Thursday, 26 December 2019

Tamil Hindu -1

மெல்ல நழுவுகிறதா கல்வி ... கையை விட்டு 

உரையாடுவோம் குழந்தைகளுடன் 

அந்த பத்தாம் வகுப்பு குழந்தைகள் வகுப்பறைக்குள் எப்போதும் படிப்பு , தேர்வு என சுருங்கிப் போய் கிடந்ததைப் பார்த்துக் கொண்டு கணக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியரால் அமைதியாக இருக்க முடியவில்லை. 

ஒரு நாள் வகுப்பறையில் , பிரிவேளை முடிவதற்கு 10 நிமிடம் இருக்கும் போது பேச்சுக் கொடுத்தார் .

கணக்கைத் தவிர வேறு பேசுவோம் என்று கூறிய உடனேயே அவர்களது மனதில் கொண்டாட்ட உணர்வு முகத்தில் பிரதிபலித்தது. அந்த ஆசிரியர் அவர்களிடம் , உங்களுக்கு பள்ளியில் படிக்கும் போது, பாடங்களும்  தேர்வுகளும் தவிர வேறென்ன வேண்டும் எனக் கேட்க ….. அத்தனை விதமான பதில்கள் .ஆம் அவர்கள் மனம் திறந்த அந்த நிமிடம் ஆசிரியருக்கு கல்விக் கோட்பாடுகள் மீது கோபமும் ஆற்றாமையுமே எழுந்தன. எத்தனை கொடூரமாக இந்தக் கல்வி முறை குழந்தைகளை 

வன்முறைகளால் சிறைப்படுத்துகிறது எனத் தோன்றுகிறது. 

பிடித்தபடி பூ வேலை செய்து அழகான வடிவமைப்புகள் செய்ய ஆசைப்படுகிறேன் மிஸ் என்கிறாள் ஒரு குழந்தை . மிஸ் , எனக்கு டூர் மட்டும் போதும் வேறெதுவும் வேண்டாம் ஒரு நாள் கூட இந்தப் பள்ளிக்கூடத்தில் வெளியே கூட்டிட்டுப் போகவே இல்லை மிஸ் என்று அங்கலாய்க்கிறது ஒரு குழந்தை. மிஸ் விளையாட்டு நிறைய வேண்டும் , போட்டிகளுக்கு வெளியே போய் ஜெயிச்சு வரணும் என்கிறது ஒரு குழந்தை. 

மிஸ் , நம்ம சாப்பாட்டை நாமே செய்ய விவசாயம் செய்யக் கத்துக் குடுக்கணும் மிஸ் இது ஒரு குழந்தையின் மன வெளிப்பாடு . 

மிஸ் , கதைப் புத்தகம் நிறைய படிக்கணும் மிஸ் , பாடம் எப்பவும் படிச்சா சலிப்பா இருக்கு என்கின்ற ஒரு குரலும் வருகிறது .

எல்லாப் பாடமும் ப்ராக்டிகலா செய்து பாத்து தெரிஞ்சுக்கணும் என்கின்றனர் சில குழந்தைகள்.  மிஸ் , எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ் நிறைய வேண்டும் என்று சொல்ல அப்படி என்றால் விளக்கமா சொல்லுங்க என அந்த ஆசிரியர் கேட்கிறார்.   பாட்டு (Song) , நடனம் (dance), வரையறது இதெல்லாம் தான் மிஸ் என்கிறது அந்தக் குழந்தை. மற்றொரு பெண் சிரிக்க ஏன் மா எனக் கேட்கிறார் ஆசிரியர் .மிஸ் நான் சொல்வதைக் கேட்டு சிரிக்கக் கூடாது என்று கூறி விளக்குகிறாள் சினிமா எடுக்க சொல்லித் தரணும் என்பதைக் கேட்டு நாம் சிரிக்கக் கூடாது தான். 

மற்றொரு குழந்தை மிஸ் , தையல் சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும் , கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் . இப்படியாக அந்த வகுப்பறையில் 10 நிமிடத்திற்குள் பலரின் ஏக்கக் குரல்களும் வெளிப்பட்டன .

இது மழைக்காலம் ஆனதால் , ஆசிரியர் சில நிமிடம் யார் வீடெல்லாம் மழையால் பாதித்தது எனக் கேட்க , மிஸ் எங்க வீட்ல வாசப்படி வரை தண்ணீர் வந்து விட்டது .உள்ள பாம்பு , பூச்சி எல்லாம் வருதுங்க மிஸ் , அவளது முகம் வாடி பரிதவித்து அழுகைக்கு முன்பான நிலையில் தான் இந்த பதில் அவளிடமிருந்து வந்தது. 

மிஸ் எங்க வீட்ல தண்ணி வந்துடுச்சு , பக்கத்தில்  பாட்டி வீடு இருக்கு. அங்க போனா , அங்க கொல்லையில் கொஞ்சமா தண்ணி வந்தாலும் எல்லாமே முழுகிடும் என மிக வருந்தி ஒரு பதில் வருகிறது. 

மிஸ்.. எனக்கு உடம்பு சரியில்லை , நெஞ்சு வலிக்கும் வரை சளி இருக்கு என ஒருவள் ஆசிரியரிடம் வந்து கூற , ரொம்ப முடியலன்னா வீட்டுக்கு ஃபோன் பண்ணவா ? போறீங்களம்மா எனக் கேட்க , வீட்ல திட்டு வாங்க மிஸ் ,போகல என நெஞ்சைப் பிடித்து அழுகையில் வெடிக்க சமாதானம் செய்து கடைசி பெஞ்ச்சில் படுக்க வைக்கும் ஆசிரியரால் ஒரு நிமிடம் வேதனை தான் பட முடிகிறது. 

இப்படித்தான் நம் பள்ளிக் குழந்தைகள் வீட்டை விட்டு பள்ளிக்கு வந்து பள்ளியே வீடாகிப் போக , நம்மிடையே வளர்கின்றனர். பள்ளிக் கல்வி குறைந்தது 12 வருடங்கள் , தற்போது மழலையர் கல்வியும் சேர்த்தால் 15 வருட காலங்கள் , இந்த நீண்ட பருவத்தை  நிறைவடைந்த பிறகு கல்லூரி வாழ்க்கையை எதிர் கொள்ளப் போகும் குழந்தைகள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதற்கும் நம்மிடையே பல உதாரணங்கள் இருக்கின்றனர். 

அதற்குப் பிறகு தான்  அவர்கள் உண்மையான வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர் என்பது தான் எதார்த்தம். அந்த வாழ்க்கையை எதிர் கொள்ளத் தேவையான வாழ்வியல் திறன்களை பள்ளிக் கல்வியில் அவர்கள் கற்கும் பாடப் புத்தகங்கள் மட்டுமே  தந்து விடுகின்றனவா என்பதை ஆராய்ந்தால் இல்லை என்பது 100% பதிலாக இருக்கும் .

தேர்வு மட்டுமே மையப் பொருளாகி வினாக்களுக்கு விடை எழுதும் மரபு தான்  காலம் காலமாக நம் கல்வி முறையில் கோலோச்சுகிறது. அந்த 10 ஆம் வகுப்புக் குழந்தைகள் மேற்சொன்ன அனைத்து விருப்பங்களுமே திறன்களின் அடிப்படையில் பிறந்த ஆசைகள் தானே. உண்மையாக அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் கல்வி முறை தானே நம் குழந்தைகளுக்குத் தர வேண்டும். அவற்றைத் தானே நாம் பாடங்களுடன் இணைத்துக் கற்பிக்க வேண்டும். 

எத்தனையோ புதிய முறைகளை அறிமுகப்படுத்துகிறோம் , புதிய தேர்வு முறைகள் , கற்றல் திறன்கள் , இலவசப் பொருட்கள் , அரசின் திட்டங்கள் , கற்பித்தலில் புதுமை , ஸ்மார்ட் க்ளாஸ் என அடுக்கிக் கொண்டே போகலாம் .ஆனால் வகுப்பறையில் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்றுக் கொள்ளுகிறார்களா என்று நம்மை நாமே ஒரு முறை கேட்டுக் கொள்ள  வேண்டும் .

மகிழ்ச்சியான கற்றலுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவது நமது தலையாய கடமை. அது குறித்து அதிகமான திட்டமிடலையும் செயல் திட்டத்தையும் வகுக்க வேண்டும் அல்லவா ?

கற்றலுக்கு ஏதுவான சூழல் ஆசிரியர்கள் மாணவர்களுடனான உரையாடலில் தான் ஆரம்பிக்கின்றது. 

வகுப்பறைகளில் அன்றாடம் மாணவர்களுடனான ஆசிரியர்களது அக்கறையான உரையாடல் தான்  அச்சத்தையும் ஐயத்தையும் போக்குகிறது. கற்றலில் ஆர்வத்தைத் தூண்டுகிறது. கற்றல் குறைபாடுகளைக் களைகிறது. மாணவர் விருப்பத்தைப் புரிந்து கொள்ளவும் அதற்கேற்ப அவர்களை வழிகாட்டி எதிர்கால வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றவும் இந்த மாணவர் -ஆசிரியர் இடையிலான உரையாடல் வழி வகுக்கும் .

மாணவரது குடும்ப சூழல் , மன அழுத்தம் இவற்றையும் அவர்களுடனான ஆசிரியர்களது உரையாடல்கள்  மாற்றும். மாணவர்களது பல்வகைத் திறன்களும் வளர்க்க சரியான வழிப் பாதையை உருவாக்கவும் தெளிந்த நீரோடையாக மாணவரது மனமும் அறிவும் ஆரோக்கியமாக மாறிட மாணவர் -ஆசிரியர்களது உரையாடல் மிக அவசியம். இதை நம் வகுப்பறைகளில் ஆரம்பித்தால் எதிர்கால  சமுதாயம் சிறப்புற உருவாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

உமா

ஆசிரியர் .

No comments:

Post a Comment