Friday, 11 April 2014

பள்ளி வளாகம் - 3

3.பிரம்மாண்டம் பிறப்பெடுப்பது பள்ளிகளிலேதான் .............................

                               எதை வேண்டுமானாலும் கொடுங்கள்,எடுத்துக்கொள்வோம் எங்களுக்குள்,  என்ற தேடலுடன் வகுப்பறையில் தங்களை நிலைநிறுத்தும் கிராமத்துக் குழந்தைகள் இவர்கள் .....இவர்களுக்கு ,அரசு பள்ளியின் வகுப்பறைத் தளங்கள் தான் சிமெண்ட்  பூசப்பட்ட இடம்..ஆம் கூரை வீடுகளும் ,மண் தரைகளுமே இவர்களது குடியிருப்புகள் ....என்றால் அவர்களைப் பற்றி இப்போது உங்களுக்குப் புரியும்...
                                தாய் ,தந்தையர் காலமாற்றங்களுக்கு ஏற்ப கல்லுடைத்தல் , கரும்பு வெட்டுதல்,கார வேலை என விடியலுக்கு முன் இவர்களை விட்டுச் சென்று விடுவர் வயிற்றுப்பாட்டுக்கு .
                                 தன்  கீழ் வளரும் தம்பி ,தங்கைகளுக்கு சமைத்துக் கொடுத்து, மேலும் அவர்களுக்கு  வேண்டியவற்றை செய்து ,அவர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வருவார்கள்.ஆறாம் வகுப்பிற்குக்  கீழ்  படிக்கும் தம்பி,தங்கை என்றால்,  சாலையின் மறுபுறம் இருக்கும்  தொடக்கப்பள்ளியில்  கொண்டு போய்  விட்டுட்டு  வருவார்கள். பொறுப்புகளை மிகச் சிறிய வயதிலேயே தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அதைச் சரியாகச் செய்யும் தளிர்கள் அவர்கள்;அவர்களை நாம் வாசிக்கத் தொடங்கினால் மிக அரிய பாடங்களை நமக்குக் கற்றுத் தருவார்கள்.
                                 அந்த வருடம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம்,
எனக்கும் அவர்களுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்திய நாட்கள் அவை.வரலாற்றைக் கற்பிப்பதும் ,புவியியலை அவர்களுக்குப் புரிய வைப்பதும் சற்று சிரமமாகத்தான் இருந்தது .அங்கே பிறந்தது தான் இந்த நெருக்கம்...........
                   ஓயாமல் ,பாடங்களை   வரி விடாமல் குறிப்பு எடுத்து நடத்துவதும் ,படிக்க வைத்து சிறு சிறு தேர்வுகள் எழுத  வைப்பதும் ,அப்படி அவர்கள் எழுதியவற்றை உடனே  திருத்தித்  தருவதும் தான், எனது ஆரம்ப கால கற்பித்தலாய்  இருந்தது .அவர்களைப் புரியப் புரிய இந்தக் கற்பித்தல் முறை மாறிப் போனது.
                  ஆம், TLM (Teaching  Learning Materials )  என்று சொல்லப்படும் கற்பித்தல் - கற்றல் உபகரணங்களை , அவர்களையே உருவாக்க ஆயத்தப்படுத்தினேன் .
அது இருபாலரும் படிக்கும் பள்ளி .முதலில் TLM ஐ நான் மட்டுமே செய்து கொண்டிருந்தேன்.சில நேரம், வகுப்பறைக்குள்ளேயே அவற்றைத்  தயாரிப்பேன் .அப்போதெல்லாம் என்னோடு அவர்களும் சேர்ந்து கொள்வர் .பார்த்து செய்யக் கற்றுக்கொண்டனர்.சார்ட் ,அ ட்டைகளில் படங்கள் ,செய்தித்தாள்களின் வரலாறு -புவியியல் தொடர்பான செய்திகள் -படங்கள் திரட்டுதல் போல் ......இவை கூட  டீக்கடைகளில் திரட்டப்படும் சொற்பமான செய்திகளே..அவர்களது வீடுகளில் செய்தித்தாளுக்கு இடமேது?.
                    மாணவிகளா ?மாணவர்களா ?போட்டி வேறு....நான் சும்மாதான் இந்தத் தேடலை அவர்களிடம் ஆரம்பித்தேன்.அது அவர்களுக்குள் இடை விடாத்  தேடலாய் அமைய ஊன்றப்பட்ட விதையாகப் பின்னாட்களில் கண்டேன்.அதில் ஆச்சரியமும் இல்லை எனலாம்.ஏனெனில் அவர்களுக்குள்
தேடலின் செயல் வடிவம் பிரம்மாண்டமாய்  உருவெடுத்துக் கொண்டிருந்தது .
                    சில குழந்தைகள் வரலாற்றுப் பாட முகவடிவங்களை(தலைவர்கள்,சுதந்திரப் போராட்ட வீரர்கள் ) காலண்டர் அட்டைகளில் வெள்ளைக் காகிதம் ஒட்டி ,வரைந்து தங்களது படைப்புத்  திறனை வித விதமாக வெளிப்படுத்துவார்கள். மண்பாண்டங்கள் செய்யப்படும் குடும்பக் குழந்தைகளும் இங்கே இருந்தனர்.அவர்கள்  களிமண்ணால் ஆன உருவங்களைப் பாடத்தோடு தொடர்புபடுத்தி செய்து வருவார்கள்.
                 அப்படித்தான் ஒரு நாள், 8ஆம் வகுப்பு புவியியல் பாடத்தில் வந்த பாறைகளின் வடிவமைப்புகளை மாதிரிகளாக செய்து வந்தனர்.வகுப்பறைக் கலந்துரையாடலில் விளைந்த சிந்தனைகள் ,அவர்களை மேலும் மெருகூட்டியது.ஆம், அவர்கள் ஒருமுறை எரிமலையைக் களிமண்ணால் செய்து காயவைத்து எடுத்து வந்தனர்.மேலும் யோசிக்க,paint வாங்கித்தர,இரண்டே நாட்களில் பாறைகள், எரிமலை அனைத்திற்கும்   நிறங்கொடுத்து ,காயவைத்து  அவ்வளவு அற்புதமாகப் படைப்புத்திறனை  வெளிப்படுத்தி இருந்தனர்.
                  இதே போல் ,பாறைகளின் சிதைவிற்கும் வெகு நேர்த்தியாக செய்து
எடுத்து வந்தனர்.அந்தக் "காபி "நிற பாறைகளும் "ஆரஞ்சும் மஞ்சளும் சிகப்பும்" கலந்த எரிமலையும் என்னை மட்டுமல்ல,பள்ளி முழுக்க அனைவரின் கவனத்தையும் கட்டி வைத்தது அவர்கள் மேல் ...
                  இன்று கூட எந்த அழகுப் பொருள் விற்கும் அங்காடிகளிலும் அது போன்ற அழகான,நேர்த்தியான மாதிரி உருவங்களை என்னால் கண்டுபிடித்து விட முடியாது...இந்த நாள் போல கேமராக்களும்,செல் போன்களும் எங்களிடம்  இல்லாத நாட்கள் அவை...இருந்திருந்தால் இப்போதுள்ள முக நூல் பக்கங்களில் அந்த உருவங்கள் சிரித்திருக்கும்.....
                 அவர்களின் அந்த வெற்றி மீண்டும் மீண்டும் புதியதாக அவர்களை சிந்திக்க வைத்ததும் ,மற்ற மாணவர்கள் அதைப் பார்த்துத் தங்களையும் இது போல உருவாக்கத் தூண்டி அவர்கள் முயன்றதையும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும்.இவை மட்டுமல்ல ,இது போல் அந்தக் குழந்தைகள் இன்னும்  இன்னும் படைத்துக் கொண்டே தங்கள் சமூக அறிவியல் அறிவை தாங்களாகவே பயன்படுத்தி எனக்கும் கற்பித்தலை எளிதாக்கினர் ....
             எனது சக ஆசிரியர்களும் , நானும் ,மாணவர்கள் அனைவருமே , அவர்களுக்குள் திறனோடு ,ஏதோ ஒன்றைத் தேடித்தான் பள்ளி எனும் சாலையில் பயணம் செய்கின்றனர் ,வழி நடத்தும் பணி தான் நம்முடையது என நிஜத்தில் உணர்ந்த நாட்கள் அவை.இன்னுமொரு செய்தி என்னவெனில் உள்ளூர் வசதிகளுக்கேற்ப, அவர்களை சிந்திக்க வைத்தால் பிரம்மாண்டம் பிறப்பெடுக்கும் ....................நீங்கள்  எண்ணலாம் எல்லோரது வகுப்பறைகளுக்குள்ளும் இப்படித்தானே இருக்கும் என்று... ஆம்..உண்மை, ஆனால்  நான் பதிவு செய்ய விரும்புகிறேன், எனது நினைவுகளோடு கலந்து விட்ட , முதல் தலைமுறையாய்  கற்க வந்த அந்த சிறார்களின் முயற்சிகளை........ 
(பயணம் தொடரும்)........



No comments:

Post a Comment