வகுப்பறை உளவியல் : 15
நாம் தைரியமாக எதிர்க்க வேண்டும் கொடுமைகளை - 9 ஆம் வகுப்பு மாணவி ஆவேசம் .
கணக்கு வகுப்புகளுக்கு ஊடே புரட்சி வகுப்புகளும் அறிமுகம் செய்ய தேவை ஏற்பட்டு இருக்கு இந்நாட்களில் ..
குழந்தைகள் கணக்கு வகுப்புகளைக் கடினமாக இருப்பதாக உணர்ந்தாலும் எளிமைப் படுத்தும் முயற்சியில் பல ஆயுதங்களைக் கையில் எடுக்க வேண்டிய சூழல் நமது பொறுப்பு .
அது 9 ஆம் வகுப்பு , கணக்குடன் கதைப் புத்தகங்களையும் அறிமுகம் செய்யும் வழக்கம் எங்களிடையே உண்டு. எல்லாம் பேசுவோம் , கதை , கவிதை , சினிமா , பொருளாதாரம் , சமூகம் இப்படி அனைத்தும் எங்கள் உரையாடலில் இடம் பிடிக்கும் ,
ஒரு நாள் பெண்களுக்கான பிரச்சனைகளைப் பற்றி பேசப் பேச ஒரு குழந்தை கண்கள் பனித்தன, அயர்ந்து போகாதே நீ மட்டும் தனியாள் இல்லை , உன்னைப் போல சங்கடங்களை எதிர்கொள்ளும் பெண் குழந்தைகளும் அம்மாக்களும் நிறைந்த சமூகம் தான் இது என்று தைரியப்படுத்திய அதே நேரம் பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் புத்தகத்தைத் தந்து படிக்கக் கூறினேன் , இது நடந்தது 2 மாதங்கள் முன்பு ...
3 நாட்கள் முன்பு, பயிற்சிக் கணக்குகள் போடும் போதே ..புத்தகம் எங்கேம் மா? என்றேன். படிச்சிங்களா ? என்றேன். இதோ என்னுடனேயே வைத்துள்ளேன் , படிச்சேன் மிஸ் என்றார்.. அது பற்றி கொஞ்சம் பேசுங்களேன் என்றேனே பார்க்கலாம் .
புத்தகம் மிகவும் என்னை பாதித்தது , நன்றாக இருந்தது என ஆரம்பித்த அவரது பேச்சில் ஆவேசம் கூடியது..
எங்கப்பா குடிச்சுட்டு எல்லாவற்றுக்கும் அடிப்பார் மிஸ் , எங்க வீட்ல என் தம்பிய ஒரு மாதிரியும் , என்னை ஒரு மாதிரியும் நடத்துவாங்க , எல்லா வேலையும் நான் தான் செய்யனும் , தண்ணீர் வெளியே போய் நான் தான் எடுக்கணும் , எப்போதும் இதல்லாம் கஷ்டமாகவும் வெறுப்பாகவும் இருக்கும். அம்மாவையும் திட்டி அடிப்பார். அடிமைகள் மாதிரி தான் வாழ்ந்தோம்.
இந்த புத்தகம் நீங்க குடுத்த உடன் இதப் படிச்சு படிச்சு , ஒரு நாள் எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சேன். எங்கப்பா கையை ஓங்கியவர் அதை அப்படியே நிறுத்திவிட்டு உள்ளே போய்ட்டார் , எங்கம்மா கிட்ட இந்த புத்தகத்தைக் காட்டி இதில் எல்லாம் எப்படி எழுதியிருக்கு பாரு மா , இதெல்லாம் தெரியாமலேயே இப்படி அப்பா சொல்வதெல்லாம் கேட்டு அடிமையா இருக்கியே என்றேன். அதற்கு அம்மா இதல்லாம் புத்தகத்துல தான் மா வரும். நம்ம வாழ்க்கையில் நடக்காது என்று சொன்னாங்க மிஸ்.
நான் சொன்னேன், நீ வேணா அவருக்கு அடிமையா இரு , நான் ஒன்னும் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன் , இப்போ எல்லாம் அவருடைய வேலைய நான் செய்வதில்லை. நான் படுத்த பாய் மட்டும் தான் எடுத்து வைக்கறேன். அவருடைய பாய் தல காணி அவரே தான் எடுத்து வைக்கிறார். காபி போட்டு வச்சா அவரே தான் எடுத்துக்கணும் , நான் எடுத்துத் தருவதில்லை .
இப்போதெல்லாம் அடிப்பதில்லையா? என்றேன் , அது மட்டும் அப்பப்போ செய்யறார். முறைப்பேன் , இந்த புத்தகத்தை மூஞ்சி மேல காமிப்பேன் , ஏற்கனவே காட்டியதுக்கு கோபம் வந்து ஒன்னும் செய்ய முடியாமல் போய்ட்டார் ,
என் தம்பிக்கு செல்லம் கொடுத்து , தப்பு செய்ய வழிகாட்டிட்டார்னு தோணுது அவன் 7 வது படிக்கிறான் மிஸ் , அவனுக்கு வேலையே தராம என்னை மட்டும் விரட்டுறாங்க , எதிர்த்து ஏன் இப்படி செய்யறீங்க ன்னு கேட்டா திமிரு என்று பேசுகிறார்கள் மிஸ் .... என்றார்.
என்ன மா ?யார் யார் வீட்டில் இந்த மாதிரியான பிரச்சனை இருக்கோ அங்கு நீங்களும் வீட்டில் கேளுங்கள் என்ற என்னிடம் , மாணவிகள் ... எப்படி மிஸ் கேட்பது ? எங்கப்பா எப்பப் பாரு வேலைல இருக்கற டென்ஷனை வீட்ல எங்கிட்ட காமிக்கறார், பட்டையா அடிக்கறார் என்றார் ஒரு மாணவி .
அதற்கு மாணவியின் பதில் பெரும் குரலாக வருகிறது. நாம் நம் மீது தப்பில்லாத போது எதிர்த்துக் குரல் தரணும் , இல்லாட்டி நம்மள அடிமையா நடத்துவாங்க. அவங்களப் பொறுத்தவரை வீட்டுக்கு வரணும் , சாப்பிடணும் , ஜாலியா இருக்கணும் , வீட்ல பெண்கள் வேலைக்கும் போய் சம்பாதித்து தந்து , இவர்களுக்கு பணிவிடையும் செய்து , அடிமை மாதிரி இருக்கணும் என்று நினைக்கின்றனர். இதற்கு நாம உதவக் கூடாது என்று முகத்தில் வீர உணர்வுடன் தனது சக வகுப்பு மாணவியரிடம் பகிர்கிறார். எனக்கு உடலே சிலிர்த்தது.
எப்படி இந்தக் குழந்தைக்கு இவ்வளவு தைரியம் வந்துள்ளது என்று மகிழ்ந்தேன். பிரச்சனைகளை வெளியே கொண்டு செல்கிறோம் என்று தெரிந்தால் ஆண்கள் தவறு செய்வதை விட்டு விடுவார்கள் , ஆகவே நியாயமான பிரச்சனைகள் உங்கள் குடும்பத்தில் இருப்பின் அப்பாவிற்கு பேசிப் புரிய வையுங்கள் என்றேன். உங்கள் மீது தவறு எனில் மாற்றிக் கொள்ளுங்கள் , பெண் குழந்தைகளை அடிக்கும் அப்பாவை எதிர்த்து கேள்வி கேளுங்க , அதற்கு அவர்கள் கேட்கவில்லை என்றால் அடித்தால் கையை உயர்த்துங்கள் திரும்ப ... என்றும் கூற வேண்டியதாயிற்று.
இதன் பின்னணியில் நிறைய பெண்களின் வாழ்க்கை சோகங்கள் அடங்கியிருக்கிறது என்பது தான் உண்மை.
அதோடு அப்புத்தகத்தை அம் மாணவிக்கே பரிசாகத் தந்து விட்டேன் , அவள் பின்னாளில் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் வலிமை மிக்க பெண்ணாக வருவாள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
உளவியல் தொடரும்
உமா
No comments:
Post a Comment