#சமச்சீர்கல்வி_பயணம்: 2
சமச்சீர் கல்விக்கும் இதற்கும் சம்பந்தம் என்ன என்று நீங்கள் கேட்கலாம் , அந்தப் பணிக்கு என்னை நான் முழுமையாக ஒப்புக் கொடுக்க இந்த ஆரம்ப கால அனுபவங்களே காரணம் .
#செட்டிமாங்குறிச்சி_பள்ளி
முதல் பதிவின் போது செட்டிமாங்குறிச்சி பள்ளி மாணவர்களிடையே மதிப்பீட்டு முறைகள் பற்றி பேசியிருந்தேன். ஒரு ஆசிரியர் கேட்டிருந்தார் மதிப்பீட்டு முறைகள் பற்றி கூறுங்கள் என்று ….
அதை நான் திட்டமிட்டு எல்லாம் அப்போது தயார்
செய்யவில்லை , ஆரம்பத்தில் நான் பள்ளிக்குச் சென்ற பொழுது என்னுடைய வகுப்பில் நான் பணியில் சேர்ந்த அன்று 120 மாணவர்கள், வகுப்பு நிறைந்திருந்தது. நான் அடிப்படையிலேயே பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவி என்பதால் என்னுடைய கண்ணோட்டம் எல்லா மாணவர்களும் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே , அதே நோக்குடன் அவர்களை அணுகினேன். அவ்வாறு அணுகும் போது ஏகப்பட்ட பிரச்சினைகளை நான் சந்தித்தேன்.
முதலில் 120 மாணவர்கள் வகுப்பறையில் உட்கார இடம் இருக்காது, நான் நின்று கொண்டு தான் பாடம் நடத்துவேன், நடத்த முடியும் , ஏனெனில் டேபிள் சேர் போடுவதற்குக் கூட அந்த வகுப்பறையில் இடமிருக்காது .
வகுப்பில் நுழையும்போது, உட்கார ஆரம்பிக்கக் கூடிய மாணவர்கள் கடைசி வரை நிறைந்திருப்பார்கள் . இன்று அந்த சூழ்நிலையை நினைத்துப்
பார்க்கிறேன் , அரசு பள்ளியில் அப்படி ஒரு கூட்டம் இருந்த காலம் போய் இன்றைக்கு ஒரு மாணவர் கூட பள்ளிக்குள் இல்லாமல் பள்ளிகள் மூடப்படும் நிலைமை வந்துவிட்டதை ஒப்பிட்டு பார்க்கும் போது, நாம் எங்கு தவறு செய்தோம் என்பது புரியும்.
அன்றைய காலகட்டத்தில , அந்தப் பள்ளியைப் பொறுத்தவரை பெற்றோர்கள் நிச்சயமாக படிப்பறிவற்றவர்களாக இருந்தனர் . படிப்பின் முக்கியத்துவம் தெரியாதவர்களாக இருந்த ஒரு சூழலில் இருந்து வரக்கூடிய குழந்தைகளுக்கு படிப்பு என்பது மிகவும் கடினமாக இருந்தது.
பின்னாட்களில் நாம் பேசக்கூடிய டிஸ்லெக்சியா போன்ற பிரச்சனைகள் அன்றே என்னுடைய வகுப்பறையில் இருந்தன ஆனால் எனக்கும் அப்போது அதுபற்றி இது ஒரு விதமான கற்றல் குறைபாடு என்று தெரியாது. ஒன்பது ஆறு ஏழு தலை கீழாக போடுவது ஆங்கிலத்தில் p.b. புத்தகத்தில் இருக்கக்கூடிய எழுத்துக்களை நோட்டில் எழுதும்போது தலைகீழாகப் புரிந்து கொள்வது என்று பல பிரச்சனைகளை அந்த குழந்தைகளிடம் நான் கண்டிருக்கிறேன். பாட நோட்டுகளை நம்மால் திருத்தவே முடியாது அவ்வளவு பிழைகள் இருக்கும் .
தாரே ஜமீன் பர் படம் பார்க்கும்போதுதான் அமீர்கான் கதாபாத்திரம் அந்த குழந்தையினுடைய பிரச்சனைக்கு ஆராய்ந்து இது டிஸ்லக்சியா என்று அதற்கான விளக்கம் கொடுக்கும் போதுதான் எனக்கு உரைத்தது, இப்படியான குழந்தைகளை நாம் கடந்து வந்துள்ளோம் என்று .
நான் மட்டுமல்ல அப்போது அந்த பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் நிறைய குழந்தைகளுக்கும் எழுத்துக்கள் தெரியவில்லை , தவறாக எழுதுகின்றனர் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து அல்லது அப்படியான ஒரு வழிகாட்டி பயிற்சி அமைப்பு கல்வி குறித்த புரிதலோ யாருக்கும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
அல்லது இது குறித்த புரிதல் நகரப்பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து எங்களுக்கு தெரியவில்லையா என்றும் எனக்கு தெரியவில்லை . ஆனால் என்னைப் பொறுத்தவரை 2008ல் தாரே ஜமீன் பர் படத்தை பார்த்த போது தான் எனக்கு , இது ஒரு
#கற்றல்_குறைபாடு என்ற புரிதல் ஏற்பட்டது .அந்த காலகட்டம் வரை நான் பெருந்துறை பள்ளியிலும் இதுபோன்ற மாணவர்கள் நிறைய பேரை சந்தித்து இருக்கிறேன். அதற்கு சில பயிற்சிகளை கொடுத்தேன் ஆனால் அதெல்லாம் முறைப்படுத்தப்பட்ட பயிற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது , ஏனென்றால் ஒரு தீர்வை நோக்கி நாம் நகரும்தீர்வுக்கானம் போது , சரியான காரணமும் வழிகாட்டலும் இருந்தால் தான் தீர்வும் சரியாக இருக்க முடியும், எனக்கு தெரிந்ததை வைத்து நான் அதற்கான தீர்வுகளை முன் வைத்தேன். ஓரளவு மாணவர்கள் சரியாக வாசிக்க எழுத முன்வந்தனர். சரியாக எழுத பயிற்சி தருதல் , அணுகுமுறை இவை தவிர எந்த டெக்னிக்கும் எனக்குத் தெரியாது , பயன்படுத்தவும் இல்லை.
அது மட்டுமா ? கணக்குப் பாடத்தைப் புரிய வைக்கவும் வரலாற்றில் Mapping skills புரிய வைப்பதும் பெரிய சவாலாக இருந்தது. வகுப்பறையையே கணக்குக்கு கற்பித்தல் உபகரணமாக மாற்ற வேண்டிய கட்டாய சூழல் தான் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும் , எனக்கு சற்று ஆறுதலாகவும் அமைய கற்பித்தல் முறைகளை மாற்றினேன்.
உ. ம் : வரைபடத்தைக் கற்பிக்க X , Y அச்சுகளாக அவர்களையே நிற்க வைத்து ஒவ்வொருவரையும் 1 ,2 , 3 .. என X அக்க்கும் , 5 , 10 , 15 .. இப்படி Yஅச்சுக்கும் நிற்க வைக்க …
வரலாற்று மேப்பில் இடங்களின் பெயர்களாக மாணவர் மாற வகுப்பறையில் விளையாட்டு முறை மேப்பின் திறன்கள் உள்வாங்க ..
அட்டகாசமான முன்னேற்றம் . ஒவ்வொரு நாளும் எங்கள் வகுப்பறைக் கற்பித்தல் - கற்றல் முறைகள் புதிய பரிணாமம் எடுத்தன.
அதே சமயத்தில் 35 மதிப்பெண்கள் பெறாதவர்கள் ஃபெயில் என்றும் 0 மதிப்பெண் வாங்குபவர்களும் நிறைய பேர் இருந்தார்கள். கற்பித்தல் முறையை மாற்றிய பிறகும் மதிப்பெண் வாங்க வைப்பது பெரிய பிரச்சனையாக இருந்தது.
கற்பித்தல் உபகரணங்கள் செய்வதில் அவர்களையும் ஈடுபட வைத்ததன் விளைவு பல 0 வாங்கும் மாணவர்கள் திறமைகளுடன் இருப்பதை அறிந்தேன். அப்போது தான் எனக்குள் ஒரு போராட்டம். தேர்வுக்கு பதில் எழுதாததால் அவர்களை ஃபெயில் எனக் கூற எனக்கென்ன அதிகாரம் இருக்கிறது ? என யோசித்து மதிப்பீட்டு முறையை நானே வடிவமைத்தேன்.
அதன் பிறகு என் பாடக் குறிப்பேட்டின் பின் பக்கம் இவர்களது பெயரை எழுதி , இவர்களது ஒவ்வொரு திறன் வேலைக்கும் மதிப்பெண் தர ஆரம்பித்தேன்.
உ. ம் : வகுப்பின் வெளியே செருப்புகளை அடுக்கி வைத்தால் கூட 2 மதிப்பெண் , அவர்கள் ஊரில் விளைந்துள்ள மருத்துவத் தாவரங்களைக் கொண்டு வந்தால் 2 மதிப்பெண் ….(இது தமிழ்ப் பாடம் சார்ந்தது ,.... இப்படி மதிப்பெண் வழங்கும் போது அவர்கள் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்ந்து 35 வந்து விடும் . எனது வகுப்புகளில் நான் சார்ந்த பாடத்தில் அவர்களை ஃபெயிலாக்க மாட்டேன் .இது ஆசிரியர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. நானோ எந்த ஆபிஸர் வந்தாலும் நான் பதில் சொல்லிக் கொள்கிறேன். அவர்களை ஃபெயிலாக்க முடியாது எனக் கூறி அவர்களது பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன். தலைமை ஆசிரியர் இராஜேந்திரன் அவர்கள் இது போன்ற எனது முயற்சிகளுக்குத் தடை சொல்லாமல் இருந்ததும் நான் இந்த முறையைத் தொடர்ந்ததுக்கு ஒரு காரணமாக இருந்தது என இன்று யோசிக்கிறேன் .
இது போன்ற மதிப்பீட்டு முறைகள் தான் தற்போது நடைமுறையிலிருக்கும் CCE .. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை .
பின்னாளில் , ஒரு புத்தகம் வாசித்த போது புரிந்தது , நான் செய்தது சரியே எனத் தோன்றியது. "எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினிங்க " என்ற புத்தகம் அது.
அப்போது என்னுடன் பணியாற்றிய பலரும் இன்று வரை தொடர்பில் உள்ளனர். அங்கு என்னுடன் பணியாற்றிய குணசேகரன் , பழனிச்சாமி , ஜெயச்சித்ரா , சித்ரா போன்றோர்கள் குடும்ப நண்பர்களாக இன்றும். மற்ற ஒரு சிலரும் நினைவில் உள்ளனர். எனது முதல் தலைமை ஆசிரியரும் இன்று வரை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து வாழ்த்தி ஊக்கப்படுத்தி வரும் மிக நல்ல மனிதர் திரு இராஜேந்திரன் அவர்கள்.
பால சுப்பிரமணியன் , மாணிக்க வாசகம் , அலுமிசா பேகம் , ஆலிஸ் லதா ராணி , கலைச்செல்வி டீச்சர் ,சாயி ரா பானு டீச்சர் , விளையாட்டு ஆசிரியர் , கண்ணம்மா டீச்சர் , லட்சுமி பிரபா டீச்சர் ,ராஜாமணி ஸார் போன்ற ஆசிரியர்களும் அலுவலக உதவியாளர் மலர் , இரவுக் காவலர் பழனிச்சாமி என யாருமே நினைவுகளை விட்டு அகலவில்லை.
ஒரு வகையில் இவர்கள் எல்லோரும் என் பயணத்தின் ஆரம்பப் புள்ளி மனிதர்கள். மாணவர் குறித்து இன்னும் நிறைய எழுதலாம் , அதே போல அங்கு நான் சந்தித்த முதல் இன்ஸ்பெக்ஷன் , கார்மேகம் ஸாரின் பாராட்டு என நிறைய இருக்கு .
ஆனால் செட்டிமாங்குறிச்சியைப் பற்றி இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.
உமா
No comments:
Post a Comment