Friday, 27 July 2018

குங்குமச் சிமிழ்

இந்த வார குங்குமச் சிமிழின் பக்கங்களில் நிரப்பப்பட்ட எனது கட்டுரை... பாடசாலை முதலான கல்வி இணையப் பக்கங்களிலும்  வந்தது. பதிவு செய்த அனைவருக்கும்  அன்பும் நன்றியும்.

ஆனால் ... நான் அனுப்பிய கட்டுரையை  இங்கே தருகிறேன்.

புதிய பாடத் திட்டமும் பயிற்சிகளும் .

கடந்த ஒரு வருடமாகவே கல்வித்துறையில்  நிலவி வரும் பரபரப்பு ... பிரம்மாண்டமாக  மக்களிடையே ஒருபெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி அதே எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் பலரின் கூட்டு உழைப்பால் உருவாகியிருக்கும் பாடநூல்கள் எனலாம். அவற்றைப் பற்றி நாம் கட்டாயம் பேச வேண்டும்.

பெற்றோர்களிடையே  தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய கனவுகள் பிரம்மாண்டமாக இருக்க , அதற்கு அரசிடம் அவர்களுக்கான எதிர்பார்ப்புகள் கூடுதலாக ஏற்பட  அதையும் சமரசம் செய்யுமளவிற்கு பேசப்படும் ஒரு பெரும் செய்தியாகி விட்டன பாடநூல்கள்..

சரி அப்படி என்னதான் இருக்கின்றது இந்த புதிய பாட நூலில் .....

வளர்ந்து வரும் தொழில் நுட்பமும்,பல்வேறு போட்டித்தேர்வுகளுமே புதுப்புத்தகத்துக்கான வாசலை திறந்துள்ளன என்றால் மிகையாகாது எனலாம். பாடநூல்களில் சுலபமாக மாற்றத்தை கொண்டுவர முடியாது.பாடப்புத்தகங்களுக்கென்றே ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன.அதை மீறாமல் உயிர்ப்புள்ள ஒரு பாடப்புத்தகத்தை  உருவாக்குவது உண்மையில்  ஒரு பெரிய சாதனை , அதை இப்பாடநூல்கள் மெய்ப்பிக்கின்றன.

உதாரணமாக ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப்புத்தகம் அனைத்துத் திறன்களையும் கற்பிக்கக்கூடிய மிகச்சிறந்த புத்தகம் என்பதில் சிறிதளவும்
ஐயமில்லை,.உரைநடைப்பகுதிகள்,துணைப்பாடப்பகுதிகள்,கவிதைகள் இவைகள் அனைத்துமே உலகப்புகழ் பெற்ற ஆங்கில இலக்கிய ஜாம்பவான்களால் எழுதப்பட்டவை.Goal setting _இல் (உரைநடை)நமது ஊர் cricket வீரரான Srikanth  அவரது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.விடாமுயற்சியும்,பேரார்வமுமே ஒரு செயலுக்கான வெற்றியைக் கொடுக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறார்.R muslim bond இன்
I can't climb the tree(உரைநடை),Robert frost இன்  stopping by woods in a snowy evening(கவிதை) போன்ற பகுதிகள் மிகுந்த உயிர்ப்புள்ளவைகளாக,உள்ளுணர்வுகளைத்தூண்டி சிந்திக்கும் விதமாக அமைந்துள்ளன.இலக்கணப் பகுதிகளைப் பொறுத்தவரை non finite verbs,participles போன்ற பகுதிகள் அருமையாக தெளிவான விளக்கங்களுடன் இருக்கின்றன.

கணக்குப் புத்தகம் 6,9 வகுப்புகளின் மற்றொரு உதாரணம்புதிய புத்தகம் பார்ப்பதற்கு மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பக்கங்களைத் திருப்பத் திருப்ப அவை தகவல்களால் நிரம்பி வழிகின்றன ,புத்தகங்கள்  . வண்ணங்கள் கண்ணிற்கு உறுத்தாமல் நேர்த்தியாக தரப்பட்டு வரிசைக் கிரமமாக சீராக அடுக்கப்பட்டு கணக்குகள் மிகப் பொலிவுடன் புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தயாரிப்புக் குழு மிக கவனமாக சமச்சீர் கல்வி புத்தகங்களை விட பல படிகள் நன்றாக இருக்க வேண்டுமென மெனக்கெட்டு இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

அட்டைப்பட வண்ணமும் வடிவமும் கூட மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத் தலைப்புகள் ஆரம்பத்திலும் QR Code , கணித மேதைகளின் குறிப்புகள் தந்து , கற்றல் விளைவுகளையும் வகுத்துள்ளனர். அதற்குப் பிறகே அறிமுகத்திற்கு செல்கின்றது ..பெட்டிச் செய்திகளும் பட விளக்கங்களும் , முன்னேற்றத்தைச்  சோதித்தலுக்கான பகுதிகளும் தந்திருப்பதோடு குறிப்புகளுக்கான சிறு சிறு  பெட்டிகளும் கூட தொடர்ந்து தந்துள்ளது பாராட்டத் தக்கது. கணக்குக் கலைச் சொற்களுக்கான  பக்கங்கள் புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் தந்திருப்பது கூடுதல் சிறப்பு,காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இணையச் செயல்பாடு  (ICT CORNER) என்ற புதிய முறையும் ஒவ்வொரு பாட இறுதியிலோ இடையிலோ தந்து தி பெஸ்ட் என்று சொல்லுமளவிற்கு  தயாரித்திருப்பது கண்டு பேரானந்தம்.
இறுதியாக ....

பாடநூல் உருவாக்கக் குழுவின் பெயர்ப் பட்டியல் கூட இறுதிப் பக்கத்தில்  தந்திருப்பதும் உள்ள படியே மகிழ்ச்சி , ஆக எந்த விதத்திலும் புத்தகம் மிக மிக அழகும் செறிவும் வாய்ந்ததாக இருப்பதை  மறுக்கவோ மறுதலிக்கவோ இயலாது

அதோடு நில்லாமல் மேல்நிலை வகுப்பிற்கான 11 ஆம் வகுப்பு புத்தகங்கள் அவ்வளவும் செறிவு மிக்கவை. மிகச் சிறந்த வேள்விகளாக எண்ணி இப்பணிகளை செய்துள்ளது அறியலாம். பாடக் கருத்துகளின் ஆழம் மிக மிகத்  தேவையான பகுதிகளே. .

தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ( NCERT ) புத்தகங்களுக்கு இணையான தரமான புத்தகங்களை வழங்கியது மிக மிகப் பாராட்டத் தக்க செயல். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிந்தனைகளை மாணவருக்கு அளிக்கும் பெரும் விழிப்புணர்வை இப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்குவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறலாம்.

ஆயிற்று ஜூன் மாதம் முழுவதும் முடிந்த சூழலில் ஜூலை மாதம் 10 தேதிகளாயிற்று , ஒவ்வொரு ஊரிலும் ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி தொடங்கி விட்டது. புதிய புத்தகங்களை எவ்வாறு மாணவரிடத்தில் கொண்டு செல்வது என்பது பற்றியும் QR CODE பயன்பாடு எவ்விதம் எடுத்துச் செல்வது என்பது பற்றியும் விடாது இரு நாள்கள் கொடுக்கப்படுகின்றன.

முதலில் உதயச் சந்திரன் அவர்களது பொதுவாகப் புதிய பாட நூலை மாணவரிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை , அதன் உருவாக்கம் பற்றிய நீண்ட உரையும் தொடர்ந்து குறிப்பிட்ட பாடங்களுக்குப் பிரத்யேகமாகப் பேசப்பட்டுள்ள உரை , அதோடு பாடநூல் தயாரிப்புக் குழுவில் பங்கேற்று மதிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்களது உரையும் காணொலியில் தந்து ஆசிரியர்களை ஆர்வமூட்டும் நிகழ்வு பயிற்சியில் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர்கள் விவாதித்து புத்தகத்தின் நிறை குறைகள் பேசப்பட்டு தாள்களில் எழுத்துப் பூர்வமாகப் பெறப்படும் முறைகளும் நிகழ்கின்றன. ஆங்காங்கே உயர்  அதிகாரிகள் வந்து பார்வையிடுகின்றனர். எல்லாமும் மிகச் சரியாகப் போகின்றன.

ஒரு ஆசிரியராக இப்புத்தகங்கள் பற்றிய பார்வையை  பல ஆசிரியர் களின் குரலாக உங்களுக்குத் தரவே  கடமைப்பட்டுள்ளேன்.....

மதிப்பீட்டு பகுதி நமது மாணவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்கிறார் ஒரு 9 ஆம் வகுப்பின் ஆங்கில ஆசிரியர்.பாடத்தின் பயிற்சிப் பகுதிகள் மிக அதிகமாக உள்ளது.அனைத்தையும் கொடுக்கப்பட்ட கால அளவில் முடிப்பதென்பது சவாலான விஷயமே என்ற கருத்தும் கூறப்படுகிறது.

முக்கியமாக 6 மற்றும் 9 வகுப்பில் ஒரு பருவத்தில் குழந்தைகளுக்கும் கொடுத்து கற்றல் விளைவுகளை அறுவடை செய்து விட சூழல்கள் உள்ளனவா என்பது மிகப் பெரும் கேள்விக் குறி.

போட்டித் தேர்வை மனதில் கொண்டே முழுப் புத்தகமும்  பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது மற்ற மாணவரை மனதில் வைக்க மறந்து விட்டனரோ என எண்ண வைக்கிறது.

எல்லோருடைய குரல்களிலும் ஒலிக்கும் ஏக்கம் நேரமின்மை . முப்பருவமாகப் பிரித்த பிறகு குழந்தைகள் குறுகிய காலத்தில் ஒரு மிக நீண்ட முழுப் புத்தகத்தைப் புரிந்து கற்றல் நிகழ்ந்து மாற்றம் பெறுவதில் சிக்கல் ,பக்கங்கள் மிக அதிகமாக உள்ளன. , ஏனெனில்  ஆசிரியர்களுக்கு கோப்புகள் தயாரிக்கும் பணி கூடுதல் சுமை எனவும் , எல்லாக் குழந்தையையும் எளிதில் அத்தனையையும் கற்க அழைத்து வருவது வெளிப்படையாகக்  கூற வேண்டுமெனில் இயலாத ஒன்று.

மிக முக்கியமான ஒன்று , QR CODE இன் பகுதிகளை வகுப்பறையில் பயன்படுத்து எவ்வாறு ? ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவார்கள் , எல்லோருமா பயன்படுத்துவார்கள் என்றால் அது கேள்விக் குறியே. .

ஒரு வகுப்பின் 30 (அ) நாற்பது மாணவர்களுக்கும்  எவ்வாறு இதைக் காட்டுவது ?45 நிமிடத்தில் பாட நூலின் சில பஸ் என சொல்லப்படும்  பாடப்பகுதியை முடிப்பார்களா ? QR CODE பயன்படுத்துவார்களா ? மாணவரின் பிரச்சனைகளை அணுகி அவர்களைப் படிக்கத் தயாரிப்பு செய்வார்களா ? ஏனெனில் சிறு அலைபேசியில் 2 மாணவரை வேண்டுமானால்  ஒன்றாக அழைத்துக் காட்டலாம். வகுப்பு முழுவதிற்கும்  அதைக்  காட்டுதல்  முழுவதும்  இயலாதது. ஒவ்வொரு வகுப்பிலும்  ஸ்மார்ட் க்ளாஸ் என்று சொல்லப்படும் வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

அதை விட 11 ஆம் வகுப்பில் புத்தகத்தின்  அதிகப் பாடச் சுமையால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் மாணவர்கள் ஃபர்ஸ்ட் குரூப் என்று சொல்லப்படும் இயற்பியல் , வேதியியல் , உயிரியல் பாடப் பிரிவில் சேர அஞ்சி வெளியேறும் சூழல் , ஒரு தலைமை ஆசிரியர் ஈரோடு மாவட்டத்தில் கூறும்போது ஒரு குறிப்பிட்ட பள்ளியில் அந்தப் பாடப் பிரிவு சேர்க்கை பூஜ்ஜியம் , நன்றாக தேர்வு முடிவுகள் தந்து சிறப்பான பள்ளி எனப் பெயர் பெற்ற தனது பள்ளியில் கடந்த ஆண்டை விட 11 ஆம் வகுப்பு சேர்க்கை ஏறத்தாழ பாதியாகக் குறைந்தும் கணினி வகுப்புப் பிரிவில் மிகக் குறைவான சேர்க்கை எனவும் , இது ஆரோக்கிய மற்ற சூழலை உண்டு பண்ணி இருக்கிறது என வருத்தப்படுகிறார். காரணம் , உயிரியல் பிரிவு புத்தகங்களின்  மட்டுமே  1000 பக்கங்கள் கொண்டுள்ளன , எம் பள்ளியில் ஜூன் மாதம் படித்து விட்டு இயற்பியல் , வேதியியல் பாடச் சுமையைத் தாங்க முடியாமல்  வேறு பிரிவிற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ள மாணவர்களைக் குறிப்பிட்டு வருத்தப்படுகிறார்.

வேலூர் மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் மேற்சொன்ன காரணத்தால் மாணவர் இல்லாததால் அந்தப் பாடத்திற்கு ஆசிரியர் தேவையற்றதாகி அந்தப் பணியிடம் நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்.. இது தமிழகத்தின் பல பள்ளிகளுக்கும்  பொருந்தும்.

இவற்றை சரிகட்ட மாற்று வழி என்ன ? என்ற சிந்தனையை உங்கள் முன் வைக்கிறேன். மீண்டும்  மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா ? யோசியுங்கள்.

மற்றுமொரு பெரிய சிக்கல் ஆங்கில வழியாக மாறிக் கொண்டிருக்கும் தமிழ் வழிப்  பள்ளிகள்  , அங்கே தமிழ் வழியே கற்பித்துக் கொண்டுள்ள ஆசிரியர்களே ஆங்கில வழியில் கற்பிக்கப் பணிக்கப்படுகின்றனர்.  எந்தவித பயற்சியும் இல்லாமல் , ஆங்கிலத்தை தமிழ் வழியிலேயே கற்பிக்கும் சூழலில் ஆங்கில வழியில் உள்ள பாடநூல்கள்  மற்றொரு சவால்.

பாடநூல்கள் தனியாகப் பேசக் கூடிய பொருள் அல்ல , அது பள்ளி சூழல் , ஆசிரியர் நிலை , திறன்கள் , குழந்தைகளின் திறன்கள் , தலைமை ஆசிரியரின் கவனம் , உயர் அலுவலர்களின் அணுகுமுறை ,தேர்வு முறைகள் , பெற்றோர் சமூகம் எல்லாமும் இணைந்த ஒரு சங்கிலிப் பிணைப்பு.

ஆகவே பள்ளிகளில்  உண்மை நிலையில் தகுந்த சூழலும் , ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தியும் திறம்பட  மேற்பார்வை செய்யும் தலைமையும் நிறைந்த பள்ளிகளாக இருப்பதோடு  மாணவரிடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களது மனப்பான்மையும் தான் உள்ள படியே மாற்றங்களை விளைவித்து புத்தகத்தின் சிறப்புகளை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும் .

உமா

No comments:

Post a Comment