சந்திரா தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ,
1995 இல் ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்
பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்த இவர் கற்பித்தல் முறையில் சில வேறுபட்ட மாணவர் கவரும் முறைகளைக் கையாண்டதோடு தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆசிரியராக இருக்கும் போது மாணவரது கற்றல் திறன் சார்ந்து மட்டுமே தனது செயல்பாடுகள் இருந்தது , தலைமை ஆசிரியராக மாறிய பின்புதான் ,
பள்ளியின் மொத்த மாணவர்களின் கற்றல் திறன் சார்ந்தும் பணி புரிய வேண்டியுள்ளது. அது தவிர பல்வேறு சிக்கல்களை சந்திக்க வாய்ப்புகளையும் சூழல்களையும் உருவாக்கி விடுகிறது தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு என்று கூறியதோடு அதன் தாக்கங்களை நம்முடன் பகிர்கிறார்.
10 வருடங்களுக்குப் பிறகு 2005 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் ஒன்றியத்தில் எஸ் குமாரபுரம் என்ற ஊருக்கு , தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். அந்த உளரோ சாலை வசதியோ பேருந்து வசதியோ இல்லாத மிகவும் பின்தங்கிய குக்கிராமம். அங்கு பள்ளிக்கூடம் என்ற அமைப்பே கிடையாது, மரத்தடியில் தான் வகுப்பெடுக்கும் பழக்கம் , ஊர்ப் பிரச்சனையைக் கேட்கவும் ஆள் இல்லை , பள்ளிப் பிரச்சனையைப் பார்க்கவும் யாருமில்லை. மரத்தடி வகுப்புகளை மாற்ற மக்களின் ஆதரவு, கிராமக் கல்விக் குழுவின் உதவி பெற்று , அரசிடம் மன்றாடி இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
20 வருடமாக கட்டிடமே இல்லாமல் இயங்கிய அந்தப் பள்ளிக்கு புத்துயிர் தந்ததோடு குழந்தைகளிடம் கற்பித்தலையும் சரியாகக் கொண்டு சேர்த்துள்ளார் நமது தலைமை ஆசிரியர் சந்திரா . சீருடை இருந்தாலும் அவ்வூரின் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து வரும் வழக்கமின்றி இருக்க அதில் மாற்றம் ஏற்படுத்தி பள்ளிக்கு சீருடை அணிந்து வரும் பழக்கத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த பள்ளியிலிருந்து மாறுதல் அடைந்தாலும் மக்கள் மனதில் இன்றளவும் பேசப்படும் தலைமையாசிரியராக வாழ்கிறார் ,இப்பள்ளியில் 4 வருடங்களே பணியாற்றிய இவர் நடுக்காட்டூர் என்ற பள்ளிக்கு மாறுதல் பெற்று செல்ல , அங்கும் வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்ட முயற்சி மேற்கொள்கிறார் , நடுக்காட்டூர் பள்ளி விடுமுறை காலத்தில் இடிந்து விழ , கட்டிடம் இல்லாமல் கோவிலில் வைத்து பள்ளியை நடத்தியிருக்கிறார் .மக்கள் சமயச் சடங்கு நடத்தும், நெற்களமாக பொது மக்கள் பயன்படுத்தும் இடம் எனக் கூறி கட்டிடம் கட்ட விடாமல் செய்ய , பெரிய போராட்டம் நடத்தியே கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார். அதோடு இந்தக் குழந்தைகளுக்கு சீருடை அணியும் பழக்கம் , ஷூ , ஷாக்ஸ் , அடையாள அட்டை என 2007-08 கல்வியாண்டிலேயே கொண்டு வந்ததோடு கற்பித்தலையும் சிறப்பாக்கியிருக்கிறார். தான் செல்லும் எல்லாப் பள்ளிகளிலும் வாசித்தலை முன்னெடுப்பதும் , பாடநூல்களை தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக வாசிக்கப் பழக்கப்படுத்துதலும் இவரது மற்றொரு சிறப்பு. கடந்த 2014 இல் ரெட்டியபட்டி என்ற பள்ளிக்கு மாற்றலாகிட எப்போதும் போல் கட்டிடப் பிரச்சனை , ஏற்கனவே அபாயத்தில் இருந்த பள்ளிக் கட்டிடம் ,புதியதாக சென்ற போது மாணவர்களின் தலைமேல் கட்டிடம் இடிந்து விழுந்திட , அவர்களைக் காக்க 108 உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வைத்து , மீண்டும் மக்களோடு இணைந்து போராட்டம் , கிராமக் கல்விக் குழுவின் உதவியுடன் இந்தப் பள்ளிக்கும் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்து வெற்றி பெற பெரிய பொறுமை தேவைப்பட்டிருக்கிறது. , சமீபத்தில் வேறொரு பிரச்சனை , 5 வகுப்புகளைக் கொண்ட ஆங்கில வழியான இவரது பள்ளியில் இவர் மட்டுமே ஒராசிரியராக இருக்க , கற்பித்தல் மட்டுமன்றி நிர்வாகப் பணிகளும் சுமையாக , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்தி அரசை நிர்ப்பந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றுப் பணியில் ஓராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படியான போராட்டங்களுடனேயே பல பள்ளிகளில் கிராமங்களில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது பதிவு செய்யப்பட வேண்டும். இப்படியான சூழலில் நம் தமிழக அரசின் சமீபத்திய அரசாணை 5 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு என்பது. தேர்வு குறித்த பல விதமான கருத்துகள் நிலவினாலும் தேர்வுக்கு குழந்தைகளை தயார் செய்ய ஒரே ஆசிரியர் உள்ள பள்ளிகள் என்ன செய்யும் ? சந்திரா போன்ற தலைமை ஆசிரியர்கள் பல வித போராட்டங்களுக்கிடையே தேர்வு குறித்த தேவைகளுக்கும் போராட வேண்டுமெனில் அரசுப் பள்ளிகள் மக்கள் பள்ளிகளாக மாற வேண்டும் .மக்களிடமிருந்து கேள்விகள் பிறக்க வேண்டும் .அரசுக்கு புரிய வைக்க வேண்டும்.
உமா
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்
No comments:
Post a Comment