2.செட்டிமாங்குறிச்சி மாணவர்கள் ....( தொடர்ச்சி)
அவர்கள் செய்யும் செயலால் ,தரும் ஒத்துழைப்பால் அவர்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அவர்களோடு தினமும் பேச ,நேரம் ஒதுக்கினேன்.வகுப்பறையில் பாடங்களை விட ,அவர்களது அன்றாடப் பிரச்சனைகள் பற்றி பேசினோம் .அவர்களது கருத்துக்களுக்கு காது கொடுக்க ஆரம்பித்தேன்.அவை பாடம் சார்ந்தவையாகவோ அல்லது அவர்கள் யோசித்தவையாகவோ அமைந்தது. அவர்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தவுடன் அவர்களிடம் எனக்கான நெருக்கம் கிடைத்தது.அவற்றின் விளைவு ........
அந்த ஊரில் விளையும் பயிர்களைப் பற்றியும் ,அவை விளையும் பருவம் பற்றியும் எனக்கு விளக்கினார்கள் தெளிவாக.
அந்த ஊரில் கிடைக்கும் காய்,கனிகள் ,செடிகள் ,தினசரி வாழ்வில் அவை பயன்தரும் விதங்கள் என எதார்த்தமாகக் கூறுவார்கள்.ஆனால் அவற்றை மூலிகை என நாம் கூறி ,கொஞ்சம் புதிய உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று பயமுறுத்தி இருக்கிறோம் .
அந்தக் கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடம் -மூலிகை மருத்துவம் .இதற்குத் தேவையானவை முழுக்க முழுக்க மாணவர்களின் சேகரிப்பும்,விளக்கங்களும் தான் .மிளகு,திப்பிலி ,துளசியில் ஆரம்பித்து ,மருதாணி,கருந்துளசி,மணித்தக்காளி,கீரை வகைகள் ,புண் போக்கும் பூண்டுச் செடிகள்,கற்றாழை,பெரண்டை,கற்பூரவல்லி ,செம்பருத்தி ,குப்பைமேனி ....இப்படி என்னென்ன அவரது வாழிடங்களில்,வழித்தடங்களில் உண்டோ அத்தனையையும் தேடி , சேகரித்து வந்து அடுக்கடுக்கான விளக்கங்கள் வேறு தந்தார்கள்.யாரோ ஒருவர்,இருவர் அல்ல,வகுப்பு முழுமையும் இந்த சேகரிப்பில் ஆர்வமாக ஈடுபட்டது.இப்படித்தான் அவர்கள் இயல்பு எனக்குப் புரிய ஆரம்பித்தது.
இந்தப் பள்ளிக்குழந்தைகள் மட்டுமல்ல;உலகில் தோன்றும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தத் தேடல் இருக்கும்.ஏனெனில்
கற்றல் மனிதனின் அடிப்படை பிறப்பியல்பு ;இதே போன்று எல்லாப் பாடங்களுக்கும் கற்பித்தல் பொருட்களாய் மாற்றம் பெற்றனர்.இவற்றின் வழிதான் அவர்களைப் பற்றி சிந்திக்க வைத்தனர் என்னை.....
( பகிர்வுகள் மீண்டும் தொடரும் )
No comments:
Post a Comment