நான் ஏன் தேசியக் கல்விக் கொள்கையை வேண்டாம் என்கிறேன் ...
பகுதி : 3
இடைநின்ற மாணாக்கரை மீள் ஒருங்கிணைத்தல் - கல்வியை அனைவரும் அணுகுவதை உறுதிப்படுத்துதல் ....
2030 க்குள் 3 வயது முதல் 18 வயது குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி என்று தான் ஆரம்பிக்கின்றது இந்த மூன்றாம் பகுதி.
பள்ளிக் கல்வித்தரவுகளின் அடிப்படையில் 5 ஆம் வகுப்பிற்குப் பிறகு அதிகமான இடை நிற்றல் குறித்தும் ,கடந்த 2015 இல் தேசிய அளவில் 6.2 கோடி குழந்தைகள் ( 6 - 18வயது ) பள்ளியை விட்டு விலகியதாகவும் கூறுவது ...
ஏன் ? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது .
அதற்குக் காரணங்களும் அவர்களே சொல்கின்றனர் , 5 ஆம் வகுப்புக்குரிய மொழியறிவும் கணித அறிவும் பெறாததால் என்றும் , பள்ளி வீடு இரண்டிற்கும் தொலைவு அதிகம் எனவும் கூறும் இந்த வரைவுக்கு....
நமது பதில் , மாற்று யோசனையாக..... ஏன் போக்குவரத்து வசதி செய்து தரக் கூடாது ? என்பது , ஆனால் இலவச பஸ் பாஸ் திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டு தானே இருக்கின்றன எனவும் கேட்கலாம் ...
திரும்பத் திரும்ப உண்மையான பிரச்சனைகளைக் குறிப்பிடுகிறது இந்த வரைவு , பெண் குழந்தைகள் ஏன் இடைநிற்றலுக்கு ஆளாகின்றனர் என்றும் குறிப்பிடப்படுகிறது , பாதுகாப்பு இல்லை , கழிவறை வசதி இல்லை என்று கூறும் வரைவை நோக்கி, ஏன் அரசுப் பள்ளிகளுக்கு கழிவறை வசதிகள் சரியாகத் தந்து , முழுமையாக செயல்படும் பள்ளிகளாக மாற்றவில்லை என்ற கேள்வி நமக்குள் எழ வேண்டும் .
கல்வி ஒத்திசைவு (Concurrent) பட்டியலில் இருக்கும் போதே இந்த நிலை எனில் மைய அதிகாரத்திற்குச் சென்றால் நாம் எங்கிருந்து நமது உரிமைகளைப் பெறுவது ? கழிப்பறை வசதிகள் உட்பட ..
இடைநிற்றல் விகிதத்தை உயர்த்த பள்ளிகளில் சமூக செயல்பாட்டாளர்கள் , ஆலோசகர்களைப் பணி அமர்த்த வேண்டும் எனக் குறிப்பிடும் வரைவு , இவர்கள் எல்லாம் யார் ? என்று தெளிவாகக் குறிப்பிடாத இடத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இது சாத்தியமா ? அல்லது தேவையா என்பதனையும் நாம் சிந்திக்க வேண்டும் .
3.1 இல் குறிப்பிட்டுள்ளபடி , மாணாவர் வருகை சதவீதம் குறைவாக இருப்பின் ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றுதல் மிகப் பெரிய வன்முறை. வேறு வேறு வாழிடத்தில் இருந்து வரும் குழந்தைகள் நெடுந்தூரம் பிரயாணம் செய்து ஒரு பள்ளிக்கு வர வேண்டும். உதாரணமாக 4 பள்ளிகளை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றினால் , அங்குள்ள தலைமை ஆசிரியர்களில் 3 பேர் வெளியேற நேரிடும் , பாட ஆசிரியர்களுக்கும் இதே நிலை , எனில் எதிர்காலத்தில் அப்பணியிடங்கள் அரசுக்கு திரும்ப ஒப்படைக்கப்படும் , ஆசிரியர் பயிற்சி படித்த இளைய சமுதாயத்துக்கு வேலை வாய்ப்பே இல்லாத ஒரு சூழலை இயல்பாகவே இது உருவாக்கும் .இதை பின்வரும் செய்தியோடு இணைத்துப் பாருங்கள் ..
இந்த வாரம் நமது கல்வி அமைச்சரது உரையாக வெளிவந்து கொண்டிருக்கும் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு நூலகமாக மாற்றப்படும் என்பதை இதோடு தொடர்பு படுத்திப் பாருங்க ... எனில் ஏற்கனவே தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் திட்டவட்டமாகக் கொண்டு வரப்பட முன் தயாரிப்பு செய்து வரப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .
பள்ளி மேலாண்மைக் குழு(SMC) பற்றி ஒரு வரியில் மாணவர் வருகையைக் கண்காணிக்க என்று மட்டும் வருகிறது. ஆனால் நடைமுறையில் இக்குழுக்களின் பலமே வேறு , அது பற்றி எந்த விபரங்களும் இல்லை.
பின்தங்கிய மாணவரைக் கண்காணிக்க , NTP (National Teacher Platform , RIAP ஆகிய அமைப்புகளை குறை தீர் கற்பித்தலுக்காக தொடர்புபடுத்தியுள்ள வரைவுக் குழுவிடம் கேட்கத் தோன்றுவது ....
ஒரு ஆசிரியர் 8 மணி நேரம் குழந்தைகளிடம் இருப்பது தாண்டி புதியதாக ஒருவர் வந்து அவர்கள் எந்த இடத்தில் கற்றலில் பின்னடைவர் , ஏன் அந்தப் பின்னடைவு என்பதைஎவ்வாறு
கண்டறிய முடியும் ?
ஆசிரியரால் மட்டுமே சரி செய்து குறை தீர் கற்பித்தலைக் கையில் எடுக்க முடியும் ... அதை விடுத்து , இவர்கள் கூறும் தன்னார்வலர்களால் அப்படியான கற்றலைக் குழந்தைகளுக்குள் ஏற்படுத்த இயலவே இயலாது .
திரும்ப 3.7 இல் இந்த வரைவு குறிப்பிடுவது , பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களைக் கண்காணிக்க சமூக செயல்பாட்டாளரை நியமித்து அவர்கள் வழியாக திரும்ப இடை நிற்பவரை பள்ளிக்குள் வர வைப்பதாக ... எனில் , இந்த சமூக செயல்பாட்டாளர்கள் யார் ? இவர்களுக்கு யார் ஊதியம் தருவது ?
அதே போல 3.8 முழுப் பத்தியும் , சமூக செயற்பாட்டாளர் மற்றும் ஆலோசகரின் பங்கு என்றே குறிப்பிட்டு NTP & RIAP பற்றியே பேசுகின்றது வரைவு , சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை (CWSN ) யும் இவர்களே கல்வி அமைப்பில் ஈடுபடுத்துவர் எனில் , அரசின் பங்கு என்ன ? ஏற்கனவே நடைமுறையில் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் 9-12 வகுப்பில் உள்ள CWSN குழந்தைகளுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை ,ஏறக்குறைய 15000 குழந்தைகளுக்கு வெறும் 150க்கும் குறைவான ஆசிரியர்களே இருக்கின்றனர்.
எத்தனையோ பெற்றோர்கள் , அரசுப் பள்ளியில் இப்படியான குழந்தைகளுக்கு அனுசரணை இருக்கு எனவும் , தனியார் பள்ளிகளில் மாதத்திற்கு பல பல ஆயிரங்கள் செலவாகின்றது எனவும் , அங்கே செலவு செய்தாலும் மகிழ்வான கற்றல் சூழல் குழந்தைகளுக்கு இல்லை எனவும் என்னிடம் பகிர்ந்துள்ளனர்.
இப்படியான சூழலில் CWSN என்ற ஒரு பிரிவினையை புறக்கணிக்கின்ற போக்கு இவ்வரைவில் உள்ளது கவனிக்க வேண்டியது .
பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தும் பேசும் வரைவு அங்கும் சமூக செயல்பாட்டாளர்களையே முன்னிறுத்துகிறது.
மாணவர்களை 14 வயதிலேயே திறந்த வெளி கல்விக்கு அனுப்ப வியூகம் வகுக்கிறது வரைவு . முறை சார் கல்வி வகுப்பு 3 , 5 , 8 க்கு இணையாக என்பதும் புரிபடவில்லை.
3.12 இல் கல்வி உரிமைச் சட்டத்தைத் தளர்த்தல் என்றும் பல முன்மாதிரி பள்ளிகளை அனுமதித்தலும் குறிப்பிடுவதில் .. பல பிரச்சனைகள் , அரசு சாரா அமைப்புகள் பள்ளிகளைக் கட்ட அனுமதி பற்றி பேசுவதில் தனியார் ப் பள்ளிகள் உருவாக்கம் குறித்த அப்பட்டமான நிலை புரிகிறது.
குருகுலம் , பாடசாலை , வீட்டுப் பள்ளி , மதரசாக்கள் ... உருவாக்க கல்வி உரிமைச் சட்டத்தைத் தளர்த்துவதாகக் கூறப்படுவது அரசியல் சாசனத்தையே புறம் தள்ளுவதாக இருக்கிறது. கொடையாளர்கள் , அரசின் கூட்டு நடவடிக்கையில் முன் மாதிரி பள்ளிகள் உருவாக்குதல் குறித்து பேசுகிறது.
எனவே .. இது முழுக்க முழுக்க தனியாருக்கு கல்வியை வியாபாரம் செய்யும் 100% நோக்கம் என்பதனை நாம் மனதில் இருத்த வேண்டும். வாழ்வாதாரத்திற்கே போராடும் , பொருள் தேடும் நிலையில் உள்ள பெற்றோரை , வறிய அடித்தட்டு மக்களை , தங்கள் குழந்தைகளுக்கு, கல்வியே தேவையில்லை என்பதான முடிவுக்கும் வரலாம்.
இதுவரை குறிப்பிட்டுள்ள 3 பகுதிகளிலுமே எதற்குமே நிதி ஒதுக்கீடு குறித்தான எந்தப் பார்வையும் இல்லை .
முழுக்க முழுக்க கல்வி மறுக்கப்படுவதற்கான அத்தனைக் கூறுகளும் இந்த வரைவரைக்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தெளிவாக இருப்பதால் இக் கல்விக் கொள்கையை நிரந்தரமாக நிராகரித்து வேண்டாம் என்கிறேன்.
தொடர்ந்து நிராகரிப்பதற்கான காரணங்களை பகுதி பகுதியாக இங்குப் பதிவிடுகிறேன். இதற்கு முன் உள்ள எனது 2 பகுதிகள் குறித்து படிக்க, கீழே லிங்க் தருகிறேன் .
https://m.facebook.com/story.php?story_fbid=1174468889402829&id=100005191869415
https://m.facebook.com/story.php?story_fbid=1175159916000393&id=100005191869415
உமா
No comments:
Post a Comment