Wednesday, 8 July 2020

7.7.2009 முதல் 7.7.2020 வரை ♥️♥️♥️

7.7.2009 முதல் 7.7.2020 வரை ♥️♥️♥️

நமது வரலாற்றை நாம் தான் எழுத வேண்டும் ...

நினைவுகள் பின்னோக்கிச்  சென்றாலும் பயணம் முன்னோக்கி நகர்வதும் மாற்றங்கள் பல நிகழ்ந்திருப்பதும்  எனக்குள் நம்பிக்கையை விடாது வார்த்தெடுக்கிறது என்பதை இங்குப் பதிவு செய்கிறேன்.

2001 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 ஆம் நாள்  இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்த நான் பல்வேறு போராட்டங்களுக்கிடையே தான், கணிதத்தில் இளநிலைப் பட்டமும்  இளநிலைக் கல்வியியல் பட்டத்தையும் அஞ்சல் வழியேப் படித்து முடித்தேன். 2007 இல் B.Ed முடித்து காத்திருக்க 2009 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வில் கலந்து கொண்டு கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற தருணம் வாழ்வின் மிக முக்கியத் திருப்பம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு ஆண்கள் பள்ளியில் 2005 இலிருந்து பணியாற்றிய நான் , திடீரென வேறு பள்ளிக்குச் செல்ல பதவி உயர்வு காரணமாக இருந்தாலும் .....மிகவும் நேசித்த பள்ளி அது , அங்குள்ள ஒவ்வொரு மரமும் , வகுப்பறையும் , நூலகப் புத்தகமும் எனக்குப் பரிட்சயம் , நேசம் அனைத்தும் கொட்டி என்னையும் வளர்த்துக் கொண்டு பள்ளியில் பல பொறுப்புகளையும் கவனித்து மாணவர்களின் அன்புக்குரிய ஆசிரியராகவும் வாழ்ந்த நாட்கள். அந்தப் பள்ளியைப் பிரிந்து செல்வது தேம்பித் தேம்பி அழ வைத்த நாளாகிப் போனது ஜூலை 7 , 2009  ..... அதாவது 07.07.2009

ஈரோடு பகுதியில் வேறெந்த பள்ளியிலும் கணிதப் பட்டதாரி ஆசிரியர் இடம் காலியாக இல்லாததால் #மொரட்டுப்பாளையம் என்ற அந்த ஊரின் உயர்நிலைப் பள்ளியைத் தேர்வு செய்தேன்.

எனது ஊரான காஞ்சிக் கோவில் கிராமத்திலிருந்து பெருந்துறை செல்ல பேருந்து அரிதாகவே வரும். அப்படியிருக்க , அங்கிருந்து ஊத்துக்குளி சென்று (இதற்கு பெருந்துறையிலிருந்து அடிக்கடி பேருந்து உண்டு ) ஊத்துக்குளியிலிருந்து  திரும்பவும் மொரட்டுப் பாளையம் செல்ல 11 என்ற எண்ணுள்ள ஒரு பேருந்து தான் இருக்கும். அதைப் பிடித்து பள்ளிக்கு வழிபாட்டுக் கூட்டம் ஆரம்பிப்பதற்குள் செல்ல வேண்டும் ... 

மிகப் பெரிய சவால் அது , அங்கு மாணவர் எண்ணிக்கையும்  RTE படி இல்லை , 10 ஆம் வகுப்பில் 65 மாணவர் இருப்பார்கள் , 8ஆம் வகுப்பில் 80 பேர் இருப்பார்கள். அத்தனைக்கும் எப்போதும் ஆசிரியர்கள் காலிப் பணியிடம் அதிகமாக இருக்கும் பள்ளி அது. வீட்டிலிருந்து காலை  7.05 க்குக் கிளம்பி பெருந்துறை பஸ் பிடித்தாக வேண்டும் , ஓடிப் போய் ஓடிப் போய் பஸ் பிடிக்க வேண்டும். பல நேரங்களில் பேருந்து குறித்த நேரத்தில் வராது. அப்படியான நேரங்களில் அட்ரினல் சுரப்பி பாதிக்கப்படும் வகையில் மன அழுத்தம் மிகும். அப்படியான சூழலில் ரோட்டில் போகும் எந்த வாகனம் இரு சக்கர வாகனத்தையும் கை காட்டி நிறுத்தி பெருந்துறை போய் விடுவேன். அங்கிருந்து ஊத்துக் குளிக்கு பஸ் கிடைப்பது எளிது. மீண்டும் ஊத்துக் குளியிலிருந்து பஸ் கிடைப்பது குதிரைக் கொம்பு , அங்கு ...4 சக்கர வாகனம்... லாரி, குட்டி யானை  எல்லாத்திலும் ஏறிப்  போவேன். 10 ஆம் வகுப்புக்கு கணக்கு டீச்சர்  என்பதனால்,  காலை 8.30 மணி சிறப்பு வகுப்பு வாரம் ஒரு நாள் வரும். அதற்குள் போக வேண்டுமானால் வீட்டில் 6 மணிக்கே கிளம்ப வேண்டும். மகன் ,கனிஷ்கர் அப்போது முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் , அவனை எழுப்பி , குளிக்க வச்சி , சமைச்சி ...
வேற பிரச்சனை எல்லாம் சமாளிச்சி தான் மொரட்டுப் பாளையம் சென்று மாலை 7 மணி ஆகும் வர. ஆனால் பெரும்பாலான நாட்கள் லிப்ட் கேட்டும் , தோழி உமா பாரதியின் இரு சக்கர வண்டியை வைத்தும் காலம் ஓடியது.

அங்கு என்னிடம் 8 ஆம் வகுப்பில் படித்த  குப்பாயி என்ற மாணவியும் 6 ஆம் வகுப்பு படித்த அவரது தம்பி பாலாஜியும் தற்போது சென்னையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களைத் தவிர இன்னும் நிறைய மாணவர்கள் பிரவீன் , சரவணன் , கவின் , பிரசாந்த் மற்றும் சிலர் தொடர்பில் இருக்கின்றனர்.

இப்பள்ளியில் பணிபுரியும் போது தான் இந்திரா காந்திப் பல்கலைக் கழகத்தில் , எனது M.Ed படிப்பையும் போராடி முடித்தேன். அப்போது இருந்த ஆர்வத்தின் பயணத்தில் தான் சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்  தயாரிப்புப் பணியில் ஈடுபட்டேன். சமச்சீர் கல்விப் பணிக்காக , அரசு நடத்திய பிரத்யேகத்  தேர்வில்  கலந்து கொண்டு தேர்வு எழுதினேன்.  கணக்குப் பாடத்திற்காகத் தான் எழுதினேன். ஆனால்
சமூக அறிவியல் பாடப்புத்தகம் உருவாக்கவே  வாய்ப்பு  வந்தது. அதை சரியாகப் பயன்படுத்தியதால் தான் வாழ்க்கை திசை மாறியது.

மொரட்டுப்பாளையம்  பள்ளி இரு பாலரும் படிக்கும் பள்ளி , நான் பணியில் இணைந்த சில மாதங்களில் அது திருப்பூர் மாவட்டமாகப் பிரிக்கப்பட , Training எல்லாம் பல்லடம் தாண்டி போடுவாங்க , ரொம்ப சிரமமாக இருந்தது , சமச்சீர் புத்தகப் பணியும் அதிகமாக இருந்தது. அதற்காக  சென்னைக்கும் மொரட்டுப்பாளையத்
துகுமாகப் போய் வந்ததும் என ஓடிக் கொண்டே இருந்தேன் , அந்த ஆண்டு 10 ஆம் வகுப்பில் 96% தேர்ச்சி தந்தனர் மாணவர்கள் . 2 வருடம் கழித்து பெருந்துறை ஆண்கள் பள்ளிக்கே மாறுதல் பெற்று வர , சமச்சீர் புத்தகங்களும் தயாராக ஆரம்பிக்க அந்தப் பணியிலும் இயங்கினேன். புத்தகமும் வெளி வந்தது , தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு மாணவர் கைகளில்  தவழ்ந்தது. நான் முழுப் பொறுப்பேற்ற சமூக அறிவியல் புத்தகத்தில் என் பெயர் தாங்கி ஏறக்குறைய 10 வருடங்களாக தமிழகம் முழுவதும் பல லட்சம் குழந்தைகளிடம் இப்புத்தகம் சென்று சேர்ந்தது குறித்து
பேரானந்தப் பட்டிருக்கிறேன்.

பெருந்துறைப் பள்ளியில் அப்போதைய தலைமை ஆசிரியர் காந்திமதி என்பவர் ஒரு வேண்டுகோள் வைத்தார் .10 ஆம் வகுப்பில்  5 பிரிவு வகுப்புகளில் இருந்த Last Bench Students எனப்படும் 35 மாணவர்களுக்கு (அந்தந்த வகுப்பு ஆசிரியர்களால் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ) வகுப்பு ஆசிரியராகவும்  அனைத்துப் பாடங்களையும் நான் மட்டுமே ஒருவராகக்  கற்பிக்க வேண்டும் என்பதாக இருக்க , நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் ஒரு மாதம் சென்றிருக்கும் , காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை அவர்களோடு மட்டும் இருப்பதும் அனைத்துப் பாடங்களையும் கற்பிப்பதும் சிறிது மன உளைச்சல் தர ,
ஆங்கிலம் , கணக்கு , சமூக அறிவியல் என 3 பாடங்கள் மட்டும் எனக்கு வழங்கப்பட்டது. இவர்களின் கதைகளைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். தொடர்ந்து பெருந்துறைப் பள்ளியில்  2 வருடங்கள்  பணியாற்றினேன்.

பிறகு பணி நிரவலில் நல்லாம்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றேன். அங்கும் பல சுவாரஸ்யமான அனுபவங்கள். இங்கு இரு பாலரும் படித்தனர். அங்கு எழும் பிரச்சனைகளுக்கு அளவே இருக்காது . காதல் குறித்து 8ஆம் வகுப்பிலிிருந்து அந்த கிராமத்து சூழலில் உள்ள குழந்தைகளின் புரிதலே வேறு. அவர்களை மீட்டெடுக்க ஆசிரியர்கள் மொத்தமும் இணைந்து பல்வேறு வேலைகளைச் செய்வோம் . அங்கு ஒரு வருடமே பணியில்  இருந்தேன் .

2013 இல் பாடப் புத்தகம் தயாரிப்புப் பணிக்காக மாற்றுப் பணியில்  சென்னை DPl வந்தேன் .  கல்வி குறித்த துறைகளின்  பல பிரிவுகளில் பாடநூல் (Tamil Nadu Text Book Corporation-Text Book Author),ஆசிரியராக , படி திருத்துநராக (Proof Reader)
பயிற்சிகளின் ஒருங்கிணைப்
பாளராக( Training Coordinator) ,
மாற்றுத் திறனாளி மாணவர் பணிகளுக்காக (RMSA - IEDS ),
கணினித் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக (SCERT - ICT Cell), நீதிமன்ற வழக்குப்  பிரிவு (DSE Court case coordinaor) ஒருங்கிணைப்பாளராக என 5 வருடங்களாகப்  பல திசைகளில் விரிந்தது. கல்வி குறித்த இணைய தள பணிக்காக எழும்பூர்
ஆவணக்காப்பகத்திலும் சில காலம் பணியாற்றினேன். இன்னும் பல வகையான பொறுப்புகளும் வந்து சேர்ந்தது .

அந்த சமயத்தில்  அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு  (A3) உருவாகி தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் திறமையாக செயல்படுகின்றனர் என்பதை பல தளங்களில் பதிவு செய்ய ஆரம்பித்திருந்தேன்.

நாளிதழ்களும் மாத இதழ்களும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை எம்மிடம் பரிந்துரைக்கக் கேட்க ஆரம்பித்த தருணம் , 2016 இல் திருச்சியில் ஒரு மிகப் பெரிய ஆசிரியர் சந்திப்பு நடத்தி மாற்றங்களுக்கான விதை வேர் விட ஆரம்பித்தது. அதனையடுத்து தமிழக ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி , ஆசிரியர் தின சந்திப்பு விழாக்கள் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

DPI வளாகத்து கல்விப் பணிகளில்  இருந்து என்னை விடுவித்துக் கொண்டு மீண்டும் பள்ளி வாழ்க்கையில் மாணவர் விரும்பும் தோழியாக வாழ என்னை 2018 இல் இணைத்துக் கொண்டேன்.  குரோம்பேட்டை பள்ளிக்கு ஆசிரியராக பணியேற்று குழந்தைகளோடு வாழ ஆரம்பித்து இரண்டரை  ஆண்டுகள் ஆயிற்று … இங்கு வாசிப்பைப் பரவலாக்கும் பணியை குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல வகுப்பறை நூலகம் அமைத்து செயல்படுதலைக் குறிப்பிட்டு சொல்லலாம். கற்பித்தல் ஒரு அரசியல் செயல்பாடு என்பதை உணர வைத்த மாணவர்களை இங்கு தான் அறிந்து கொண்டேன்.அதே போன்று காலத்துக்கேற்ற முறையில் கணினி வழியே கணிதம் கற்றுக் கொள்ள மிகப் பெரிய கணக்கு கணினி ஆய்வக (Mathematics computer Lab) செயல்பாட்டு முறை இப்பள்ளியில் இயங்கி வருவதும் எனது அனுபவத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியவையே.

சென்னையில் பள்ளிக்குள் நுழைந்த நேரத்திற்கான ,  இணையான வருடங்களில் கல்வி குறித்த நிறைய தேடல்கள்  இயல்பாக வர பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்னை வரவேற்க Dr SSR, Dr வசந்தி தேவி , JK,
பேரா ச. மாடசாமி இவர்களுடனான பயணம் துவங்கி அரசுப் பள்ளிகளின் பிரச்சனைகளை சமூகப் பிரச்சனையாகப் பார்க்கும் பார்வை பெற்றேன். அதனை தீர்ப்பதற்கான வழி முறைகளைத் தேடியும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தை மையப்படுத்தியும் மாநிலம் முழுக்கப் பயணங்களும் உரையாடல்களும் எனத் தொடர்ந்தது ஒருபுறம் .

இரண்டு முழு வருடங்கள் அவ்வியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி அரசுப் பள்ளிகளுக்காக செயல்பட்டு வந்தேன்.

தற்போது A3 அமைப்பை மட்டுமே முழுமையாக கவனித்து வருகிறேன். இத்தனை அனுபவங்களும் எனக்கு கல்வி குறித்து பேச , எழுத , மக்களிடம் எடுத்துச் செல்ல உந்துதல் தந்தது.  இன்று  கல்வி தனியார்மயமாக மாறி வரும் நமது சமூகத்தில்  கல்வியின் பிரச்சனைகளை எல்லாக் கோணங்களிலும் எழுதவும் பேசவும்  ஆரம்பித்தேன்.

தொலைக்காட்சியில் விவாதமேடைகளில் பங்கேற்பது , நாளிதழ் ,வார இதழ் , மாத இதழ்களில், மின்னிதழ்களில்  கல்வி குறித்தான சமகாலப் பிரச்சனைகளை தொடர்களாக எழுதுவது , முகநூல் வழியாக அனைத்தையும் பகிர்வது என எனது  களம் விரிந்தது.  விருதுகளும் அங்கீகாரங்களும் கூட இந்த 11 ஆண்டுகளில் தான் கூடுதலாக என்னை நோக்கி வர ஆரம்பித்தன.

புதிய ஆசிரியன் ,இந்து - காமதேனு
குங்குமச் சிமிழ் , புதிய தலைமுறை கல்வி , நமது மண் வாசம் , குங்குமம் ரிப்போர்ட்டர் , மகளிர் எழுச்சி , செம்மலர் , கேபிடல், தின செய்தி ,சுவடு & தாய் ( மின்னிதழ்கள் ) போன்றவற்றில் ஏறத்தாழ 80 கட்டுரைகள் இதுவரை எழுதியாயிற்று . பல அமைப்புகளின் வரவேற்புக்கிணங்க , அரசுப் பள்ளிகள்  , கல்வி முறை , புதிய தேசியக் கல்விக் கொள்கை என உள்ளூர் வெளியூர்களுக்கு சென்று மேடைகளில் பேசிய நிகழ்வுகள் நடந்தன.

இந்தக் கொரோனா கால நோயச்சச் சூழலில் அரசுப் பள்ளிகளைக் குறித்து பகிர்ந்து கொள்ளும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து பல அமைப்புகளின் இணையவழிக் கருத்தரங்கில் பகிர்தல் நிகழ்கிறது .

தற்போது A3 அமைப்பின் முகநூல் பக்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஒன்றிணைத்து , அரசுப் பள்ளிகளின் சிறப்புகளைப் பற்றிய பகிர்தலுக்கு உட்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இன்றுடன்  07.07.2020 பதினோரு வருடங்கள் முடிவு பெற்றுவிட்டது.  இதுவரை சமூக உணர்வுள்ள நபராகவே இயங்கி வருகிறேன்.
இன்னும் பொறுப்புடன் தொடர முயல்கிறேன்.

உமா

No comments:

Post a Comment