4.
எனது ஆரம்பகால கணக்கு வகுப்புகள் அடிதடியாய் இருக்கும்.ஆம்,
125 மாணவருக்கும், அவர்களது கற்பனை உலகத்திலிருந்து அவர்களை மீட்டுக் கொணர்ந்து,நேராய் உட்கார வைத்து,எழுதாத கரும்பலகையில் அழுத்தி அழுத்தி எழுதி ,அதற்குள் ,சண்டை போட்டுக்கொள்ளும் மாணவர்களைத் திட்டி விட்டு ,இவையெல்லாம் முடிந்து, கரும்பலகையில் ஒரு concept அல்லது (எ.கா ) கணக்கைப் போட்டு விளக்கி ,அவர்கள் அதைப் பார்த்து கணக்கு நோட்டில் போட வைக்கும்போது வருகைப் பதிவேட்டை
விரித்துப் பெயர்களைக் கூப்பிட ஆரம்பிக்கும் போது அந்தப் பிரிவேளை முடிந்து 45 நிமிட மணித்துளிகள் காணாமல் போயிருக்கும் .
அடுத்து எந்த ஆசிரியர் தற்செயல் விடுப்போ அல்லது யாரிடமாவது வகுப்பைக் கடன் கேட்டோ ,அவசர அவசரமாக கணக்குகளை நடத்தி முடிக்கும் போது எனக்கு மிகவும் அலுப்புத் தட்டிவிடும்.ஏனென்றால் அன்று 100 குழந்தைகள் மட்டுமே வருகை புரிந்து இருப்பார்கள்.80 பேரிடம் மட்டுமே கணக்கு நோட்டுகள் சரியாக இருக்கும்.அட்டை போடாத நோட்டுக்கள் அவற்றில் பாதி.அளவுகோல் ,பென்சில்,பேனா இவையும் எல்லோர் கைகளிலும் இருக்காது.அப்படியே இருந்தாலும் அவற்றை நோட்டில் பயன்படுத்தாமல்,துப்பாக்கியாகவும் ,கத்தியாகவும் வைத்துத் தங்களுக்குள் அடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்பதே ஒரு சவாலாக இருக்கும் எனக்கு.
சில நாட்களில் நோட்டைப் பிடுங்கி, வகுப்பை விட்டு வெளியில் எறிந்தும் கூட இருக்கிறேன்.ஆனால் அவற்றிற்கெல்லாம் சரியான தீர்வு இது இல்லை என கொஞ்ச நாட்களிலேயே புரிந்து கொண்டேன்.கணக்கு நோட்டை கிழித்து எறியும் அஸ்த்திரமெல்லாம் நான் பள்ளிக்கூடம் படித்த நாட்களில் எனது ஆசிரியர்களிடம் பார்த்தது.இங்கே உபயோகித்துப் பார்த்தேன் ....எனக்கு அது உசிதமாகப் பட வில்லை .
சில மாதங்களில் பல விஷயங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தது........ ஆம்.....ஒரு மாணவன் ஏன் கணக்கு வகுப்பில் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறான் என யோசித்து ,அவர்களை வகுப்பறையில் உற்று நோக்கினேன், தொடர்ந்து பல நாட்கள்........
அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்தத் தகவல்கள் ....
பல மாணவருக்கு எண்களை இனம் காணத் தெரியவில்லை ,
உதாரணமாக 6ஐ 9ஆகவும்,7ஐ 1 ஆகவும் எண்ணிக் கொள்கின்றனர்.
சிலருக்கு எளிமையான கூட்டல்,கழித்தல் கணக்குகள் தெரியவில்லை, சிலருக்குப் பெருக்கலையும் ,வகுத்தலையும் கண்டால் காய்ச்சல் வந்து விடுகிறது.சிலருக்கு கணக்கு என்றாலே பயம்.தங்களுக்குப் புரியாது என முன் கூட்டியே முடிவு செய்து விடுகின்றனர். காரணம்.............அவர்களுக்கு அடிப்படைக் கணிதம் என்று சொல்லப்படும் கூட்டல்,கழித்தல் ,பெருக்கல் வகுத்தல் இவற்றில் அதிகப் பயிற்சி இல்லை.இதையெல்லாம் தாண்டி அவனது உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள்,காலை உணவு உண்ணாமல் வருவது ,அதைத் தாண்டி குடும்பம் சார்ந்த பிரச்சனைகள்.....
இவ்வளவு பிரச்சனைகளை தனக்குள்ளே வைத்துக்கொண்டு ஒரு சிறுவன்/சிறுமியால் எவ்வாறு இயல்பாக அமர்ந்து கணக்கு கவனிக்க முடியும்?கணக்கு மட்டுமல்ல,சில மாணவர்களால் எந்தப் பாடத்தையும் கவனிக்க முடிவதில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்.மேற்சொன்ன காரணங்களால் தான் நெருப்பைத் தொட்டு விட்ட அவஸ்தையில் மாணவர்கள் கணக்குப் பாட வகுப்புகளில் தவியாய் தவிக்கிறார்கள். .செட்டிமாங்குறிச்சி 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் கணக்குப் பாடத்தையும் ,கற்றுத் தரும் என்னையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு ,ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர் .......எப்படி??
(பார்க்கலாம் இன்னொரு நாள்...)
.
No comments:
Post a Comment