Tuesday, 8 April 2014

பள்ளிக்கூடம்

1..........(போகின்ற போக்கில்)

                                                பள்ளிக்குக்  கற்றுக்கொள்ள வரும் குழந்தைகள் என நாம்  முடிவு செய்து , நாமாய் வரையறை வகுத்துக்கொண்டு திட்டமிடுவது, நம்மைப்  பொருத்தவரை வேண்டுமானால் சரியாக இருக்கலாம் .சற்று யோசித்தால்,அவர்கள்  பக்கம்  நம்  கவனம் திரும்பி ,அவர்களது செயல்களை உற்று நோக்கினால் அக்குழந்தைகள் நமக்குக் கற்றுக்கொடுத்தத் தருணங்களும் நம்மைக் கடந்து சென்றது, நம்மில் வேர்  விட்டிருக்கும்.
அவ்வாறு போகின்ற போக்கில் என்னை பாதித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே ....................


அரசு மேல் நிலைப்பள்ளி , (20.08.2001 முதல் .....)
செட்டிமாங்குறிச்சி ,
சேலம் மாவட்டம் .
                                    ஆசிரியராக வேண்டும் என்ற அவசியத்தாலேயே அரசுப் பணியை  எதிர்பார்த்து ,எதிர்பார்த்து பணியில் சேர்ந்த நேரம்.அது ஆகஸ்ட் மாதம் ,பணியில் சேர்ந்ததும் ,நான் ஆசிரியர் என்ற எண்ணம் தான் என் மனதில் இருந்ததே தவிர ,என் எதிரில் இருப்பவர்கள் குழந்தைகள் ,அவர்களைத் தட்டிக் கொடுத்து கற்றுக் கொள்ளத் தூண்டும் கெட்டிக்காரத்தனம் எனக்குப் பிடிபடவில்லை .   ஆம்..  புத்தகங்களையும் syllabus யும் எனது கையில் தந்தவுடன் ,அவை அத்தனையையும் அவர்களது மூளைக்குள் திணித்து விட வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு  என்றே கூட சொல்லலாம் .ஆம்.அதில் நான் மிகச் சிறந்த ஆசிரியர் என்று காட்டிக் கொள்ளும் எத்தனித்தலே  முன் 
நின்றது .
                               நம்ப மாட்டீர்கள் ,ஒரு வகுப்பிலோ 128 குழந்தைகள்.எனக்குக் கொடுத்தது 6ஆம் வகுப்பு.  A ,B ,C என மூன்று பிரிவுகள்..ஒரு  6ஆம் வகுப்பின்  ஆசிரியர் மகப்பேறு விடுப்பு.விளைவு......மற்ற இரண்டு வகுப்புகளிலும் மாணவர்களைப் பிரித்துப் போட்டனர்.இப்போதோ 185 மாணவர்கள்  ஒவ்வொரு 6-ஆம் வகுப்பிலும் .
                               குழுக்கற்றல்,இணைக்கற்றல் என்று அவர்களைப் பின்னாட்களில் அமைத்துக் கொண்டேன்.....ஆனால் அப்போது அது  எனக்குத் தெரியவில்லை..நான் அந்தக் குழந்தைகளை  அவர்கள் சூழலில் வைத்து யோசித்துப் பார்க்கவே இல்லை என்றும் கூறுவேன் இப்போது.....
                               நானும்  எனது  சக  ஆசிரியர்  ஒருவரும் (பழனிசாமி) போட்டி போட்டுக் கொண்டு வகுப்பெடுப்போம் ,அது மட்டுமா? போட்டி போட்டுக் கொண்டு குழந்தைகளை விரட்டவும்  செய்வோம்.படிக்கவில்லை
எழுத்துக்களைத் தெரிந்திருக்கவில்லை என மிரட்டுவதும் ,பல நேரங்களில் 
அடித்து விடுவதும் நடக்கும்.அப்போது இடை நிற்றல் அடிக்கடி நிகழும்.
உண்மையில் அந்த இடை நிற்றல்களை  சந்தோசமாக எண்ணிய நாட்களும் உண்டு.ஆனால் இன்று ,மனதார அதற்காக வருந்துகிறேன்.ஏனெனில் அவர்களது சூழலை அவர்களது இடத்தில் நின்று சிந்திக்க அன்று எனக்கு அனுபவம் இல்லை .
                                அவர்கள் எழுத்துக்களை அறிந்து கொள்ளாமல்,பல்வேறு 
குடும்ப சூழலில் இருந்து வந்தும்,புதிய பள்ளி,புதிய ஆசிரியர் என மிரளும் 
குழந்தைகளாகவும் இருப்பார்கள் என்று மன ரீதியாக அணுகும் பக்குவம் 
அந்தக் கல்வியாண்டில் சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை.
                               ஆனால் ஒரே வருடம்.............அந்தக் குழந்தைகள்  என்னை மாற்றி விட்டனர் .ஆம் ,எல்லா நிலைகளிலும் யோசிக்க ஆரம்பிக்க வைத்தனர் என்னை.அந்த ஆரம்பமே எனது இந்த பகிர்வுகள்...........

1 comment:

  1. நல்லா கணக்கு சொல்றீங்களோ இல்லையோ கதை சொல்றீங்க!
    எப்போதான் கணக்கு பாடத்துக்குள் வருவீங்க?...

    ReplyDelete