வகுப்பறை உளவியல் 17
---------------------------------------
மாணவிகளின் புத்தக விமர்சனம்
நான் ஒரு புத்தகத்த படிச்சு அது பத்தி எழுதற பழக்கம் சில வருஷமா தான் செய்யறேன்.
ஆனால் அதே சில வருடங்களாக குழந்தைகளிடம் புத்தகங்களைப் படிக்கத் தரும் போது அது பற்றி என்ன தோணுதோ அத எழுதச் சொல்லி , வகுப்பில் பகிர்வதும் அல்லது நேரடியாக அந்தப் புத்தகம் பற்றி அவர்களுக்குள் தோன்றுவதைப் பேச வைப்பதும் என நகரும் தருணங்கள் எப்போதும் உண்டு .
கடந்த நவம்பர் மாதம் பள்ளியில் வகுப்பறை நூலகம் ஆரம்பித்த பிறகு , இது முறைப்படுத்தப்பட்டது. 6 ஆம் வகுப்பு குழந்தைகள் , இதற்காகத் தனியாக நோட்டு போட்டு, படித்த புத்தகங்கள் பற்றிய அவரது எண்ணங்களை அவர்களது மொழியில் எழுத ஆரம்பித்தனர்.
தினமும் பாடம் நடத்தும் வேளையில் கூட , மிஸ் மிஸ் என சில குரல்கள் வரும் திசையில் நோக்கினால் கையில் நூலக நோட்டு வைத்திருப்பதோடு , படியுங்கள் என்ற தொடர் கொஞ்சல் இருக்கும்.
கடைசி 5 நிமிட நேரத்தில் அதைக் கையில் வாங்கி அதை நான் படித்து , நல்லா இருக்கா , என்ன பண்ணியிருக்காங்கன்னு அவங்க நோட்டுல எழுதி பாராட்டி (அ) யோசனை சொல்லி , அதை வகுப்பு முழுவதும் மற்றவங்க கிட்ட சொல்லி , கை தட்டி .. இப்படித்தான் ஒரு அழகியலை தனது எழுத்தில் தந்த சிநேகாவைக் கண்டறிய முடிந்தது.
தும்பி பற்றி கதைக் களம் வாழ்வியலோடு ஒப்பிடும் சாருலதாவைக் கண்டுபிடிக்க முடிந்தது.
ஆங்கிலப் புத்தகத்தைப் படித்து வந்து அதைத் தமிழில் விளக்கும் , ஒவ்வொரு முறையும் அவற்றைக் கரும்பலகையில் மன வரைபடம் போல வரைந்து விளக்கும் கீதாஞ்சலியையும் கண்டு கொள்ள முடிந்தது.
இன்னும் தான் படித்த புத்தகத்தில் உள்ள கதைகளை வைத்து தானே புதிய கதைகள் எழுதும் அனுப்பிரியா , அதில் வரும் படங்களை அழகாக வரையும் விஷ்ணுப்பிரியா ,
இப்படி வரிசையாக விதவிதமானக் குழந்தைப் படைப்பாளிகளைக் கண்டு பிடிக்கவும் கொண்டாடவும் இந்த வெளி உதவுகிறது. பாடப் புத்தகங்களைத் தாண்டி மிகப் பெரிய பரந்த வானம் உள்ளது என்பதை ஒவ்வொரு முறையும் இவர்கள் தான் எனக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இது போன்ற செயல்பாடுகளை இங்குப் பகிர்ந்தது பார்த்து தும்பி -சிவராஜ் குழு , Siva Raj மைவிழிச் செல்வி Myvizhi Selvi
ஆகிய உறவுகள் ஒரு பெட்டி நிறைய புத்தகங்களை குழந்தைகளுக்காக அனுப்ப ,
ஜனவரி 3 அன்றே பரீட்சை பேப்பர் கொடுத்து வாங்கி அடுத்த நிமிஷமே இந்தப் புத்தகங்களைக் கொடுத்தாச்சு.
வழக்கம் போல படிச்சு எழுதியிருக்காங்க , பார்த்தேன். மெர்ஸி நோட்டுல எழுதியிருந்தது .... ஒரு வித்யாசமா இருந்தது விமர்சனம் , ஆமாம் ... அவள் படித்த புத்தகம் The Cow in Our Economy ...
அதை ஒரு உரையாடலாகவும் மன வரைபடமாகவும் போட்டு எழுதியிருந்தாள் அந்தக் குழந்தை ...
இப்படியான குழந்தைகளைக் கொண்டாடவோ , அவர்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வது பற்றிய ஒரு எண்ணமோ இல்லாத ஒரு கல்விச் சூழல் தான் இங்கு நிலவுகிறது என்றால் அதுவே உண்மை.
இது போன்ற திறமைகளை பாடத்துடன் தொடர்பு படுத்தி , கல்வி இணைச் செயல்பாடுகளாக மதிப்பீடு செய்யும் பயிற்சி ஆசிரியர்களால் பழக்கப் படுத்தப்படுவதே இல்லை.
ஏன் அவ்வளவு தூரம் ? கொஞ்சம் கூட இவர்களது திறன் கணக்கில் எடுத்துக் கொள்ள ஒரு வெளி (space) இல்லை ,
எப்போது இவை எல்லாம் ஒரு புள்ளியில் இயங்க ஆரம்பிக்கின்றதோ அப்போதுதான் உண்மையான கல்வி மலரும்.
மெர்ஸியின் விமர்சனத்தை இங்கு படமாகத் தருகிறேன் , நீங்களும் படித்துப் பாருங்கள்.
எங்கள் உலகம் மிக அழகான பரந்த வானம் , அங்கே சிறகுகளுடன் பறக்கும் பறவைகளாக எங்கள் குழந்தைகள் 🦅🦅❤️
உளவியல் தொடரும்
உமா
No comments:
Post a Comment