கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு போடப்பட்டு இன்று வரை தொடரும் கதைகளை நாம் அறிவோம் . 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடித்த கையோடு இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏற்கனவே பத்தாம் வகுப்புகளுக்குத் தேர்வு கால அட்டவணை அறிவித்து மாணவர்களும் தங்களைத் தயார் செய்து , பள்ளிகளில் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்வு பொறுப்புகளில் இருந்த ஆசிரியர்கள் தயாராக செய்து வைத்தும் தேர்வு திட்டமிட்ட தேதிகளில் நடத்தப் படாத காரணத்தையும் நாம் அறிவோம்.
தொற்று நோய் பரவல்:
இந்தத் தொற்று நோய்ப் பரவல் உலக அளவில் மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது என்பதை ஒவ்வொரு நாளின் நோய்ப் பரவல் வரைபடங்களும் செய்திகளும் நமக்கு உறுதி செய்கின்றன. இந்த நோய் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனெனில் முதலில் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் தான் நம் கண் முன்னே தெரிகிறது.
பொதுத் தேர்வு :
இப்படியான நோய் பாதிப்பு , பரவல் , இறப்பு அனைத்தும் குறையாமல் அதிகமாகிக் கொண்டே போகும் சூழலில் பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த கேள்விகளும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கின்றன.
தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என்று சமீபத்தில் நமது முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் பேட்டியளித்ததை நாம் செய்திகளில் கவனிக்கிறோம்.
ஆசிரியர்களில் ஒரு பகுதி தேர்வு கால தாமதமானாலும் நடத்தி விடுதலே சிறந்தது என்றும் இன்னொரு பகுதி இந்த அபாய காலத்தில் தேர்வு எதற்கு ? இந்த வருடம் தேர்வு நடத்த வேண்டாம் என்றும் தங்கள் வாதத்தை முன் வைக்கின்றனர்.
9ஆம் வகுப்பு வரை தேர்ச்சி
ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை ஒரே வகுப்பில் தேக்கி வைக்கக் கூடாது என்ற விதி பத்தாண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் ஒரு முறையான தேர்வு நடக்கும். ஆனால் இந்த அபாய காலத்தில் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகளின்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கதே.
10 ஆம் வகுப்புத் தேர்வு
நம் கல்வி முறையில் தேர்வுகளைத் தவிர வேறொன்றும் முறைப்படுத்தி மாணவர்களை வழி நடத்துதல் , மதிப்பீட்டு முறைகள் கிடையாது.10 ஆம் வகுப்பு தேர்வு என்பது வாழ்வின் முக்கிய அடுத்த கட்ட நகர்வாகத் தான் நமது கல்வி முறையிலும் , எல்லோர் மனது அறிவு நிலை சார்ந்தும் பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச அடிப்படைக் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியைத் தான் அரசுப் பணிகளுக்கும் விதிகளாக இருக்கும் பட்சத்திலும் உயர் கல்வி பயில அடிப்படைத் தகுதியாக இந்த பத்தாம் வகுப்புத் தேர்வு இருப்பதாலும் இதை நடத்த வேண்டிய கட்டாயத் தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
தொற்று பரவாமல் தேர்வு நடத்துவது சாத்தியமா
இயல்பு நிலைக்கு சமூகம் திரும்புவது எப்போது எனத் தெரியவில்லை , அப்படியே ஓரிரு மாதங்களில் திரும்பினாலும் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு. லட்சக்கணக்கான குழந்தைகளும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் இதில் ஈடுபடும் போது தோய்த் தொற்று பரவாது என 100% உத்தரவாதம் தர இயலாது. சமூகப் பரவல் அதிகமாகிக் கொண்டே போகின்ற இந்த சூழலில் முகக் கவசம் , போதுமான இடைவெளி எல்லாமும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
உளவியல் சிக்கல்
அதோடு குழந்தைகள் அனைவருமே மிகுந்த பீதியில் தான் இருப்பார்கள். ஒரு புறம் பல மாதங்களாக ஊரடங்கில் இருக்கும் குடும்பங்கள் உணவுக்கே வழியின்றி துன்பப்படும் நிலையில் இருப்பதோடு, பொருளாதாரத்தில் மிகுந்த நலிவுற்ற சூழலில் இருக்கின்றன. அங்கிருந்து வரும் குழந்தைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மன ரீதியாக தேர்வு எழுத அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை சிந்தித்தால் பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது. அது மட்டுமன்றி தேர்வுக்கு முன் சில மாதங்களாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அவரவர் பாடங்களில்பயிற்சி தந்து தான் தயார் படுத்தியிருந்தனர். தற்போதைய நிலையில் இவ்வளவு சிக்கல்களுக்கிடையே திடீரென தேர்வு அறிவித்து எவ்வித பாடப் பயிற்சியும் , உளவியல் அணுகுமுறைகளும் அற்ற நிலையில் மாணவர்கள் தேர்வை அணுகுவது அவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சவாலான பிரச்சனையே . ஆசிரியர்களும் கூட பலவாறு இந்த மனச்சிக்கலில் இருப்பதும் கண்கூடு .
நீண்ட காலத் தேர்வு நடைமுறை :
தேர்வு என்றாலே வடிகட்டுதல் தான் , மாணவர்களது திறன்களை கணக்கில் கொள்ளாமல் மனப்பாடம் செய்து எழுத்துத் தேர்வுக்கு அவர்களைத் தயாரித்து மதிப்பெண்கள் தந்து தேர்ச்சி அட்டைகள் வழங்கும் நடைமுறை தான் நமது கல்வி அமைப்பில் நீண்ட காலமாக இருந்து வருகிறது . ஆனால் உலகம் முழுவதிற்குமே இந்த நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்காத சூழல் , லட்சக்கணக்கில் உயிரிழப்பு எனத் தொடர் வதை தேர்வு முறைகளுடன் இணைத்துப் பார்த்தால் ஒரு புள்ளியிலாவது தேர்வு முறைகளின் அபத்தம் புரியும்.
என்ன செய்யலாம் ?
(CCE -Continuous and Comprehensive Evaluation)
இந்த நேரத்தில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை நாம் கவனத்தில் கொண்டு அதை மறுபரிசீலனை செய்யலாம் .ஆம் இந்த மதிப்பீட்டு முறையை பொதுத் தேர்வுகளுக்கு மாற்றாக 12 ஆம் வகுப்பு வரைக் கொண்டு வருவதற்கு திட்டமிடலாம்.
கொரோனா பாதிப்பு இது நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல , உலகம் முழுவதும் இருக்கிறது.
இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை குறித்து புதிய தேசியக் கல்விக் கொள்கை கடந்த 10 மாத காலங்களாக மத்திய அரசால் திட்டமிடப்பட்டது. அதன் ஒரு கூறாக இந்த தேர்வுகளற்ற மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிடலாம்.
நமது மாநிலத்தில் கல்வித்துறை அமைச்சர், துறை உயர் அலுவலர்கள் , துறை சார்ந்த இயக்குநர்கள் , மூத்த கல்வியாளர்கள் , தகுந்த ஆசிரியர்கள் இவர்களைக் கொண்ட ஒரு குழுவை அரசு அவசரமாகக் கூட்டி இது குறித்து விவாதித்து தேர்வுகளுக்கான மாற்றைக் கண்டு பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இங்கு கல்வியாளர் ச .மாடசாமி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததை கவனத்தில் கொள்ளலாம்.
இந்தக் கொரோனா காலத்தில் - மரணங்களும் பசிக் கூக்குரல்களும் அதிகரித்திருக்கும் வேளையில்- தகுதி என்ற பெயரில் பிள்ளைகளைப் பலி கொடுப்பதா?
மேல்படிப்புக்கான மாணவரின் தகுதியைத் தீர்மானிக்க தேர்வு ஒன்றுதான் வழியா?
தேர்வு ஒரு சௌகர்யம். அவ்வளவுதான்.
நுட்பம் ஏதுமற்ற சௌகர்யம்.
மிகவும் வித்தியாசமான தருணம் இது. இந்த நேரத்திலும் புதிய ரூபம் எடுக்காவிட்டால் கல்வித்துறை எதற்கு? கல்விக்கூடங்கள் எதற்கு?
. ச. மாடசாமி
இவ்வளவு காலம் தேர்வு அளவீடாக இருந்திருக்கலாம். ஆனால் இது பேரிடர் காலம் , ஆகவே பாதுகாப்பாக தேர்வு நடத்துவதில் உள்ள சிக்கலைப் புரிந்து கொண்டு , இதைத் தகுந்த தருணமாகக் கொண்டு பொதுத் தேர்வுகளுக்கு மாற்று வழிகள் கண்டுபிடிப்பதே சாலச் சிறந்தது. நமது கல்வி வரலாற்றில் புதிய பக்கத்தைத் தொடங்க கொரோனா நமக்குப் பாடம் கற்பித்துள்ளது.
சுற்றுச் சூழல் சார்ந்த , உள்ளுர் சார்ந்த, செயல்பாடுகள் நிறைந்த தற்சார்பு வாழ்க்கைக் கல்வியை புதியதாகத் துவங்க இந்த பேரிடர் காலத்தில் அனைவரும் சிந்தித்தால் பொருளுள்ள கல்வி முறை உருவாகும் .
உமா
( கல்வியாளர்)
No comments:
Post a Comment