இலவசங்கள் கல்வியை வசமாக்குகிறதா மாணவர்களிடம் ஒரு பார்வை....
எல்லோருக்குமான கல்வியா ?
சுதந்திரம் பெற்ற தமிழகக் கல்வி வரலாற்றில் கிராமங்களின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களும் கல்வி பெற வேண்டும் என்று தான் காமராசர் பொது மக்களிடம் கையேந்தி பள்ளிகளுக்கான இடங்களைப் பெற்று , 3 கி.மீட்டருக்கு ஒரு பள்ளி என்று உருவாக்கினார் ,கல்வியில் பெரும் மறுமலர்ச்சி உருவான காலமாக உருவானது , அதன் நீட்சியாகக் கல்வியின் இன்றைய நிலை தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டி ஒரு பக்கம் வேறொரு பரிமாணத்தை எட்டி இருப்பதை மறுக்க முடியாது. அதன் இன்னொரு பக்கம் கல்வி எல்லோருக்குமான கல்வியாக இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம் . ஏற்றத் தாழ்வான கல்வி தான் நமது நாட்டில் நிலவுகிறது என்பதை நாம் திரும்பத் திரும்பக் கூறுகிறோம் .
கல்வி இலவசமா ? கல்வி கற்க இலவசப் பொருட்களா ?
அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு,
இலவசமாகப் பொருட்களை வழங்கும் திட்டம் நம் தமிழகத்தில் பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் சத்துணவும் , சீருடையும் என்பதாகவே இருந்தது. வறுமையின் காரணமாக குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள்
இலவச சத்துணவு திட்டத்தை அரசு அறிமுகம் செய்த பிறகே கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்தனர்.
அனைத்துத் தரப்பு குழந்தைகளும் சமமாக, சமூகப் பொருளாதார வேறுபாடு நீங்கி நடத்தப்படவும் , தங்களைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை எதுவும் வந்து விடாமல் இருக்கவும் மன ரீதியான ஒற்றுமை உணர்வின் ஒரு வெளிப்பாடும் தான் சீருடை கூட .அப்படியான சீருடைகளையும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் குடும்பக் குழந்தைகளுக்கு அரசு இலவசமாக வழங்கியது , அதோடு அவர்களுக்கு பாடநூல்களும் இலவசமாக வழங்கியது இதெல்லாம் 1990 களில் 2000 மும் ஆன வருடங்களில் நிகழ்ந்தன..
அரசின் பல்வேறு திட்டங்கள் விரிவடையும் போது , பள்ளிகளில் சேரும் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பாடநூல் , சீருடை , நோட்டு இப்படி வழங்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் லேப் டாப் , சைக்கிள்கள் என விரிவடைந்து வரவேற்பு பெற்றது.
தற்போது , சீருடை ,சத்துணவு , பாடநூல் , நோட்டு இவற்றுடன் செருப்பு , புத்தகப் பை ,க்ரேயான்ஸ் , கலர் பென்சில் ,வடிவியல் கருவிப் பெட்டி , சைக்கிள் , லேப்டாப் இப்படியாக இன்னும் சில பத்துக்கும் மேற்பட்ட இலவசப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதன் அடுத்த புதிய முயற்சி ஷூ , சாக்ஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பு கூட வந்துள்ளது என்றால் பாருங்களேன் .
இலவசப் பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்துகிறதா ?
செருப்பு , பை , வடிவியல் கருவிப் பெட்டி
தரம் என்ற ஒற்றைச் சொல்லை மையமாக வைத்தே அனைத்து இலவசப் பொருட்களையும் நாம் மதிப்பிடலாம். பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் இலவசங்களை துளியும் விரும்புவதில்லை. நகரப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் அரசு தரும் இலவச செருப்பை கால்களில் அணிவதே இல்லை ஏனென்றால் சரியான அளவு , தரம் இல்லை . சிலர் வாங்கி வழியிலேயே தூக்கி எறிந்து விடுகின்றனர் . செருப்பு இன்றைய நாட்களில் 150 ரூபாய் கொடுத்தால் வாங்கி விட முடிகிறது.
அதே போல புத்தகப் பையையும் பயன்படுத்துவதில்லை , பைகளைப் பயன்படுத்த ஆரம்பித்து ஒரிரு மாதங்களிலேயே பையின் ஜிப் (ZIP ) என அழைக்கப்படும் திறந்து மூடும் பகுதி பிய்ந்து விடுகிறது. சிலருக்கு பைகளே கிழிந்து விடுகின்றன .அது மட்டுமா ஒவ்வொரு பொருளிலும் பிரச்சனைகள் .இலவச வடிவியல் கருவிப் பெட்டியில் உள்ள கருவிகள் பயன்படுத்தும் நிலையில் பெரும்பாலும் இருப்பதில்லை .... ஓரிரு முறைப் பயன்படுத்திய பிறகு பயனற்றுப் போகின்றன.
இலவச சத்துணவிலும் தரமில்லை
சத்துணவு கூட , 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை , பள்ளிக் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப , அரசு இத்தனை மாணவர்களுக்குத்தான் சத்துணவு என்பதை ஒதுக்குகிறது. அதற்கு அரசு தரும் நிதியை, உதாரணத்திற்கு ஒரு பள்ளியில் 500 குழந்தைகள் படிக்கின்றனர் என்றால் 200 குழந்தைகளுக்கு அரிசி , பருப்பு , எண்ணெய் , காய்கறி எனக் குறிப்பிட்டு தரும். அதில் சமைக்கும் போது 220 குழந்தைகள் சாப்பிட முடியும். ஆனால் அப்பள்ளியின் 300 குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டால் , அங்கு கிடைக்கும் சத்துணவு தர மற்றதாகி விடுகிறது. பெரும்பாலான குழந்தைகள் சத்துணவை விரும்பி உண்பதில்லை. வீட்டின் வறுமையும் இல்லாமையும் தான் அவர்களை சத்துணவு உண்ண ஏற்க வைக்கும் காரணிகள் .
சீருடையே அடிப்படை ஆனால் சீரிய முறையில் தரப்படுகிறதா ?
அடுத்து , சீருடை .. அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் சீருடை தரமானதாக இல்லை , பெண் குழந்தைகளுக்கு தரும் 80% சீருடைகள் அவர்கள் அதை 50 ரூபாயோ 100 ரூபாயோ வெளியே தனிக் கடைகளில் கொடுத்து செலவு செய்தால் தான் அணிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றது. அப்படியே செய்தாலும் வருடம் முழுவதும் பயன்படுத்துமளவுக்கு தரமானதாக இல்லை .
அதே போல ஆண் குழந்தைகளுக்கும் கூட கால்சட்டை இடுப்பு அளவு இறுக்கமாக முக்கால் கால் உயரத்துடன் சரியில்லாத துணிகளே .
2 செட் வழங்குவது , பருவத்திற்கு ஒன்று எனவும் வழங்காமல் , ஒரே ஒரு செட் தந்தாலும் தரமானதாகத் தந்தால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அணிவர். இந்த சீருடைகளை பெருமிதத்துடன் (Proud )அணிந்து செல்ல முடியவில்லை என்கின்றனர் மாணவர்கள் . தரமுடன் நல்ல தையலுடன் சரியான அளவுடன் சீருடை வழங்கினால் எல்லோருக்கும் நல்லது.
பாடப்புத்தகங்கள் , நோட்டுகள்
முப்பருவ முறையில் தரப்படும் பாடநூல்கள் மிகுந்த செலவினத்துடன் தயாரிக்கப்பட்டு பல ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கப்பட்டு அரசுப் பள்ளி , அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தரப்படுகிறது. ஆனால் 9 , 10 வகுப்புகளுக்கு ஒரே புத்தகமாக வழங்கப்படுகிறது. புத்தகங்களின் வடிவமைப்புகள் பாராட்டும் படி இருந்தாலும் ஓரிரு மாதங்களிலேயே ஏடு ஏடாக பிய்ந்து போகின்றன . அதோடு இலவசமாக பெறப்படும் நோட்டுகளை சரியாகப் பயன்படுத்தும் மனப்பக்குவம் மாணவருக்கு இல்லை. எந்தப் பள்ளிக்கு சென்றாலும் ஒரு முழு நாளில் காகித மேடுகளைக் குப்பைகளாகப் பார்க்கலாம் . மாணவர்கள் கிழித்து கிழித்து நோட்டுத் தாள்களை ஆங்காங்கே போடுவதும் சுற்றுப்புறம் தூய்மை குறித்த புரிதலும் இல்லை.
இலவச சைக்கிள் பரிதாபம்
கடந்த வருடம் செய்திகளில் பார்த்திருக்கலாம் , கர்நாடகா , ஆந்திர மாநிலங்களில் உதிரி பாகங்களாய் இருந்த உதிரிகளே தமிழக மாணவர் பயன்படுத்தும் சைக்கிள்களில் பயன்படுத்தப்பட்டன. இலவச சைக்கிள் பெறும் ஒவ்வொரு மாணவனும் ரூ 500 குறைந்த பட்சம் செலவு செய்தாலே அந்த சைக்கிளை ஓட்டிச் செல்ல முடியும். சைக்கிள் ஓட்டத் தெரியாத மாணவர்களுக்கும் தரப்படுகிறது. சைக்கிள்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரிரு பள்ளிகளிலும் மொத்தமாக இறக்கி வட இந்தியத் தொழிலாளிகள் அங்கேயே தங்கி சைக்கிள் பகுதிகளை இணைத்துத் தர 6 அல்லது 7 மாத காலம் ஆகும் , பள்ளிகளுக்கும் இடைஞ்சல் , எங்கு பார்த்தாலும் பான்பராக் எச்சிலைத் துப்பி அசிங்கம் செய்வர் என்பதும் இங்கு அறிய வேண்டும்.
இலவச மடிக்கணினி
அடுத்து இலவச மடிக்கணினி , இதைப் பற்றி பல்வேறு பிரச்சனைகள் , மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது ஒரே விதிகளின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு முடித்து ெசல்லும் மாணவர்களுக்கு வழங்கினர் ஆனால் தற்போதோ பதினொன்றாம் வகுப்பில் தருவதும் , சில பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் தருவதும் சில இடங்களில் கல்லூரி சென்ற பிறகும் வழங்காமல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் பெரும் குழப்பங்களாக இருக்கின்றன.
இலவச மடிக்கணினி வழங்கும் ஒவ்வொரு மாணவனும் அதை சரியாகப் பயன்படுத்துகிறாரா என கவனிக்கின்றதா ? பெரும்பாலும் அதை வாங்கிய மாணவர் வந்த வரை இலாபம் என
( ரூ10000 )பத்தாயிரம் ரூபாய்க்கு 5 வருடம் முன்பே விற்றதை நாம் அறிவோம் . அது மட்டுமா , தன்னிடம் அரசு வழங்கிய மடிக் கணினியில் சினிமா பார்ப்பதும் தவறான படங்களைப் பார்ப்பதற்கும் தான் பயன்படுத்துகிறார்கள் என புலம்புகின்றனர் ஆசிரியர்களும் பெற்றோர்களும் , என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
அப்படி பெற்ற மடிக்கணினிகளைப் பழுதாகினால் சரி செய்யும் போது கான்பிகரேஷன் மிகக் குறைவு என்று தான் கூறுகின்றனர்.
எதார்த்தம்
இவை தான் அரசுப் பள்ளிகளில் எதார்த்தம் .இவை பற்றி எதிர்க் கேள்வியோ , மேற்குறிப்பிட்டவை சரியல்ல என்றோ கூறுபவர்கள் அவரவர் ஊரில் இயங்கும் பள்ளிகளில் நேரடியாகப் போய்ப் பார்த்தால் உண்மைகள் விளங்கும்.
இது பற்றி பள்ளி ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்களிடம் பேசிய போது , இலவசங்களே இல்லாமல் இருந்தால் தான் மாணவர்கள் கல்வியில் பொறுப்புடன் படிப்பர் என்ற கருத்தையும் ,
தேவையான மாணவர்கள் , வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு மட்டும் வழங்கலாம் என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர்.
யார் பயனடைகின்றனர் ?
20% மாணவர்கள் மட்டும் தான் இந்த இலவசங்களால் பயனடைகின்றனர் என்றால் மிகையாகாது. உண்மையில் பயனாளிகள் இந்த இலவசங்களுக்காக பட்ஜெட் போட்டு எல்லாத் தரகு வேலையும் நடக்குமே அந்த இடையில் இருக்கும் அனைவரும் தான். அரசாங்கத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு செயல் திட்டத்திற்கும் ஒதுக்கும் நிதியினை ஒதுக்கிய பிறகு கண்காணிப்பு என்பது அறவே கிடையாது .ஆகவே இலவசங்கள் வழங்கப்பட்டதைத் தான் கோப்புகள் (files) நிறைவேற்றுமே தவிர , எப்படியான தரத்தில் வழங்கப்படுகிறது என்பதில் எந்த இடத்திலும் கண்காணிப்பு கிடையாது .ஆகவே விழலுக்கு இறைத்த நீராகவே அனைத்தும் .
என்ன செய்ய வேண்டும் ? அரசியல் பார்வை என்ன ?
கல்வியை ஜனநாயக நாட்டில் இலவசமாகத் தர வேண்டுமே தவிர பொருட்களை அல்ல என்பதை முதலில் அரசாங்கமும் கல்வித்துறையும் புரிந்து கொள்ள வேண்டும் . யாருக்குத் தேவை என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு வழங்கலாம். அது கூட பெற்றோரின் பொருளாதாரத் தேவைகளுக்கு தொழில் அமைத்து , வேலை வாய்ப்பு ஏற்படுத்தினால் இந்த இலவசங்களுக்கு அவசியமே இல்லாமல் போகும். இன்றைய பொருளாதார வளர்ச்சி அடைந்த நம் நாட்டில் பெற்றோரால் ஒரு குழந்தை இரு குழந்தைகளுக்கு செருப்போ, புத்தகப் பையோ , வண்ணப் பென்சிலோ வாங்கித் தர முடியாமல் இல்லை. வறுமைக் கோட்டில் வாழும் மனிதர்களின் பிள்ளைகள் என்பவர்கள் மிக மிகக் குறைவு .அதோடு
அரசுப் பள்ளிக் குழந்தைகளிடம் பேசிப் பாருங்கள் , எல்லா வீடுகளிலும் அப்பாவின் வருமானம் டாஸ்மார்க் குக்கு தான் போகும் .ஆகவே அதை ஒழித்துவிட்டால் பள்ளி மாணவருக்கு இலவசங்களை நிறுத்தி விடலாம்.
அதற்கு பதிலாக அங்கு செலவிடும் பல ஆயிரம் கோடி நிதியை ,பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக்கிடப் பயன்படுத்தி கழிப்பறைகளைக் கட்டலாம். , ஆசிரியர்கள் நியமனம் செய்து , கற்பித்தலைத் தவிர்த்த பிற பணிகளை அவர்களுக்குத் தராமல் , மாணவர் கற்றலை உறுதிப்படுத்தும் வகுப்பறை நிகழ்வுகளைச் சரியாகக் கட்டமைக்காமல் , தனியார் பள்ளிகளின் வளர்ச்சியைக் குறைக்க முயற்சி எடுக்காமல் எத்தனை இலவசங்களை வழங்கினாலும் கல்வி சுகிக்காது .
உமா
பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்
No comments:
Post a Comment