Sunday, 27 April 2014

6.கணக்கு வகுப்புகள் .....(தொடர்ச்சி )


                    ஆம் ,அந்தக் குழந்தைகளின்  கண்களில் பிரகாசத்தைப் பார்த்ததும் எனக்கும் சந்தோஷம்.
                    "அப்டியா?,அப்போ சரி ,இனிமேல் கணக்குப் பாடத்தைப் பத்தி கவலைப் படாதீர்கள் ",என்றேன்.
                     "சரிங் டீச்சர் ",கோரஸ் குரலில்.
                   என்னைப் பொருத்தவரை இந்தப் பள்ளியில் 6,7,8 வகுப்பு மாணவர்கள்தான் என் களம் , ஆகவே அவர்களுக்குத் தேவை அடிப்படைக் கணக்குகள்  மட்டுமே. இதோடு,  கொஞ்சம் அனுசரணை,கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் கண்டிப்பு,கொஞ்சம் ஆர்வம் ,கொஞ்சம் அவர்களைப் புரிதல் இவ்வளவு தான். சரியான விகிதத்தில் இவற்றைக் கலந்து, கற்பித்தல் என்ற உணவைக் கொடுத்தால், கற்றல் என்ற வளர்ச்சி ஊட்டமாகவே கிடைக்கும் என உணர்ந்தேன் .
                   "(வகுப்பின்)பின்னாடி இருப்பவர்கள்  பேனா,ஸ்கேல் , பென்சில்,கணக்கு நோட்டு  மட்டும் எடுத்துக் கொண்டு என் பக்கத்துல வந்து உட்காருங்க",என்றேன்.
                       "பைங் டீச்சர்?",
                       "அதெல்லாம் வேண்டாம்" ,என்றேன்.
                         "புத்தகங் டீச்சர் ",
                         " அதும் வேண்டாம் "
  அவர்களுக்குள்ளேயே மாறி மாறி பார்த்துக்கொண்டனர். 
                         "சரி,மொதல்ல  இருந்து ஆரம்பிக்கலாமா ?",என்றேன்.
                      சந்தோசமாக தலை ஆட்டினர்.அவர்களைப் பொருத்தவரை அந்தப் புத்தகங்களைப் புரட்டி கணக்குகளைப் போடச் சொல்வது பிடிக்காது.
அதிலும்  மிகச் சில மீத்திறன் மாணவர்களோ, டீச்சர் ஏன் புத்தகம் வேண்டாம் என்கிறார் ,என யோசித்துக்கொண்டு என்னைப் பார்ப்பதும் எனக்குப் புரிந்தது.
                        "நமக்கு முதலில் வருவது என்ன? ",
                         "எண்ணியல்ங் டீச்சர் ",
                           "சரி, எண்ணியல்னா 0,1,2,3,4,5,6,7,8,9 இந்த பத்து எண்களைப் பயன்படுத்தி கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் இந்த 4 அடிப்படை செயல்களையும் ,தொடர்புடைய கணக்குகளையும் போடுவது தான்" , என்றேன்.
                         அவர்களுக்குத் தேவையான விஷயங்களை கரும்பலகையில் எழுதி விளக்கினேன் .அவை....
                          இயல் எண்கள்(N ),
                          முழு எண்கள்(W),
                           முழுக்கள் (Z ),
                         விகிதமுறு எண்கள் (Q ).....
                         இவை அனைத்திற்கும்  எடுத்துக்காட்டுகளுடன் விளக்கங்கள் ,     அவர்களது கணக்கு நோட்டின் ஆரம்பமாக இருந்தது.................
                         அன்று மட்டுமல்ல தொடர்ந்து 13 வருடங்களாக 6-10 எந்த வகுப்பிற்குச் சென்றாலும் முதல் கணித வகுப்பில் இந்த உரையாடல்களும் விளக்கங்களும் எனது வகுப்பறையில் இடம் பெற்றிருக்கும்,.........இவை எனது மாணவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்பேன்  .
                         ஏனெனில் கணக்கின் மிக மிக அடிப்படையான இவை தெரியாததால் மட்டுமே மாணவர்கள் அடுத்தடுத்து வரும் கணக்குப் பகுதிகள் புரியாமல் நிலை தடுமாறி ஒரு கட்டத்தில் கணக்கை வெறுக்கின்றனர்.
                        நீங்கள் நினைக்கலாம் ,இதென்ன கஷ்டமா என்று?நமக்குக்  கஷ்டம் இல்லை,கல்வி அறிவு இல்லாத பெற்றோரிடமிருந்தும்,கணக்கு என்றாலே தெரியாத சூழலில் இருந்து வரும் நமது  பள்ளிக் குழந்தைகளுக்கு 
இதுவும் சொல்லிக் கொடுக்காதவரை கஷ்டம் தான்.
                       10-ஆம் வகுப்பில் சூத்திரங்களைக் கட கடவென apply செய்து நிமிடத்தில் கணக்குப்  போடும் திறன் கொண்ட ஒரு மாணவனோ/மாணவியோ ,எளிமை என நாம் சொல்லும் முழுக்களின்    கூட்டல், கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் செயல்களில்( + / --) குறிகளை சரியாகப் போடத் தெரியாமல் விழிப்பர் .ஏனென்றால் அடிப்படைக் கணக்குகளில் பயிற்சி இல்லாமை ..ஆம் ,இதைத்தான் எனது மாணவருடன் நான் பகிர்ந்து கொண்டேன்.
                       நான் நினைப்பவற்றை தினமும் எனது மாணவரிடம் பகிர்ந்து கொண்டேன்.அவர்கள் மாற வேண்டும் ,புரிந்து கொள்ள வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும்.....இது போன்ற வேண்டும்,வேண்டும் என்ற  வேண்டிய விஷயங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டதன் விளைவு ,எங்களுக்குள் நல்ல புரிதல்  ஏற்பட்டது.
                      ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நாளின் பாடத்தை கண்டிப்பாக கேட்பேன் அல்லது அவர்களே சொல்வார்கள்,அந்த சுதந்திரத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள்.அதைத் தான் நாம் previous  knowledge என்று teaching practice பொழுது lesson plan பக்கங்களிலும் , notes of lesson ஏட்டில் motivation என்றும் எழுதுகிறோம்..ஆனால் அவை ஏட்டோடு நின்று விடுகிறது.
                        அல்லது syllabus முடிக்க முடியாது என்று கூறி பயிற்சிக் கணக்குகளுக்கு   ஓடுகிறோம் .யாருக்காகப்  பாடம் நடத்துகிறோமோ அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு நாம் தயாராக இல்லை,அதுதான் நம் பிரச்சனை.
                     ஆகையால் அதில் நான் தெளிவாக இருந்தேன்.தேர்விற்காக மட்டும் என்றுமே  பாடங்களை நடத்துவது என் அதிகாரத்தில் கிடையாது ,
எண்ணியலுக்கு நான் முதலில் கூறிய அடிப்படையைப் போலவே ஒவ்வொரு பிரிவுகளுக்கும் (CHAPTERS )அதனதன் அடிப்படை, விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள்.....இவையனைத்தும் கண்டிப்பாக இருக்கும்.
                      நானும் முதல் நாளிலேயே இவையனைத்தும் செய்து முடித்து விடவில்லை ,எனக்கும் பயிற்சி தேவைப்பட்டது.கொஞ்சம் கொஞ்சமாகத்தான் implement செய்தேன்.கணக்கு நோட்டில் என்று அவர்கள் கணக்கு போட்டாலும் தேதி இருக்கவேண்டும்.மிக மிக மிக முக்கியம் உண்மையான தேதி போடுவது.இது அவர்களுக்குப் பிடித்திருந்தது.
                     நம் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் சொல்கிறேன், மாணவர்களைக் குழுவாகப் பிரித்தல்-தலைமை,உபதலைமை தெரிவு  செய்து 90,95 என்ற கூட்டத்தை 5,7 என சிறு குழுக்களாகப் பிரித்தல் எனது முக்கியப் பணி ,ஏன் என்றால் நம்மால் எல்லோரையும் நாள் முழுவதும்  கவனிக்க முடியாது ,மேலும் peer study என்ற கான்செப்ட் ,நன்றாக வேலை செய்தது.                                   பெரிய வகுப்புக் குழந்தைகள் என்றால்தான் மற்றவரைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லமாட்டார்கள்,சிறு வகுப்புகளில் நமக்கு வேண்டிய அனைத்தும் அந்த group leaders எனப்படுபவர்கள் சொல்லி விடுவார்கள் , ஒவ்வொருவரின் கற்றல் வேகத்தையும்.  ஆகையால் என்  பணி மிக எளிது, அந்த மாணவர்களின் கற்றல் நிலை என்ன,எங்கு அவன் தடுமாறுகிறான், எப்படிச்   சொன்னால் புரியும், என்ன செய்யலாம் இவற்றைத் திட்டமிடுதல் மட்டும்  கவனத்தில் வைத்து  அவர்களை follow up செய்தல் தேவையாக இருந்தது எனக்கு.
                       இது கணக்கு வகுப்புகளுக்கு மட்டுமல்ல,எல்லாப் பாடங்களுக்கும் (subjects )பொருந்தியது.because I 'm not a  BT Teacher ,எல்லாப் பாடங்களையும் கற்பிக்கும் Secondary Grade Teacher .
                        எனது கருத்து- ஒருவர் ஆசிரியராக இருக்க, தகுதித் தேர்வை விட குழந்தைகளை அணுகும் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகிறது......
                      ஆம்,எந்தக் குழந்தையும் முனைவர் பட்டங்களுக்காக  நம்மிடம் வருவதில்லை,அது அவர்கள் பெரியவராக வளர்ந்த பிறகு அவர்களே பார்த்துக்கொள்ளும் வழிகள்.
                     மாறாக, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும்,தன்னம்பிக்கையும்,நல்ல எண்ணங்களை சிந்திக்கவும்,அனுபவங்களை வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் வழிகளையும் ,பிறருக்கு நல்லன செய்யும் சுயநலமில்லாப்  பண்புகளையும்   சொல்லித்தரவே, நாம் இருக்கிறோம் என்று கற்றுக்கொள்ளவே  நம்மிடம் வருகின்றனர்.
                    எழுத்துக்களையும் ,எண்களையும் கற்றுக்கொடுத்து விட்டால் புத்தகங்களை அவர்களே வாசித்துக் கொள்வார்கள, நாம் வழிகாட்டிகளே. எதை எப்போது  வாசிக்க வேண்டும் என்று கூறி வழிகாட்டி உடன் இருத்தலே நம் பணி...
                    நமது subject depth எல்லாம் அவர்களிடம் காட்ட அவசியம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது,சாதாரண பால பாடம் அவனது பசி ,அதை விட்டு விட்டு  நாம் கணக்கில் புலியாக இல்லை  என அவனை சலித்துக்கொள்வதும்,அவனுக்குப் புரியவில்லை எனத் திட்டுவதும்,வீட்டுக் கணக்குகளை போடமாட்டேன் என்கிறார்கள் எனப் புலம்புவதும்,முன் வகுப்புகளின் கற்பித்தலை குறை கூறுவதுமாக நம்மோடு அவனது நிகழ் காலத்தையும் வீணாக்கி வருகிறோம்....(மீண்டும் பேசலாம்)
                   

   
  
                    




























































































                      












                   

No comments:

Post a Comment