Friday, 18 January 2019

வகுப்பறை உளவியல் 16

வகுப்பறை உளவியல் - 16
------------------------------------------
தாய் மொழிவழிக் கல்வி

வகுப்பறை உளவியல் என்பது மட்டுமே என் கண் எதிரில் விளைவுகளைக் கொண்டு வரும் செயல்பாடாகக் காண்பதால் என் குழந்தைகளுடனான உரையாடல்களைப் பதிவு செய்ய விருப்பமாக உடன்படுகிறேன்.

இது பரந்த வெளியில் பறக்கும் பறவையின் சுதந்திரம் போன்றது. நீர் நிறைந்த குளங்களில் குதூகலிக்கும் தவளைகளின் சத்தங்களுக்கு ஒப்பானது. நிபந்தனையற்ற அன்பு பாராட்டும் சூழல் ... ஆகவே ....

அது 6 A2 வகுப்பு , இரண்டாம் பருவம் தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டு சில உரையாடல்கள்.

நீங்கள் எல்லாம் ரொம்ப முயற்சி செய்து தான் இந்தளவுக்கு மார்க் வாங்கி இருக்கிங்க , ஒரு சிலரிடம் போன டெர்ம் விட பெஸ்ட் வந்து இருக்கு, சிலர் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யணும் .

இதில் நிறைய பேரு (15/49 பேர் ) ரொம்ப திறமையானவங்க , ஆனா தமிழ் மீடியத்திலிருந்து இங்லீஷ் மீடியம் மாறியது தான் பிரச்சனை , நல்லா யோசிச்சுப் பாருங்க , உங்களுக்கு  5 வது வரை தமிழ் மீடியம் லதானே படிச்சீங்க , இப்போ இங்கிலீஷ் மீடியம் கஷ்டப்படுவது எனக்குப் புரிகிறது.

சில குழந்தைகளின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் , சிலரது கண்கள் கலங்கியும்  வருத்தமும் என்னையும் கலங்க வைத்தது , அவர்களை எப்படி சமாதானப் படுத்துவது என்று கூடத் தெரியவில்லை.

ஏனென்றால் தழுதழுத்தக் குழந்தைகள் எல்லோரும் முதல் பருவ ஆரம்ப நாட்களில் சிட்டாய்ப் பறந்து வகுப்பையே கலகலப்பாக்கி தங்கள் அதீத திறன்களால் தி பெஸ்ட் என்று மற்ற மாணவிகளால் பாராட்டுப் பெற்றவர்கள்.

நான் அறிவியல் பாடத்தை அப்போது அவர்களுக்கு எடுத்துக் கொண்டு இருந்தேன் , மொழி பற்றி பிரச்சனை இல்லை , பாடங்கள் சார்ந்து வகுப்பறை செயல்பாடுகளை நீங்கள் தமிழில் (அதுதான் அவர்களது தாய் மொழி) பகிரலாம் என்றும் எங்களுக்குள் ஒரு  புரிதல்
ஒப்பந்தம் ,அப்போதெல்லாம்  என்னைப்  பாடம் நடத்தவே விட மாட்டார்கள். நானும் அவர்களுடன் ஒருத்தியாக கற்றுக் கொள்ளும் மாணவியாகவே இருந்து விடுவேன். மாறி மாறி அந்த அறிவியல் பாடப் புத்தகத்தின் பக்கங்களை வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டும் , செயல்பாடுகளின் வழியாகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும்  தயாரிப்பு செய்து தினம் தினம் ஓடி வந்து  பாடம் நடத்தும் குழந்தைகள்   இந்த ஒரு 6 மாத காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக துவண்டு வருவதை  என்னால் உணர முடிந்தது.

தமிழில் 60 மதிப்பெண்களுக்கு 50 க்கு மேல் வாங்கும் குழந்தைகள் சமூக அறிவியல் பாடத்தில் 60க்கு 15 வாங்குவதற்கே சிரமப்படுகின்றனர். மொழிப் பிரச்சனையே தலையாயது , ஏனெனில் அவ்வளவு திறமை வாய்ந்த குழந்தைகள் தாய் மொழி என்றால் சொந்தமாக எழுதும் திறன் வாய்ந்தவர்கள் ,

(இவர்கள் மட்டுமல்ல மொத்த வகுப்புமே  பின்தங்கி உள்ளனர் என்பதும் , எல்லோருக்குமே தாய் மொழி தமிழ் என்பதும் , ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது எல்லாம் அவர்களுக்கும் உடன்பாடு இல்லை என்பதும் உரையாடலில் தெரிய வந்தது மற்றொரு கதை )

படைப்பாற்றலுடன் உள்ளே வந்த குழந்தைகளின் சிறகுகளை நசுக்கி அவர்களது இயல்பான வாழ்க்கை முறையை மடைமாற்றி தேக்க நிலையை அவர்களிடம் உண்டு பண்ணி சோர்வடைய வைத்து உள்ளது கல்வி முறை .

கலங்கிய கண்களை மகிழ்வாக்க என்ன செய்வது ? வீட்டில் பெற்றோருடன் பேசுங்கள் , பிரச்சனையைக் கூறுங்கள் , வரும் வருடங்களில் தமிழ் மீடியம் மாறி சேர்ந்து படியுங்கள் , உங்களுக்கான திறமைகளில் பள்ளி இறுதி வகுப்பு வரும் போது  நீங்கள் பல வெற்றிகளைப் பெற்று பள்ளியில் முதல் இடம் பெறுமளவிற்கு மதிப்பெண்கள் பெற வாய்ப்புகள் உண்டு , நீங்கள் புத்திசாலிக் குழந்தைகள் என்றும் ,

நான் உங்களைப் போல அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் தான் படித்தேன் , இன்று ஆங்கிலத்தில் என்னால் உரையாட , எழுத , பேச என எல்லாமும் முடிகிறது என எனது அனுபவங்களையும் நிறையக் கூறி ,

அடுத்தடுத்த நாட்களில் ,வீட்டில் அம்மா அப்பாவிடம் இது பற்றி பேசினிங்களா ? என்ன சொன்னாங்க ?

மிஸ் ... இங்லீஷ் மீடியமே படிக்கச் சொல்றாங்க மிஸ் , அப்போ தான் காலேஜ் போனா ஈஸியா இருக்குமாம் ... வேல கிடைக்குமாம் ..... வருத்தமுடன் பல குரல்கள் ......

கண் முன்னே கருகும் குழந்தைகளின்  சிந்தனைத் திறன் ... என்ன செய்து மீட்டெடுக்க முடியும் ? தாய் மொழி வழிக் கல்வியை  புரிய வைக்க இயலாத சமூகமாக மாறிப் போன அவலத்தை எப்படி சரி செய்ய முடியும் ???

ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது வேறு , வேற்று மொழியில் கணக்கையும் , சுற்றியுள்ள  அறிவியலையும் , நமது சமூகத்தின் வரலாற்றையும் படிப்பது வேறு என்பது யார் யாருக்குப் புரிய வைப்பது ???

தமிழ் நாட்டுலப் பிறந்து ,
தமிழ் மீடியத்துல படிச்சவங்க தானுங்க எல்லாப் பள்ளிக் கூடத்துலயும் பாடம் சொல்லித் தராங்கன்னு ஏன் யாருக்கும் தெரிய மாட்டேங்குது பொது ஜனங்களே.

எது எப்படியோ என் குழந்தைகள் எனர்ஜி லெவல் எப்படிக் கூட்டி அவர்களை சார்ஜ் குறையாமப் பாத்துக்கணும்னு எனக்குத் தெரியும் ..... அது அடுத்த வகுப்பறை உளவியலில் . .....

தொடரும்
உமா

No comments:

Post a Comment