#சமச்சீர்_கல்விப்_பயணம் : 3
#பெருந்துறை_அரசு_ஆண்கள்_மேல்நிலைப்_பள்ளி
20.01.2005 - இந்த நாள் எனது வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகக் கருதுகிறேன் . ஆம் இன்று தான், சேலம் மாவட்ட செட்டிமாங்குறிச்சி பள்ளியி
லிருந்து மாறுதல் பெற்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியேற்றேன். இந்தப் பள்ளி தான் எனக்கான வாய்ப்புகளை வாயில்களாகத் திறந்த கோட்டை என்பேன்.
பள்ளியைப் பற்றிக்கூற வேண்டுமானால் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களும்
50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் , ஊர் மக்கள் ஏராளமானவர் அன்றாடம் காலை , மாலை நடைப்பயிற்சி செய்யும் இடமான பிரம்மாண்டமான ஆலமரத்துடன் கூடிய மிகப் பெரிய விளையாட்டுத் திடலும் , வெளியில் சாலையிலிருந்து பார்க்கும் போதே நமது பார்வைக்குள் அடங்கும் வட்ட வடிவப் பூங்காவைத் தாண்டி கொடிக்கம்பம் , இரண்டுக்குமிடையே நிறுவப்பட்டுள்ள #இந்திய_அரசியலமைப்புச்_சட்டமுகப்புரை எழுதப்பட்டுள்ள நினைவுத் தூண் , அதையடுத்த தலைமையாசிரியர் அறை , இந்த அமைப்பைச் சுற்றி மணற்பாங்கான பரந்து விரிந்த வழிபாட்டுத் திடல் , அடுத்த அடுக்காக சுற்றிலும் முழுமையான அமைப்பாக வகுப்பறைகளைத் தாங்கிய
கட்டிடங்களும் என பள்ளியின்
அமைப்பைக் குறித்துப் பேச நிறைய மனதின் ஆழத்தில் நிறைந்திருக்கின்றன
அதோடு மரமல்லிப் பூக்கள் சிந்தும் உயரமான மரங்களும் , கொன்றை , புளியமரம் , வேம்பு என பசுமைக்கும் பஞ்சமிருக்காது. (இப்போது இவை எல்லாமே மாற்றம் பெற்று கூடுதலாக கட்டிடங்களும் பசுமை சூழலும் வசதிகளும் பெற்றுள்ளது பள்ளி ) அது மட்டுமல்ல , நெசவு ஆசிரியரும் , விவசாயப் பிரிவும் அப்பள்ளியின் கூடுதல் அம்சங்கள். மூன்று விளையாட்டுத் துறை ஆசிரியர்களும் மூன்று ஓவியத் துறை ஆசிரியர்களும், மேல்நிலை வகுப்புகளுக்கு மற்றப் பிரிவுகளோடு கூடுதலாக விவசாயப் பிரிவும் என ... பெருந்துறை பள்ளி என்றாலே தனிப் பெரும் சிறப்புண்டு .
முதலில் பணியாற்றிய பள்ளியின் மாணவர்களோ கிராமத்து சூழலை மட்டுமே மையமாக வைத்து என்னுடன் வாழ்ந்தவர்கள். ஆனால் பெருந்துறைப் பள்ளியோ நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய பள்ளி , ஆனால் மாணவர்களில் பெரும்பாலும் கிராமப் பகுதியிலிருந்து தான் வருவார்கள் . இங்கு பள்ளியைச் சுற்றிலும் கண்கவரும் கடைகள் , கணினி மையங்கள் உட்பட மாணவர் கவனம் ஈர்க்கும் பல வழிகளும் சற்று தொல்லைகளாக இருந்தன .
ஏற்கனவே மூன்றரை ஆண்டு காலத்தில் கற்பித்தல் முறைகளையும் , மதிப்பீட்டு முறைகளையும் மாணவர்களுடனான அனுபவத்தில் ஓரளவு கைவரப் பெற்றிருந்ததால் , இங்கு மாணவர்களைக் கையாள்வதில் சிரமம் ஒன்றும் எனக்கு ஏற்படவில்லை.
அதோடு அங்கு கிடைக்காத பல வாய்ப்புகளையும் இங்குள்ள மாணவர்களுக்கு உருவாக்க முடிந்தது. பெருந்துறை , ஈரோடு பகுதிகளில் அமைந்துள்ள பல கல்லூரிகள் நடத்தும் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதும் , வருடா வருடம் மாவட்ட அறிவியல் கண்காட்சிகளுக்கு வழிகாட்டி ஆசிரியராக இருப்பதும் , JRC உள்ளிட்ட பள்ளியின் கல்வி இணைச் செயல்பாடுகளில் வழிகாட்டி ஆசிரியராக இருப்பதும் என ஒரே கொண்டாட்டமான காலமாக இருந்தது. இவையெல்லாம் எல்லோருமே செய்யக் கூடியது தான். ஆனால் ஆண்கள் பள்ளியில் , அதுவும் மூத்த ஆசிரியர்கள் , பல வருட அனுபவங்கள் பெற்றவர் பலர் இருக்க பெண் ஆசிரியராக இருந்து ஏற்றுக் கொண்ட பல வேலைகள் உண்டு. எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் யோசிக்காமல் ஏற்றுக் கொள்ளும் மனோபாவமும் , நான் பெண் என்று எதையும் தட்டிக் கழிக்காத சுபாவமும் என்னிடம் இயல்பாகவே இருந்தபடியால், இவையனைத்தும் சாத்தியமாயிற்று . அவற்றில் ஒன்று ...
NCC இன் பொறுப்பாசிரியராக 3 மாத காலம் இருந்தது கூட புதிய அனுபவம் தான் என்பேன்.வாரம் 2 நாட்கள் , காலை 6 மணிக்கே மாணவர்கள் க்ரவுண்டுக்கு வந்து விட நானும் சென்று விடவேண்டும் , 8.30 வரை பரேடு , வடநாட்டு ஆபிஸரோ வேறு
பட்டாலியனோ சரிபார்க்கும் பயிற்சியைப் பார்வையிட வருவார்கள். காஞ்சிக் கோவில் சாலையில் உள்ள பாலாஜி ஹோட்டலில் இருந்து காலை உணவு மாணவர்களுக்கு அவர்களில் இரண்டு பேரே சென்று சைக்கிளில் எடுத்து வருவார்கள். ஆலமரத்தடியில் அமர்ந்து பயிற்சிக்கு வரும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரவாரத்துடன் சாப்பிட்டு அன்றைய பிரேயரில் அந்த NCC சீருடையுடன் மாணவர்கள் நிற்பதே பெரிய ஹீரோயிசம் காட்டும் , பேட்ரியாட்டிசம் கூட நிறைய ஒட்டிக் கொண்டிருப்பது தெரியும். இதை ஏன் இவ்வளவு விளக்கமா சொல்றேன்னா , அது ஆண்கள் பள்ளி , பொறுப்பில் இருந்த ஆண் ஆசிரியர் 3 மாத கட்டாயப் பயிற்சிக்காக நாக்பூர் செல்ல வேண்டுமென்றால் , அந்த 3 மாத காலத்திற்கு இங்கு பள்ளியில் யாரேனும் பொறுப்பு ஏற்க வேண்டும் , ஆனால் எந்த ஒரு ஆண் ஆசிரியரும் பொறுப்பு ஏற்க முன்வராததால் , மாணவர் நலன் கருதி நான் 3 மாத காலப் பொறுப்பு எடுத்துக் கொள்ள சம்மதிக்கவே , NCC பயிற்சி தொய்வின்றி நடந்தது , பயிற்சி முகாமிற்காகவும் நாமக்கல் கந்தசாமி கண்டர் கல்லூரிக்கு அழைத்துச் சென்றேன் , இது போன்று ஏராளமான அனுபவங்கள் உள்ளன.
இப்படியான சூழல்கள் வரும் முன்னே , அந்தப் பள்ளிக்கு சென்ற நான்கே மாதங்களில் , 2005 மே மாத முதல் வாரத்தில் விடுமுறை நாளொன்றில் , மாணவர் தேர்ச்சி அறிக்கைத் தயார் செய்து கொண்டிருந்த ஆசிரியர் குழுவில் ஒரு செய்தி. லீவில் டயட்டிலிருந்து ஏதோ பயிற்சியாம் , (பெருந்துறையில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் முடிவில் தான் ஆரம்பமாகும் , ஏறக்குறைய அடுத்தடுத்த வளாகங்கள் ) யாரை அனுப்புவது என உதவித் தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டிருக்க , அந்த நேரத்தில் அந்த பள்ளியின் 10க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மறுத்த வாய்ப்பு தான் இன்று என்னை இந்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது என்பது தான் உண்மை.
ஆம் , எல்லோரும் #மறுத்த அந்த #வாய்ப்பை நான் செல்கிறேன் என்ற ஒற்றைச் சொல் அன்றைய நாளில் மற்றவருக்குப் போதுமானதாகவும் எனது தேடல்களின் திறவுகோலாகவும் அமைந்தது.
மளமளவென்று ஓரிரு நாட்களில் எனக்கான தபால் வந்தது. அந்நிறுவனத்தின் முதல்வர் இளங்கோ அவர்களைச் சந்திக்கச் சென்றேன் ,
அவர் எனது கையில் ஆணையைத் தந்து , என்னம்மா 3 நாள் , வீட்டை விட்டுப் போகணும் , போக்குவரத்துப் பணம் தந்துடுவாங்க , சாப்பாடு , தங்க எல்லாம் ஏற்பாடு செய்துடுவாங்க , போய் Work Shop ல நல்லா வேலை செய்துட்டு வாங்க எனக் கூற , குறிப்பிட்ட நாளில் கோத்தகிரி பேருந்தில் அப்போதைய DIET இன் அறிவியல் பேராசிரியர் ஜெயந்தி அவர்களுடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்த நாள் வாழ்வின் மறக்க முடியாத நாள். முதல் முதல் கல்விக்கான பயணம் அங்கு தான் ஆரம்பித்தது.
உமா
No comments:
Post a Comment