வகுப்பறை உளவியல் : 13
நம் வகுப்பறைக் குழந்தைகள் எப்போதும் பாடத்தோடு மட்டுமே தங்களை திருப்தி படுத்திக் கொள்வதில்லை என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன்.
ஒரு சில ஆசிரியர்களின் எண்ணம் என்னவோ , இல்லை அவர்கள் அப்படி எதுவும் வெளிக்காட்டுவதில்லையே , எங்களிடம் எதுவுமே பேசுவதில்லையே என்பது.
ஆசிரியர சகோதரர்களே தயவு செய்து அவர்களுக்கான கருத்துப் பரிமாற்றத்திற்கு இடம் தாருங்கள் , நேரம் ஒதுக்குங்கள் .
அவர்கள் நம்மை (ஆசிரியர்கள்) உற்று நோக்குகின்றனர். அவர்களைச் சுற்றி உற்று நோக்குகின்றனர். பிரச்சனைகளை அணுகவும் கலையவும் கூட வழிகாட்டுகின்றனர், எல்லாவிதத்திலும்.
பள்ளி ஆரம்பித்து முதல் வாரத்தில் இருந்தே 10 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கணக்குக்கான சிறப்பு வகுப்பு மாலை 5.30 வரை இருந்து வருகிறேன். இது எனக்கும் மாணவருக்குமான உடன்படிக்கை , யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
அந்த 4.15-5.30 என்ற நேரத்தில் தான் எங்களுக்குள் அதிகப் புரிதல் வந்தது. கணக்கு நடத்துவது மட்டுமல்ல எங்கள் நோக்கம் , அவர்களது 9 ஆம் வகுப்பு வரையிலான கற்றல் சூழல் பற்றிக் கூறுவார்கள் . யாரைப் பிடிக்கும் , ஏன் பிடிக்கும் ? கணக்கு சுத்தமும் பிடிக்கவில்லை என்று தான் ஆரம்ப நாட்கள் கருத்து வெளியீடு இருந்தது.
திடீரென குளோரியும் ரஞ்சனியும் கணக்கு மிக சீரியஸாகப் போடும் போது மிஸ் , எங்களுக்குப் பாண்டா கதை சொல்லியே ஆகணும் மிஸ் என்பார்கள்.
8 , 6 வகுப்புக் குழந்தைகளும் 4 , 5 பேர் ஆர்வமாக சிறப்பு வகுப்பிற்கு உட்கார்ந்து அவங்க பாடத்தப் படிப்பாங்க , கணக்கு போடுவாங்க , நிமிஷத்துக்கு ஒரு முறை சந்தேகம் கேட்பாங்க. அவங்க அளவுக்குக் கூட சிரத்தையா இல்லாம 10 ஆம் வகுப்பு குழந்தைங்க விளையாட்டா இருப்பாங்க , அதற்கும் ஈடு கொடுத்து அவங்கள அழைச்சுக்கிட்டுப் போக வேண்டிய சூழல் ..
மிஸ் , இது போதும் ....என்றால் ,கணக்கை நிறுத்திடனும் , இல்லாட்டி ஒன்னும் பண்ண மாட்டாங்க , தலைவலி , வயிற்று வலி எல்லாம் தலைகாட்டும். ஆகவே .. போதுமா சரி .. கொஞ்சம் அரசியல் பேசுவோம் , பெண் பிள்ளைகளுக்கே உள்ள வலிகள் , சூழல் , எப்படி எதிர்கொள்வது , எப்போதும் சிரித்திருப்பது என எல்லாவற்றையும் பேசுவோம் .. மீண்டும் கணக்குக்கே வந்து விடுவேன்.
அருள் நந்தினி சொல்லுவாங்க ஒரு அழகான சிரிப்புடன் , மிஸ் ... கடைசியா மேத்ஸ் மறக்க மாட்டேன்றிங்களே.என்னடா கண்ணு பண்றது ? நம்ம வேலை அது தானே .. என்று பேசி இணைந்து விடுவோம்.
ரூபினி அடிக்கடி சமூக சேவை பற்றிக் கேட்பார். வகுப்புக்கு சென்ற இரண்டாம் நாளே ..நான் முதல்வரானால் தலைப்பு பற்றி கொஞ்சம் கருத்துகள் கேட்டார். எதற்கு என்றதற்கு ... டியூஷன்ல போட்டிங்க மிஸ் என்றார் .. நீட்டிலிருந்து கல்வி உரிமைச் சட்டம் ,PTA , SMC எனவும் , வேறு பலவும் பேசப்பட்டு கொஞ்ச நாள் கழிச்சு .. மிஸ் நான் இரண்டாவது பரிசு என்றார்.
கொஞ்சமும் வகுப்பில் பேசாத கவனிக்காத சுபாஷினியை ஒரு நாள் அழைத்து ஏன் இப்படி இருக்கே என சற்றே சத்தமாகக் கேட்க .. அழுகையுடன் அவர் சொல்லியது .. மிஸ் படிக்க ரொம்ப ஆசையா இருக்குங்க மிஸ் , ஆனா புரியல .. அடடா நீ அழாதே குட்டி .. சுலபமா படிச்சுடலாம் என்று கூறினாலும் அவருடன் தினம் போராட வேண்டியுள்ளது.
தினம் தினம் பஸ் பிடிக்கப் போக அனுமதி கேட்கும் ஹரிணி , மிஸ் IT சேர எந்த க்ரூப் எடுக்கணும்னு அடிக்கடி கேட்கும் ரோஹிணி ... விஜய் பர்த்டே கொண்டாடணும் மிஸ் , உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யார் எனக் கேட்கும் உமா , காய்ச்சல் வர்ற மாதிரி இருக்குன்னு அடிக்கடி வீட்டுக்குப் போகக் கேட்கும் மோனிகா , மிஸ் இங்க வாங்களே என்று ரகசியமாக் கூப்பிட்டு காதுக்குள் வினாடி வினா கேள்வி கேட்கும் ரம்யா , என இவர்கள் அனைவரையும் ஒரு சேர அழைத்து அரவணைத்தே செல்ல வேண்டுமாய் இருக்கிறது எனது கணக்கு வகுப்புகள் . ....
இப்படி பயணித்ததால் கடந்த ஒன்றரை மாத காலத்தில் அவர்களுக்கும் எனக்குமான உறவு பலப்பட்டது. ஜூலை 1 முதல் எல்லாப் பாடங்களும் தினம் ஒரு நாள் 5 மணி வரை என வகுப்புகள் ஆரம்பிக்க நாங்கள் 5 முதல்5.45 வரை எங்கள் நேரத்தை நீட்டிக் கொண்டோம்.
ஒரே பிரச்சனை .. ரொம்ப லேட்டாகுது மிஸ் ..7 மணி வரை கூட இருப்போம் , ஆனா பசிக்குதுங்க மிஸ் என்று குழந்தைகள் முகம் வாட .. ஆரம்பித்தது , வகுப்பு முடியும் போது தினமும் சின்னதாய் அவர்களது பசியாற்ற பிஸ்கெட் ஏற்பாடு செய்தேன். சந்தோஷமாக குழுக்கற்றலும் இணை கற்றலும் என் மூலம் கற்றலும் இப்படி ...
கடந்த வாரம் பேசும் போது வேல்விழி சொன்னது .. மிஸ் ... இத்தன வருஷத்தில் இப்போதான் கணக்குக்கு க்ளாஸ் ஒர்க் தினமும் எடுத்து எழுதியிருக்கேன். உங்களால தான் கணக்கு போடறேன். தைரியமா இவற்றைப் பேச விடுவதால் நம் மீது அவர்களுக்கு நம்பிக்கை வருகிறது.
பயிற்சிக்கு சென்ற 4 நாட்களும் கணக்கு வகுப்புகளில் இயல்பாகக் கற்றல் நடந்துள்ளதை அவர்களே வந்து சொல்றாங்க ...
நேற்று மாலை 5.05க்கு நான் வகுப்பிற்குள் நுழைய ஒரே கூச்சல் ... மிஸ் முதல் இடைப் பருவத் தேர்வு வருதுன்னு எல்லா மிஸ் உம் டெஸ்ட் தந்து இருக்காங்க , தலை வலிக்குது. ஏதாச்சும் பேசலாம் மிஸ் எனக் கூற ... யோசித்துக் கொண்டிருக்கும் போதே ..
ஏதேச்சையாக அரிமா சங்க நண்பர் Sathyanarayanaraj Balaguru வர ... அவரை அறிமுகப்படுத்தி ... இவர் உங்களோடு பேசுவார் என வழி விட ... சுமார் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக கலந்துரையாடி ஒரு மோட்டி வேஷனல் ஷெசன் எடுக்க , அவர்களிடமிருந்து பல சந்தேகங்கள் , ஆர்வம் எக்கச்சக்க கேள்வி கேட்க .... வாழ்வின் இலட்சியம் எப்படி இருக்க வேண்டும் , நோக்கம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் ,எந்த பாடப் பிரிவு எடுத்தால் என்ன படிக்கலாம் ? நீட்டுக்கு என்ன செய்ய என்று அவருடன் பலவாறு விவாதித்தனர். வழிகாட்டி வகுப்பை அவர்கள் விரும்பினர் என்பது வீட்டிற்குச் செல்லும் முன் அவர்களது சந்தோஷப் பகிர்வால் அறிந்து கொண்டேன்.
(அவர்களுக்கான மாலை சிற்றுண்டியாய் Chennai vision 101 லயன்ஸ் கிளப் சார்பாக 3 நாட்களுக்கான பிஸ்கட்ஸ் வழங்கிச் சென்றார். அன்பும் நன்றியும் சத்ய நாராயணன் )
இன்று வகுப்பிற்குள் செல்லும் போது
நேற்றைய மாலை வகுப்பு மிகப் பயனுள்ளதாக இருந்ததாகவும் வரும் தேர்வில் தங்களால் முடிந்த வரை சிறப்பாக செய்வதாகவும் நான் கேட்காமலேயே உறுதி கூறினார் .
இப்போதெல்லாம் அவர்களாகவே கணக்குப் போட்டுப் பார்க்கத் தயாராகிவிட்டனர் , இன்று மாலை 5.50 க்கு வீட்டிற்குத் திரும்பும் போது , தீபா வந்து மிஸ் இப்பவெல்லாம் நீங்க சொன்னது மாதிரியே நைட் 10 மணி வரைக்கும் படிக்கிறேங் மிஸ் ... டிவி எல்லாம் பார்ப்பது இல்லை , எங்கம்மா சொல்றாங்க .... நீயா இது ?திருந்திட்டியான்னு .... என சிரித்துக் கொண்டே என்னிடம் கூறி மகிழ்கிறார்.
வகுப்பறை வசப்பட ஒரு மென் சொல்லும் சிறு புன்னகையும் போதும் என எனக்குக் கற்பித்த அன்பு தேவதைகள் இவர்கள் .
தொடரும் உளவியல்....
அன்புடன்
உமா
No comments:
Post a Comment