#சமச்சீர்_கல்விப்_பயணம் - 1
எந்த ஒரு வாய்ப்பும் எளிதில் கிடைத்து விடாது. அப்படி எளிதில் கிடைத்தால் அதன் மகத்துவம் புரியாது .
அப்படித் தான் நான் பாட நூலாசிரியர் ஆன அனுபவமும் ….
2001 ஆகஸ்ட் 20
இந்த நாளில் தான் #சேலம் மாவட்டம் , #எடப்பாடி ஒன்றியத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி #செட்டிமாங்குறிச்சியில், இடைநிலை ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றேன். அங்கு தான் மாணவர்கள் குறித்த புரிதலும் , பல்வகைப் கற்பித்தலுக்கான தேவையும் கற்றுக் கொண்டேன் . மதிப்பீட்டில் மாறுதல் தேவைப்படுவதை உணர்ந்து நான் கற்பிக்கும் வகுப்புகளில் மதிப்பீட்டு முறைகளை மாற்றி அமைத்தேன். எனது வகுப்பறை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும் , அதை மாற்றிக் கொள்ளாத நான் உறுதியாக அதே மதிப்பீட்டு முறையைப் பின்பற்றி மாணவர் கற்றலை மகிழ்ச்சிக்குள்ளாகவே வைத்ததை எண்ணிப் பார்க்கிறேன். அதுதான் தற்போதையக் கல்வி முறையில் நடைமுறையிலிருக்கும் ( CCE ) தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை .
பின்னாட்களில் நான் " #பகல்_கனவு" நூலை வாசிக்கும் போது தான் புரிந்தது. எனது வகுப்பறையிலும் அந்தப் புத்தகங்களின் பக்கங்களில் சொல்லப்பட்ட அனுபவங்கள் பலதும் நடந்தேறியது என்பது.
இந்தப் பள்ளியில் பணியாற்றிய போது விளையாட்டுத் துறையிலும் கலைகள் குறித்த நிகழ்வுகளில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று வட்டார , மாவட்ட அளவில் பரிசு பெற்று வருவார்கள். ஏறத்தாழ 30 ஆசிரியர்களும் ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு மாணவர்களும் கற்றல் - கற்பித்தலில் ஈடுபட்ட வந்த பள்ளி அது. ஆசிரியர்கள் பலரும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். அங்கிருந்த மாணவர்களின் ஆற்றல் அளவிட முடியாது. ஆனால் அதை நான் உணரும் போது அவர்களுடன் இல்லை என்பது வருத்தமே .
இளம் ஆசிரியர்கள் துடிப்புடன் வகுப்பெடுப்பதும் அதே சமயம் ஒழுக்கம் , படிப்பு சார்ந்து அவர்களை தண்டிப்பதும் சமமாக இருக்கும். அப்படி சிலரால் கண்டிப்புடன் இருந்த வகுப்புகளால் ஏராளமான மாணவர்கள் மாதா மாதம் பள்ளியை விட்டு நின்று விடுவதும் நிகழும் . அதில் என்னால் இடைநின்ற மாணவர்களும் உண்டு. மாணவர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற புரிதலே இல்லாமல் அவர்களை அடித்து வெளியேற்றிய நானெல்லாம் ஆசிரியர் பணிக்கு அருகதையற்றவள் என்று என்னை குற்ற உணர்வு கொள்ள வைத்த நாட்கள் ஏராளம். இப்பொழுதும் அவர்களை நினைத்தால் எனக்கு உறக்கம் தொலைந்து விடும். எனது வாழ்வில் சரி செய்ய முடியாத பிழையான நாட்கள் அவை. என்னால் எத்தனை குழந்தைகள் கல்வி இழந்து ஆடு , மாடு மேய்க்கவும் , தறித் தொழில் சார்ந்தும் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டனரோ என்பது ஆறாத வடுவாக உள்ளது.
இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அந்த காலக் கட்டத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பள்ளிகள் இப்படிக் குழந்தைகளது
இடைநிற்றலுக்குக் காரணமாகி
யிருக்கும். நான் படிக்கும் காலம் தொட்டு , 1980 களிலேயே இப்படியான இடைநிற்றல்கள் இருந்தனவே , நான் பணியேற்றது 2001 , எனில் ஒரு தலைமுறைக்கான மக்களில் எத்தனை லட்சம் பேர் கல்வி இழந்து நின்றிருப்பர்.
அப்போது அரசு , ஆசிரியர் சங்கங்கள் , கல்வியாளர்கள் என ஏன் இதற்கான தீர்வுகளை முன் வைக்கவில்லை ?
இப்போது எல்லாம் ஒரே நாளில் அவசரக் கூட்டம் போட்டு முடிவுகள் எடுக்கின்றனரே , அப்போது 30 வருடங்களுக்கும் அதிகமாக இடைநிற்றல் தானாகவும் முழு ஆண்டுத் தேர்ச்சி மதிப்பெண்களை வைத்து , பள்ளி முத்திரையுடன் உனக்கு அடுத்த வகுப்புக்குப் போகத் தகுதியில்லை என வெளியேற்றிய முறைப்படுத்தப்பட்ட இடைநிற்றலும் பல லட்சம் குழந்தைகளுக்கு நிகழ எப்படி இவர்கள் அனுமதித்தனர் ?
என்ற தேடல்களுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
(தொடரும்)
No comments:
Post a Comment