Thursday, 26 December 2019

காமதேனு -விருது அரசியல்

விருது அரசியல் 

விருது என்ற சொல்லே எவ்வளவு உற்சாகமான தமிழ்ச் சொல் என்பதை நாம் அறிவோம் .அங்கீகாரத்தின் இறுதி நிலை தான் விருதுகளாக மாறுகின்றன .  சமீப காலங்களில், சமூகத்தின் அனைத்து துறைகளிலும் வரவேற்கப்படும் முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது விருதும் பாராட்டும் என்று கூறலாம் ..இவை பற்றிய புரிதல் கல்விக் கூடங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மத்தியில் எத்தகைய மாற்றங்களையும் விளைவுகளையும் தந்துள்ளது  , கல்வித் துறையின் ஆதரவு எந்த விதத்தில் உள்ளது ? பெற்றோர்கள் வரவேற்கின்றனரா ? சமூகம் எப்படிப் பார்க்கின்றது ? சிறப்பான செயல்பாட்டாளர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்படுகின்றனரா ? விருதுகளா கிடைக்கும் நன்மைகள் என்ன ? இப்படி பல விதப் பார்வைகளில் நாம் விருது என்ற சொல்லின் பொருளை அணுகலாம். 

செப்டம்பர் 5 நல்லாசிரியர் விருது 

தமிழக அரசுப் பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் மெட்ரிக் பள்ளிகள் ,ஆசிரிய பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் என அனைத்து தரப்பிலும் வருடா வருடம் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது.  இது மாநில நல்லாசிரியர் விருது, தமிழகத் தலைநகரான சென்னையில் முதல்வர் , கல்வி அமைச்சர் உட்பட கல்வித் துறை உயர் அதிகாரிகள் உடனிருக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழும் பரிசுத் தொகையும் அளிக்கப்பட்டு கெளரவிக்கப் படுவார்கள்.  தேசிய அளவிலும் அதே செப்டம்பர் 5 அன்று நம் நாட்டின் தலைநகர் டெல்லிக்கு இந்திய மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு நாட்டின் குடியரசு தலைவர் கரங்களால் விருதும் பரிசுத் தொகையும் வழங்குவது வழக்கம். ஆண்டிற்கு ஒரு முறை இது நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இருவரில் ஒருவர் கரூர் மாவட்ட பரமத்தி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக் கண்ணன் அவர்கள் , மற்றொருவர் ஈரோடு மாவட்ட  கோபிச் செட்டி பாளையத்தின் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் .

விருதின் அவசியம் 

மனிதனாகப் பிறந்த அனைவருக்குமே அவரவர் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு தருணம் அடிக்கடியோ அன்றாடமோ தேவைப்படுகிறது.  மனிதன் மட்டுமல்ல , ஒவ்வொரு சின்னச் சின்ன உயிரும் வாஞ்சையான பார்வையைக் கூட தனக்கானதாக ஏற்றுக் கொண்டு உற்சாகமாகி விடும் .அதே போல மனிதர்கள் செய்யும் பணி இடங்களில் அவர்கள் செய்யும்  சிறப்பான செயல்பாடுகளை அங்கீகாரம் செய்வது அவர்களை மேலும் மேலும் உற்சாகமாக்கி இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும் .நமது பள்ளிக் கல்வியில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஆசிரியர்களும் இந்த விருதுக்கு தகுதி உடையவர்களே.  ஆகவே தான் அரசு அவர்களை கெளரவப்படுத்துகிறது. மாநில விருதோ தேசிய விருதோ எண்ணிக்கையில் பல ஆயிரமுள்ள சிறந்த செயல்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வழங்க இயலாத சூழலும் இருப்பதால் சமீப ஆண்டுகளில் கனவு பள்ளிகள் , கனவு ஆசிரியர்கள் என அரசு அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியங்களிலும் கூட  தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது, அரசின் இந்த முயற்சியைப் பாராட்ட வேண்டும் .தொய்வில்லாமல் பல களப் பிரச்சனைகளுக்கு ஊடே தான் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளை உயர்த்தி மாணவர்களை வளர்ச்சி நிலைக்கு உருவாக்கி தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து உண்மையாகவே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டதாலேயே இப்படி பல தளங்களிலும் அவர்களை அங்கீகரிக்க விருதுகளை அளித்து மதிப்பு தருகின்றனர். 

யார் தகுதியுடையவர்கள் ?

ஊர் மக்களே தங்கள் ஊர் அரசுப் பள்ளிக்காக மாணவர் சேர்க்கையை முன்னெடுத்து வருகின்றனர் , பெற்றோரை பள்ளிக்குள் வரவேற்று அவர்கள் யோசனைகளைப் பள்ளியின் வளர்ச்சியாக மாற்றியிருக்கும் தலைமை ஆசிரியர், ஊர் மக்கள் ஊரின் அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து 25 லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர் என்றால் அந்த தலைமை ஆசிரியரின் மீது  , பள்ளி ஆசிரியர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கை எத்தகையதாக இருக்கும் , அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய விருதுக்கு தகுதியானவர் தானே , ஆம் அவர்தான் நாம் மேற் சொன்ன செல்வக் கண்ணன். 

சுனாமியால் அழிந்து போன பள்ளியை மீட்டு , மக்கள் பள்ளியாக மாற்றி ஊர் மக்கள் நேசிக்கும் பள்ளியாகவும் மிகப் பெரிய மாற்றங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவியுடன் செய்து துறை போற்றும் ஊர் போற்றும் தலைமை ஆசிரியராக விளங்கும் கீச்சாங்குப்பம் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலு அவர்கள் நிச்சயமாக தேசிய விருதுக்கு தகுதி வாய்ந்தவரே.

தனக்கு பணியில் பதவி உயர்வு வந்தாலும் வேண்டாம் எனக் கூறி தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் நீடித்து புரவலர் திட்டத்திற்காக வீடு வீடாக ஏறி இறங்கி 10 வருடம் முன்பே 20 லட்சத்திற்கும் அதிகமாக சேர்த்து , தேவையான வசதிகளை குழந்தைகளுக்கு கண்ணும் கருத்துமாக உருவாக்கி எளியோரின் மனதில் நிற்கும் ஊத்துக்குளி தலைமை ஆசிரியர் விஜய லட்சுமி மாநில விருதுக்கு தகுதியாைனவர் தான். 

இவர்களைப் போல ஆயிரக்கணக்கான தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கும் ஊரின் வளர்ச்சிக்கும் தமிழகமெங்கும் உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். 

இவர்களெல்லாம் விருதுக்காகப் பணியாற்றவில்லை , ஆனால் இவர்களது பணி விருதுக்கு அழைத்துச் சென்றது. 

இவர்கள் போன்ற தலைமை ஆசிரியர்கள் தவிர்த்து தங்கள் வகுப்பறைகளை ஜனநாயக வகுப்பறைகளாக மாற்றி குழந்தைகளுக்குள் பாடங்களுடன் இணைந்து சமூகப் புரிதல் தருபவர்களும் , தங்கள் அணுகுமுறையால் குழந்தைகளை அரவணைத்து அவர்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தும் ஆசிரியர்கள் , போட்டிகளில் பங்கேற்க வைத்து அதற்கான வெளியை உருவாக்கி  குழந்தைகளைத் தயார் படுத்தி கலந்து கொள்ள வைத்து ஆளுமைப் பண்புடையவராக மாற்றும் ஆசிரியர்கள் , அறிவியல் தளத்தில் குழந்தைகளை இயங்க வைக்க முயற்சி எடுக்கும் ஆசிரியர்கள் , வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் எடுத்துச் சென்று பரவலாக்கி மாற்றம் தரும் ஆசிரியர்கள் , உரிமைகளைக் கற்றுத் தந்து விழிப்புணர்வு தரும் ஆசிரியர்கள், தனது வகுப்பறை கற்பித்தல் முறைகளால் ஆங்கிலம் , கணக்கு , அறிவியல் பாடங்களை மாணவர்களுக்குள்  வேறு கோணத்தில் எடுத்துச் சென்று மிகப் பெரிய மாற்றங்களைத் தரும் கற்பித்தலில் புதுமை செய்யும் ஆசிரியர்கள் , விளையாட்டுத் துறையில் சாதிக்க வைக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள், தனித் திறனில் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் என அற்புதமான ஆசிரியர்கள் தமிழகமெங்கும் ஏன் , ஒவ்வொரு பள்ளியிலும் பணியாற்றிக் கொண்டுள்ளனர் என்பதை யாருமே மறுக்க முடியாது. அவரவர் ஊர்ப் பள்ளிகளை சென்று பார்த்தால் உங்களால் கண்டு கொள்ள முடியும். இப்படியான ஆசிரியர்கள் அனைவருமே விருதுகளுக்கும்  பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள் தான். 

முகநூல் செயல்பாடுகளும் ஊடக வெளிச்சமும் விருதுகள் தான்

இன்று முகநூல் பக்கத்தில் இயங்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சற்றேறக்குறைய 5 வருடங்களாகத்தான் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கல்வித் துறையில் டிஜிட்டல் மாற்றங்கள் புகுத்தப்பட ஆரம்பித்த பிறகு ஒரு புறம் இப்படியான வளர்ச்சிகள் ஆரம்பித்தது  பொது வெளிகளைப் பொறுத்த வரை மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வழியாக சிறு கிராமங்களில் யார் பார்வைக்கும் அறியாமல் மிக நல்ல செயல்பாடுகள் செய்து வந்த ஆசிரியர்கள் அடையாளப்படுத்தப்பட , அவை முகநூல் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட பாராட்டுகளும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்து இன்னும் முனைப்பாக செயல்பட ஆரம்பித்தனர் . அவர்களது செயல்பாடுகள் பல இடங்களுக்கும் பரவலாகி  மற்ற பள்ளி ஆசிரியர்களும் கல்வியில் நல்ல மாற்றங்களை செய்து வருகின்றனர். இது போன்ற அனைத்துமே மிக நல்ல வரவேற்பை , பொது மக்களிடமும் , பெற்றோர்களிடமும் கல்வித் துறை அதிகாரிகளிடமும் பெற்றுள்ளன .

இது போன்ற முகநூல் செயல்பாடுகள்  பள்ளிகளுக்கு உலகின் பல நாடுகளிலிருந்து பண உதவியை , பொருள் உதவியை, கட்டமைப்பு முதலான அனைத்தையும் கூட பல ஊர்களில் பெற்றுத் தந்துள்ளது. அதனால் பல பள்ளிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அந்த ஆசிரியர்கள் பாராட்டும் விருதுகளும் அரசாலும் தனியார் அமைப்புகளாலும் பெறுகின்றனர்.

இப்படி ஒரு சிலர் பாராட்டு பெறுவது நன்மையே என்றாலும் மிகச் சில இடங்களில் முகநூல் பக்கங்களில் தங்களது செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர்களது கள நிலவரங்கள் அவ்வளவு திருப்தியுடையதாக இல்லை , இதை மட்டும் பார்த்து முடிவுக்கு வரக் கூடாது என நேரில் கண்டு மனம் வருந்தும் கல்வி ஆர்வலர்களின் சொற்களுக்கும் ஊடகங்கள்  கவனம் தர வேண்டும். 

அரசல்லாத தனியார் அமைப்புகளின் விருதுகள் 

பல சமயங்களில் அரசுடன் இணைந்துள்ள பல NGO க்களுக்கு அரசு தரப்பில் கல்வித் துறையில் பரிந்துரை செய்யும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட சில நபர்களைத் தாண்டி செல்வதில்லை .அந்த நேரத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை இயல்பாகவே தேடத் தொடங்கி விடுகின்றனர் ஆசிரியர்கள் .விளைவு பல இடங்களில் ஆசிரியர்களை கெளரவிக்க அழைக்கும் தனியார் அமைப்புகள் அந்த ஆசிரியரது பங்களிப்பு ஊருக்கு , பள்ளிக்கு என்ன செய்தனர் என்பதை ஆராயாமலேயே பரிந்துரை செய்பவர் சொற்களுக்காக விருது தந்து விடுகின்றனர். இங்கு மறைந்து நிற்பது அந்த அமைப்புகள் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ள இது போன்ற காரியங்களை செய்து கொள்கின்றன , இத்தகைய சிறப்பான  ஆசிரியருக்கு நாங்கள் விருது வழங்கினோம் எனப் போட்டுக் கொள்கின்றனர். இவர்களால் ஆசிரியர்க்கு பெருமை அல்ல , ஆசிரியர்களால் இவர்களுக்குப் பெருமை என்பதை தகுதியுடைய ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

புறக்கணிக்கப்படும்  ஆசிரியர்கள் 

விருதுக்காக வேலை செய்யாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கல்வித் தளத்தில் தமிழகமெங்கும்  தங்கள் எல்லைகளை விரித்துக் கொண்டு ஓய்வின்றி பணியாற்றும் ஆசிரியர்கள் , தங்கள் பள்ளிகளை மிகச் சிறப்பாக வைத்துக் கொள்ளும் தலைமை ஆசிரியர்கள் , குழந்தைகள் விரும்பும் வகுப்புகளாக , குழந்தைகள் நேசிக்கும் ஆசிரியர்களாக வாழும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சத்தமில்லாமல் தங்கள் பணியைச் செய்து நல்ல தலைமுறையை உருவாக்கி வருகிறார்கள். அவர்களில் பலர் இணைய தளங்களை அறிந்து இருப்பர் , பலர் வாட்ஸ் அப் , முகநூல் எதுவும் தெரியாமல் பணி செய்து கொண்டுள்ளனர். அப்படியே தெரிந்தாலும் அவற்றுள் பகிராமல் குழந்தைகளுடன் மட்டும் பணியாற்றி வருவார்கள் , ஆனால் அவர்கள் மனதிலும் புறக்கணிக்கப்படுகிறோம்  என்ற எண்ணம் இருக்கலாம் .

ஊடகங்கள் என்ன செய்யலாம் ?

ஒவ்வொரு ஊடகமும் அந்தந்த மாவட்ட கிராமங்களில் பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று பிரச்சனை குறித்து விளம்பரம் செய்யும் அதே வேளையில் உண்மையாகவே ஆசிரியர்கள் பணியாற்றும் சிறந்தவர்களை மக்களிடம் குழந்தைகளிடம் கேட்டு உண்மைத் தகவல்களைப் பொது வெளியில் பகிரலாம் . வெறும் முக நூல் பார்த்தோ , தெரிந்தவர்கள் கூறுவதை வைத்தோ அவற்றை மட்டும் அளவுகோலாக வைக்காமல் நியாயமான ஆசிரியர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரலாம் . இதனால் குறைவாக தங்கள் பள்ளிக்கு செய்த ஒரு ஆசிரியர் மாநிலம் முழுவதும் அறியப்படுவதும் அதிகமாக பணியாற்றுபவர் பற்றியாருமே அறியாமல் போய் விடுவதும் என்ற ஏற்றத்தாழ்வுகள் அகலும். 

விருது அரசியல் 

இந்த விருதுகளுக்குப்  பின்பு பல்வேறு அரசியல் நடக்கும் , கல்வித் துறை அதிகாரிகள் பரிந்துரை , அரசியல் தலையீடு , சங்கங்களின் அழுத்தம் இவையும் கூட சில சமயங்களில் அரசு விருதுகளில் வினை புரிகின்றன என்ற கருத்துகள் பரவலாகக் கூறப்படுகிறது.  மற்ற விருதுகளில் கூட பலரது பரிந்துரைகள் அமைப்புகளின் வழிகாட்டல்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் கடந்து ஆசிரியர்கள் தங்களுக்கான பணியை அற வழியில் ஆற்றுவதும் குழந்தைகளின் வார்த்தைகளில் நல்லாசிரியர் என்ற விருதுக்கும் முக்கியத்துவம் தருவதும் தான் நமக்கான  இலக்கை சென்றடைய உதவும். அரசியல் ஒரு காலத்திலும் முற்றுப் பெறாது. ஆனால் ஆசிரியர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவதை இந்த விருதுகளால் மாற்ற முடியாது. 

உமா

மாநில ஒருங்கிணைப்பாளர்

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (A3)





No comments:

Post a Comment