Friday, 3 July 2020

அரசுப் பள்ளிகளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?



அரசுப் பள்ளிகளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

கல்வியாளரின் ஆலோசனை

July 3, 2020

ஒரு ஜனநாயக நாட்டின் முக்கியக் கடமைகளுள் ஒன்று தனது நாட்டின் குடிமக்களுக்கு இலவசமாகக் கல்வியை வழங்குவதாகும்.

அப்படிப்பட்டக் கல்வியை அரசியல் சாசனத்தின்படி இலவசமாக மக்களுக்கு வழங்கி வருபவை நமது அரசுப் பள்ளிகள்தான்.

அது மட்டுமன்று, கல்வி பெறுதல் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். இந்த அடிப்படை உரிமையை வழங்கும் அரசுப் பள்ளிகள் குறித்து ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

பள்ளிகளின் கட்டமைப்புகள் 

ஒவ்வொரு ஊரிலும் பள்ளிக் கல்வியை இலவசமாக வழங்குவதற்காக அரசுப் பள்ளிகள் தனக்கே உரிய சிறப்பான கட்டமைப்புகளுடன் இயங்கி வருகின்றன.

ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும் தொடக்கப் பள்ளிகளும், எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தகுந்த அளவிலான வகுப்பறைகளை உள்ளடக்கிய வலிமையான கட்டடங்களுடன் செயல்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்துகள் கிடையாது.

அதோடு விளையாட்டு மைதானம், சத்துணவுக் கூடம் ஆகியவை கட்டாயமாக இணைந்திருக்கும். கழிப்பறை வசதிகளும், குடிநீர் வசதிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு சாதனங்கள் என அடிப்படைத் தேவைகள் நிறைந்தே ஒவ்வொரு பள்ளியும் காணப்படும் .

இப்பள்ளிகளைத் தவிர்த்து பத்தாம் வகுப்பு வரையுள்ள உயர்நிலைப் பள்ளிகள்  சில ஊர்களில் உண்டு. இவற்றைத் தவிர பனிரெண்டாம் வகுப்பு வரை இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளும் அனைத்து ஊர்களிலும் உண்டு.

அவை ஆண்கள் பள்ளிகளாகவோ, பெண்கள் பள்ளிகளாகவோ அல்லது இருபாலரும் படிக்கும் பள்ளிகளாகவோ இயங்கி வருகின்றன.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைப் போலவே இவையும்  மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டடங்களைப் பெற்றுள்ளன.

போதிய அளவு வெளிச்சத்திற்கான ஜன்னல்கள், கதவுகள் கொண்ட காற்றோட்டமான வகுப்பறைகளைக் கொண்ட விசாலமான அமைப்புகள் இங்குண்டு.

பள்ளிகளுக்குள்  நுழையும்போதே பள்ளியைச் சுற்றிலும் ஓரங்களில் வரிசைக் கிரமமாக வகுப்பறைக் கட்டடங்கள் அமைய, அதோடு பள்ளியின் மையத்தில் வழிபாட்டுத் திடல், கொடிக் கம்பம் ஆகியன காணப்படும்.

பள்ளித் தலைமையாசிரியர் அறையுடன் இணைந்த அலுவலக அறை அமைந்திருக்கும். தலைமை ஆசிரியரது பார்வையில் படும்படி வகுப்பறைக் கட்டிடங்களும் பள்ளி நுழைவாயில் கண்காணிக்கப்படும் படியும் அமைந்திருக்கும்.

ஒருபுறம் அறிவியல் ஆய்வகங்கள் அதற்கே உரிய வசதிகளுடன் மாணவர் பயன்பாட்டுக்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும்.

பெரும்பாலும் விளையாட்டு மைதானங்கள் பள்ளியின் பின்புறம் அமைந்து, கற்றல் செயல்பாடுகளுக்கு இடையூறு இல்லாமல் மாணவர் விளையாட வசதியாக இருக்கும் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் சுற்றுச் சுவர்கள் எழுப்பப்பட்டு பாதுகாப்புடன் அமைந்திருக்கும்.

அதோடு பசுமையாகப் பள்ளிகளைப் பராமரிக்க மரங்கள் வளர்க்கப்பட்டு இயற்கையான காற்றோட்ட வசதி  நிரம்பியிருக்கும்.

சில பள்ளிகள் விழாக்களை நடத்த ஆடிட்டோரிய அறைகளையும் கொண்டிருக்கும். இவ்வாறு அரசுப் பள்ளிகள் தங்களுக்கே உரிய சிறந்த கட்டமைப்புடன் விளங்குவதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அனுபவமிக்க ஆசிரியர்கள் 

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி உரிமைச் சட்டம் 2010 விதிகளின்படி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிவரும் பள்ளிகள் தான் அரசுப் பள்ளிகள்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தகுதியுள்ள பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு கல்வி ஆகியன பெற்று அரசால் முறையான நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருபவர்கள்.

தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 – 5 வருப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி (SGT) பெற்றவர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றுகின்றனர்.

6 – 10 வகுப்புகளுக்கு நியமிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் இளநிலை பட்டப் படிப்போடு இணைந்து கல்வியியல் பட்டயப் படிப்பான பி.எட். முடித்துள்ளவர்கள்.

இவர்கள் தவிர மேல்நிலை வகுப்புகளுக்குக் கற்பிப்பவர்கள் பி.எட் படிப்புடன் முதுகலைப் பட்டப் படிப்பைப் படித்துள்ளவர்களாக இருப்பர்.

பெரும்பாலும் அதிக ஆண்டுகள் ஆசிரியர்களாகப் பணியாற்றிய அனுபவ ஆசிரியர்களே தற்போது அரசுப் பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.

10 ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என எல்லாப் பாடங்களுக்கும் தனித்தனி பாட ஆசிரியர்கள் உண்டு.

அதோடு 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் மொழிப் பாடங்களுடன் சிறப்புப் பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுக்  கற்பிக்கின்றனர்.

கூடுதலான துறை  ஆசிரியர்கள் 

அரசுப் பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் வேறு பல துறைகளைச் சார்ந்த ஆசிரியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருவது கூடுதல் சிறப்பு.

அனைத்து  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். நடுநிலைப் பள்ளிகளிலும் இவர்கள் உண்டு.

மேல்நிலைப் பள்ளிகளின் உடற்கல்விப் பிரிவில் 3 அல்லது 4 விளையாட்டு ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையும்  உண்டு.

ஓவியம், இசை, கைவேலை, தையல், நெசவு, விவசாய ஆசிரியர்களும் அரசுப் பள்ளிகளில் முறையாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

இவர்கள் மாணவரிடம் வாழ்வியல் கல்வியாக பன்முகத் திறன்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்று அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

கணினி ஆசிரியர்களும்  நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமான பள்ளிகளில் பற்றாக்குறையைச் சரிசெய்ய தகுதி பெற்றவர்களை பகுதிநேர ஆசிரியர்களாகவும் அரசு நியமித்துள்ளது.

மேலும், அந்தந்தப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் குழுக்கள் உள்ளூரில் தகுதிபெற்ற கற்பித்தல் பயிற்சிப் படிப்பு முடித்தவர்களை நியமித்து ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யும் நடைமுறையும் உண்டு.

இவர்களுக்கு மாத ஊதியம் வழங்கிட பெற்றோர் அமைப்புகளே முன்வருகின்றன.

பாடங்கள் தவிர மற்ற திறன்கள் வளர்க்கும் ஆசிரியர்களும் நிறைந்த பள்ளிகளே அரசுப் பள்ளிகள் என்பதை நாம் உணரலாம்.

கற்பித்தல் முறைகள்  

அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படும் கற்பித்தல் முறைகள் பரிசோதனைக்கு உட்படுத்தி வெற்றிகண்ட கற்பித்தல் முறைகள்.

தேசிய அளவில் NCERT, மாநில அளவில் SCERT போன்ற அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் பரிந்துரைக்கும் கற்பித்தல் முறைகள் நடைமுறையில் உள்ளன.

மாணவர்களின் முழு ஆளுமையை வெளிக்கொண்டு வர உதவும் கற்பித்தல் முறைகளை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அதோடு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு அவர்களது  பணி மேம்பாட்டிற்காக கற்பித்தல் தொடர்பான பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஆகவே தரமான கல்வியை வழங்க ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் அரசுப் பள்ளிகள் பாதை அமைக்கின்றன.

ஆசிரியர் – மாணவர் உறவின் சிறப்பு 

அரசுப் பள்ளிக்கு பயிலவரும் மாணவர்கள் பல்வேறு குடும்பச் சூழல்களில் இருந்து வரக்கூடியவர்கள். பொருளாதார நிலையும் கவனிக்கத்தக்கது.

பெற்றோர்களது அரவணைப்பு என்பது எப்போதும் முழுமையாக அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஏனெனில் அன்றாட வாழ்க்கைத் தேவைக்காகப் பொருளீட்டும் நிலையில் குழந்தைக்கலை, படிப்பு, உளவியல் குறித்து கவனம் செலுத்தமுடியாத பெற்றோர்கள்.

இந்தப் பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளை இரண்டாம் பெற்றோராக அணுகும் ஆசிரியர்கள்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

வகுப்பறைகளில் உளவியல் சார்ந்த அணுகுமுறையை குழந்தைகளிடையே உருவாக்கி கற்பித்தலை நிகழ்த்தும் ஆசிரியர் – மாணவர் உறவுமுறையை அரசுப் பள்ளிகளில் இயல்பாகக் காணலாம் .

மதிப்பீட்டுமுறையில் சிறந்தவை

முதல் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களை மதிப்பீடு செய்ய தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை (CCE) பின்பற்றும் முறை தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 8 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

மாணவர்களிடையே மதிப்பெண்கள் சார்ந்து ஏற்றத்தாழ்வு மனநிலை உருவாகாமல் திறன்களின் அடிப்படையில் மதிப்பிடும் இந்த வழிமுறை கல்விக் கொள்கைகளில் குறிப்பிட்டுள்ள சிறப்பான ஏற்பாடு.

தேர்வுகளின் மனஅழுத்தத்திலிருந்து மாணவரை விடுவித்து சுயமாகப் புரிந்து கொண்டு திறன்களை வளர்த்துக்கொள்ளும் வழிமுறை.

தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு 2005-ல் பரிந்துரை செய்த மதிப்பீட்டு முறை இது. புரியாமல் மனப்பாடம் செய்யும் வழிகளை மாற்றியமைத்த மதிப்பீட்டு முறை.

இதுபோன்ற சிறந்த மதிப்பீட்டு முறைகள் அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படுவதைப் பெற்றோர்கள் உணரவேண்டும்.

தேர்ச்சி விழுக்காட்டில் முதன்மை 

10,  12 ஆம் வகுப்புகளின் ஆண்டுப் பொது தேர்வுகளில் தேர்ச்சி விழுக்காடு பெரும்பாலான அரசுப் பள்ளிகள் 98% பெறுபவை.

நூற்றுக்கணக்கான பள்ளிகள் 100% தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்று தங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்துபவை.

பள்ளிகளில் எல்லாத்தரப்பு மாணவர்களையும் கையாளக்கூடிய சூழலால், சிறிய அளவில் தேர்ச்சி விழுக்காடு குறைகின்றது.

மாற்றுத் திறனாளி குழந்தைகள் எனப்படும் கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளையும் இணைத்தே கற்பித்து வருகின்றனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள். தனிக்கவனம் பெறவேண்டிய மாணவர்கள்தான் பெரும்பான்மையாக அரசுப் பள்ளி மாணவர்கள்.

இருவழிப் பாடங்கள்  

பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க சமீப காலங்களில் அனைத்து  அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியும் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள தமிழ்வழிக் கல்வியுடன் ஆங்கிலவழியும் இணைந்து இருவழிப் பள்ளிகளாக இருக்கின்றன.

.கல்விக் கட்டணமில்லை  

அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்குக் கல்விக்கட்டணம் முற்றிலும் இலவசம்.  பெற்றோர் – ஆசிரியர் நிதி என மிகக் குறைந்த அளவில் நூறு ரூபாய்க்கும் குறைவாகப் பெறுவார்கள். ரசீதும் தந்துவிடுவர்.

பள்ளி வளர்ச்சிக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும். அதோடு பெரும்பாலான பள்ளிகளில் குறைந்த அளவில் சேர்க்கைக் கட்டணம் பெறும் நடைமுறையும் உள்ளது.

ஆனால் அவ்வாறு பெறப்படும் நிதிகள் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தலைமை ஆசிரியர்களால் பயன்படுத்தப்படுகிறது.

மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டு, எழுது பொருட்கள், புத்தகப்பை, ஜியாமெட்ரி பெட்டி, அட்லஸ், ஆங்கில அகராதி, கலர் பென்சில்கள், செருப்பு, போக்குவரத்து கட்டணச் சலுகைக்கான பாஸ் இப்படி அனைத்தையும் இலவசமாக வழங்குகின்றன அரசுப் பள்ளிகள்.

அதோடு மதிய உணவும் அளித்து அவர்களது ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதும் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

நவீனப்படுத்தப்பட்ட பள்ளிகள் 

ஏற்கனவே கட்டமைப்பு, ஆசிரியர்கள் வளம் என நிறைந்திருக்கும் அரசுப் பள்ளிகள் தற்கால வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப நவீனமாக மாறியுள்ளன.

ஸ்மார்ட் க்ளாஸ் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், வெர்ச்சுவல் வகுப்பறைகள் என ஆரம்பித்து தற்போது ஹைடெக் லேப் வசதியும் அளிக்கப்பட்டுள்ளன.

சமீபகாலங்களில் ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் பள்ளிகள் தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன.

பல பள்ளிகளில் ஆசிரியர்களே தங்கள் சொந்த முயற்சியில் நிதியை ஏற்பாடு செய்து பள்ளிகளைத் தரப்படுத்தி வருவதும் நடக்கிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் நூலகங்கள் உள்ளன. தனியாக பணியிடம் இல்லை என்றாலும், ஆசிரியர்களுள் யாரேனும் ஒருவர் பொறுப்பு எடுத்து கவனித்து வருவார்.

1 முதல் 12 வகுப்பு வரை உள்ள எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் ஆண்டுதோறும் நூல்கள் வழங்கப்படுகின்றன.

பள்ளி மேலாண்மைக் குழுக்கள்

ஒவ்வொரு அரசுப்பள்ளியும் தன்னகத்தே பள்ளி மேலாண்மைக் குழுக்களைப்  பெற்றிருக்கும். அவை கல்வி உரிமைச் சட்டப்படி கட்டாயமாக அரசுப் பள்ளிகளில் இயங்குபவை.

பள்ளிகளின் தேவைகள், வளர்ச்சி, மாணவர்நலன் குறித்து முடிவெடுத்து செயல்படுத்தச் சட்டப்படி அதிகாரம் பெற்றவை.

ஊர் மக்கள் மற்றும் பெற்றோர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படுபவை. அவற்றை அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும் அற்புதக் கருவிகள் எனச் சொல்லலாம்.

நிர்வாகக் கல்விக் கட்டமைப்பு 

அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் மிக அழகாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது.

பள்ளிகளை ஆய்வு செய்ய, தேவைகளைப் பூர்த்திசெய்ய, வழிகாட்ட என சிறந்த கட்டமைப்பு மாநில அளவில் செயல்படுகிறது.

தொடக்கக் கல்வித்துறை, பள்ளிக்கல்வித் துறை, தேர்வுகள் துறை, எஸ்.சி.இ.ஆர்.டி, பாடநூல் பிரிவு என பலமான துறைசார் கட்டமைப்பு அரசுப் பள்ளிகளை இயக்கி வருகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிலைக் கல்வித்திட்டம் என மத்திய அரசின் நிதியைப் பெற்று பள்ளிகளுக்கு வழங்கும் திட்ட அமைப்புகளும் கல்வித் துறையுடன் இணைந்து தமிழக அரசுப் பள்ளிகளை இயக்கி வருகின்றன.

இவை அனைத்தும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைப்பின்கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டமைப்பைப் பெற்றுள்ள அரசுப் பள்ளிகள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் .

அரசுப் பள்ளிகளை நோக்கிப் பயணிப்போம் 

நாம் அன்றாடம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் செஸ் என்று 3 சதவீத கல்வி வரி கட்டுகிறோம். அரசு கோடிக்கணக்கில் கல்வி வரி மக்களிடமிருந்து பெற்று அரசுப் பள்ளிகளுக்குச் செலவிட்டு வருகிறது.

நாட்டின் மொத்த வருவாயில் கல்விக்கென்று குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?

இப்படி ஏராளமான சிறப்புகளைப் பெற்று விளம்பரமின்றி ஒவ்வொரு ஊரிலும் இயங்கி வருபவையே அரசுப் பள்ளிகள்.

சிறப்புகளை இன்னும் கூறிக்கொண்டே போகலாம். நாட்டின் உயர்பதவி முதல் கடைமட்ட ஊழியர் வரை பலரும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களே.

அவர்கள் தனது குழந்தைகளை உயர்கல்விக்கு அரசு கல்லூரிகளை நாடுவதும், அரசுத் துறை வேலைவாய்ப்பைப் பெற விரும்புவதும் இயல்பாக நம் நாட்டில் பார்க்க முடிகிறது.

அதேபோல ஆரம்பப் பள்ளிக்கல்விக்கும் அரசுப் பள்ளிகளையே நாடுவதுதான் ஏற்புடையதாக இருக்கும்.

சாதாரண அன்றாடப் போராட்டங்களுக்கு நம் குழந்தைகளைத் தயார் செய்தல், சுயக் கட்டுப்பாடு, ஒழுக்கம் கொண்ட சட்டப்படியான குடிமக்களை உருவாக்குதல், பிறர் நலம் நாடும் பொது உணர்வை குழந்தைகளுக்கு அளித்தல்,

தேடுதல் என்னும் அறிவுப்பசியை விதைத்தல், எதிர்காலப் பிரச்சனைகளுக்கு சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்தல் என்ற அடிப்படை விதிகளைக் கூறிய 1964 இன் கோத்தாரி கல்விக் கொள்கையின்படி இயல்பாக இயங்குபவை அரசுப் பள்ளிகளே.

மாணவர் விரும்பும் மகிழ்ச்சியான கற்றலை சுதந்திரமாக ஜனநாயக வகுப்பறைகளில் தருபவை அரசுப் பள்ளிகளே.

உங்கள் குழந்தைகள் மன ஆரோக்கியத்துடன் பாதுகாப்பான கல்வியைப் பெற அரசுப் பள்ளிகளை நோக்கிப் பயணியுங்கள்.

தமிழகம் முழுவதும் செயல்படும் 55 ஆயிரத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.

கட்டுரையாளர்: உமாகல்வியாளர், பட்டதாரி ஆசிரியர்.

03.07.2020 02 : 15 P.M


No comments:

Post a Comment