5.கணக்கு வகுப்புகள் ....(தொடர்ச்சி )
ஒவ்வொருநாள் கணித வகுப்பறையும் பல பிரச்சனைகளை சந்தித்ததால் ,எனது வகுப்பறையை வேறு மாதிரி திட்டமிட்டேன்.அன்று கணித வகுப்பிற்குள் போன உடன் மாணவர்களிடம், கணக்கு நோட்டு,புத்தகங்களை மூடி வைக்கச் சொன்னேன்.முன்பே முடிவு செய்தபடி அவர்களிடம் பேச ஆரம்பித்தேன்.
"இன்று நாம் கணக்கு போடப்போவதில்லை",நான் சொன்ன உடன் ,
"ஏங் டீச்சர் ?"-ஒரு சேர அனைவரும் கேட்டனர்.நான் அவர்களைக் கையமர்த்தி ,
"உங்களில் பாதி பேருக்கு நான் board -ல போடும் கணக்குகள் புரியறதில்லைனு
எனக்குத் தெரிகிறது,உண்மைதானே? "-என்றேன்,யாரும் பதில் சொல்லவில்லை.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு விழித்தனர்.என்னையும் பார்த்தனர்.சற்றுப் பொறுத்திருந்து மீண்டும் கூறினேன்.
"இங்க பாருங்க ...யாரையும் திட்றதுக்காக நான் கேட்கல,நீங்க உண்மைய சொன்னாதான் உங்களப் பத்தி எனக்குத் தெரியும் ,நல்லாப் புரியற மாதிரி சொல்லித்தர முடியும்.அதனால தைரியமா சொல்லுங்க ,யார் யாருக்குப் புரிய மாட்டேங்குது?" ... என்றவுடன்,
அவர்களது முகத்தில் ஒரு தெளிவு பிறந்து,ஒவ்வொருவராகக் கையை உயர்த்த, பாதி வகுப்பு மாணவருக்குப் புரிவதில்லை எனத் தெளிவாக எனக்குப் புரிந்தது.இன்னும் கொஞ்ச பேர் பாதி கையை தூக்கினர்.
"உங்களுக்குமா ?"!!!!! என்றேன் .
"கொஞ்சம் கொஞ்சம் தான் புரயுதுங்க டீச்சர் "-என்றனர்.
"ஓ ....அப்படியா?சரி,கையை கீழே போடுங்கள் "-என்று கூறி விட்டு ,
"யார் யாருக்கெல்லாம் கணக்குப் பிடிக்காது,வராதுன்னு நெனைக்கறீங்க",என்றேன்.
ஒரு கூட்டமே கை தூக்கியது.மேலும் ஏன் என்றதற்கு,சிலர் எழுந்து நின்று மடமடவென்று ,
"டீச்சர் எனக்கு எல்லாம் புடிக்கும்,இந்த இங்கிலீஷ்-ம்,கணக்கும் தாங் டீச்சர் வரமாட்டேங்குது ,புடிக்கல ,அதுல மட்டும் பெயில் (fail ) ஆகிடறேன்",
"எனக்கு எப்பவும் பிடிக்காதுங் டீச்சர் ",
"டீச்சர் ,கொஞ்சூண்டு புரியுதுங்க ,நடுவுல புரியல ",
"எனக்குப் பெரிய கணக்கை பாத்தாலே புடிக்காதுங்க டீச்சர்",
"எனக்கு அஞ்சாவது வரைக்கும் நல்லாப் புரிஞ்சதுங் டீச்சர்,அப்புறம் இந்த
ஆறாவதுல இருந்து தான் புரியல,மார்க் கம்மியா வாங்கறேன்",
"டீச்சர், நடத்தும்போது புரியுது ,பரீட்ச்சை-ல போனா , மறந்துடுதுங்க டீச்சர்",
" ரொம்பக் கொழப்புதுங்க டீச்சர்",
"என்னென்னமோ வருதுங்க டீச்சர்,கணக்குன்னுட்டு பெரிய பெரிய பேராவா (paragraph) கேள்வி இருக்கு,எப்படி புரிஞ்சுக்கறது?".........................................
இது போன்று எண்ணற்ற கருத்துக் குமுறல்கள் மாணவர் பக்கமிருந்து .....
இதெல்லாம் எனக்கு மட்டுமில்லை,எல்லாப் பள்ளிகளிலும் இருக்கும் பொதுவான பிரச்சனைகள்.எந்த ஆசிரியர்,எந்த பள்ளிகளுக்கு கணக்கு வகுப்பு எடுக்கச் சென்றாலும் அனைத்து ஆசிரியர்களும் சந்திக்கும் சூழ்நிலைகள் தான் . இங்கே தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் புறம் தள்ளி, பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகளை மட்டும் கருத்தில் கொண்டால் நமக்கு தோல்வியே.syllabus வேண்டுமானால் கவராகலாம் ,மேற்கொண்டு அவர்களிடம் மாற்றம் இருக்காது...ஆகையால்,
"சரி பயப்படாதீங்க,இதையெல்லாம் சரிபண்ற மாதிரி நாம் இனிமேல் class நடத்தலாம் ....."-என்று சொன்னவுடன் அவர்கள் கண்களில் பிரகாசம் .....நம்பிக்கை ...அந்த பிரிவேளை முடிந்தது.......(வளரும் ....)
No comments:
Post a Comment