Thursday, 18 March 2021

பள்ளி திறக்கும் நாளில் …..



சென்ற கல்வியாண்டின் மறக்க முடியாத சம்பவமாக கொரோனா ஊரடங்கு காலம் அமைந்து விட்டது. கல்வியாண்டின் இறுதியில் சமூகத்திற்கு திடீரென வந்த அபாயம்  பள்ளி சூழல்களை அடியோடு மாற்றி விட்டது. மே மாதம் வரை ஊரடங்கு நீடித்த சூழலில்  ஜூன் மாதம் வழக்கமாக பள்ளி செயல்பட ஆரம்பிக்குமா என்பதில் பல்வேறு வேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. வரும் கல்வி ஆண்டை எவ்வாறு வரவேற்கலாம் என்றும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 


மாணவர் உளவியல் பேணுதல் அடிப்படை 


மார்ச் மாத இறுதியிலிருந்து பள்ளிக்கும் தங்களுக்குமான தொடர்பை விட்டுத் தவிக்கும் மாணவர்கள் இயல்பான நாட்கள் என்றால் விடுமுறைக் கொண்டாட்டமாக மகிழ்வுடன் விடுமுறை நாட்களைக் கழித்திருப்பர். ஆனால் கடந்த 3 மாத கால விடுமுறை நாட்களோ அபாயகரமான அச்சத்தை அவர்களுக்குள் உருவாக்கி வைத்துவிட்டது  என்பதில் ஐயமில்லை. 


தொலைக்காட்சி செய்திகளும் இணையங்களும் அன்றாடம் தரும் கொரோனா அப்டேட் செய்திகளைக் கண்டும் கேட்டும் பெரியவர்கள் மட்டுமல்ல , மாணவர்களும் உயிர் பயம் கொண்ட காலச் சூழல் . 


இது மட்டுமன்றி , பல்வேறுபட்ட சமூகப் பொருளாதார அமைப்பிலிருந்து பள்ளிக்கு வரும்  குழந்தைகள், இயல்பாகவே வறுமை நிலையிலிருந்து வரும் குழந்தைகள்  , ஊரடங்கால் வருமானமில்லா குடும்பங்களில் வாழும் குழந்தைகள், புலம் பெயர்ந்து வாழ்ந்த குடும்பங்களின் குழந்தைகள் ஆகியோர்  பள்ளி திறந்த பின்பும் மனஅழுத்தமான  சூழ்நிலையில் தான் இருப்பர். 


அரசுப் பள்ளிக்கு வரும் 90% குழந்தைகள் மேற்கூறிய குடும்ப சூழலின் பின்னணியிலிருந்து தான் வருகிறார்கள் . சாதாரண விடுமுறைக் காலங்களில்  உறவினர்களது  அரவணைப்பில் மகிழ்ந்து உற்சாகமாக,  விடுமுறைக் காலம் முடிந்து   பள்ளிக்கு வரும் குழந்தைகளாக இருப்பர். ஆனால்  இந்தக் கல்வியாண்டில் இவை எதுவுமின்றி வறண்ட மனநிலை , பயம் மிகுந்த மனநிலை , வீட்டில் வேலையில்லாத சூழலில் நலிவுற்ற பெற்றோரின் வருத்தங்களைப் பார்த்து பாதிக்கப்படும் குழந்தைகள் என 

உளவியல் சிக்கல்களால் நிறைந்த மணவர்களாகவே இவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பிப்பர். அதோடு பள்ளியில் தரும் சத்துணவை ஆதரமாகக் கொண்டு வாழும் லட்சக்கணக்கான குழந்தைகள் சரியான உணவின்றி இந்தக் கால கட்டத்தைக் கடந்து வந்ததால் உடல் ஆரோக்கியமும் அவ்வளவு சீராக இருக்க வாய்ப்பில்லை. 


இவர்களை அணுகுவதற்கு முதலில் ஆசிரியர்கள் தங்கள் மனநிலையை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.இந்த உளவியல் ரீதியான மாணவர் அணுகுமுறையை வலுவாக்க , பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி துறை வழியாக வழிகாட்டு நெறிமுறைகள்  தருவது வரவேற்கத்தக்கது. 


பாடங்களின் / தேர்வுகளின்   அழுத்தம் கூடாது 


2019 - 2020 , கடந்த கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  நடந்து முடிந்து இருந்தாலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்தான பல சந்தேகங்கள் மாணவர்களோடு , ஆசிரியர்களுக்கும் சேர்த்தே இருக்கின்றது. இந்தக் கல்வியாண்டுக்கான பாடங்கள் , புதிய பாடநூல்கள் , எப்போதும் போல நடத்தி முடித்திட , வேலைகளைத் திட்டமிட , தேர்வுகள் என  இருந்தாலும்  பாடங்கள் /தேர்வுகளுக்கான அழுத்தங்களை மாணவர்களிடையே ஏற்படுத்தி விடாமல் அவர்களை கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாக உள்ள நாட்களாக இந்நாட்களைப் பார்க்கலாம் .


பெற்றோர் சந்திப்பு முக்கியம் 


பேரிடர் தொற்று நோயின் எல்லா முகங்களையும் சந்தித்த நமது பள்ளிக் குழந்தைகள் இந்தக் கல்வியாண்டில் தொடர்ந்து தங்களை கற்றவில் ஈடுபடுத்த வேண்டுமானால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரையும் பள்ளிக்குள் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். வர இயலாத பெற்றோர்களை அவர் தம்  வீடுகளுக்கே  சென்று ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். அவர்களுக்கும்  குழந்தைகளுக்கு மான உறவு முறை , பெற்றோரின் தேவைகள் , பெற்றோர்களின் மன அழுத்தம் இவை குறித்து பேசி , வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை அவர்களிடம் விதைக்க வேண்டியதும் உறுதுணையாக இருப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமை. 


அதோடு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மாதமொரு முறை கட்டாயமாகக் கூட்டி எப்போதும் எடுக்கப்படும் பள்ளித் தேவைகளுக்கான முடிவுகளுடன் , சிறப்பு கவனமாக கொரோனா குறித்தான காலத்தின் பெற்றோர்கள் , குழந்தைகள் நலன் சார்ந்த 

மீட்பு வழிகள் குறித்தும் இந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில்  முடிவுகள் எடுக்கப்பட்டால்  மிகுந்த பயனளிக்கும்.


 மாற வேண்டிய வகுப்பறைகள் 


ஏட்டுக் கல்வியும் , தேர்வும் மதிப்பெண்ணும்  வெற்று பாட போதனைகளும் இன்றைய அபாய காலத்தை , பேரிடரை எந்த வகையிலும் மாற்றிவிடவோ , அதன் வீரியத்தைக் கூட சற்றேனும்  குறைத்து விடவோ இல்லை.  

நீட்டுக்குத் தயார் ஆனாலும் , பொதுத் தேர்வுக்கு தயார் ஆனாலும் எதுவுமே இந்த தொற்றை துரத்த வழி சொல்லித் தரவில்லை .

என்றால் ,  வகுப்பறைகள் தங்கள் முகத்தை மாற்றிக் கொள்ள நாம் திட்டமிட வேண்டும் . உரையாடலும் சிந்தனையுமான வகுப்பறைகள் மலர வேண்டும்.  மாணவர்களிடையே  

 பேரிடர் குறித்த உலகம் தழுவிய சூழலைக் குறித்து கட்டாயம் ஆசிரியர்கள் உரையாட வேண்டும். 


இந்த கொரோனாக்கால பாடங்களாக மனிதம் நிறைந்த மக்கள் , நகரவாசிகளாக மாறி வேலையை இழந்து சொந்த ஊரை நடந்தே சென்று சேர்ந்த குழந்தைகள் உட்பட அனைவரது உண்மைக் கதைகளையும் விவாதிக்கும் வகுப்பறைகளாக மாற வேண்டும். எதார்த்தத்திற்கும் ஏட்டுக் கல்விக் கல்விக்கு மான இடைவெளியிலிருந்து 

உள்ளூர் வளங்கள் சார்ந்த தற்சார்பு கல்வியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டங்கள் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும். உண்மையான சுற்றுச் சூழல் கல்வி , உடலுழைப்பு சார்ந்த கல்வி இவற்றை உருவாக்கும் விவாதங்கள் வெளிப்படையாக உருவாகும் வகுப்பறைகளை இனிமேலாவது ஆசிரியர்கள் கையிலெடுக்க வேண்டும். 


அனுபவக் கல்வி தருதல் 


அது மட்டுமன்றி அவரவர் இந்த தொற்றின் போது பணியாற்றிய மருத்துவர்கள் , காவலர்கள் , துப்புரவுத் தொழிலாளர்கள் , தன்னார்வலர்கள் ஆகியோரை அழைத்து வந்து மாணவர்களுடன் உரையாட வைத்து நம்பிக்கை தரலாம். பேரிடர்கள் இதற்கு முன் நடந்தவை குறித்தும் தற்போது வந்த பேரிடரான கொரோனா குறித்தும் மாணவர் மத்தியில் ஒரு ஆய்வு மனப்பான்மையை உருவாக்க வாய்ப்புகள் வழங்கலாம். 


மகிழ்ச்சியான கற்றலுக்கு வழிவகுத்தல் 


மாணவர்கள் தங்கள் கடந்த கால மன உளைச்சல் , பயம் இவற்றைத் தூர எறிந்து மகிழ்ச்சியான கற்றலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள என்னவெல்லாம் இயலுமோ அவற்றையெல்லாம் பள்ளி திட்டமிட வேண்டும். 

ஆசிரியர்களும்   மாணவர்களுக்கு சுதந்திரமான மகிழ்ச்சியான கற்பித்தலைத் தர திட்டமிட வேண்டும். ஆம் , வார இறுதியில் விழாக்கள் , மன்றங்களைத் திட்டமிட்டு நடத்தி இந்த குழப்பமான பயம் மிகுந்த மனநிலையிலிருந்து வெளிவர மாணவர்களுக்கு வழிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். திரும்பவும் அழுத்தமாக நான் கூற நினைப்பது நினைவு படுத்துவது என்னவென்றால் பாடங்களை சற்றே தூரமாக வைத்து மேற்சொன்ன செயல்பாடுகளுக்கு வகை செய்தால் கற்றல் - கற்பித்தல்  மகிழ்ச்சியாக அமையும். அதோடு எல்லாவற்றிலும் கொரோனா மீட்புக் கருத்துகள் மையமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  


பாதுகாப்பான சூழல்

பள்ளிகளில் மாணவர்களுக்கான மன உடல் நலப் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே பல தளங்களில் பேசி வருகிறோம். ஆனால் இன்றைய சூழலில் கொரோனா ஒப்பிட இயலாத மாற்றமான பாதுகாப்பை நமக்குக் கற்பித்துள்ளது. முகக் கவசமும், தனி நபர் இடைவெளியும் , கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க சோப்பு போட்டு கழுவுதலும் ஆகியன மிகவும் இன்றியமையாதவையாக பாதுகாப்பு சூழலில் பார்க்கப்படுவதால்  இவை அனைத்தும் பள்ளிக்குள் ஏற்படுத்துதல் அவசியம் . நடைமுறையில் வகுப்பறைக்குள் இவை எல்லாம் 100 சதவீதம்   சாத்தியமா என்ற வினா நம் முன் எழுத்தாலும் சாத்தியப்படுத்துதலின் அவசியம் உள்ளது. இதையும் பள்ளிகள் கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் .



தேர்வுகளுக்கான மாற்றைத் திட்டமிடலாம் 


நமது கல்வி வரலாற்றில் நெடிய பயணம் கல்வியின் இறுதி நிலை தேர்வுகளின் முடிவுகள் , தேர்ச்சி அட்டைகள் என்ற நிலையிலேயே இருக்கின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்தை எந்த நாட்டிலும் கண்டறியாத நிலையிலிருந்து தேர்வுகள் எத்தனை அபத்தமானவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆகவே இந்த நேரத்திலாவது தேர்வுக்கான மாற்று மதிப்பிட்டு  வழிகளை  அனைத்து தரப்பிலிருந்தும் அரசு , கல்வி அலுவலர்கள் , கல்வியாளர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் கூட்டுதவியுடன் முன்மொழிந்து இந்தக் கல்வியாண்டின் நாட்களுக்குப்  பொருத்தமாக இருக்கும் என எதிர் பார்க்கலாம்.


உமா

ஆசிரியர் 



No comments:

Post a Comment