தேர்வு ஆணையை ரத்து செய்த நமது முதல்வர் கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு தமிழகக் குழந்தைகள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் அனைவரது சார்பாகவும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஏன் இந்த சூழல் ?
கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 ஐத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதற்கான எதிர்ப்பலைகள் பரவலாக உருவானதை நாம் அறிவோம் . வேறெந்த மாநிலமும் முன்னெடுக்காத வரைவு தேசியக் கல்விக் கொள்கையின் உட்கூறுகளை நம் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தத் தொடங்கி விட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த வரைவுக் கொள்கையின்
வரைவு விளக்கத்தில் பள்ளிக் கல்வி என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டிருந்தவற்றுள்
3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற ஒரு முக்கியமான முடிவும் எதிர்ப்பலைகளுக்கு ஒரு காரணமாகப் பார்க்கலாம்.
சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்ட 5 , 8 வகுப்புக்கு பொதுத் தேர்வு என்ற ஒரு அறிவிப்பால் மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் பயம் நிலவி வந்ததும் சமூக செயல்பாட்டாளர்கள் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்ததும் நாம் அறிவோம் .அதே நேரம் ஆசிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பால் பலவித மன அழுத்தங்களும் குழப்பமான சூழலும் உருவானதும் உண்மையே இது குறித்து ஊடகங்களும் பொது மக்களும் அக்கறையுள்ள மனிதர்களும் அவரவர் நியாயத்தை முன் வைத்தனர் .
பொதுத் தேர்வு அறிவிப்புக்கான காரணமாக எவற்றை எடுத்துக் கொள்ளலாம் ?
தமிழகப் பள்ளிகளில் ஏற்கனவே 10 , 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது 30 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. சமீப காலமாக 3 வருடங்களாக 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.பொதுத் தேர்வு அறிவிப்பால் அது தற்போது 5 , 8 வகுப்புகள் என நீண்டிருக்க வேண்டிய சூழலாக மாற இருந்தது.
கல்வியின் தரத்தை உயர்த்த தேர்வு மதிப்பீடு ஒரு முறையாகக் கொள்ளாமல் தேர்வு மதிப்பீட்டின் மதிப்பெண்கள் மட்டுமே ஒரே முறை என்ற சிந்தனை நம்மிடையே வேரூன்றிவிட்டதாகவே பார்க்கிறேன்.
பல புள்ளி விபரங்கள் , நம் குழந்தைகளுக்கு அடிப்படை வாசிப்பில் திறன் இல்லை என்பதாக அவ்வப்போது அச்சு , காட்சி ஊடகங்கள் வெளியிடுவதைக் காண முடிகிறது. ஆனால் ஒரு குழந்தையால் முதல் இரண்டு வகுப்புகளிலேயே தடுமாற்றம் இல்லாமல் வாசிக்க முடியும் .இந்த வாசிப்பு உயர் வகுப்புகள்
வரும் போது குழந்தைகளுக்கு எளிதில் கைவர வேண்டும். அப்படிக் கைவரவில்லை எனில் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அறிந்து களைய முற்பட வேண்டுமே தவிர எழுத்துத் தேர்வையே ஒரே அளவீடாகக் கொள்ளக் கூடாது.
சாதகமாகப் பார்ப்பவரின் நியாயங்கள் என்ன ?
இங்கு எல்லாவற்றுக்கும் தேர்வு , 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதும் போதும் மாணவன் பயப்படுகிறான் என்றால் அது 5 ஆம் வகுப்பிலேயே பயிற்சி தந்து விடலாமே என்கின்றனர் சிலர்.
10 , 11 , 12 வகுப்புகளில் பொதுத் தேர்வு . 12 ஆம் வகுப்பு முடித்ததும் மருத்துவத்துக்கு நீட் நுழைவுத் தேர்வு , மற்ற உயர் கல்வி எதுவாயினும் நுழைவுத் தேர்வு . ஆசிரியர் வேலைக்குச் செல்ல டெட் தேர்வு , மற்ற எல்லாப் பணிகளுக்கும் போட்டித் தேர்வு என்ற நிலை இருப்பதால் இந்த 5 , 8ஆம் வகுப்புகளுக்கான தேர்வையும் சாதகமாகப் பார்க்கின்றனர் பெற்றோர் தரப்பு உள்ளிட்ட சிலர் .
சில ஆசிரியர்களோ , 10 ஆம் வகுப்பில் வந்து 35 மதிப்பெண்களுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டியுள்ள அவலம் . எழுத்தே தெரியாமல் 9 ஆம் வகுப்பு வரை வந்து விடுவதால் எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதட்டும் என்கின்றனர். 5 ஆம் வகுப்பு குறித்து ஆசிரியர்கள் தரப்பில் பொதுத் தேர்வு எதிர்பார்ப்புகள் காண முடியவில்லை.
பாதகமாக எவற்றைப் பார்க்கலாம் ?
குழந்தைகளது மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க வேண்டும் . 10 வயதில் தேர்வு என்பது குழந்தை உளவியலுக்கு எதிரான வன்முறை எனலாம் .
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறான கல்வி உரிமைச் சட்டத்தில் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயத் தேர்ச்சி தர வேண்டும் என்ற கூறுக்கு முரணாக உள்ளது.
அதே போல கல்வி உரிமைச் சட்டத்தின் 29 ஆம் விதியை ,தொடக்கக் கல்விக்கான பாடத் திட்டம், தேர்வு முறைகளை வகுக்கும் போது கல்வித் துறை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி , குழந்தைகளின் உடல் , மனத் திறன்களை வளர்ப்பது உள்ளிட்ட சில .இதன்படி பொதுத் தேர்வு என 10 வயது குழந்தையை நிர்ப்பந்திக்கும் போது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.
நம் சமூகத்தில் முதல் தலைமுறை குழந்தைகள் கல்வி கற்பது என்பது ஏற்கனவே சவாலாக உள்ளது. அவர்கள் தேர்வு குறித்து அச்சப்பட்டு வழிகாட்ட ஒருவரும் இல்லாமல் இடைநிற்றல் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் நிச்சயமாக பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டு வேலைக்கு அனுப்பும் அபாயமும், திருமணம் செய்து வைக்கும் கொடுமைகளும் தொடரும்.
நமது ஊரில் தேர்வு என்றாலே பெற்றோர் முதலில் பயப்பட்டு குழந்தைகளை பயப்பட வைப்பர். அவர்களைப் பொறுத்த வரை தன் குழந்தை முதல் மதிப்பெண் பெற வேண்டும். அல்லது 100க்கு நூறு பெற்றுவிட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட அதிக சதவிகித பெற்றோரின் மன நிலை . இவர்களது வீடுகளில் 5 ஆம் வகுப்பு தேர்வு என்றால் 3 ஆம் வகுப்பிலிருந்து படி படி , மார்க் வாங்கு என்ற அழுத்தங்கள் குழந்தைகளுக்கு உருவாகும் .
அதே போல மூன்று பருவ பாட நூல்களா ? மூன்றாம் பருவம் மட்டுமா என்பதில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் குழப்பம். நிர்வாக அளவில் நிறைய பாதகங்கள் மாணவரைப் பாதிக்கும் . ஏனெனில் தமிழகம் முழுவதிலும் தொடக்கப் பள்ளிகள் பெரும்பாலும் ஓராசிரியர் , ஈராசிரியர் பள்ளிகளே .எல்லாப் பள்ளிகளையும் தேர்வு மையங்களாக அறிவிக்க இயலாது. ஒரு பள்ளியை தேர்வு மையமாக அறிவித்து குறிப்பிட்ட தொலைவில் சுற்றிலும் அமைந்துள்ள பள்ளிகளில் குறைந்தது 5 பள்ளிகளில் உள்ள 5 ஆம் வகுப்பு குழந்தைகளை அழைத்து வந்து தேர்வு எழுத வைத்தால் கூட மையமாக அறிவிக்கப்பட்ட பள்ளியில் கட்டமைப்பு ,கழிப்பிட வசதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. மற்றொரு புறம் தேர்வு எழுதும் குழந்தைகளை ஒரு ஆசிரியரும் அழைத்து வந்து விட்டால் அந்த ஈராசிரியர் / ஓராசிரியர் பள்ளியில் மற்ற குழந்தைகளின் கற்றல் பரிதாபமே .
குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்களாக இயல்பாக தேர்வு எழுதுவதில் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் பொதுத் தேர்வு என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகப் பேசுவதை வீடுகளில் பெற்றோரும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வலியுறுத்துவதைக் கேட்டு அச்சப் பட்டது அதிகம்.
பொதுவாக அரசுப் பள்ளிகளில் எல்லா வகையான குழந்தைகளும் படிக்கின்றனர் .சமூகப் பொருளாதாரப் பின்னணியில் நலிவுற்ற குடும்பக் குழந்தைகள் , தாய் தந்தையற்றவர்கள் , மாற்றுத் திறனாளி குழந்தைகள் , 3ஆம் வகுப்பு படிக்காமல் நேரடியாக 13 வயது என்றால் 8 ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்கும் குழந்தைகள் (கல்வி உரிமைச் சட்ட விதி ) என அனைவரையும் அரவணைத்து ஆசிரியர் கற்பிக்க வேண்டும். இந்த பொதுத் தேர்வு குறித்து குழப்பமான சூழலில் அனைவரையும் ஆசிரியர் தயார் படுத்த முடியுமா என்பதும் நாம் முன் வைக்கும் ஐய வினா .
என்ன செய்யலாம்
எல்லாக் குழந்தைகளும் பாடநூலில் உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க முடியும் என்று கூற முடியாது .அதே போல படிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களது பல் திறன்களுக்கும் வாய்ப்பு தந்து தரமான கல்வியைக் கொண்டு வர வேண்டுமெனில் ,தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமித்து சரியான கற்பித்தல் - கற்றல் நிகழ்வுகளை உறுதிப்படுத்திட வேண்டும் .ஆசிரியர்கள் , கல்விஅலுவலர்களின் சரியான வழிகாட்டலும் தங்களுக்கான கற்பித்தல் சாரா பணிகள் குறித்த நடைமுறை சிக்கல்களை உயர் அலுவலர்களிடம் உரையாடி தீர்வு கண்டாலே குழந்தைகள் காப்பாற்றப்படுவர் . சரியான வயதில் கற்றலுக்கான சூழலை ஒவ்வொரு குழந்தையும் பெறும் போது பொதுத்தேர்வுக்கான அவசியமே இருக்காது.
கல்வி என்பது தேர்வை மையமாக வைத்து அளிக்கப்படும் போக்கு மாற வேண்டும்.
உமா
மாநில ஒருங்கிணைப்பாளர்
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (A3)
No comments:
Post a Comment